எரியும் இலங்கை: தமிழர்களுக்கு எதிரான ரணில் விக்ரமசிங்க; நேரடி ரிப்போர்ட்-24

இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்...
ரணில் விக்ரமசிங்க
ரணில் விக்ரமசிங்க

இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரே உறுப்பினராக இருக்கும் முன்னாள் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க திரும்பவும் பிரதமர் ஆகிவிட்டார். ரணில் பிரதமராக ஆகுவதற்கு அமெரிக்க, இந்திய, ஜப்பான் லாபிகள் தான் காரணம் என்று சொல்கிறார்கள். இன்றைய பொருளாதார நிலையில் அதனை சீர்படுத்த வேண்டுமானால் இந்தியாவிடமோ, அமெரிக்காவிடமோ அல்லது ஜப்பானிடம் உதவியை நாட வேண்டும் என்ற நிலையில்தான் கோத்தபய ராஜபட்ச இவரை பிரதமர் பதவியேற்க அழைத்துள்ளார். ராஜபட்சவோ, ரணில் விக்ரமசிங்கவோ, சந்திரிகா குமாரதுங்கவோ யார் வந்தாலும் கடந்த காலத்தில் தமிழருக்கு செய்த துரோகத்தை மறந்துவிட முடியுமா.? யாருக்கும் யாரும் குறைவில்லை.

ராஜபட்ச எதிரிலுள்ள வீச்சு அதிகமாக இருக்கலாம். இவர்களெல்லாம் தமிழர்களுக்கு என்னென்ன கொடுமைகள் செய்தார்கள் என்பதை மறக்கமுடியுமா? இன்றைக்கு இலங்கையில் அரசியல், பொருளாதார, புவி அரசியல், தேர்தல் நடக்கும் வாய்ப்பு போன்ற எதிர்கால நடப்பு பற்றி ஆராய வேண்டிய பொறுப்பு இந்தியாவிடம் உள்ளது. சீனாவின் பொருளாதாரத்தில் இறக்கங்கள் மற்றும் பாதிப்பு உள்ளதாகத் தெரிகிறது. ஆப்பிரிக்காவில் செய்த முதலீடுகள் லத்தீன் அமெரிக்காவில் செய்த வணிக ஒப்பந்தங்கள் இவை அனைத்தும் பெருகி வந்தாலும்  கடுமையான பொருளாதார பாதிப்பு உள்ளதாகத் தெரிகிறது. இதில் எதிர்காலத்தின் போக்கு எப்படி இருக்க போகிறது..? என்று கவனத்தில் கொள்ள வேண்டும்.

நல்லாட்சி காலத்திலும் கூட ரணில் விக்ரமசிங்க  'ரணில் ராஜபட்ச' வாகவே இருந்தார் என்பதை தமிழ் தரப்பு புரிந்து கொள்ளவில்லை. குறிப்பாக நல்லாட்சி (?) காலத்தில் ரணில் விக்ரமசிங்கதான் தமிழர்களுக்கு எதிரான பொறுப்புக் கூறல் செயல்முறையின் சர்வதேசப் பரிமாணத்ததை முடிவிற்கு கொண்டு வந்திருந்தார். உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சமஸ்டி(கூட்டாட்சி) தீர்வு என்கிற தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கையை பலவீனப்படுத்தி ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் தமிழ்த் தரப்பை முடக்க முயற்சி செய்தார். குற்றவியல் மற்றும் அல்லது சிவில் சட்ட மீறல் சம்பந்தமான எந்த அதிகாரமுமற்ற காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவி சர்வதேச ரீதியாக காணாமல்போனோர் தொடர்பாக எழுந்த அழுத்தத்தை நீர்த்து போகச் செய்திருந்தார்.

மகிந்த ராஜபட்ச காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களுக்கு காணி உரிமை பத்திரங்களை பெற்றுக் கொடுத்து சட்டவிரோத குடியேற்றங்களை சட்டபூர்வமாக்கினார். வடக்கு கிழக்கு எங்கும் மேற்கொள்ளப்பட்ட பௌத்த மயமாக்கல் செயல்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினார். பயங்கரவாதத் தடை சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்கிற தமிழ் சமூகத்தின் கோரிக்கையை திட்டமிட்டு மலினப்படுத்தினார். கல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட இடம் கொடுத்தார். வடக்கு மாகாணசபைக்கு போதிய நிதி ஒதுக்கீடுகளை விடுவிக்காமல் முடக்கினார். குறிப்பாக அம்மாச்சி உணவகத்திற்கு தமிழில் பெயர் சூட்டவோ அல்லது முதலமைச்சர் நிதியத்திற்கோ அனுமதி வழங்க மறுத்தார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழகம் வந்த தமிழர்கள்
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழகம் வந்த தமிழர்கள்

