எரியும் இலங்கை: இந்தியாவின் திட்டங்கள் மதிக்கப்படுகிறதா?; நேரடி ரிப்போர்ட்- 11

இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்...
எரியும் இலங்கை: இந்தியாவின் திட்டங்கள் மதிக்கப்படுகிறதா?; நேரடி ரிப்போர்ட்- 11

இலங்கையில் பொருளாதார நெருக்கடியிலும்,  மத்திய வங்கி முதலில் 22.27 பில்லியன் ரூபாயை  அச்சிட்டுள்ளது. பின், கடந்த சில நாள்களில் மேலும் 18.70 பில்லியனை அச்சிட்டிருப்பதால் இது புதிய சிக்கல்களைக் கொண்டு வரலாம்.

இத்தொகையில், மத்திய வங்கி கொழும்பு-யாழ்ப்பாணம்-காங்கேசன்துறை ரயில் பாதையை மறு சீரமைத்துக் கொடுத்தது.

இருப்பினும், பொருளாதார நெருக்கடி நிலையின் தீவிரம் அதிகரித்த பின், கடந்த மார்ச்-23 ஆம் தேதி நள்ளிரவு முதல் அனைத்து ரயில் பயணக் கட்டணங்களும் அதிகரித்தன.

எடுத்துக்காட்டாக,

ஏசி முதலாம் வகுப்பு இருக்கை முன்பதிவு (ரூபாயில்)

யாழ் - கொழும்பு : 2000.00

யாழ் - பொல்காவெல: 2000.00

யாழ் - குருணாகல்: 1800.00

யாழ் - அனுராதபுரம்: 1500.00

 யாழ் -வவுனியா: 1500.00

யாழ் - கிளிநொச்சி: 1300.00

இரண்டாம் வகுப்பு இருக்கை முன்பதிவு

யாழ் - கொழும்பு: 1500.00

யாழ் - பொல்காவெல: 1500.00

யாழ் - குருணாகல்: 1300.00

யாழ் - அனுராதபுரம்: 1000.00

யாழ் -வவுனியா: 1000.00

யாழ் - கிளிநொச்சி: 800.00

மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவு

யாழ் - கொழும்பு: 1200.00

யாழ் - பொல்காவெல: 1200.00

யாழ் - குருணாகல்: 1000.00

யாழ் - அனுராதபுரம்: 700.00

யாழ் -வவுனியா: 700.00

யாழ் - கிளிநொச்சி: 500.00

சாதாரண பயணிகள் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

யாழ் பண்பாட்டு மையம் திறப்பு:

12 தளங்களைக் கொண்ட இலங்கை – இந்திய நட்புறவின் சின்னமான யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் மார்ச் 28 அன்று எளிமையான முறையில் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பண்பாட்டு மையத்தின் துவக்க நிகழ்வுகளில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் நண்பகல் ஒரு மணியளவில் காணொளி மூலம் திறந்துவைக்கப்பட்டது.

இச்சந்திப்பில், இந்தியா - இலங்கை இடையே சீனா உள்ளே நுழைவதைத் தடுக்க ராமேஸ்வரம் மற்றும் யாழ்ப்பாணத்தையொட்டி உள்ள 3 தீவுகளில் மின்சாரம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் அமைச்சர் ஜெய்சங்கர் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்தியாவுடன் பல ஒப்பந்தங்களில் இலங்கை கையெழுத்திட்டாலும் எதையும் அவர்கள் பயன் தரும் வகையில் சரியாக நெறிப்படுத்தவில்லை.

அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, கடந்த ஆண்டு கைவிடப்பட்ட சம்பூர் மின் உற்பத்தி நிலையம் - SAMBUR POWER PLANT, SRI LANKA .

ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்னால், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே சம்பூர் மின் உற்பத்தி, பலாலி விமானநிலையம் சீர்படுத்துதல், 2009-க்குப் பிறகு வடக்கு, கிழக்கு மாநிலங்களில் கன்னிவெடிகளை நிலத்திலிருந்து அகற்றுதல் எனப் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

1998-லிருந்தே இந்திய இலங்கை வணிக ஒப்பந்தங்கள் சிலவும் நிறைவேறியது. ராஜபட்ச காலத்தில் இந்த ஒப்பந்தங்களை எல்லாம் சற்றும் மதிக்காமல் சீனாவுக்கு சிவப்புக் கம்பளத்தை விரித்தார். குறிப்பாக, கொழும்பு நகரத்தில் காலி சாலையில் இந்திய ஹைகமிசன் அலுவலகத்திற்கு இடம் ஒதுக்கிவிட்டு பின் அதைத் திரும்பப்பெற்று சீனாவின் ஒரு விமான நிறுவனத்திற்கு கையளித்தார் ராஜபட்சே.

இந்தியாவின் ஒப்பந்தங்களுக்கு சற்றும் மதிப்பளிக்காமல் நடந்துகொண்ட இலங்கை அப்போது மீண்டும் சம்பூர் மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தை தூசிதட்டி அதனை உயிர்ப்பிக்கச் செய்தது.

அதைக்குறித்து 2021, மார்ச்-16 கருணாதனன் எழுதியிருக்கும் பத்தி கீழ்வருமாறு:

மக்கள் வாழ முடியாத காட்டுப்பகுதி என சம்பூர் மக்களின் நிலங்களுக்கு முத்திரை குத்தியது அரசு. இது சுயலாபம் கருதி செய்த ஓர் திட்டமாகும். அதாவது, அந்நிய செலவாணியைப் பெற வெளிநாட்டவர்களையும், வெளிநாட்டுக்குப் பெண்களை வேலைக்கு அனுப்புவதையும் ஊக்குவிக்கும் இந்த அரசு, தனது கடனையும் சீன ஆதிக்கத்தில் நாம் கட்டுப்படவில்லை என்ற காரணத்துக்காகவும், இலங்கையின் கிழக்கு கரையோரத்தை இந்தியாவுக்கு வழங்கியது. இந்தியாவுக்கு கிழக்கு கரையோரத்தை வழங்காமல் இருந்திருந்தால் இன்று கிழக்கை சீனாவுக்கோ அல்லது ரஷ்யாவுக்கோ இந்த அரசாங்கம் தாரை வார்த்திருக்கும். இன்றுள்ள நிலைமையை விட விளைவுகள் மிகவும் மோசமாக இருந்திருக்கும் என்பதையும் உணரவேண்டும்.

கடல் நீரில் விவசாயம் செய்யும் சீனா, பாலைவனத்திலேயே விவசாயம் செய்யும் ரஷ்யா ஆகிய நாடுகள் செல்வச் செழிப்பு மிக்க சம்பூர் நிலத்தை கண்டு சும்மாவிட்டிருக்க வாய்ப்பே இல்லை. அந்த வகையில் மேற்குறித்த நாடுகள் கிழக்கு கரையோரத்தை கைப்பற்றாதது ஒரு ஆறுதலே.

ஆனால், இன்று அந்தக் கிழக்கு கரையோரத்தை இந்தியா கைப்பற்றி இருப்பதனால் என்ன நடந்துள்ளது? புவியியல் ரீதியாக இலங்கையின் கிழக்குக் கரையோரமானது இயற்கைத் துறைமுகம், குடாக்கள், ஆழம் குறைந்த கடற்படுக்கை, சங்கமம் (மகாகவலி கங்கை கடலோடு இணைகிறது), கடல் நீரேரிகள் எனப் பல இயற்கையாகவே அமைந்துள்ளன. அதேநேரம் இந்து சமுத்திர ரீதியான கப்பல் போக்குவரத்தையும், சர்வதேசக் கடல் எல்லைகளையும் மேற்பார்வை செய்ய முடியும். ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளையும் அவதானிக்க முடியும்.

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் இந்திய கடற்படைத் தளம் அமைந்துள்ள போர்ட் பிளேர் துறைமுகம் மற்றும் இந்திய யூனியன் பிரதேசமான  நிக்கோபார் தீவிலுள்ள கடற்படைத்தளம் ஆகியவற்றின் மேற்பார்வைக்கு இலங்கையின் கிழக்குக் கரையோரம் இந்தியாவுக்கு அவசியப்பட்டது எனலாம்.

