கிராம இளைஞரை நேரில் உற்சாகப்படுத்திய சுந்தர் பிச்சை!

இந்தியாவுக்கு அண்மையில் பயணம் செய்த கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்பிச்சை, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் கிராமத்தில் வசிக்கும் இளைஞர் செல்வ முரளியை அழைத்து உரையாடியுள்ளார். 
கிராம இளைஞரை நேரில் உற்சாகப்படுத்திய சுந்தர் பிச்சை!

இந்தியாவுக்கு அண்மையில் பயணம் செய்த கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்பிச்சை, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் கிராமத்தில் வசிக்கும் இளைஞர் செல்வ முரளியை அழைத்து உரையாடியுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வ முரளி. இவர், தமிழ் கணினியில் வல்லுநர். குறிப்பாக விவசாயம் சார்ந்த தொழில் நுட்பங்கள் ஒவ்வொரு விவசாயியையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழ்ந்து வருபவர். கூகுள் நிறுவனம் மூலம், இவரை அடையாளம் கண்ட சுந்தர் பிச்சை, இந்தியாவுக்கு கடந்த வாரம், பயணம் செய்த போது, செல்வ முரளியை நேரில் சந்தித்து உரையாடினார்.  

இந்த சூழ்நிலையில், சந்திப்பு குறித்து, செல்வமுரளி தினமணி செய்தியாளிடம் கூறியது:

என் வாழ்க்கை விவசாயத்தோடும், விவசாயிகளோடும் கலந்தது. ஏனெனில் என் அப்பா செல்வராஜ் தானிய வியாபாரம் செய்து வந்தார். 11-ஆவது வயதில் என்னை சந்தைக்கு அழைத்து சென்றார். தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான போச்சம்பள்ளி சந்தைக்கு சென்ற எனக்கு முதலில் தனியாங்களை தரம் பிரிப்பது குறித்து எனக்கு அவர் கற்றுக் கொடுத்தார். 

அன்றைய கால கட்டத்தில் தானியங்களை தரம் பிரிப்பதில் முதல் தரம் அதிகமாக இருந்தது. தரம் குறைந்த தானியங்கள் குறைவாக இருந்தது. கால போக்கில் அந்த தரம் மிக்க தானியங்கள் குறைந்து, தரம் குறைந்த தானியங்கள் சந்தைக்கு வரத்து அதிகமாக இருந்தை அறிந்தேன். பின்னர், பல்வேறு காலகட்டங்களில் வெளியூருக்கு சென்றுவிட்டேன். 
பள்ளிப் பருவத்தின் போது, எனது ஆசிரியர்கள் எனது கணினி ஆர்வத்தை அடையாளம் கண்டு, ஊக்கப்படுத்தினர். தொடர்ந்து உயர்கல்வி பயில இயலாத நிலையில், கிராமத்திலிருந்து தருமபுரி, சேலம் போன்ற நகரங்களுக்கு சென்றபோது, நண்பர்கள் மூலம், கணினி தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள உதவினர். இவற்றுக்கெல்லாம் எனது தாய் ஞானமணி உறுதுணையாக இருந்து உற்சாகத்துடன் என்னை வழிநடத்தினார். 

25-ஆவது வயதில், மீண்டும் சந்தைக்குள் சென்றபோது சந்தைக்கு 20% தானியங்களே வரத்து இருந்தது. அப்போது, விவசாயம் இலாமபகரமாக இல்லாததால், விவசாயிகள், விவசாயத்தை மெல்ல கைவிடுவதை உணர்ந்தேன். இதற்கு விடைகாணும் எண்ணத்தில் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பகள் குறித்து தெரியவில்லை என்பதை உணர்ந்தேன்

இதையடுத்து, விவசாயிகளுக்கு தேவையான நவீன நுட்பங்கள், நோய் பாதுகாப்பு, கால்நடை வளர்ப்புகளை சொல்லித்தரும்போது அவர்களின் இழப்புகள் தவிர்க்கப்பட்டு லாபத்தினை நோக்கி செல்வார்கள் என்பதற்காகவே செல்போன் செயலி வழியாக, நான் கற்ற அறிவை பகிர்வோம் என்ற நோக்கில் போச்சம்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பித்தே அக்ரிசக்தி விவசாயம் என்ற நிறுவனத்தை தொடங்கினேன். இந்த சூழ்நிலையில், நம்மாழ்வார் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, விவசாயிகளுக்கு தகவல் தொழில் நுட்பம் மூலம், ஏதாவது செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது எனக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.  

தமிழ்நாட்டில் சென்ற தலைமுறை ஒரளவு படிக்கத்தெரிந்த சமுகமாக இருந்தாலும், ஆங்கில அறிவு இல்லாததால் கணினியை பயன்படுத்த தடையாக இருந்தது. ஸ்மார்ட்போன்கள் ஒரு படத்தை தொட்டால் ஒரு செயலி திறக்கிறது அதில் தமிழில் வழிகாட்டுதல் தெரிகிறது.

விவசாயிகள் பயிர்களின் புகைப்படங்களை அனுப்பி ஆலோசனை கேட்டபோது, அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி அவர்களின் பயிர்களை சேதாரத்தில் இருந்து காப்பாற்றியிருக்கின்றோம்.

