'ஆம் ஆத்மி' அரசியல் கட்சியாக மாறிய கதை

ஊழல் எதிர்ப்பு என்பதை கையில் எடுத்து அதற்கு பின்னணியில் மக்களை கவரும் வகையிலான அடிப்படை தேவைகளை இணைத்ததுதான் கேஜரிவாலின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்

சரியாக, பத்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு கட்சி, பாரம்பரியான கட்சிகளைத் தோற்கடித்து இந்திய அரசியலில் ஒரு புதிய பரிமாணத்தையே உருவாக்கியுள்ளது. மக்களின் மனங்களை வென்றுள்ளது. தேர்தல் அரசியலில் சரித்திரம் படைத்துள்ளது.

அதிகாரத்தை தூக்கி எறிந்த 'ஆம் ஆத்மி'

மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு மாறாக பொறுப்பேற்று 49 நாள்களில் பதவியை ராஜிநாமா செய்தபோது பொறுப்பற்ற செயல் என்றெல்லாம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படட கட்சி, இந்திய அரசியலின் மாற்று சக்தியாகத் தற்போது உருவெடுத்துள்ளது.

ஊழல் எதிர்ப்பு என்ற ஒற்றை இலக்குடன் பொதுவாழ்வில் குதித்தவர் ஐஐடி பட்டதாரியான அரவிந்த் கேஜரிவால். தற்போது, இந்திய அரசியலைத் தன்னை சுற்றிச் சுழலவைக்கும் பிரதமர் மோடிக்கு சவாலாக மாறியுள்ளார். ஆம் ஆத்மி எம்மாதிரியான சரித்திரத்தைப் படைத்துள்ளது என்பதற்கு பாரம்பரியான கட்சிகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. 

கடந்த 1980ஆம் ஆண்டு தொடங்கப்பட்டிருந்தாலும் பாஜகவுக்கு என தனித்த நீண்ட அடையாளம் உண்டு. 96 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் நீட்சியாகவே பாஜகவைக் கருதலாம்.  இந்தியாவில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் காங்கிரஸ், 136 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 

சரித்திரமின்றி சரித்திரம் படைத்த கேஜரிவால்

நேருவின் காங்கிரஸ், சாவர்க்கரின் பாஜகவை போன்றில்லாமல் சுதந்திர போராட்டத்திலிருந்து எந்தவிதமான வரலாறும் கொள்ளாத கட்சியாகவே ஆம் ஆத்மி உள்ளது. சரி, ஆம் ஆத்மி எந்தவிதத்தில் மாறுபட்டுள்ளது என கேள்வி எழாமல் இல்லை. 

கொள்கை, நோக்கம், மக்கள் நலன் என எல்லாம் இருந்தாலும் தற்போதைய அரசியல் சூழலில் தடம் பதிப்பதற்கு மிக முக்கியமாக இருப்பது முகம். யாரைத் தலைவராக முன்னிறுத்துகிறோம் என்பது வெற்றியில் முக்கிய பங்காற்றுகிறது. இதற்கு வரலாறே சாட்சியமாக உள்ளது.

இந்திரா காந்தி தொடங்கி யோகி ஆதித்யநாத் வரை ஒரு வலுவான  தலைவரையே மக்கள் விரும்புகின்றனர். இவர்களிடையே ஆயிரம் வித்தியாசங்கள் இருந்தாலும் அவர்களிடமிருக்கும் ஒரு ஒற்றுமை மக்களிடம் சென்றடைந்துள்ளார்கள். ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சிக்குப் பின்னணியிலும் அரவிந்த் கேஜரிவாலின் பங்கு அளப்பரியது.

ஒருவரின் தோல்வியில்தான் மற்றொருவரின் வெற்றி உள்ளது. காங்கிரஸ் தோல்வியும் ஆம் ஆத்மியின் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. காங்கிரஸ் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அறியப்படுவது அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டம். பின்னாள்களில் பாஜகவின் வெற்றிக்கு இது எந்தளவுக்கு உதவியது என்பது அனைவரும் அறிந்ததே. 

கேஜரிவாலின் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்'

அந்தப் போராட்டத்தின் மூலம் உதயமானவர்களில் ஒருவர்தான் கேஜரிவால். யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் எனப் பலர் அதன் மூலம் அரசியலில் குதித்திருந்தாலும் கேஜரிலால் எப்படி அதிலிருந்து தன்னைத் தனித்துக் காட்டிக் கொண்டார் என்பதுதான் வரலாறு. 

பெரியாரின் விருப்பங்களை செய்து முடிக்க அண்ணா தேவைப்பட்டார். அரசியல் அதிகாரம் எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டு, மக்கள் நலன் சார்ந்த சாதியற்ற சமத்துவ அரசியலை நிலைநாட்டியவர் அண்ணா. தீவிரமான கொள்கைப் பின்னணியிலிருந்து வந்தவர். 