ஆனால், தமிழர் என்ற வகையிலும், வரலாற்றின் அடிப்படையிலும் காலங்காலமாக இந்தியாவுடன் தொடர்பு கொண்டுள்ள இலங்கை மக்களின் சொந்த நிலத்தைப் பறித்து, அங்கு மக்களுக்கு பொருந்தாத ஓர் அனல் மின் நிலையத்தைக் கட்டும் என எதிர்பார்க்கவே இல்லை.

நீண்டகாலமாக இழுபறியில் இருந்த இந்திய அனல்மின் நிலையம் தற்போது சம்பூரில் அமைவது ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது என்றே கூறவேண்டும். காரணம், அனல் மின் நிலையத்துக்கென சுமார் 1548 ஏக்கர் நிலப்பகுதி கம்பி வேலிகளால் சூழப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் 208 குடும்பங்கள் வாழ்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேலை, 1548 ஏக்கரில் சுமார் 500 ஏக்கர் வரை சுத்தப்படுத்தப்பட்டு அனல் மின் நிலையம் அமைக்கும் ஆரம்ப கட்டத்தில் தயார் நிலையில் இருப்பதை காண முடிந்தது.

முக்கியமாக, இந்தியாவின் ஆதரவுடன் அமையவுள்ள இந்த மின் நிலையத்தில் இலங்கையின் பல பகுதிகளில் நீடிக்கும் மின் பிரச்னைக்குத் தீர்வு காணமுடியும் என கூறப்பட்டது. அதற்காக 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் (500*2) இரண்டு உலைகளை அமைக்கவுள்ளதாகவே ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது (250 * 2) 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இரு உலைகளை அமைப்பதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

சம்பூரில் இம்மின் உற்பத்தியை இலங்கை மின்சார சபையும்  இந்திய தேசிய அனல்மின் நிலைய கூட்டுத்தாபனமும் இணைந்து  உருவாக்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் 2006 ஆம் ஆண்டு முதல் இழுபறியில் இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் இந்தியாவிற்கு வந்த  முன்னாள் பிரதமர் மைத்திரிபால சிறிசேனா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இறுதி ஒப்பந்தத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இலங்கையில் அமையவுள்ள இரண்டாவது நிலக்கரி அனல்மின் நிலையம் இதுவாகும். முழுக்க முழுக்க சம்பூர் மக்களின் நிலத்தில் அமையவுள்ள இந்திய அனல் மின் நிலையத்துக்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை இன்னும் அனுமதியளிக்கவில்லை. இப்போதுதான் சுற்றாடல் தாக்கம் குறித்து மக்கள் கருத்துக்கு விடப்பட்டுள்ளது. இதனால், ஒரு மாதம் ஆட்சேபனை வழங்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இடையே, வயல்வெளிகள் உள்ள இடத்தில் அமையவுள்ள அனல்மின் நிலையம் தொடர்பாக இந்திய அதிகாரிகள் மட்டும் ஆராய்ச்சி செய்துவிட்டு செல்கிறார்கள்.

இலங்கையைச் சேர்ந்த எவரும் ஆராய்ச்சி செய்யவில்லை. திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த எவரும் அப்பகுதிக்கு செல்லவே முடியாதபோது, அங்கு எத்தகைய தாக்கம் ஏற்படும்?

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தினால் மக்கள் இன்றும் பல பிரச்னைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அந்த நிலையைத்தான் சம்பூர் மக்களும் எதிர்கொள்வார்கள் என்று அனுமானிக்க முடியும் என்கின்றனர் சூழலியல் ஆய்வாளர்கள்.

சம்பூர் பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வுகளையும், ஆட்சேபனைகளையும் அரசுக்கு தெரிவிக்க தயாராகி வரும் ஆய்வாளர் திருச்செல்வம் கூறியதாவது;

சம்பூர் அனல் மின் நிலையம் அமைக்கப்படுவது குறித்த தாக்கத்தை நீர், நிலம், ஆகாயம், உடலியல் தாக்கம் என்று பிரித்துக் கூறலாம்.

