திருவையாறில் ஆகஸ்ட் புரட்சி!

இந்தப் போரில் நாம் வெற்றி பெற வேண்டுமானால், ஒவ்வொருவரும் மனதில் உறுதியோடு இருக்க வேண்டும். நான் உங்களுக்குத் தரும் அறைகூவல் "செய் அல்லது செத்து மடி" என்பதுதான்
திருவையாறில் ஆகஸ்ட் புரட்சி!

இந்தியாவில் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், இறுதியாக மகாத்மா காந்தி அறைகூவல் விடுத்த வெள்ளையனே வெளியேறு என்ற ஆகஸ்ட் புரட்சிதான் இந்திய விடுதலைக்கு வழிவகுத்தது.

இந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பாக மும்பையில் (பம்பாய்) 1942 ஆம் ஆண்டு ஆக.7, 8 ஆம் தேதிகளில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீது மகாத்மா காந்தி உரையாற்றும்போது இந்திய சுதந்திரத்துக்காக நாம நடத்தப்போகும் இறுதிப் போர் இது. அகிம்சைதான் நமது உயிர் மூச்சு, அந்த வழியில்தான் நாம் இந்தப் போராட்டத்தை நடத்தப் போகிறோம். இந்தப் போரில் நாம் வெற்றி பெற வேண்டுமானால், ஒவ்வொருவரும் மனதில் உறுதியோடு இருக்க வேண்டும். நான் உங்களுக்குத் தரும் அறைகூவல் "செய் அல்லது செத்து மடி" என்பதுதான் என்று பேசினார்.

இந்த ஆகஸ்ட் புரட்சி நாடு முழுவதும் பரவியது. காங்கிரஸ் மீது ஆங்கிலேய அரசுக்கு கோபம் அதிகரித்ததால் மகாத்மா காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் அனைவரும் அன்றிரவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை கண்டித்து நாடெங்கும் எதிர்ப்பு அலை பொங்கி எழுந்தது. எங்கு பார்த்தாலும் மக்களின் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் உச்சக்கட்டத்தை எட்டின. அப்போது, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு கலவரம், சீர்காழி உப்பனாறு பாலத்துக்கு வெடிகுண்டு வைத்த சம்பவம் என இரு புரட்சிகள் நிகழ்ந்தன.

இதில், திருவையாறு கலவர வழக்கு அக்காலகட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. காந்திஜி கைதான 1942 ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்கு மறுநாள் 10 ஆம் தேதி திருவையாறு  அரசர் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து, தலைவர்கள் கைதையும் எதிர்த்து கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். அதற்கு ஆந்திரம் பகுதியிலிருந்து இந்தக் கல்லூரியில் சமஸ்கிருதம் படிப்பதற்காக வந்து விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த எஸ்.ஆர். சோமசேகர சர்மா முன்னின்று ஏற்பாடுகளைச் செய்தார்.

அவருடன் கு. ராஜவேலு, கவிஞர் எஸ்.டி. சுந்தரம் ஆகியோரும் ஈடுபட்டனர். இந்தக் கூட்டத்தில் அரசின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டம் நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கீற்றுப் பந்தல் பிறகு தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்து பற்றி விசாரணை செய்ய காவல் துறையினர் கல்லூரிக்குச் சென்றனர். இதில் மாணவர்கள் சுந்தரம், கோவிந்தராஜன் மீது சந்தேகப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த கல்லூரிக்குள் நடந்த இந்த நிகழ்வு, வெளியேயும் பரவும் என காவல் துறையினர் எதிர்பார்க்கவில்லை.

