எரியும் இலங்கை: மலையகத் தமிழர்களின் நிலை: நேரடி ரிப்போர்ட்-16

இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்...
எரியும் இலங்கை: மலையகத் தமிழர்களின் நிலை: நேரடி ரிப்போர்ட்-16

இலங்கையில் மலையகம் நெடும் பகுதியில் சப்ரகமுகா குன்றுகளைத் தவிர்த்து கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டருக்கு மேல் அமைந்துள்ளது. தமிழகத்திலிருந்து தொழிலாளர்களை இந்தப் பகுதிக்கு அழைத்துச் செல்லும்போது வெறும் காடாகவும் வனமாகவும் இருந்தது. இதைத் திருத்தி இன்றைக்கு தேயிலை விளைகின்ற அருமையான பூமியாக தமிழக வம்சாவளியினர் மாற்றி உள்ளனர்.

மலையகம் கொழும்பு, காலி மாவட்டங்களின் சில பகுதிகளுடன் நுவரேலியா, மாத்தளை, கண்டி, பதுளை, ரத்தனபுரி, கேகாலை என்ற மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். இந்நகரங்கள் சிறப்பு நகரங்களாகும்.

இங்குதான் ராமாயணத்தில் சொல்லப்பட்ட ராவணன் சீதாவைப் பிடித்துச் சென்ற இடம் உள்ளது என நம்பிக்கை. சீதாவாடிய மலை சார்ந்த வனங்களில் சேர்ந்த இடம். இன்றைக்கும் அங்கே ஒரு சீதா தேவிக்கு கோவிலும் உள்ளது.

அதே போல ஹனுமர் அங்கே சென்றபோது ஒரு குன்றில் இறங்கியதாக  நம்பிக்கை. அந்தக் குன்றுக்கு எதிராக இன்றைக்கு சின்மியா மிஷன் கட்டடங்கள் உள்ளன. இந்த அமைப்பு பல மக்கள் நலச் செயல்பாடுகளைச் செய்து வரும் நிறுவனமாக உள்ளது.

இந்தப் பகுதிகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைத்தன. கொழும்பிலும் மலையகத் தமிழர்கள் அதிகம். கொசிக்கடை போன்ற பகுதிகளில்  துணிக் கடைகள் போன்ற ஏராளமான வணிகங்கள் இவர்களுடைய தொழில்களாக இருக்கிறது.

வெள்ளையர் ஆட்சியில் 1823-ல் தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு அடுத்த 2023-ல் 200 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. மலையகத்தில் இந்திய வம்சாவளியினர் கடந்த 200 ஆண்டுகளாக உழைத்த உழைப்பின் காரணமாக ஏறத்தாள 1.3 பில்லியன் டாலர் வருமானத்திற்க்கு தேயிலை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இதில் பெருந்தொகை இலங்கை அரசாங்கத்திற்கு லாபமாக கிடைக்கிறது. 10 லட்சம் பேர் இந்திய வம்சாவளியினர் வாழும் இந்தப் பகுதியில் தேயிலை, ரப்பர் தொழில் அதிகமாக செய்கிற வாழ்வு மிகவும் வேதனையானது. இதில் அதிகமானவர்கள் பெண் தொழிலாளர்கள்தான்.

மலையகத்தில் 10 லட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்களில் சுமார் 2 லட்சம் பேர் தேயிலை மற்றும் ரப்பர் விவசாய தொழிலில் நேரடியாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் ஊதியமாகப் பெறுகின்றனர் அவை இந்திய மதிப்பிற்கு 500 ரூபாயாக மதிப்பிடப்படும். இன்றைக்கும் மிகவும் மோசமான நிலையில் அங்கே உள்ள மலையகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். சுகாதார வசதி இல்லை. தோட்டத் தொழிலாளர் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகிறது. அதற்காகவும் போராடி வருகின்றார்கள்.

சரியான வீட்டு வசதித் திட்டங்கள் அங்கே நிறைவேற்றப்படவில்லை. இவர்களுக்குச் சிகிச்சை அளிக்கக் கூடிய நவீன மருத்துவமனைகளும் அமைக்கப்படவில்லை. இந்திய அரசாங்கத்தால் 14 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற திட்டம் இன்னும் சிக்கலில் தான் உள்ளது. , 200 வருட காலமாக வரிசை (லைன்)வீடுகள் என்று அழைக்கப்படும் மிக சிறிய, நெரிசல் மிகுந்த வீடுகளிலேயே மலையக தமிழர் வசித்து வருகின்றனர். சில தொழிலாளர்கள் கடன் வாங்கி வட்டி கட்டி திருப்பி செலுத்த முடியாமல் வாழ்க்கையில் துன்பப்பட்டு வேதனைப்பட்டு கஷ்டங்களில் மூழ்கியுள்ளனர். பல தொழிலாளர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வருகின்றன. எப்படி? வடக்கு-கிழக்கு மாநிலங்களில் இன அழிப்பு நடந்ததோ அதேபோல மலையகத்தில் இந்திய வம்சாவளியினர் பல்வேறு புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களிடம் பெறப்படும் தொழிற்சங்க சந்த கட்டணங்கள் மற்றும் கல்வி சார்ந்த கட்டணங்கள் இங்கே சிக்கலில் உள்ளது. இவ்வாறான மலையகத் தமிழர்களும் பல்வேறு சிக்கல்களுக்கு ஆட்பட்டு மிகவும் வேதனையில் உள்ளனர்.

மலையகம் ஒரு நல்ல சுற்றுலா பகுதி. இன்னும் சரியாக சுற்றுலா வளர்ச்சி பெற சரியான திட்டம் அங்கு ஏற்படுத்தப்படவில்லை. நுவரேலியா கொடைக்கானல் மாதிரி இருக்கும் ஏரியில் சரியான பராமரிப்பு இல்லை என்பது கண்முன் தெரிந்தது. இப்படியெல்லாம் சிக்கல்கள் நிறைந்த வண்ணம் இருக்கின்றன. அவ்வப்போது மண் சரிவும், மலை சரிவும் ஏற்படுவதால் மக்கள்  பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். சுற்றுலாத்துறை மற்றும் தேயிலை ஏற்றுமதியில் உள்ள வருமானத்தைப் பற்றி சரியான புரிதல் இலங்கை அரசிடம் இல்லை. மலையகத்தில் இருந்து செல்லக்கூடிய அமைச்சர்களின் கோரிக்கையை சிங்களர்களின் அரசு செவிசாய்ப்பதுமில்லை கண்டுகொள்வதும் இல்லை.

மிக மோசமான சுகாதார, கல்வி மற்றும் சமூக பிரச்னைகளை எதிர்நோக்கி வருவதுடன், காணி உரிமைகள் மலையக மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதாகவும் மலையகத் தமிழர்களின் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடா தெரிவித்துள்ளார்.

அன்றைக்கு மதுரையிலிருந்து வெளிவந்த கருமுத்து தியாகராஜ செட்டியாரின்  தமிழ்நாடு ஏடு, மலையகத் தமிழர்களுக்கு உடலில் அடையாளச் சூடு போடும் பழக்கத்தினை தடுத்து நிறுத்தியதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

                                                                                                                               -தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com