அய்யம்பேட்டையில் பவள விழா காணும் காந்தி நிலையம்!

கடந்த காலங்களில் ஆசிரியர்கள் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தி நல்லொழுக்கம், ஒருமைப்பாடு, அகிம்சை உள்ளிட்டவைகளை போதித்து வந்தனர். தற்போது அதுபோன்ற செயல்பாடுகளில் மாணவர்கள் கவனம் செலுத்துவதில்லை.
அய்யம்பேட்டையில் பவள விழா காணும் காந்தி நிலையம்!


தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் இயங்கி வரும் காந்தி நிலையம் நாட்டின் 75 ஆவது சுதந்திர நாள் பவள விழா காணும் இந்நாளில் அய்யம்பேட்டை காந்தி நிலையமும் 75 ஆவது பவள விழாவை காண்டுள்ளது.

அய்யம்பேட்டை காந்தி நிலையம் 1947 ஆம் ஆண்டு கட்டட வேலைகள் தொடங்கப்பட்டு 1950 ஆம் ஆண்டு நிறைவடைந்து தற்போது 75 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த காந்தி நிலையத்தில் காந்தியின் சத்திய சோதனை, போதனைகள் மற்றும் புராண, இதிகாச, பொது அறிவு புத்தகங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களுடன் கூடிய நூல் நிலையமும் காந்தி நிலையத்தின் ஒரு பகுதியில் இயங்கி வந்தது. 

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் தொண்டாற்றிய ஜி.கே.மூப்பனாரின் சொந்த இடத்தில் கட்டப்பட்டு கட்சியின் அய்யம்பேட்டை நகர அலுவலகமாகச் செயல்பட்டு வந்தது. 

இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி நிலையம் மழையில் பழுதடைந்து கட்டடத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமானது. இதனைத் தொடர்ந்து ஜி.கே. மூப்பனாரின் உத்தரவின் பேரில் அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். சௌந்தர்ராஜன்  மேற்பார்வையில் இரும்பு கட்டர்களைக் கொண்டு இந்தக் கட்டடம் பழுது நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் இயங்கி வருகிறது.

தற்போதும் ரூ.2 லட்சம் மதிப்பில் மராமத்து வேலைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்த காந்தி நிலையத்தை பல்வேறு காலகட்டங்களில் அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் பிள்ளை, தியாகி. ஐனா.கோபால்சாமி, தியாகராஜ காடவராயர், சௌரி ஐயங்கார், குப்புசாமி ஐயர், ஜி.கே ராமசாமி, சுந்தர்ராஜன் செட்டியார், சேப்பா. நடராஜன், மணி ஐயர் உள்ளிட்டோர் தொடர்ந்து நிர்வகித்து வந்தனர்.

மணி ஐயர் காலத்தில் இந்த காந்தி நிலையத்தில் ஒரே சலவைக் கல்லால் ஆன காந்தியின் சிலை கேரள சிற்பிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு காந்தி நிலையத்தின் மையப் பகுதியில் கண்ணாடி பேழையில் வைத்து நிர்மாணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 4 அடி உயரம் உள்ள காந்தி சிலை மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி காலில் அணிந்துள்ள காலணிகள், கையில் பிடித்திருக்கும் தடி, அவர் மேல் அணிந்திருக்கும் உடையில் உள்ள மடிப்புகள் உள்ளிட்டவை மிகவும் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

காந்தியின் உச்சந்தலையில் சிறிது குடுமியுடனும் அந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலையைப் பார்ப்பவர்கள் அவர் உயிருடன் நம்முடன் நிற்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிற அளவிற்கு அந்த சிலை வடிவமைக்கப்பட்டு இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. காந்தி நிலையத்தில் சுதந்திர நாள், குடியரசு நாள், காந்தி ஜெயந்தி, நினைவு நாள் உள்ளிட்ட நாள்களில் காந்தி உருவ சிலைக்கு கதர் பட்டாலான மாலை, சந்தன மாலை, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

பல்வேறு காலகட்டங்களில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர், பக்தவச்சலம் மற்றும் காந்தியின் உப்பு சத்யாகிரக நடைப்பயணத்தை நினைவுகூரும் வகையில் தொண்டர்களுடன் நடைப்பயணம் மேற்கொள்ளும் மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோர் காந்தி நிலையத்திற்கு வந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு காந்திய கொள்கைகளை பிரசாரம் செய்து தங்கி சென்றுள்ளனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிறுவன தலைவர் ஜி.கே.மூப்பனார் வழிகாட்டுதலுடன் இயங்கி வந்த காந்தி நிலையம் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வழிகாட்டுதலின் பேரில் இயங்கி வருகிறது.

தற்போது பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் இளைஞர்களிடையே மிகக் கடுமையான போதைப்பழக்கம் நிலவி வருகிறது. இதனால் மாணவர்கள் ஒருமைப்பாட்டை இழந்து, அமைதியின்றி தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதும், நாகரிகம் எனும் போர்வையில் நம் நாட்டு கலாசாரங்களை மதிக்காமல் பொது இடங்களில் அநாகரீகமான முறையில் நடந்து கொள்வதும், சிறிய தோல்விகளைக் கூட தாங்கிக் கொள்ளாத மனநிலையில் மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொள்வதும், வாகனங்களை வேகமாக இயக்கி விபத்தில் சிக்கி தன் இன்னுயிர போக்கிக் கொள்வதும் நாள்தோறும் வாடிக்கையான நிகழ்வுகளாக நடைபெற்று வருகிறது. 

மாணவர்கள் சமுதாயம் இதுபோன்ற போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி வரும் நிலையில், எதிர்காலத்தில் தமிழக மாணவர் சமுதாயத்தை, எதிர்கால இந்தியாவை இயக்கப் போவது யார் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

கடந்த காலங்களில் ஆசிரியர்கள் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தி நல்லொழுக்கம், ஒருமைப்பாடு, அகிம்சை உள்ளிட்டவைகளை போதித்து வந்தனர். தற்போது அதுபோன்ற செயல்பாடுகளில் மாணவர்கள் கவனம் செலுத்துவதில்லை. எனவே, ஒவ்வொரு நகர பகுதிகளிலும் காந்தி நிலையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதில் காந்திய சிந்தனைகள், பொது அறிவு, உலக மேதைகள், தத்துவ ஞானிகள், அறிஞர்கள், வீரர்கள், அரசியல் தலைவர்கள், சமூக சேவகர்கள், விஞ்ஞானிகள், இலக்கியவாதிகள் உள்ளிட்டோரின் புத்தகங்களுடன் கூடிய நூல் நிலையம் அமைக்கப்பட வேண்டும்.

வாரத்திற்கு ஒரு முறையாவது அந்த காந்தி நிலையங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று அவர்களை போதைப் பொருள்கள் பழக்கத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வது, சமூக சேவை செய்வது, அகிம்சை முறையில் அனைத்து செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்வது உள்ளிட்ட நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட்டு மாணவர்கள் நல்லொழுக்கத்துடன் நடந்து தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் எதிர்கால இந்தியாவின் நல்ல குடிமகன்களாக வாழ வகை செய்ய வேண்டும்.

இதுபோன்ற செயல்பாடுகள்  நடைபெற்றால் அது நாட்டின் சுதந்திர நாள் பவள விழா ஆண்டிற்கு மேலும் பெருமை சேர்க்கும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com