ஆனால், இது நவீன காலம். கொள்கை பார்த்து வாக்களிப்பதும் வாக்குக்  கேட்பதும் வெகுவாகக் குறைந்த இக்காலகட்டத்தில் ஊழல் எதிர்ப்பு என்பதைக் கையில் எடுத்து அதற்குப் பின்னணியில் மக்களைக் கவரும் வகையிலான அடிப்படைத் தேவைகளை இணைத்ததுதான் கேஜரிவாலின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.

இலக்கை நிர்ணயித்த ஆம் ஆத்மி

கடந்த 2014 ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 400  இடங்களுக்கு மேல் போட்டியிட்ட ஆம் ஆத்மி, பஞ்சாபில் நான்கு இடங்களில் மட்டுமே வெல்கிறது. பின்னர், அரசியலிலிருந்தும் அனுபவங்களிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்ளும் கேஜரிவாலுக்கு மக்கள் அளித்த பரிசுதான் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி.

மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்துகொண்டு செயலாற்றத் தொடங்குகிறார். கேஜரிவாலின் வெற்றிக்கு மிக முக்கிய வாக்கு வங்கியாக கருதப்பட்ட மத்திய வர்க்கத்தைத் தாண்டி ஏழை எளிய மக்களை நோக்கிய ஆம் ஆத்மியின் பயணம் பின்னர் தொடங்குகிறது. தண்ணீர், மின்சாரம், சுகாதாரம், கல்வி போன்ற விவகாரங்களில் தேவைகளைப் பூர்த்தி செய்து ஏழை மக்களின் மனங்களில் இடம் பிடித்த கேஜரிவாலின் அடுத்த இலக்கு பஞ்சாபாக மாறுகிறது.

மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களைப் போன்று தில்லியில் மக்களின் தேவைகளைப் புரிந்துகொள்வது அவ்வளவு கடினமல்ல. ஆனால், மற்ற மாநிலங்களில் கள நிலவரம் வேறு, அரசியல் பின்னணி வேறு. என்னதான் நவீன காலமாக இருந்தாலும், பின்பற்றிக் கொள்வதாகச் சொல்லிக் கொள்வதற்கும் மக்கள் மனதில் இணக்கத்தை உருவாக்குவதற்கும் சமகாலத் தலைமையை தாண்டிய தலைவர்கள் தேவை.

அரசியல்வாதியான கேஜரிவால்

இங்குதான் சரியான தேர்வைச் செய்கிறார் கேஜரிவால். இளைஞர்களைக் கவர பகத் சிங், 32 சதவிகித தலித் மக்களைக் கவர அம்பேத்கர் எனத் தலைவர்களை முன்னிலைப்படுத்த தொடங்குகிறது ஆம் ஆத்மி. இவை எல்லாம் தாண்டி, கேஜரிவாலைப் போன்று உள்ளூர்த் தலைமை தேவை.

கடந்த 2017 ஆண்டு போல் அல்லாமல் இந்த தேர்தலில் பகவந்த் சிங் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்து சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி, களத்திலும் தீவிரமாகச் செயல்பட்ட ஆம் ஆத்மிக்கு போட்டியிட்ட இரண்டாவது தேர்தலிலேயே பஞ்சாபில் மாபெரும் வெற்றியுடன் ஆட்சியும் கிடைத்துள்ளது.

கோவாவில் குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பதிவு செய்த ஆம் ஆத்மி, 6.8 சதவிகித வாக்குகள் பெற்று இரண்டு இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரஸ் கட்சியின் இடத்தை பெறத் தொடங்கியுள்ளது எனலாம். சமகால அரசியல் சூழலுக்கு ஏற்ப தில்லி கலவரம் தொடங்கி குடியுரிமைத் திருத்த சட்ட போராட்டம் தொடர்பான விவகாரங்களில் வாய் திறக்காமல் இருந்து தன்னை முழு அரசியலவாதியாகவே கேஜரிவால் நிலைநிறுத்திக்  கொண்டுள்ளார்.

ஆம் ஆத்மியின் கொள்கையற்ற அரசியல் தன்மை ஆபத்தானதாக இருந்தாலும் மாற்று தேடும் மக்களின் மனங்களில் அது இடம் பிடிக்கத் தொடங்கிவிட்டது என்றால்  ஐயமில்லை. அடுத்து, இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள குஜராத்  மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றியைப் பெறும்  நோக்குடன் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார் ஆம் ஆத்மியின்  கேஜரிவால். அதற்கேற்பவோ என்னவோ 4 மாநிலங்களின் பாஜக வெற்றியைக் கொண்டாட குஜராத்துக்குச் சென்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆம் ஆத்மியின் அம்பு அடுத்த இலக்கைத் தொட்டு வீழ்த்துமா என்பதைக் காலம்  தீர்மானிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com