அனல் மின் நிலையத்தை அமைக்கக் கடல் நீரை பயன்படுத்தவுள்ளதாக கூறுகின்றனர். ஆனால், அது சாத்தியப்படாத ஒன்று. இதனால் நன்னீரே பெறப்படவுள்ளது. எனவே, நீரில் கடல் நீரும், நன்னீரும் மாசுபடக் கூடும்.

நன்னீரைப் பெறுவதால் சம்பூர் பகுதிகளில் நன்னீர் விஷமாகும் வாய்ப்புள்ளது. இரசாயனக் கலவைகள் இதில் கலக்கலாம், நன்னீரில் கழிவுகள் படிவதால் நீரிலுள்ள உயிரினங்கள் இறக்கும் வாய்ப்பு ஏற்படலாம். குடிப்பதற்கேற்ற நீராக நன்னீர் இருக்காது. சுன்னாகத்தை போலவே கிணறுகளில் கழிவு எண்ணெய் கலக்கும். சம்பூரில் ஏராளமான சிறுகுளங்களும் கிணறுகளும் இருக்கின்றன.

கடல் நீரைப் பெறுவதால் கடல் வாழ் உயிரினத்தின் சங்கிலித்தொடர் உடைபடுவதோடு, உயிரினம் அழிவடையும் நிலை ஏற்படும். கடல் நீரில் அனல்மின் நிலைய கழிவுகளைக் கொட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவே தெரியவருகிறது. இக்கழிவுகள் மிகவும் வெப்பமானவை. ஆழமற்ற பறவைக்கடலான கொட்டியாரக் குடாவில் கழிவுகள் கொட்டப்பட்டால் மீன் உற்பத்தி பாதிக்கப்படும். அந்த வெப்பமான நீரில்மீன் இறந்து போகும், இடம்பெயர்ந்து வேறு இடங்களில் முட்டையிடும். இனி மீன்களை கொட்டியாக்குடாவில் காண்பதே அரிதாகிவிடும்.

அதேவேளை கடல் நீர் அலைகளினூடாக பறந்து செல்வதால் கிழக்குக் கரையோரத்தின் கடல் சார் உயிரின பல்வகைத்தன்மைகளும் கடல்வாழ் தாவரங்களும் பாதிக்கப்படும்.

சம்பூர் நிலம் பொன்விளையும் பூமி எனப்படுமளவுக்கு வளமான மண்ணைக் கொண்டது. இங்குள்ள நன்னீரை அனல்மின் நிலையத்துக்காக எடுக்கும்போது, நன்னீரில் கடல் நீர்கலக்கும். நன்னீர் இல்லாமல் போகும்போது, கடல் நீர் நிலக்கீழ் நீராக ஊடுருவும்.

இதனால் நிலம் வளமிழந்து உப்பு கலந்து உவர்நிலமாகும். தாவரங்கள் வளராது. நிலம் தொடர்பான அனைத்து உயிரினம், தாவரம் எல்லாம் அழிவடையும். இதனால் நிலம் தரிசாகி, பாலைவனமாகும் நிலையும் ஏற்படும். விவசாய நிலங்களில் இனி தொழிற்சாலைகளை அமைத்து சீவிக்க முடியும் என்ற நிலை ஏற்படும். காட்டு வளமும் அழிவடையும்.

இந்த நிலங்களில் தாவரங்கள் இல்லாது போகும்போது, ஆக்சிஸனைப் பெறமுடியாது.  மக்கள் கார்பன் -டை- ஆக்ஸைடை சுவாசிக்க வேண்டிவரும். இதனால் சுவாச நோய், புற்றுநோய், காசநோய் மற்றும் பல பரம்பரை நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

மேலும், நிலத்திலிருந்து சுமார் ஒன்றரை மீட்டர் ஆழத்திலிருக்கும் பாறைகளினூடாக அனல் மின்நிலைய கழிவு நீர் ஊடுருவி கிணறுகளுக்குள் புகுந்தால் அதனையே மக்கள் குடிநீராகப் பயன்படுத்த வேண்டியநிலை ஏற்படும். இவ்வாறு சம்பூரின் முழுக் கட்டமைப்பும் மாற்றம் பெற்று அழிவு நிலை ஏற்படும்.