உண்ணாவிரத போராட்டம் நடந்து முடிந்த நாளுக்கு இரண்டாவது நாள் (1942, ஆக. 12) மாலை 5 மணிக்கு புஷ்ய மண்டபப் படித்துறையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசியவர்கள் மிகவும் உணர்ச்சிகரமாகவும், தேச பக்தியைத் தூண்டியும் பேசினர். மறுநாள் ஆக. 13 ஆம் தேதி காலை திருவையாறு கடைத் தெருவில் ஒரு சில கடைகளைத் தவிர மற்ற கடைகள் அனைத்தும் திறக்கப்படவில்லை. மகாத்மா மற்றும் இதர தலைவர்களின் கைதை எதிர்த்து கடைக்காரர்கள் கடையடைப்பு செய்திருப்பதாகக் கூறினர். அப்போது காலை 7 அல்லது 8 மணியளவில் ஏறத்தாழ 300 பேர் கொண்ட கூட்டம் கூடியது. இதில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே இருந்தனர். அனைவரது கையிலும் கம்பு அல்லது கற்கள் இருந்தது.

தகவலறிந்த காவல் துறையினர் கடைத்தெருவுக்குச் சென்று, கூட்டத்தினரிடம் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். பிறகு மக்கள் கூட்டம் மீது தடியடி நடத்திக் கலைந்து போகச் செய்தனர். ஆனால் கலைந்து செல்லாமல் வன்முறையில் ஈடுபட்டனர். காவல் துறையினர் மீது கற்கள் வீசப்பட்டன. வன்முறை அதிகரிக்கத் தொடங்கியது. கூட்டத்தின் ஒரு பகுதியினர் அங்கிருந்து அஞ்சலகத்துக்குச் சென்றனர். அங்கு அலுவலகத்தின் மீது கற்களை எறிந்தும், கதவை உடைத்துத் திறந்து கொண்டு, உள்ளே தந்தி வயர்கள் உள்ளிட்டவற்றை அடித்து சேதப்படுத்தினர். சுமார் 10 மணிக்கு கூட்டத்தில் 400-க்கும் அதிகமானோர் இருந்தனர். இந்தக் கூட்டம் விரைந்து ஊரின் தென் பகுதியில் காவிரி நதியின் தென் கரையில் இருந்த நீதிமன்ற (முன்சீப் கோர்ட்) வளாகத்தை நோக்கி நகர்ந்தது. கூட்டத்தினர் அனைவரும் மகாத்மா காந்திக்கு ஜே என முழக்கமிட்டுச் சென்றனர். நீதிமன்றக் கட்டடத்திலும், அடுத்துள்ள சார் பதிவாளர் அலுவலத்திலும் கற்கறை வீசி, பொருள்களை உடைத்தும், வீசி எறிந்தும் சேதப்படுத்தினர். அங்கு வந்த காவல் துறையினர் அப்பகுதியில் நிகழ்ந்த வன்முறையைக் கண்டு கூடியிருந்த கூட்டத்தைத் தடியடி நடத்தி விரட்டினர்.

சம்பவம் நடந்த நாளன்று மாலையிலிருந்தே நூற்றுக்கணக்கானோரை காவல் துறையினர் பிடித்துச் சென்று, கடைத்தெருவில் நிறுத்தி, அங்கிருந்த கடைக்காரர்கள், நீதிமன்றம், சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலை செய்தவர்கள் உள்ளிட்டோரை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் விசாரிக்கப்பட்டு, பிறகு இறுதியில் 44 பேர் மீது பல வழக்குகளைப் பதிவு செய்தனர்.

