2022 - காங்கிரஸுக்கு கைகொடுக்குமா, ராகுலின் நடைப்பயணம்?

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டவும் காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
2022 - காங்கிரஸுக்கு கைகொடுக்குமா, ராகுலின் நடைப்பயணம்?

2022 ஆம் ஆண்டின் அரசியல் நிகழ்வுகளில் முக்கியமான ஒன்று ராகுல்  காந்தியின் அகில இந்திய அளவிலான ஒற்றுமை நடைப்பயணம்... 

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டவும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை (பாரத் ஜோடோ யாத்ரா) மேற்கொண்டுள்ளார். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 148 நாள்கள், மொத்தம் 3,600 கி.மீ. தொலைவு நடைப்பயணம் மேற்கொள்கிறார். 

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் இந்த பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை வழங்கி தொடக்கிவைத்தார். காங்கிரஸ் மூத்த தலைவா்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர். குமரியில் 600 மீட்டரில் தொடங்கிய இந்த பயணம் இன்று 100 நாள்களைக் கடந்துள்ளது. 

தமிழகத்தில் செப்டம்பர் 10 ஆம் தேதி வரையிலும், தொடா்ந்து கேரளத்தில் 19 நாள்கள், கா்நாடகத்தில் 16 நாள்கள், ஆந்திரத்தில் 6 நாள்கள், தெலங்கானாவில் 7 நாள்கள், மகாராஷ்டிரத்தில் 14 நாள்கள், மத்திய பிரதேசத்தில் 2 நாள்கள், ராஜஸ்தானில் 16 நாள்கள், ஹரியாணாவில் 3 நாள்கள் என 108-வது நாளாக தலைநகர் தில்லிக்குள் நுழைந்தது இந்தப் பயணம். 

புத்தாண்டையொட்டி ஜனவரி 2 வரை ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 3 ஆம் தேதி மீண்டும் தில்லியில் தொடங்கி காஷ்மீரில் முடிவடைகிறது. 

காங்கிரஸ் நிலை 

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து ராகுல் காந்தி, கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். கட்சியின் தலைவராக இருக்க மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்தியும் ராகுல் மறுத்துவிடவே, காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சோனியாவின் செய்லபாடுகளும் பெரிதாக இல்லை. கட்சியின் வளர்ச்சியிலும் பெரிதாக முன்னேற்றம் இல்லை. இதனால் கட்சிக்குள் பல்வேறு பிரச்னைகள் எழுந்தன.

இதனிடையே, நடப்பு ஆண்டு உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் என 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தர பிரதேச பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அந்த மாநிலத்தில் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்தும் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றியது, இதனால் மத்திய அரசியலில் காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி என அரசியல் வட்டாரங்கள் பேசத் தொடங்கின. இதுவம் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. 

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் எதிரொலியாக, கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து நேரு குடும்பத்தினர் விலக வேண்டும் என்றும் நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் கட்சியின் தலைவர் ஆக வேண்டும் என்றும் 23 காங்கிரஸ் தலைவர்கள் இணைந்து வலியுறுத்தினர். இது அரசியலில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் உள்கட்சி பிரச்னைகளால் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பலரும் கட்சியிலிருந்து வெளியேறி வந்தனர். 

கட்சியின் தலைமை வலுவாக இல்லாததும் கட்சித் தலைவர்களிடையே இருக்கும் ஒற்றுமையின்மையும் கட்சியின் சீர்திருத்தமின்மையுமே காங்கிரஸின் வீழ்ச்சிக்கு காரணம் என்று பேசப்பட்டது. 

இந்த சூழ்நிலையில்தான் வீழ்ச்சியில் இருந்து கட்சியை மீட்டெடுக்கும் முயற்சியில் ராகுல் காந்தி இறங்கியுள்ளார். 

நடைப்பயணத்தின் இடையே நடைபெற்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலிலும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையே நடந்த பிரச்னையும் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

நடைப்பயணத்துக்கு வரவேற்பு 

கன்னியாகுமரியில் ராகுலின் நடைப்பயணம் தொடங்கியபோது, குமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கிமீ பயணம் என்பது சாத்தியமா என முதலில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், எந்த சூழ்நிலையிலும் நடைப்பயணத்தை கைவிடமாட்டேன் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார். அதன்படியே தற்போது நடைப்பயணம் 100 நாள்களைக் கடந்துள்ளது. 

ராகுலின் இந்த நடைப்பயணத்துக்கு நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மத்தியில் பாஜகவுக்கு மாற்று வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை ஆதரித்து வருகின்றனர். காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

செல்லும் வழியில் எல்லாம் ராகுல் காந்தி மக்களுடன் கலந்துரையாடுவதும் செய்தியாளர்களை சந்தித்துப் பேசி வருவதும் அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கட்சி சாராது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இதில் கலந்துகொள்கின்றனர். 

