எரியும் இலங்கை: சுரண்டப்படும் தமிழ் நிலங்கள்; நேரடி ரிப்போர்ட் -9

இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்...
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வியாழக்கிழமை தலைநகர் கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பேருந்திற்கு தீ வைத்தனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வியாழக்கிழமை தலைநகர் கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பேருந்திற்கு தீ வைத்தனர்.

இலங்கையில் 2009- ல் இறுதிப் போர் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் வடக்கு, கிழக்குப் பகுதியில் இன்னும் 30,000 ஏக்கர் நிலப்பகுதி இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

அதேபோல வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலங்கை அரச ராணுவம் மட்டுமின்றி மத்திய அரசுக்குச் சொந்தமான தொல்லியல் திணைக்களம், வனவள திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி சபை போன்ற பல நிறுவனங்கள் தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்புகளை செய்து வருகின்றன.

இதன் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 32,110 ஏக்கர் நிலப்பகுதி வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்காகவும் 23,515 ஏக்கர் நிலப்பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்காகவும் அதிகாரிகளால் அபகரிக்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 16,910 ஏக்கர் நிலப்பகுதி இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

இதுமட்டுமின்றி 2018 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலப் பகுதியில் மகாவலி 'எல்' வலயத் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் கோட்டைக்கேணி பகுதியில் 825 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டு நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு நெருக்கமான 25-க்கும் மேற்பட்ட சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கபட்டது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்  வியாழக்கிழமை தலைநகர் கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்  வியாழக்கிழமை தலைநகர் கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி வெளியிடப்பட்ட விசேஷ வர்த்தமானி அறிவித்தல் மூலம் மட்டும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் ஏறத்தாழ 11,031.64 ஏக்கர் நிலப்பரப்பை "நாயாறு இயற்கை ஒதுக்கிடம்" என்கிற பெயரில் கையகப்படுத்தியிருக்கின்றார்கள்.  

அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வெளியிடப்பட்ட மற்றுமொரு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வட்டுவாகல் / வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் 672 ஏக்கர் தனியார் காணியை பொதுத் தேவைகள் என்கிற பெயரில் ஆக்கிரமித்து இருக்கின்றார்கள்.

அதேபோல முல்லைத்தீவு மாவட்டம் நாயாறு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்கள மீனவர்களுக்கு மகாவலி அபிவிருத்தி சபை நில உரிமை ஆவணங்களைத் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.

இந்தத் தரவுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பொது மக்களின் பயன்பாட்டுக்கு உரிய 2,01,617 ஏக்கர் நிலப்பகுதியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான நிலம் இலங்கை அரச ராணுவம் மற்றும் மத்திய அரசாங்க நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

அதேபோல வவுனியா மாவட்டம் வெடிவைத்த கல்லு பகுதியில் மட்டும் 2,000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு இருக்கின்றார்கள். 

இந்தப் பகுதியில் மேலும் 3,000 சிங்களவர்களை குடியேற்றும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

இவ்வாறு குடியேற்றப்படும் சிங்களக் குடும்பங்களுக்கு 2.5 ஏக்கர் நிலமும் நாள் ஒன்றுக்கு 800 ரூபா பணமும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன. 

மின்வெட்டு பிரச்னையால் விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் மாணவி. 
மின்வெட்டு பிரச்னையால் விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் மாணவி. 

வவுனியா மாவட்டம் செட்டிக்குளம் பகுதியில் 1,100 ஏக்கர் நிலப்பகுதி மகாவலி அதிகார சபையால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 450 தமிழ்க் குடும்பங்கள் நிலங்களை இழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன. 

தமிழர்களின் இதயபூமியாகக் கருதப்படும் மணலாறு (வெலி ஓயா) பிரதேச செயலகப் பகுதியில் 2012-2017 ஆண்டு காலப் பகுதியில் மட்டும் புதிதாக 4,000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு இருக்கின்றார்கள். 

