எரியும் இலங்கை: காந்தியும் சிலோனும்; நேரடி ரிப்போர்ட்- 12

இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்...
எரியும் இலங்கை: காந்தியும் சிலோனும்; நேரடி ரிப்போர்ட்- 12

காந்தி 1927-ம் ஆண்டு இலங்கைக்குச் சென்றார். அப்போது நவம்பர் 26 முதல் 29 வரை யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தார். அவருடன் அவரது மனைவி கஸ்தூரிபா, சி. ராஜகோபாலாச்சாரி மற்றும் அவரது மகள் லட்சுமி ஆகியோர் சென்றனர்.

மகாத்மா காந்தியின் இலங்கைப் பயணத்தில் அவரது செயலாளர்கள் மகாதேவ் தேசாய் மற்றும் பியாரே லாலும் உடன் வந்தனர். அந்தத் தருணத்தில் வல்லிபுர ஆழ்வார் கோயிலில் காந்தி உரை நிகழ்த்தினார். அதன் நினைவாக அக்கோயிலின் ராஜகோபுரத்தில் மகாத்மா காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.  அண்டை நாடான இலங்கைக்கு சென்ற காந்தி மூன்று வாரம் இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டார்.

அவருடைய வருகை இலங்கை மக்களிடையேயும் விடுதலை உணர்வைத் தோற்றுவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் தோட்டங்களிலே கூலி வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்டவர்களுடைய நிலையே நோக்கப்படவுள்ளது. இது எதிர்காலத்திலே இளைய தலைமுறையினர் விரிவான ஆய்வுகளைச் செய்வதற்கு வழிவகுக்கும்.

காந்தியின் இலங்கை வருகை பற்றிய செய்திகளை அக்காலத்துத் தமிழ்ச் செய்தித்தாள்கள் பதிவு செய்திருந்தன. பிற்கால நூல்களிலும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. 'தினகரன்' (இலங்கையில் வெளிவரும்) செய்தித்தாளின் பதிவுகள் பின்வருமாறு அமைந்துள்ளன.

1927ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி இலங்கைக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை காந்தியடிகள் மேற்கொண்டிருந்தார். இலங்கையில் மூன்று வாரங்கள் தங்கிய நாள்களில் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மாத்தளை, பதுளை, காலி, சிலாபம், ஹட்டன் உள்பட பல முக்கிய இடங்களுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

சிலாபத்திலுள்ள கொரியாவின் மாளிகையிலே தங்கியிருந்தார். மகாத்மா காந்தி ஹட்டன் காசல்ரீ சமர்வில் தோட்டத்திலுள்ள செட்டியார் ஒருவரின் பங்களாவிலும் ஒருநாள் தங்கியிருந்தார். தற்போது அந்த பங்களா சமர்வில் தமிழ் வித்யாலயமாக இயங்குகிறது.

செட்டியாரின் கல்லறை இன்றும் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் காட்சியளிக்கின்றது. மேற்குறிப்பிட்ட நகரங்களுக்கு பயணம் மேற்கொண்ட காந்தி 35 முக்கிய உரைகளை நிகழ்த்தியதுடன் மாத்தளை விஜயத்தின்போது அவர் அடிக்கல் நாட்டிய பாடசாலையே பாக்கிய தேசியக் கல்லூரியாகும். காந்தியின் சுற்றுப்பயணத்தின்போது இயங்கக் கூடிய அளவிலான அமைப்புகள் இல்லாதபோதும் மன்றங்களே அதிகளவில் இயங்கின. அவ்வாறான நிலையில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த மகாத்மா காந்தி இந்தியாவுக்குத் திரும்பிச் செல்கையில் "திடமான அமைப்பொன்று இலங்கையில் அவசியமானது, இல்லையெனில் சுதந்திரத்தின் பின்னர் பல்வேறு நெருக்கடிகளைத் தமிழர்கள் சந்திக்க நேரிடும்" என்று தெரிவித்தார்.