கடைத் தெருவில் கூட்டமாக ஆயுதங்களுடன் சென்று கடைக்காரர்களை மிரட்டி, கடைகளை மூடச்சொல்லியும், அப்படி மூடாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் எனக் கூறி வன்முறையில் ஈடுபட்டதாகவும், காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும் ஏ.ஆர்.சண்முகம், கருப்பையா, கிருஷ்ணசாமி செட்டி, சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய செட்டி, சாமிநாத செட்டி, கருப்பன் வன்னியர், ரெங்கநாதன், கு.ராஜவேலு, எஸ்.ஆர்.சோமசேகர சர்மா, கோவிந்தசாமி, ரெத்தினம் சேர்வை, குஞ்சு பிள்ளை, மாணிக்கம் பிள்ளை, ஏகாம்பரம் பிள்ளை, தர்மலிங்கம் பிள்ளை, பஞ்சன், ராம சதாசிவம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதுபோலவே, ராஜாராம் ராவ், நல்லதம்பி, ஏ.ஆர்.சண்முகம், சன்னாசி சேர்வை, ஊமையன் சுப்ரமணியன், எஸ்.வி.பழனி, கருப்பையன், கோவிந்தராஜுலு, சிதம்பரம், பங்காருசாமி, கிருஷ்ணசாமி செட்டி, மணி பிள்ளை, ராஜா வன்னியர், அமர்சிங் வன்னியர், சந்தானம் செட்டி, கோவிந்தராஜன் செட்டி, ஜெகன்னாத செட்டி, கோபால்சாமி செட்டி, சாமிநாத செட்டி, கருப்பன் வன்னியர், சாமிநாத பிள்ளை, காளி வன்னியர், சுந்தரேசன், குஞ்சு ஆகியோர் மீது நீதிமன்றம், சார் பதிவாளர் அலுலகத்தைத் தாக்கி, பொருள்களை உடைத்தல், ஆவணங்களை எரித்தல், ஆற்றில் போட்டு அழித்தல் போன்ற செயல்களுக்காக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சம்பவம் நிகழ்ந்து 6 மாத காலத்துக்குப் பிறகு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி கே.வி. கண்ணப்ப முதலியார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நான்கரை மாதங்களுக்கு பின்னர் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் ஏறத்தாழ 85 பேர் எதிரிகளின் தரப்பில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். சாட்சிகளில் பெரும்பாலானோர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக குற்றம் நடந்த நேரத்தில் அவர்கள் அங்கு இல்லை என்றே கூறினர். ஆனால், அவை எதுவுமே ஏற்கப்படவில்லை.

காவல் துறையினருக்கும், நீதிமன்ற ஊழியர்களுக்கும் கல்லூரி மாணவர்கள் மீது இருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கில் அவர்களுக்கு எதிராக சாட்சியம் சொன்னதாகக் கூறப்பட்டது. என்றாலும், வலுவான சான்றுகள் எதுவும் சொல்லி நிரூபிக்கப்படவில்லை. மேலும் மாணவர்களுக்கும் இவர்களுக்கும் விரோதம் இருக்க வாய்ப்பே இல்லை என்றும் வாதிடப்பட்டது. குறிப்பாக உண்ணாவிரதம் இருந்த பந்தல் எரிந்த சம்பவத்துக்காக மூன்று மாணவர்களை காவல் உதவி ஆய்வாளர் நடராஜ முதலியார் காவல் நிலையத்துக்கு 17.8.1942 அன்று அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். என்றாலும் அவர்கள் மறுநாள் விடுவிக்கப்பட்டு விட்டனர். உண்மையில் காவல் துறையினருக்கு மாணவர்கள் மீது விரோதம் இருந்திருந்தால், இவர்களைக் கைது செய்திருப்பார்கள் என்றும் கூறப்பட்டது.

இறுதியில் இந்த வழக்கின் தீர்ப்பில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 40 பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் பெல்லாரியில் உள்ள அலிப்புரம் சிறைக்குச் கொண்டு சென்று சி வகுப்பில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.  

இப்போதெல்லாம் இதுபோன்ற வன்முறை, அராஜகம், பொதுச் சொத்துகளை அடித்து நொறுக்குதல் போன்ற சம்பவங்கள் எல்லாம் மிகச் சாதரணமாகிவிட்டது. அரசியல் நிர்பந்தம் உள்ளிட்ட காரணங்களால் குற்றவாளிகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஆனால், 1942 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி விடுத்த அறைகூவல் காரணமாக இந்த வீரர்கள் ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்று, வன்முறையில் ஈடுபட்டாலும், தேசபக்தி காரணமாகச் செய்து பல ஆண்டுகள் சிறையில் தவம் செய்த வீர வரலாற்றை யாராலும் மறுக்கவோ, மறக்க முடியாது. குறுகிய நோக்கில் தற்போது நடைபெறும் வன்முறையுடன் ஒப்பிடுகையில், தேசபக்தி காரணமாக நடந்த இந்தச் செயல் வீரச்செயலாகவே போற்றப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com