இதுதவிர, 11,639 ஏக்கர் மேலதிக நிலப்பரப்பு சிங்கள குடியேற்றமான வெலி ஓயா பிரதேச செயலகப் பகுதியில் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது . 

இதற்கு மேலதிகமாக 25,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் வெலி ஓயா சிங்கள பிரதேச செயலகப் பகுதியில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

2017 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டம் தென்னைமரவாடி கிராமச் சூழலில் உள்ள தமிழ்க் கிராமங்களில் மாலனூர் (12 ஆம் கட்டை) மற்றும் ஏறமாடு (10 ஆம் கட்டை) என இரண்டு சிங்கள குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

அதேபோல தென்னைமரவாடி, திரியாய், குரும்பைசிட்டு, புல்மோட்டை போன்ற இடங்களில் உள்ள 11 இடங்களில் தமிழ் பேசும் மக்களுக்கு சொந்தமான நிலங்கள் அரச நிலங்களாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், திருகோணமலை மாவட்டம் குச்சைவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிராமங்களும் மகாவலி அபிவிருத்தி சபையின் 'எல்' செயல்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் நடைபெறுவதற்கான அபாயங்களை எதிர்கொண்டு வருகின்றன.

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்கு உள்பட்ட 11 இடங்களில் 340.33 ஏக்கர் நிலம் குத்தகை அடிப்படையில் 7 பௌத்த அமைப்புகளுக்கு கிழக்கு மாகாண சபையின் அனுமதியின்றி வழங்கப்பட்டு இருக்கின்றது.

கொழும்புவில் டீசலுக்காகக் காத்திருக்கும் மக்கள்.
கொழும்புவில் டீசலுக்காகக் காத்திருக்கும் மக்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் மயிலதாமடு மற்றும் மாதவனை பகுதிகள் தொடர்ச்சியாக அபகரிக்கப்பட்டு வருவதால் 2,00,000 மேற்பட்ட மாடுகள் வழி தவறியிருக்கின்றன. 

குறிப்பாக ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவில் 540 விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்து இருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் எப்போதும் மகாவலி நீர்ப்பாசனத்தை பெற்றுக்கொள்ளாதபோதும் மகாவலி 'பி (B)' திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள மாதவனை மற்றும் மயிலதம்பட்டி பகுதிகளில் உள்ள 12,000 ஏக்கர் நிலப்பரப்பை அபகரித்து சிங்கள குடியேற்றங்களைச் செய்ய கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றார்கள்

இதேபோன்று மன்னார் மாவட்டத்தில் 12,154 ஏக்கர் நிலப்பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுள்ளது. 

இதில் 818 உள்ளூர் மக்களின் பயன்பாட்டில் இருந்த 4,449 ஏக்கர் நிலப்பகுதியும் உள்ளடங்கி இருக்கின்றது.

அதேபோல மன்னார் மாவட்டத்தில் வன வளப் பாதுகாப்பு திணைக்களத்தால் 12, 275 ஏக்கர் நிலப்பரப்பு அபகரிக்கப்பட்டு இருக்கிறது. 

இதில் 1,485 மக்களுக்கு சொந்தமான 2,570 ஏக்கர் நிலப்பகுதியும் உள்ளடக்கப்பட்டு இருக்கிறது. 

எரிபொருளுக்காக காத்திருக்கும் இலங்கை மக்கள். 
எரிபொருளுக்காக காத்திருக்கும் இலங்கை மக்கள். 

அதேபோல மன்னார் மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தால் 202 ஏக்கர் நிலப்பகுதியும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் 4,368 ஏக்கர் நிலப்பகுதியும் அபகரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மட்டும் 3,300 ஏக்கர் நிலப்பகுதி தொடர்ச்சியாக ராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கின்றது. 

குறிப்பாக மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மயிலிட்டி, ஊரணி மற்றும் தையிட்டி போன்ற போன்ற பிரதேசங்கள் இறுக்கமான இராணுவ வலயங்களாக இருக்கின்றன. 