'உலகப் போராளி உத்தமர் காந்தி' என்ற நூலை எழுதிய இலங்கையர் இ. கிறிஸ் கந்தராசா என்பவர் தமது நூலிலே மகாத்மா காந்தியின் இலங்கை விஜயம் ஒரே பார்வையில் என பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

மகாத்மா காந்தியின் இலங்கை விஜயம் ஒரே பார்வையில்,

13.11.1927 கொழும்பு விவேகானந்த சபை

15.11.1927 கொழும்பு மாநகர சபை

15.11.1927 கொழும்பு ஆனந்தாக் கல்லூரி

15.11.1927 நாலந்தாக் கல்லூரி

18.11.1927 மாத்தளையில் பொதுக் கூட்டம்

18.11.1927 கண்டி தர்மராஜா கல்லூரி

18.11.1927 கண்டி பொதுக் கூட்டம்

19.11.1927 பதுளையில் பொதுக் கூட்டம்

20.11.1927 நுவரெலியா விஜயம்

22.111927 கொழும்பு சகிரா கல்லூரி

22.111927 இலங்கை தேசிய காங்கிரஸ்

23.11.1927 காலியில் பொதுக் கூட்டம்

24.11.1927 காலி மகிந்தா கல்லூரி பரிசளிப்பு விழா

24.11.1927 கொழும்பு ரெட்டியார் சங்கம்

25.11.1927 யாழ்ப்பாணத்தில் பொதுக் கூட்டம்

26.11.1927 யாழ். மாணவர் காங்கிரஸ்

26.11.1927 யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி

29.11.1927 யாழ். மத்திய கல்லூரி

உடுவில் மகளிர் கல்லூரி

சுன்னாகம் இராமநாதன் கல்லூரி

சுன்னாகம் ஸ்கந்தவரோயக் கல்லூரி

மேலும், இந்நூலில் காந்தியின் யாழ்ப்பாண வருகை பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியக் கண்டத்தில் நடைபெற்ற ஒவ்வொரு மாற்றமும் சேய் நாடான இலங்கையிலும் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்தியாவில் ஏற்பட்ட சுதந்திர தாகம் யாழ்ப்பாண மாணவரிடையே சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக 1920 ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் ஹண்டி பேரின்ப நாயகம் தலைமையில் ஆரம்பமானது.

இவருடன் தோளோடு தோள் நின்று உழைத்தவர்கள் ஒறேற்றர் சுப்பிரமணியம், செனட்டர் பி. நாகலிங்கம், செனட்டர் எஸ்.ஆர்.கனகநாயகம். அட்வகேட் பாலசுந்தரம், பேராசிரியர் சுந்தரலிங்கம், பேராசிரியர் நேசையா, செனட்டர் சுப்பையா. நடேச பிள்ளை ஆகியோராவர் (அக்கால கூட்டத்தில் இவர்கள் மாணவர்கள்)

மகாத்மா காந்தியின் வரவேற்புக்கு மேற்கூறப்பட்டவர்களுடன் யாழ்ப்பாண மக்கள் இன, மத வேறுபாடின்றி ஒத்துழைத்து மகாத்மா காந்தியை வரவேற்றனர். இவற்றைவிட சர். பொன்.இராமநாதன் (HINDU BOARD) இராஜரத்தினம் போன்றோரும் மகாத்மா காந்தியை இராமநாதன் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பெரிய வரவேற்பும் நடந்தது. காந்தியடிகள் யாழ்ப்பாணம் வந்தபோது அவரைக் கௌரவிக்க மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. காந்தி சென்ற இடமெல்லாம் சிறப்பான வரவேற்புகள் வழங்கப்பட்டன.

மகாத்மா காந்தியின் எண்ணக் கருத்துகளால் கவரப்பட்ட இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தினர் பலர் வெளிநாட்டுப் பொருள்களைப் புறக்கணித்தனர். கதர் ஆடையை அணிந்தனர். இவர்களுள் ஹண்டி பேரின்ப நாயகம். சுப்பிரமணியம், கனகநாயகம், நேசையா, செனட்டர் பி.நாகலிங்கம் இன்னும் பலர் வாழ்நாள் முழுவதும் தேசிய உடையையே  அணிந்தனர்.