இருப்பினும், சம்பூர் அனல் மின் நிலையம் அமைப்பதாகக் கூறிய இடம் முதற்கட்டமே என அறிய முடிகிறது. இதில் மொத்தமாக ஆறுகட்டங்கள் இருக்கிறது என பெயர் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதாவது, 700 மில்லியன் ரூபாய் செலவில் முதலாம் கட்டத்தில் இரண்டு 250 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ஓர் உலையும், 2 ஆம் கட்டத்தில் 1300 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இரும்பு தொழிற்சாலைகள், வாகன உற்பத்தி தொழிற்சாலை, உரத் தொழிற்சாலை, நீர் விநியோக தொழிற்சாலை, ஆடைத் தொழிற்சாலை, எண்ணெய் ஆலைகள், சுற்றுலா மையங்கள் என பல தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

இதற்காக இலங்கை உள்பட பிரேசில், இத்தாலி, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் என ஏழு நாடுகள் முதலீடு செய்துள்ளன.

இதுதவிர, அணு உலை ஒன்றும் உருவாகவுள்ளது. மூன்றாம் கட்டமாக இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தொழிற்சாலைகள் நிறுவப்படும். இப்படியாக சம்பூரின் 10,600 ஏக்கருக்கு மேற்பட்ட மொத்த நிலப்பகுதிகளும் சூறையாடப்படவுள்ளது என்றார்.

சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டால் இருபதாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இங்கு அமைக்கப்படவுள்ள அனல் மின்நிலைய வேலையாள்களுக்கு தங்குமிடம், சுற்றுலாத்  துறை போன்ற துறைகளினூடாக சம்பூர் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் லாபம் பெற முடியும் என்று ஓர் அறிக்கை கூறுகிறது.

அனைத்தையும் விட, அனல் மின் நிலையத்தில் வேலை செய்யும் அளவுக்கு உயர் தொழில்நுட்ப அறிவு கொண்ட மக்கள் சம்பூரில் இல்லை. விவசாயம், மீன்பிடி என்று வாழ்ந்த மக்களுக்கு அனல் மின் நிலையத்தில் என்ன வேலை செய்ய முடியும்? இன்னும் பல தலைமுறைகள் அங்கு வாழ்ந்தாலும் உயர்தர வேலை ஒன்று கிடைக்குமா என்பது சந்தேகமே.

கிழக்கின் திருகோணமலை மக்களின் பட்டறிவு என்னவென்றால், பிரீமா, மிட்சுயி, ஆடைத்தொழிற்சாலைகள் என அங்கு தொழிற்சாலைகள் வந்திருந்தும் சம்பூர் தமிழ் மக்களுக்கு 5 சதவீதத்துக்கும் குறைவான வேலையே கிடைத்துள்ளது.

மேலும், மற்றப் பகுதிகளிலிருந்து பெரும்பான்மையான மக்கள் கொண்டுவரப்பட்டு அவர்கள் திருகோணமலை வாசிகளாகிவிட்டதால் தமிழர்கள் சதவீதம் திட்டமிடப்பட்டு குறைக்கப்படுவதாக தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அனல்மின் நிலையத்துக்காக வரும் வேலையாட்கள் தமிழர் கலாச்சாரத்துக்கு சவாலாகவே இருக்கப் போவது உண்மை.

அனல்மின் நிலையத்தை அமைப்பது கனடாவின் திட்டம்

திருகோணமலையில் அனல் மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை 1993 ஆம் ஆண்டு கனடா இலங்கைக்கு பரிந்துரை செய்திருந்தது. மகாவலி சர்வதேச கனேடிய நிறுவனமே இதனை 52 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் திருகோணமலையில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

“திருகோணமலை மின் திட்டம்’ என்ற பெயரில் 300 மெகாவாட் மின்சாரத்தை (1502) உற்பத்தி செய்ய கனேடிய நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. அதில் மகாவலி அனல்மின் உலைகளை தயாரிக்க சுவிட்சர்லாந்து, சுவீடன், அமெரிக்க,ஆஸ்திரேலியா, இத்தாலி, சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகள் முதலீடு செய்ய முன்வந்தன. ஏழு நாடுகளைச் சேர்ந்த 11 கம்பனிகள் முதலீடு செய்ததாக 1993ஆம் ஆண்டு சுற்றாடல் பாதுகாப்பு சான்றிதழும் பெறபட்டதாக குறித்த கனேடிய நிறுவனம் தெரிவிக்கிறது.