வடக்கு கிழக்கு சிவில் நிர்வாகத்தில் சட்ட நியதிகளுக்கு அப்பால் சிங்கள ஊழியர்களை நியமிக்க துணை நின்றார். வடக்கு கிழக்கு கடற்பரப்பை தென்னிலங்கை மீனவர்கள் ஆக்கிரமிக்க ஒத்துழைப்பு வழங்கினார்.வடக்கு விவசாயத்துறையை விழுங்கி நிற்கும் விவசாய பண்ணைகள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் குறித்தோ அல்லது முன்பள்ளி கட்டமைப்பை சீரழித்து வரும் இராணுவ கட்டமைப்புகள் குறித்தோ அக்கறை செலுத்த மறுத்தார்.

தொல்லியல் திணைக்களம் முதல் மகாவலி அபிவிருத்தி சபை மேற்கொண்ட கொடூரமான நில அபகரிப்புகள் குறித்து அக்கறை செலுத்தக் கூட தயாராக இருக்கவில்லை. இது போதாதென்று இராணுவம் குற்றம் செய்த்திருக்கின்றது என்று சொல்கின்ற அதே வேளை இவை தற்செயலான குற்றங்கள் (isolated incodents/ crimes) என்ற தோற்றத்தை உருவாக்கவும் சம நேரத்தில் இராணுவமும் அரசாங்கமும் நிகழ்திய குற்றங்கள் முறைசார் குற்றங்கள் (systemic crimes) வகைக்குரியவை என்கிற தமிழர்களின் குற்றசாட்டை மலினப்படுத்தி நீர்த்து போகவும் செய்தார். வடக்கு கிழக்கில் நடந்த ஒரு சில படுகொலைகள் தொடர்பாக நீதி பொறிமுறையின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட இராணுவ அதிகாரிகளை விடுவித்தார். மேற்குறித்த உண்மைகளின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்க ராஜபட்ச குடும்பத்தின் அதிகார தொடர்ச்சியாகவே செயல்பட்டு வந்தார். ஆனால் கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்க சிறுபான்மை சமூகத்தின் பாதுகாவலராக சித்தரிக்கப்பட்டமை உண்மைக்கு புறம்பானது.

இதன் அடிப்படையில் ராஜபட்ச எதிர்ப்பு அரசியலாக மட்டும் தமிழ் தேசிய அரசியலை சுருக்கப்பட்டிருந்தது. ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பேசுவோர் ராஜபட்ச விசுவாசிகளாக சித்தரிக்கப்பட்டர்கள். இனியாவது இந்த நிலை தொடரக்கூடாது. தென்னிலங்கையின் பிரதான தரப்புகள் எல்லாமே சிங்கள பௌத்த மேலாண்மை கருத்தியலை முன்னிறுத்துபவை என்கிற அடிப்படையில் தமிழ் அரசியல் முன்னெடுக்க பட வேண்டும்.

இலங்கையில் இயற்கை உரங்களால் விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட்டதா?

கோத்தபய ராஜபட்ச தலைமையிலான இலங்கை அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இனி ரசாயன உரங்களை இறக்குமதி செய்யப்போவதில்லை என்றும் இயற்கை உரங்களையே விவசாயிகள் பயன்படுத்த வேண்டுமென்றும் அறிவித்தது. ரசாயன உரங்களால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுவதால்தான் இந்த முயற்சி என வெளிப்படையாகக் கூறப்பட்டாலும், உரங்களை இறக்குமதி செய்வதற்கான அமெரிக்க டாலர் கையிருப்பு மிகக் குறைவாக இருந்ததும் இதற்கு முக்கியமான காரணம். இலங்கை அரசின் இந்த முடிவு, இலங்கையின் விவசாயத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது.

"அரசாங்கம் இயற்கை உரங்களைத்தான் பயன்படுத்த வேண்டுமென அறிவித்தபோது எல்லா விவசாயிகளிடமும் இயற்கை உரக் கிடங்குகள் கிடையாது. வெளியிலிருந்துதான் வாங்க வேண்டியிருந்தது. ஆனால், எல்லா விவசாயிகளுக்கும் கொடுக்கும் அளவுக்கு யாரிடமும் இயற்கை உரங்களும் இல்லை. முடிவில், தங்களுடைய பயிர்களுக்கு தேவையான தருணத்தில் பசலைகளை போட இயலாத நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டார்கள். இதனால், விவசாய உற்பத்தியில் 70 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி ஏற்பட்டது." என்கிறார் விவசாய ஆலோசகரான துளசிராம்.