இக்குறிப்புகள் காந்தியின் இலங்கை வருகையைப் பற்றிச் சுருக்கமான தகவல்களையே தருகின்றன. எனினும் காந்தியின் வருகையைப் பற்றிய பகுப்பு நிலையைச் செய்வதற்கு முன்னோடித் தரவுகளாகக் காணப்படுகின்றன.

அவர் சென்ற இடங்களும் நிகழ்த்திய உரைகளும் இலங்கையில் உள்ளவர்களின் விடுதலை உணர்வை எவ்வளவு தூரம் விரைவுபடுத்தியது என்பதையும் உய்த்துணர முடிகிறது. இந்த உரையிலே விரிவாக அது பற்றி ஆராய்வதற்கு இடமின்மையால் காந்தியின் சிந்தனைகளின் பதிவு நிலை பற்றிய சுருக்கமான கருத்துப் பதிவையே செய்ய முடியும். மேலும் கருத்தரங்கின் கருப்பொருள் என்ற கட்டமைப்பில் உள்ளே நின்று கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டிய வரையறையையும் பேண வேண்டியமை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

காந்தியின் வருகையால் ஏற்பட்ட மாற்றங்கள்

காந்தியின் வருகையால் மூன்று சமூகத்தளங்களிலே மாற்றங்கள் ஏற்பட்டன. 

1: பொதுக்கூட்ட நிலை

2. இலங்கைத் தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பு நிலை

3. கல்லூரிகள் என்ற நிலை

இத்தளங்களிலே ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றிய பதிவுகளையும் செய்தித்தாள்கள் மூலம் கணிக்க முடிகிறது. காந்தி இலங்கைக்கு வருகை தந்தபோது மேற்கூறிய மூன்று தளங்களின் செயற்பாடுகளையும் இன்று நாம் அறிவதற்கும் அச்செய்திகளே பெரிதும் உதவியாயுள்ளன.

குறிப்பாக, இலங்கையில் காந்தியின் வருகை பற்றிய செய்திப் பதிவுகள் பரிமாறப்பட்டபோது மீள் பதிவுகளும் செய்யப்பட்டுள்ளன. அந்தக் குறிப்புகள் மாற்றங்களை விளங்கிக்கொள்ள உதவுகின்றன.

அப்பதிவுகள் சில பின்வருமாறு அமைந்துள்ளன. இவை இணையதளத்திலிருந்து பெறப்பட்டவை.

பொதுக் கூட்ட நிலையில் நாட்டு விடுதலை பற்றிய உணர்வு இலங்கை மக்களிடையே பரவுவதற்கு வாய்ப்பான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. சுதந்திரப் போராட்டத்தின் தேவை நன்கு உணரப்பட்டது. அக்காலத்தில் அந்நியராட்சிக்கு எதிராகச் செயற்பட வேண்டும் என்ற மனோநிலை மக்களிடையே தோன்றலாயிற்று, மகாத்மா காந்தி இலங்கைக்கு வருமுன்னதாகவே அவருடைய வருகை பற்றிய செய்தியைச் செய்தித்தாள்கள் வெளியிட்டிருந்தன.

இலங்கையின் சுதந்திரப் போராட்ட வீரரான சி.இ.கொரியா மற்றும் அவருடைய சகோதரர் விக்டர் கொரியா ஆகியோரின் அழைப்புக்கிணங்கியே மகாத்மா காந்தி தனது மனைவி கஸ்தூரிபாவுடன் இலங்கைக்கு வந்திருந்தார். சிலாபத்தில் கொரியாவின் வீடு அமைந்திருந்தது. அந்த வீட்டிற்குச் சிகிரியா என்று பெயரிடப்பட்டிருந்தது.

அந்த 'வீட்டிற்கு அண்மையிலிருந்த "நைனாமடம்’ கிராமத்திற்கும் மகாத்மா காந்தி சென்றிருந்தார். அவரது வருகையின் காரணமாக அந்தக் கிராமம் அப்போது ’ஸ்வராஜ்யபுரம்’ என்று பெயர் மாற்றம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. அந்த வீட்டிலிருந்த டொரின் என்ற ஒன்பது வயதுச் சிறுமி காந்திக்கு அளிக்கப்பட்ட வரவேற்புப் பற்றி வருமாறு கூறியுள்ளாள்.