மேலும், 1993 ஆம் ஆண்டு தொடங்கி, 1995 ஆம் ஆண்டு திட்டத்தை முடித்து மின்சாரத்தை வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. 93ஆம் ஆண்டு கொள்கை திட்டமிடல் மற்றும் அமலாக்கல் அமைச்சகம் இதற்கான வேலைகளை செய்திருந்தது. பின், சில அரசியல் காரணங்களால் அது தடுக்கப்பட்டது. அதாவது, திருகோணமலையில் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டம் ஆரம்பத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு இன்று அது உறுதியாகியுள்ளது.

COAL அனல்மின் நிலையத்துக்காக பயன்படுத்தப்படும் நிலக்கரி கப்பலில் கொண்டுவரப்படும் அதேவேளை அதனை சம்பூருக்குள் எவ்வாறு கொண்டு வருவது என்பது தொடர்பாகவும், நிலக்கரி கழிவுகளை, அதாவது மின் உற்பத்திக்குப் பின்னர் அதனை எவ்வாறு வெளியேற்றுவது எந்த வழியில் கொண்டு செல்வது என்பது தொடர்பாகவும் தெளிவான தகவல்கள் இல்லை என்கின்றனர் சூழலியல் ஆய்வாளர்கள். இம்மின்சாரம் கந்தளாய்க்கு நிலக்கீழ் முறையில் கொண்டு செல்லப்படவுள்ளது.

இந்நிலையில், பல விளை பொருட்களை உற்பத்தி செய்யும் சம்பூரில் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டால் அதிலிருந்து வெளியேறும் கார்பன், கார்பன் டை ஆக்சைட், மொனோக் சைட், கந்தகவீர் ஒட்சைட் போன்ற இரசாயனக் கலவைகள் அனல்மின் நிலையத்திலிருந்து 18 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரம் வரை தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது மூதூர், திருகோணமலை நகர் என்பவற்றைத் தாண்டி இரசாயன அமிலங்கள் காற்றில் கொண்டு செல்லப்படும்.

தென்மேல் பருவப் பெயர்ச்சி காற்றினால் இத்தாக்கம் உடனடியாக கொண்டு செல்லப்பட்டால்  மிகவும் ஆபத்தான விசயங்கள் ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டிய சூழலியலாளர்கள் இந்திய மக்களுக்கு திட்டமிட்டே இதனைச் செய்வதாக தெரிவிக்கின்றனர்.

------------

இதற்கிடையே, சம்பூரில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தின் பல ஆண்டுகால ஒப்பந்தப் பிரச்னை இறுதியில், சம்பூரில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான கூட்டு முயற்சி பங்குதாரர்கள் உடன்படிக்கையில் இலங்கை இந்தியாவுடன் கையொப்பமானது.

இலங்கை மின்சார சபைக்கும் (CEB) இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்ஸ்தாபனத்திற்கும் (NTPC) இடையில்  ஒப்பந்தம் உறுதியாகவுள்ளது.

திருகோணமலை, சம்பூரில் உள்ள சூரிய சக்தி நிலையம் தொடர்பான ஆரம்ப விவாதங்கள், இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய எரிசக்தி நிறுவனமான NTPC லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையில் பிப்ரவரி மாதம் ஆரம்பமானது.

மேலும், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 50 மெகாவாட் சோலார் பூங்காவை திறப்பதற்கான சாத்தியமான தனியார்-பொது கூட்டாண்மை (PPP) பற்றி கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.

கடந்த அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தில்,அ ரசாங்கத்தின் தற்போதைய 50 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின் நிலைய முயற்சியின் கீழ் சோலார் பார்க் திட்டம் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                                                                                               (தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com