ரசாயன உரங்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் அளவுக்கு நைட்ரஜன் இருந்த நிலையில், இயற்கை உரங்களில் 10 சதவீதம் அளவுக்கே நைட்ரஜன் இருந்தது. ஆகவே கூடுதல் இயற்கை உரம் தேவைப்பட்டது. ஆனால், அந்த அளவுக்கு இயற்கை உரம் கிடைக்கவில்லை. நிலமும் ரசாயன உரத்திற்குப் பழகிப் போயிருந்தது.மற்றொரு பக்கம், இயற்கை உரத்தை பயிருக்குப் போட்டால், அந்த இயற்கை உரத்தில் இருந்த பல்வேறு விதைகள் களைகளாக வளர ஆரம்பித்தன. ஆனால் களைக் கொல்லிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இப்படியாக இலங்கையில் விவசாயம் பெரும் நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்தது. இப்போது ரசாயன உரத்திற்கு தடை விதிக்கப்பட்டுவிட்டாலும், இறக்குமதி தொடங்காத காரணத்தால் கள்ளச்சந்தையில் ஒரு மூட்டை உரத்தின் விலை 32 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. இதற்கு முன்பு 1,200 ரூபாய்க்கு இந்த உரம் கிடைத்தது.

இலங்கையில் விவசாயம் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால், கொக்குத்தொடுவாய், யாழ்ப்பாணத்தின் கோப்பாய் பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்படுள்ளது.

பெளத்த பிக்குகளின் மறு முயற்சிகள்

சிங்கள பெளத்தர் அல்லாத தமிழ், முஸ்லிம், இந்து, கத்தோலிக்க இலங்கையருக்கு எதிராக கடும் கருத்துகளை பேசி, கோத்தபயவை அதிபர் ஆக்கியதில் பெரும் பங்காற்றிய ஓமல்பே சோபித தேரர் காலிமுக திடலுக்கு சில தினங்களுக்கு முன் வந்தார்.

அங்கிருந்தபடி அரசுக்கு எதிராக, போராட்டக்காரர் மத்தியில் உரையாற்றி, "பெளத்த புனித நீர்" என்று சொல்லி, ஏதோ நீரை (மந்திர நீராம்.!) ஒரு குவளையில் போட்டு, அதிபர் செயலக வாசலுக்கு அனுப்பி தெளிக்க வைத்தார்.

இப்படியே போனால், களனிகங்கை இரண்டாய் பிளந்து, பாதாள உலகிலிருந்து நாகராஜ நாகம் எழுந்து வந்து "நாட்டை காப்பாற்ற கோதா என்ற மன்னன் வருகிறான். பராக்..” என்று தன்னிடம் சொன்னதாக கடந்த 2019ம் வருட தேர்தலின்போது உலகை உலுக்கிய பொய்யை சொன்ன "கொள்ளுபிட்டியே சங்கரக்கித" என்ற களனி ரஜமஹா விகாராதிபதி தேரரும், நாளை காலிமுக கடற்கரை திடலுக்கு வருவார். அங்கு வந்து, "கடல் பிளந்து, சமுத்திரராஜன் எழுந்து வந்து தன்னிடம் ஏதோ சொன்னான்" என இன்னொரு கதையை இவர் அள்ளி விடலாம். ஆகவே இந்த பிக்குகளின் புதிய முயற்சிகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

வளர்ச்சி அரசியல் என்பதற்கு ஆழமான புரிதலும் செயற்பாடும் தேவை என்பது தெரிந்திருக்கும் அமைச்சரே தேவை. வேலைகளுக்கு சிபாரிசுகளை பெற்றுக் கொடுத்தல், மின்சார இணைப்பு பெற்றுத் தருதல், வீட்டுத் திட்டத்திற்கு சிபாரிசு செய்தல் - போன்ற வேலைகளை செய்யும் அரசியல் ஒரு போதும் அபிவிருத்தி அரசியல் ஆகாது போன்ற புரிதல் இருக்க வேண்டும்.

அப்பலோ இந்தியாவின் சர்வதேச மருத்துவமனை, மிகப் பிரமாண்டமான நவீன மருத்துவ மனையாக 2002இல் கொழும்பில் கட்டப்பட்டது. ஆனால் 2006இல் சர்வதேச நியமங்களுக்கு மாறாக அதன் பங்குகளை அதிகமாகப் பெற்ற இலங்கை, லங்கா மருத்துவனை என்று பெயரையே மாற்றிவிட்டது. சென்னை இராமச்சந்திரா இதய சிகிச்சை மருத்துவ மனையைக் கொழும்பில் கட்டுவதற்கான ஒப்பந்தம் சந்திரிகா அதிபராக இருந்தபோது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் 2005இல் பதவிக்கு வந்த மகிந்த ராஜபட்ச அந்த ஒப்பந்தத்தையே ரத்து செய்தார்.

கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தி ஒப்பந்தத்தை கோத்தபய ரத்து செய்ததார். இவ்வாறு பல ஒப்பந்தங்கள், இந்திய முதலீடுகள் ரத்து செய்யப்பட்டன. இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் நெருப்புத் தெறிக்கும் வாக்கியங்கள் சிங்கள நாளேடுகளில் பிரசுரமாகியிருந்தன.

இந்தியா ஏதோ தமிழர்களின் நாடு என்ற கோணத்திலேயே சிங்கள நாளோடுகள் சித்தரிக்கின்றன. ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. இந்திய இராஜதந்திரத்துக்கு முகத்தில் கரி பூசிய சம்பவங்கள் ஏராளம். பாட்டாளி சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, உதயகம்பன்வில, அத்துரலியே ரத்தன தேரர் உள்ளிட்ட பல சிங்களத் தீவிரவாத செயற்பாட்டாளர்கள் 2002-2009 வரையான காலப்பகுதிகளில் இந்தியாவுக்குக் கரி பூசியவர்கள். இப்படியொரு வரலாற்றை வைத்துக் கொண்டு வடக்குக் கிழக்கில் தமிழக முதலீடுகளுக்கு இலங்கை இடமளிக்குமா?

கடந்த 2009 இல் ஆயுதப்போராட்டத்தை ஒழிக்க இந்தியா வழங்கிய ஆயுத உதவிகளுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் நன்றி தெரிவித்த அப்போதைய பிரதமர் அமரர் ரட்ணசிறி விக்கரமநாயக்க, மறுநாளே, இந்திய- இலங்கை ஒப்பந்தத்தைக் கண்டித்து விமர்சித்திருந்தார். அது இனிமேல் தேவை இல்லையென்ற தொனியில் அமைச்சர்கள் சிலர் கருத்திட்டிருந்தனர். இப்படியான நிலையில் அதுவும் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் படி கொழும்பின் அனுமதியின்றி மாகாண அரசுகள் வெளிநாட்டு உதவிகளைப் பெற முடியாத ஒரு சூழலில், தமிழக முதலீடுகள் எப்படிச் சாத்தியமாகும்?இந்திய அரசியல் சட்டப் படி தமிழ் நாடும் புதுடில்லியின் அனுமதியின்றி திட்டங்கள் அறிவிக்க முடியாது. ஆகவே வடக்குக் கிழக்கில் தமிழக முதலீடுகள் எவ்வாறு சாத்தியமாகும்? இந்தக் கதையின் உள்நோக்கம்தான் என்ன?

இந்திய உதவி பெற்று அதன் விருப்பத்துக்கு ஏற்றவாறு பலாலி விமான நிலையத்தை விஸ்தரிக்கவே இலங்கை விரும்பவில்லை.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படுகிறது?

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் தொடராக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கரோனாப் பரவலின் தொடராக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்துக்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. கரோனா நெருக்கடி நிலை தீர்ந்து பிசிஆர் பரிசோதனைகள் கூட தளர்த்தப்பட்டுள்ள நிலையிலும் இன்று வரையில்  விமான நிலையத்தினை மீளத் திறப்பதற்கான ஏற்பாடுகள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை. இருந்தபோதிலும் பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தற்போதும் தமிழ் இளைஞர்கள் 16 பேர் உள்பட 30 வரையானோர் பணியாற்றுவதால் அவர்களுக்கான சம்பள கொடுப்பனவுகளை விமான நிலையத்தினை நிர்வகிக்கும் நிறுவனம் செலவிடுவதாகத் தெரியவந்துள்ளது.

இதன் தொடராகவே அந்த விமான நிலையத்தினை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய விமான சேவை 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி வரையான ஐந்து மாத காலம் செயற்பட்டபோது வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்தவர்களே கூடுதலாக நன்மையடைந்திருந்தனர்.

இந்தியாவிற்குச் செல்லும் பயணிகள் கொழும்பு சென்று அங்கிருந்தே இந்தியாவிற்குச் செல்லும் நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடியாக இந்தியா செல்வதற்கான வாய்ப்பு குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் தற்போது விமான நிலையத்தினை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை வடக்கு மக்கள் மத்தியில் கவலையை உருவாக்கியுள்ளது.

விமான நிலையம் மூடப்படுவதாக அரசாங்கத் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இழுத்தடிக்கிறது. இந்தியா வழங்கிய நிதியுதவிக்காக வடக்குக் கிழக்கில் தமிழக முதலீடுகளுக்கு இலங்கை அனுமதியளிக்கும் என்று வார்த்தையால் சொல்ல முடியும். ஆனால் இலங்கை அதனைச் செயற்படுத்தாது என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு.

                                                                                                                           -தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com