"மகாத்மா உள்ளே வரும்போது நீலநிறத் தாவணியணிந்திருந்த என்னுடைய தங்கை நேன், அவருடைய கழுத்திலே மாலை இட்டாள். அந்த குட்டிப் பெண்ணின் வரவேற்பில் மகிழ்ந்த காந்தி, நேனை “காந்தியின் இனிமையான குட்டி இதயம்" என்று ஆங்கிலத்தில் விளித்தார். “சிகிரியா” வீட்டில் காந்திக்கு பேரீச்சம் பழங்களும் அவர் விரும்பி அருந்தும் ஆட்டுப்பாலும் அளிக்கப்பட்டன. மகாத்மா காந்தி தாம் நூல் நூற்கும் கருவியை எனது தந்தை கொரியாவுக்குப் பரிசாக அளித்தார்.

இப்பதிவு ஒரு சிறுமியின் உள்ளத்திலே காந்தியின் இலங்கை வருகை ஒரு வியப்பையும் பெருமகிழ்ச்சியையும் ஏற்படுத்தியதை உணர வைக்கிறது.

அதேநேரம், காந்தியின் கல்லூரிகளுக்கான வருகை இளையவர் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு பத்திரிகைச் செய்தி வருமாறு அதைப் பதிவிட்டுள்ளது.

பௌத்த தியோசோஃபிகல் சொசையிட்டியினால் 1892 ஆம் ஆண்டில் மகிந்த கல்லூரி காலியில் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அங்கு சென்ற மகாத்மா காந்தி அங்கு கல்வி கற்ற மாணவர்கள் மத்தியிலும் உரையாற்றினார். அதேபோல் கொழும்பில் அமைந்துள்ள ஆனந்தாக் கல்லூரிக்கும் சென்ற அவர் இலங்கையின் அழகைப் பற்றியும் அந்த மாணவர்களைக் காண்பதில் தாம் அடைந்த மகிழ்ச்சியைப் பற்றியும் கருத்துரைத்தார். மேலும், கண்டி தர்மராஜ கல்லூரிக்குச் சென்ற அவர் அங்கிருந்த மாணவர்களிடையே புகை பிடிப்பதன் தீமைகள் குறித்துக் கலந்துரையாடினார்.

அதன் பின்னர் மாத்தளைக்குச் சென்ற காந்தியின் கரங்களால் பாக்கியம் தேசிய கல்லூரிக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. பின்னாளில் அது கட்டி முடிக்கப்பட்டு சர் பொன்னம்பலம் இராமநாதனால் திறந்து வைக்கப்பட்டது. இன்று இது மாத்தளையின் புகழ்பெற்ற பெண்கள் கல்விக் கூடமாகத் திகழ்கின்றது.

மகாத்மா காந்தி இலங்கைக்கு வந்து கல்லூரிகளிலே ஆற்றிய உரைகள் மாணவர்களைப் பெரிதும் ஈர்த்தன. பொதுமக்களும் சுதந்திரம் பற்றிய விளக்கங்களைப் பெற்றனர். அதனால், மகாத்மா காந்தியின் அகிம்சை இயக்கத்திற்காக நன்கொடை வழங்கினர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவருடைய பயணத்திலே பங்கு கொண்டனர். இலங்கை சார்பில் அப்போதைய ரூபா மதிப்பில் மொத்தம் 1,05,000 ரூபாய் பணம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இலங்கையின் சில பாடசாலைகள் முன்வந்து காந்தி இயக்கத்திற்காக வழங்கிய நன்கொடை விபரம் வருமாறு:

நன்கொடை விபரம்

15.11.1927 ஆனந்தாக் கல்லூரி, கொழும்பு ரூ.400.00

15.11.1927 நாலந்தாக் கல்லூரி, கொழும்பு 400.00

15.11.1927 வித்யோதய கல்லூரி, கொழும்பு 600.00

18.11.1927 தர்மராஜாக் கல்லூரி, கண்டி 111.00

22.11.1927 சகிராக் கல்லூரி, கொழும்பு 400.00

24.11.1927 மகிந்தாக் கல்லூரி, காவி 465.00

29.11.1927 சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் 258.00

29.11.1927 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் 279.00

29.11.1927 இராமநாதன் பெண்கள் கல்லூரி, யாழ்ப்பாணம் 1111.08

29.11.1927 யாழ்ப்பாணக் கல்லூரி, யாழ்ப்பாணம் 600.00

காந்தி யாழ்ப்பாணம் வருகை தந்த வேளையில் அங்கு யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் (JAFFNA YOUTH CONGRESS) என்ற அமைப்பு இயங்கி வந்தது. இது 1924 ஆம் ஆண்டிலே தொடக்கப்பட்டது. பிரிட்டிஷார் ஆட்சியிலிருந்து இலங்கைக்கு முழுமையான விடுதலை வேண்டும் என்ற கருத்தை முதன்முதலாக ஓர் அமைப்பு நிலையில் முன்வைத்த பெருமை இந்த அமைப்பையே சாரும்.

1927 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த அமைப்பின் மாநாட்டிலும் காந்தி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதனால் இலங்கை இளைஞர்களிடையே அரசியல் அடிப்படையில் தமக்கு வழிகாட்ட அயல்நாட்டில் ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை உருவாகியது. செய்திகள் மூலமாக அறிந்திருந்த காந்தியை நேரில் கண்டதும் அவர் உரைகளைக் கேட்டதும் இதற்குக் காரணங்களாக அமைந்தன. இந்தியாவின் விடுதலையையும் முன்னேற்றத்தையும் மகாத்மா எவ்வளவு விரும்பினாரோ அதே அளவு அக்கறையை அவர் இலங்கை மீதும் கொண்டிருந்தார். ஆனால் 1927 ஆம் ஆண்டு காந்தி இலங்கைக்கு மேற்கொண்ட வருகையை அவரது முதல் வருகையும் இறுதி வருகையுமாக அமைந்துவிட்டது.

தமிழ்ப் பெண்களின் நிலையும் சுதந்திர நோக்கும்

அக்காலத்தில், கல்வியில் இலங்கைத் தமிழ்ப் பெண்களின் நிலை  முன்னேற்றம் பெற்றிருந்தது என்று கூறுவதற்கில்லை. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பெண்களின் கல்விப்பேறு மட்டுப்படுத்தப்பட்டதாக மேட்டுக்குடியினருக்கே வாய்ப்பளிப்பதாக இருந்தது.

யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்களின் பண்பாட்டு நிலையான வாழ்வும் இதற்கு ஒரு தடையாக இருந்தது. பிரிட்டிஷார்  நிர்வாகக் கட்டமைப்பிலே பெண் கல்வி இடம் பெற்றிருந்தாலும் நடைமுறைப்படுத்துவதில் தடைகள் இருந்தன. மரபான வாய்மொழிக் கல்வியும் திண்ணைப் பாடம் பயிலும் பெண்களை உள்வாங்க முயற்சியெடுக்கவில்லை. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்ற பழமொழியைப் பேணும் நிலையே இருந்துள்ளது. மேலும் பருவமடைந்த பெண்களைத் திருமணமாகும் வரை வீட்டிற்கு வெளியே அனுப்பாத மரபும் பேணப்பட்டது.

இந்நிலையிலும் பெண்கள் கல்லூரிகள் சில அமைக்கப்பட்டன. அந்த வகையில் 1896 ஆம் ஆண்டு அங்கிலிக்கன் திருச்சபையின் ஒரு பிரிவான சேச் மிஷனால் (CMS) நிறுவப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரியும் 1824 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உடுவில் மகளிர் கல்லூரியும் குறிப்பிடத்தக்கவை யாகும்.

உடுவில் மகளிர் கல்லூரி அமெரிக்கன் மிஷனரியால் அமைக்கப்பட்ட முதல் பெண்கள் கல்லூரியாகும். கிறிஸ்தவ சமயப்பரப்பலின் விளைவாகவே இப்பெண்கள் கல்லூரிகள் தோன்றின.