திமுக எம்.பி. கனிமொழி, சிவசேனையின் ஆதித்ய தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், முன்னாள் ராணுவத்தினர், சினிமா பிரபலங்கள் என பொதுவான நபர்கள் பலரும் இதில் கலந்துகொண்டு ராகுலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கூட்டணியில் இல்லாத மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தில்லி நடைப்பயணத்தில் கலந்துகொண்டது கவனத்தைப் பெற்றது. 

சுவாரசிய நிகழ்வுகள்

மைசூரில் கொட்டும் மழையில் ராகுல் காந்தி உரையாற்றியது, மைசூரில் நடைப்பயணத்தில் கலந்துகொண்ட சோனியா காந்தி ஷூ லேஸ் கழன்றுவிட, ராகுல் காந்தி கட்டிவிட்டது, கர்நாடகத்தில் சாதி வன்முறையால் 1993ல் மூடப்பட்ட சாலை 'பாரத் ஜோடோ சாலை' என மீண்டும் திறக்கப்பட்டது, நடைப்பயணத்தில் குழந்தைகளுடன் கிரிக்கெட், கால்பந்து என விளையாடியது, தில்லியில் ஷூவை தொலைத்த சிறுமியை தோளில் தூக்கிச் சென்றது, பாஜகவினருக்கு பிளையிங் கிஸ் கொடுத்தது, உடன் பயணித்த தொண்டர்களுடன் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொண்டது என இந்த பயணத்தில் பல சுவாரசியமான நெகிழ்ச்சியான நிகழ்வுகள் இருந்தன. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. 

நடைப்பயணமும் அரசியல் மாற்றங்களும்

பெரும்பாலாக யாத்திரை என்றாலே சுதந்திரத்திற்கு முந்தைய மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு. அடுத்ததாக, 1970ல் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மேற்கொண்ட நடைப்பயணம், 1983ல் ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகர் மேற்கொண்ட நடைப்பயணம், 1989ல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டக் கோரி அத்வானி மேற்கொண்ட பயணம், 1991ல் முரளி மனோகர் ஜோஷியின் பயணம் என இந்த பயணங்கள் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. 

காங்கிரஸ் கட்சியை வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்க ராகுல் காந்தியும் இந்த உத்தியை கையில் எடுத்திருக்கிறார். 

காங்கிரஸ் மீட்கப்படுமா? 

2024 தேர்தலில் காங்கிரஸின் இந்த ஒற்றுமை நடைப்பயணம் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கட்சியின் மூத்த தலைவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். அதற்கேற்பவே மக்களும் வரவேற்பு அளித்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆனால், ராகுல் நடைப்பயணம் தொடங்கிய பின்னர் நடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியையே தழுவியது சிந்திக்க வேண்டியது. ஒருபக்கம், குஜராத் பாஜகவின் கோட்டை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மற்றொரு மாநிலமான ஹிமாசலில் பாஜகவை காலி செய்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது சற்று ஆறுதல் எனலாம். ராகுலின் நடைப்பயணம் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பது வரவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தெரியவரும். அதிகபட்சமாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வரை காத்திருக்கலாம். 

ஆனால், இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 2024 மக்களவைத் தேர்தலுக்காக அல்ல, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸால் நாட்டில் உருவாக்கப்படும் பிரிவினைவாதத்துக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கவே என்று ராகுல் காந்தி கூறுகிறார்.

எனினும், தற்போதைய சூழ்நிலையில் பாஜக பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியில் உள்ளதாலும், காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஆம் ஆத்மி முக்கியத்துவம் பெறும் என அரசியல் விமர்சகர்கள் கூறுவதாலும் கட்சியை பழைய நிலைக்கு மீட்டெடுப்பது என்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவால்தான். 

நேரு குடும்பத்தில் இல்லாத ஒருவர் தலைவராக வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட ஒரு தரப்பினர் கூறியதன்படி, கார்கேவும் தலைவராக தேர்வு செய்யப்பட்டுவிட்டார். ஆனால், கட்சியின் தலைவராக ராகுலே தொடர்ந்திருக்கலாம், மக்களுக்கு நன்கு தெரிந்த முகமாக, நேரு குடும்பத் தலைவர்களே இருந்தால் கட்சியை மீட்டெடுக்க வாய்ப்புள்ளது என்று மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர். 

கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கார்கேவின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொருத்தும் கட்சியின் நிலைமை இருக்கிறது. இத்துடன் ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணமும் சேர்ந்து இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா, காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

என்னதான் நடந்தாலும் இந்த ஆண்டில் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வை ராகுல் காந்தி பதித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com