ஆடு, மாடு கோழி வளர்ப்பவர்களுக்கு எங்கள் அக்ரிசக்தி சார்பில் வழங்கிய ஆலோசனைகள், நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. ஒரு குக்கிராமத்திலிருந்து ஒரு விவசாயி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடையை படம் எடுத்து அனுப்பினால், அதற்கான தீர்வை நாங்கள் வழங்கினோம். இதனால், கால்நடைகள் பாதுகாக்கப்பட்டுடன், இழப்பை தவிர்த்த விவசாயிக்கு லாபம் கிடைத்தது.

விவசாயிகளுக்காக என் நண்பர், நீச்சல்காரன் ராஜராமனுடன் இணைந்து ஒரு தானியங்கு மென்பொருளை உருவாக்கி, அதில் விவசாயம் சார்ந்த சிக்கல்கள், அதை தீர்க்கும் வழிமுறைகளை விவசாய தளத்தில் பதிவு செய்து வருகிறோம்.

அதிக மக்கள் தொகை உள்ள நம் நாட்டில் விவசாயிகள் தரமான பொருள்களை மகசூல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நான் முன்பே சொன்னால்போல் இயற்கை சீற்றங்கள், பருவ நிலை மாற்றத்தால் தரமான பொருள்கள் கிடைப்பது சிக்கலாக இருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை நாம் எப்படி கொடுக்கப்போகின்றோம் என்பது பற்றியும் நாங்கள் அக்கறையுடன் பணியாற்றி வருகின்றோம். இந்த சிக்கல்களை விவசாயிகளுக்கு நவீன தரவுகளுடன் தேவையான தகவல்களை கொடுத்து வருகின்றோம்.

விவசாயிகளை பற்றி எனக்கு ஒரளவு தெரியும் என்பதால், புதிய தொழில் நுட்பத்தை பணம் கொடுத்து படிக்க இயலாததை உணர்ந்து,  கூகுள் ஆட்சென்ஸ், ஆட்மொபி வழியாக பணம் திரட்டி,  இவசமாக விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பக்களை வழங்கி வருகின்றோம்.

இப்போது விவசாயிகளுக்கும்  ஆலோசனை கொடுத்து நல்ல தரமான பொருள்களை கொடுக்கும் விவசாயிகளுக்கு, அதை திர்பார்க்கும் வியாபாரிகளையும் ஒன்றிணைத்து பி2பி விற்பனை செய்து வருகின்றோம்

இப்போது அக்ரிசக்தி அங்காடி என்ற கடைகளை தமிழ்நாடு முழுக்க அமைக்க திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றோம். இந்த கடைகளில் பொருள்களை விற்க லேப் டெஸ்ட் பரிசோதனை செய்து, அதன் தரத்தை உறுதி செய்வதன் மூலம், தரமான பொருள்களை , நுகர்வோருக்கு சென்றடை செய்கிறோம்.

இந்த சூழ்நிலையில், இந்திய அளவில் கிராமப்புறத்திலிருந்து செல்லிடபேசியைக் கொண்டு செயல்களை உருவாக்குபவர்களுக்கு இந்திய அரசு குகூள் பிளே நிறுவனமும் இணைந்து கூகுள் ஆப்ஸ்கள் அகாடமி என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் இந்திய அளவில் கிராமப்புற நகரங்களில் செயல்படும் 100 சிறந்த செல்லிடபேசி செயலிகளின் நிறுவனங்களைச் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உலகளவிய அளவில் அவர்கள் செயல்களை கொண்டு செல்ல கூகுள் நிறுவனம் சார்பில் ஆறு மாத பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த  பயிற்சியை நிறைவு செய்த என்னை அந்த நிறுவனம் சார்பில் சுந்தர் பிச்சை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லியில் நாங்கள் இருவரும் சந்தித்தோம். 7 நிமிடங்கள் சந்திக்க திட்டமிட்டநிலையில், எங்களது உரையாடல் 17 நிமிடங்கள் நீண்டது. அதுவும் தாய் மொழியாம் தமிழில் உரையாடியது மிக்க மகிழ்ச்சியுடன் புரிதலையும் ஏற்படுத்தியது. சந்திப்பின் போது, எங்களது அக்ரிசக்தி செயலியை குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்த அவர், விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் சென்றடைய தொடர்ந்து பணியாற்றும் படி உற்சாகப்படுத்தினார். 

கூகுளைப்போல நிறைய விசயங்களில் விவசாயிகளுக்குத் தேவையான தகவல் தொகுப்புகளை டேட்டா செட்டாக மாற்றும் விதத்தை கூகுள் எங்களுக்கு கற்றுக்கொடுத்தால் நன்றாக இருக்கும் இதில் கூகுள் AI , எம்எல் போன்ற நுட்பங்களை பயன்படுத்தி டெட்டா செட்டாக மாற்றும் அனுபவம் எங்களுக்கு வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உருவாக்கிட அடிப்படை கட்டமைப்பினை கூகுள் எல்லாருக்கும் பொதுவாக வழங்கிட வேண்டும் என கேட்டபோது, எங்கள் கூகுள் நிறுவனம் அதற்கு துணை நிற்கும் என சுந்தர்பிச்சை தெரிவித்ததாக அவர் கூறினார். 

சந்திப்பின் போது, தமிழ் மொழிக்கு தொண்டாற்றி. அவ்வையாருக்கு தகடூர் மன்னன் அதியமான் நெல்லிக் கனியை வழங்கியது போல, சுந்தர்பிச்சை நீடூடி வாழ நான், நெல்லிக்  கனியை வழங்கி வாழ்த்தியதை, என பெற்றோர் அறிந்தால் மிகவும் மகிழ்வார்கள் என தெரிவித்து இனிய அனுபவமாக இருந்தது என்றார் செல்வமுரளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com