ஆனால், 1913 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மருதனார் மடம் என்னும் இடத்தில் பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட கல்லூரி சைவத் தமிழ் பெண்கள் ஆங்கிலக் கல்வி பெற வேண்டும் என்ற நோக்குடனேயே நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரிக்கும் காந்தி சென்றிருந்தார். மேலைத்தேய ஆட்சியின் கீழ்க்கல்வி முன்னெடுக்கப்பட்டபோது இத்தகையதொரு நிலைமை இருந்தமையால் பெண்கள் சுதந்திர நோக்கு ஆங்கிலக் கல்வியைப் பெறுதல் என்ற குறுகிய நோக்குடையதாகவே இருந்தது. இராமநாதன் கல்லூரியில் காந்தி ஆற்றிய உரையைத் தற்போது வெறும் செய்தியாகவே அறிய முடிகிறது.

அவருடைய இயக்கத்திற்கு இராமநாதன் பெண்கள் கல்லூரியே ஏனைய கல்லூரிகளைவிடக் கூடுதலான நிதிப்பங்களிப்பைச் செய்திருப்பது சுதந்திரம் பற்றிய ஒரு சிறு எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கொள்வதற்கு இடமளிக்கிறது. எனவே, காந்தியின் இலங்கை வருகை யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பெண்களிடையே ஒரு சுதந்திர உணர்வைத் தோற்றுவித்தது என்று கூறுவதற்கில்லை. ஆனால், ஆண்களைப் போல கல்லூரிக்குச் சென்று உயர்கல்வியும் ஆங்கிலக் கல்வியும் பெற வேண்டுமென்ற ஒரு நோக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறலாம்.

இலங்கையில் மலையகப் பகுதியில் பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் தேயிலை, ரப்பர் தோட்டங்களிலே கூலியாக வேலை செய்வதற்கெனத் தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்கள் ‘மலையகத் தமிழர் என்ற பெயரோடு வாழ்ந்தனர். அவர்களுடைய வாழ்வியல் சமூக நிலையில் ஓர் அடிமை வாழ்வியலாகவே இருந்தது. 'தோட்டக்காட்டார்' என்றொரு பெயராலும் அம்மக்கள் கேலியாக அழைக்கப்பட்டனர். கல்வியறிவு பெறமுடியாத தினக்கூலியாளர்களாக வாழ்ந்த அவர்களைப் பற்றிய செய்திப் பதிவுகள் நிறைய உள்ளன. ஆனால், இந்த உரையிலே குறிப்பாகப் பெண்கள் நிலை பற்றியே எடுத்துரைப்பது என்ற ஒரு வரையறை செய்யப்பட்டிருப்பதால் மலையகத்துத் தமிழ்ப் பெண்கள் பற்றிய நிலையே கூறப்பட்டுள்ளது.

மீனாட்சியம்மாள் நடேசய்யர் என்ற மலையகத்தில் வாழ்ந்த கவிஞரும் எழுத்தாளருமான பெண்மணியின் எழுத்துகளே இன்று தனித்துவமாகப் பெண்கள் பற்றிய நிலையை அறிவதற்குப் பெரிதும் உதவுகின்றன. இவர் மலையகத்தின் முதல் பெண் கவிஞர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இவரது கவிதைகள் மலையகத் தமிழர்களின் பொருளாதார வாழ்வியல் சிக்கல்களைப் பதிவு செய்துள்ளன. அவர்களை உரிமைகளுக்காகப் போராடும்படி தூண்டுவதாக அமைந்துள்ளன. இன்னும் மீனாட்சியம்மாள் மலையக அரசியல்வாதியும் தமிழறிஞரும் பதிப்பாளருடைய நடேசய்யரின் மனைவியாக விளங்கியமையால் சுதந்திர உணர்வுடையவராக விளங்கினார்.