யாழ்ப்பாணத்தின் பிரதான ராணுவத் தளமாகக் கருதப்படும் பலாலி ராணுவ முகாம் மயிலிட்டி முதல் பலாலி வரை பரந்த தேசத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்து இருக்கின்றது . 

ஆனால், மேற்குறித்த ஆக்கிரமிப்புகளை ராஜபட்ச சகோதரர்கள் மறுக்கின்றார்கள். தங்களுக்கு தெரியாது என்கிறார்கள்.

மறுபுறம் சம்பந்தன் தரப்பு 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் காணி அபகரிப்பைத் தடுக்கலாம் என்கிறார்கள்.

ஆனால், 13 ஆம் திருத்தத்தின் கீழ் அரச காணிகள் தொடர்பில் மாகாண சபைகளுக்கு குறிப்பிடத்தக்க எந்தவித அதிகாரமும் கிடையாது. 

மண்ணெண்ணெய் வாங்குவதற்கு வரிசையில் நிற்கும் மக்கள். 
மண்ணெண்ணெய் வாங்குவதற்கு வரிசையில் நிற்கும் மக்கள். 

அரச காணி வழங்கல் தொடர்பில் மாகாண சபை கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்பதனைத் தவிர மத்திய அரசாங்கத்திடமே அரச காணிகள் மீதான முழுமையான கட்டுப்பாட்டை 13 ஆம் திருத்தம் வழங்குகின்றது.

அரச காணிகள் தொடர்பில் இருக்கும் மேற்குறித்த பெயரளவு அதிகாரங்கள்கூட மகாவலி அதிகார சபை சட்டத்தின் கீழ் வரும் திட்டங்களின் காணிகள் தொடர்பில் மாகாண சபைக்கு இல்லை.

ராஜபட்ச சகோதரர்கள் மறுக்கின்ற போதும் உண்மையில் எங்களது தலையாயப் பிரச்னை காணி சுவீகரிப்பு. 

ஆனால் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக காணி அபகரிப்பைத் தடுக்க எந்த வாய்ப்பும் இல்லை  (முழுமையாக நடைமுறைப்படுத்தினாலும் வாய்ப்பில்லை தான்). காணிகள் குறித்த வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

வடக்கு, கிழக்கு பகுதியில் அழிக்கப்பட்டுள்ள கோயில்கள் தொடர்பான விபரங்கள் பற்றி கடந்த பதிவில் கூறியிருந்தேன்.

தேயிலை உற்பத்தி, ஆடை உற்பத்தி, சுற்றுலாப் பயணிகள் வருகை ஆகிய மூன்றும்தான் இலங்கைக்கு பெருமளவு வருமானம் அளித்து வந்தவை. கரோனாவால் 2020க்குப் பின்னர் இந்த மூன்று வழிகளும் மூடப்பட்டன. சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டதால் தேயிலை, ஆடை உற்பத்தி, சுற்றுலா ஆகிய மூன்றும் முற்றிலும் முடங்கியது. வருமானத்துக்கான வேறு வழிகளும் இல்லாத நிலையில் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.

ஆனால், “கரோனாவுக்கு முன்பே இலங்கை பொருளாதார நெருக்கடியில்தான் இருந்தது. ஆட்சியாளர்களின் ஊழல் இலங்கையின் இன்றைய பிரச்னைக்கு முதன்மையான காரணம். ஊழல் காரணமாக நாட்டின் பொருளாதார நிலை ஏற்கெனவே மோசமாகத்தான் இருந்தது' என்பது சிலரின் கருத்து.

ஜனாதிபதியும் அவரது அமைச்சர்களும் தமது தனிப்பட்ட நலன்களை மையமாக வைத்து மேற்கொண்ட திட்டங்களும் இதற்குக் காரணம். விமானங்களே ஓடாத விமான நிலையம், லாபம் ஈட்டாத துறைமுகங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், கோபுரங்கள், மைதானங்கள் என பல கட்டுமானங்கள் மூலம் கோத்தாவின் குடும்பங்கள் தனிப்பட்ட ரீதியில் சுபிட்சத்தின் நிலைமையை அடைந்திருக்கிறார்கள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com