இலங்கையில் பெண்களின் வாக்குரிமைக்காகப் பெரிதும் பாடுபட்டு உழைத்தவர். இவரது கவிதைகள் இந்தியத் தொழிலாளரின் துயரங்களைப் பதிவு செய்துள்ளன. கவிதையின் மொழிநடை மிக எளிமையாக இருந்ததால் எல்லோரும் படித்து விடுதலையுணர்வு பெற வைத்தது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த தமிழ் மக்கள் ஒரு மகிழ்ச்சியான வாழ்வையே எதிர்பார்த்து வந்தனர். ஆனால், அவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது என்பதை பின்வரும் கவிதையிலே காட்சிப்படுத்தியுள்ளார்.

"பாய்க்கப்பல் ஏறியே வந்தோம் - அந்நாள்

பலபேர்கள் உயிரினை யிடைவழி தந்தோம்

தாய்நாடென் றெண்ணி யிருந்தோம் - இவர்கள்

தகாத செய்கை கண்டு மனமிக நொந்தோம்''

ஒரு பெண் என்ற பார்வையில் மிகத் துணிவாக . அப்போதைய வாழ்வியல் நிலையை அவர் பதிவு செய்திருப்பது ஒரு சுதந்திர நோக்கையே புலப்படுத்துகிறது. அவருடைய கும்மி, மெட்டிலே அமைந்த பாடற்பகுதி அரசியல் உணர்வை வெளிப்படுத்துவதாக வருமாறு அமைந்துள்ளது.

’ஏற்படப் போகின்ற போர் தனக்கே

பலமாய் எதிர்த்திட வேணும் நாமெல்லாரும்

பண்பாகக் கூடிட வாருங்களே

இந்தியர் இலங்கையைச் சுரண்டுகிறார் என்று

எக்காலம் கொட்டிடும் இலங்கையர்கள்

சிந்தனை செய்யாது பேசிடும் பேச்சுக்கு

சேதியொன்று சொல்ல வேணுமிப்போ

நூறு வருஷங்கள் முன்னாலே யிலங்கையின்

நேர்த்திதா னெப்படி யிருந்த தென்று

பாருங்கள் பங்களா தோட்டங்கள் தோட்டங்கள்

பண்பா யமைந்து விளங்குவதை’

இந்தக் கவிதை இலங்கைவாழ் இந்தியர் நலவுரிமை கோரியும் மலையகத்தமிழர் தமது வாழிட உரிமைக்காகப் போராட வேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பதாகவே அமைந்துள்ளது.

அடிமை வாழ்வை விட்டுச் சுதந்திரமாக வாழ மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற மீனாட்சியின் குரல் காந்தியின் வருகையின் எதிரொலி என்றே கூறலாம். மலையகத்திலே காந்தி சென்ற இடங்கள் எல்லாம் அங்கு வாழ்ந்த இந்திய மக்களின் குடியிருப்புகளாகவே இருந்தன.

நுவரெலியா, மாத்தளை, பதுளை, கண்டி, பண்டாரவளை, ஹட்டன் போன்ற இடங்கள் இன்றும் மலையகத் தமிழர் வாழ்விடங்களாகவே அடையாளப்படுத்தப்படுகின்றன. ஆனால், இன்னும் அந்தத் தமிழ் மக்களுக்கு குறிப்பாகப் பெண்களின் வாழ்க்கையில் முழுமையான மாற்றம் ஏற்படவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற இந்தியத் தமிழ்ப் பெண்களின் நிலை பற்றிப் பாரதி கவிதையிலே செய்த பதிவு இங்கே நினைவு கூற வேண்டும்.

கரும்புத் தோட்டத்திலே - அவர்

கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி

வருந்துகின்றனரே ஹிந்து

மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்து மெய்

சுருங்குகின்றனரே அவர்

துன்பத்தை நீங்க வழியில்லையோ? ஒரு

மருந்ததற் கிலையோ -செக்கு

மாடுகள் போலுழைத் தேங்குகின்றார் அந்த

(கரும்புத் தோட்டத்திலே)

நாட்டை நினைப்போரோ - எந்த

நாளினிப் போயதைக் காண்பதென்றே

அன்னை

வீட்டை நினைப்பாரோ - அவர்

விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்

கேட்டிருப்பாய் காற்றே- துன்பக்

கேணியில் எங்கள் பெண்கள் அழுதசொல்

மீட்டும் உரையாயோ - அவர்

விம்மி யழவுந் திறங்கெட்டுப் போயினர்

(கரும்புத் தோட்டத்திலே)

பாரதியைப் போல இலங்கையிலே தேயிலைத் தோட்டத்திலே வேலை செய்யும் பெண்ணின் அவலநிலையை இலங்கைக் கவிஞரான கவிமணி திமிலைத்துமிலன் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

தோட்டத்திலே நேயிலைக் காட்டுக்குள்

கூடையைத் தூக்க எழும்வலிப் பூட்டுக்குள்ளே

ஓட்டத்திலே தளிர் கிள்ளி நிறைத்தங்கே

ஓடாய் உழைக்கிறாள் மாரியம்மா -அவள்

தோட்டச் சிறுமி மலர்ந்து விட்டாள் வாக்குச்

செய்து கொடுத்தாச்சு மாப்பிள்ளைக்கும் - அதை

நாட்டப் புரளுமா நாலு துட்டு சொல்லில்

நாளை பிறப்பது நம்முலகு!

வீட்டுப் படிகளிலே றோட்டுக்கு றோட்டாக

வீணாய் அலைகிற லட்சுமிக்குச்

சாட்டுக் கொருகந்தல் மார்பை மறைக்குது

சாவுக்குக் கெஞ்சுது கண்குழிகள் - நெஞ்சக்

கூட்டுக்குள்ளே உயிர்மூச்சுத் துடிக்குது

கும்பி கொதிக்குது வெம்பசியால் - இந்த

நாட்டுப் பிரசையாசு அவளும் நினைப்பது

நாளை பிறப்பது நம்முலகு!

மலையகத் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையில் இன்னமும் இந்த அவல நிலை தொடர்கிறது. உரிமையற்றவர்களாகக் கூலித் தொழிலாளர்களாக அவர்கள் வாழும் அவல வாழ்வு இப்போதும் நடைபெறுகிறது. மாற்றமில்லாத அந்த வாழ்க்கையை அவர்கள் ஏற்று வாழப் பழகிவிட்டனர்.

இவ்வுரை ஓர் அவல வாழ்வில் இன்னமும் பெண்கள் அடங்கிப் போயுள்ளனர் என்பதை நினைவூட்டவே நடந்தது. இலங்கைக்கு காந்தியின் வருகை பல நிலைகளிலே பயன்தருவதாக இருந்தாலும் பெண்களின் சுதந்திர நோக்கிலே முயற்சிகள் பெரிதாக இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை என்றே கூற வேண்டும்.

சுதந்திர நோக்கு என்ற பெரியதொரு வண்ணக் கோலத்தின் முதற்புள்ளியாக ஆற்றியுள்ளேன். இதன் தொடர்ச்சி விரிவான தேடலுக்குரியது. காந்தியின் சிந்தனைத் தடங்களிலே இன்று பணி செய்பவர்கள் பெண்களின் எதிர்கால வளமான வாழ்வு பற்றிய செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

பெண்ணைப் பற்றிப் பெண்ணே எண்ணிச் செயற்பட வேண்டும் என்ற குறுகிய எண்ணத்தை விடுத்து எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆண்டுக்கொருமுறை நினைவூட்டல் செய்யும் நடைமுறையை விட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்த நம்முன்னோர் காட்டிய வழியைத் தேடிச் செல்ல வேண்டும்.

புலம் பெயர்ந்து சென்ற மக்கள் தமது தாய்நாடு திரும்பும் கனவோடு வாழ்ந்து தேயிலைச் செடியின் மடியிலே மறைந்தனர். இது வரலாற்றுக் குறிப்பாக மட்டும் பதிவு செய்யும் வாழ்வியலல்ல. நாம் வாழுங்காலத்திலே எம்மக்களுக்காகச் செய்ய வேண்டிய பணி. வெறும் உரையாகக் காற்றில் கலந்துபோகாமல் ஒரு விரைவான செயற்பாட்டில் இணைக்கும் குரலாக அமைய வேண்டும்.

                                                                                                                                           (தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com