எரியும் இலங்கை: திருகோணமலையின் வரலாறு; நேரடி ரிப்போர்ட்- 7

இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்...
எரியும் இலங்கை: திருகோணமலையின் வரலாறு; நேரடி ரிப்போர்ட்- 7

இலங்கைத் திருகோணமலை மூன்று மலைகள் சூழ்ந்த வளம் மிக்க திரிகோணம் எனப் பெயர்பெற்ற இயற்கையான துறைமுகம். இங்குள்ள கோட்டை முக்கியமானது.

ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு அடுத்த வகையில் இலங்கையில் திருகோணமலை துறைமுகம் இருக்கிறது. இந்தத் துறைமுகத்தை இந்து மகா சமுத்திரத்தின் சாவி என்றுகூட சொல்வார்கள்.

மலைகளால் சூழ்ந்த இயற்கை வளமிக்க இந்தத் துறைமுகத்தில் ஒருபக்கத்தில் இருக்கிற கப்பலுக்கு, அருகிலுள்ள மற்றொரு கப்பல்கூட கண்ணுக்குப் புலப்படாது. அப்படிப்பட்ட இயற்கை துறைமுகம்.

இயற்கை வளம் கொண்ட கடல் சூழ்ந்த நகரம். இந்த நகரத்தை 1970களில் அமெரிக்க அதிபராக நிக்சன் இருக்கும்போது, திருகோணமலை துறைமுகத்தை எண்ணெய் கிடங்கில் அமைக்கவும், வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (voice of america) மற்றும் அமெரிக்காவின் ஒரு கேந்திரத்தை வைக்கவும் முயற்சிகள் நடந்தன. இருப்பினும், பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இந்தியா-ரஷியா ஒப்பந்தத்தால் அது முறியடிக்கப்பட்டது.

அந்தப் பகுதியில் சமீபத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், திருகோணமலை துறைமுகத்தில் இந்திய ஆயில் கார்ப்பரேஷனின் கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது முக்கியமான ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது.

திருகோணமலையில் தென் பகுதியில் அமைய இருந்த சம்பூர் மின் உற்பத்தி நிலைய திட்டம் ஈழ மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. பின் வேறு பகுதிக்கு அத்திட்டம் மாற்றப்பட்டது. அங்கே நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னைகள் என பல்வேறு ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் திரிகோணமலையை குறித்து இருந்தாலும், சீனாவும் அதற்குச் சமமாக தங்களுடைய இருப்பைத் திருகோணமலையில் காட்டி வருகிறது.

திருகோணமலை நகரம் அரசியல், சமூக, வரலாற்று ரீதியான சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மாகாண சபைகள் அமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் தலைநகராகவும் இந்நகர் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தது.

குறிப்பாக, இலங்கையின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இந்நகரின்  இயற்கைத் துறைமுகத்தின் முக்கியத்துவம் கருதி, போர்த்துகேயர், ஒல்லாந்தர், பிரிட்டிஷார் மற்றும் பிரஞ்சுக்காரர்களும் காலத்திற்கு காலம் இந்நகரத்தினையும், இயற்கை துறைமுகத்தினையும், இப்பகுதியில் அமைக்கப்பட்ட பிரெட்ரிக் கோட்டை பிரதேசத்தினை தமது ஆதிக்கத்தில் வைத்திருக்க மேற்கொண்ட முயற்சிகள் வரலாறு மறக்க முடியாத சம்பவங்கள்.

இத்தகைய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலையினாலேயே இப்பெரு நகரம் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியர்களின் குண்டுவீச்சுக்கு உள்ளாகியது.

அரசியல் ரீதியில் மட்டுமின்றி ஆன்மிகத்திலும் இந்நகரின் சிறப்பு மேலோங்கி இருந்துள்ளது.

‘தென்கிழக்காசிய மிலேச்சர்களின் ரோமாபுரி’ என இந்நகரின் சிறப்பினை ஹரஸ் பாதிரியார் ஏற்றிப் போற்றியுள்ளார். ‘கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே’ எனவும், தேவாரம் பாடியவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் இந்நகரின் சிறப்பினை வர்ணித்துள்ளனர். இதுமட்டுமன்றி ‘குரைகடலோத நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே’ என்ற தேவார பாடல் வரிகளும் திருகோணமலையின் அன்றைய பொருளாதாரச் செழிப்பினை எடுத்துரைப்பதாக உள்ளன.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதாவது 1865-ம் ஆண்டு முதல் உள்ளாட்சி முறை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது எனத் தெரிகிறது. இம்முறையின் கீழ் உள்ளாட்சி சபை, சுகாதார சபை என இரண்டுவித சபைகள் இலங்கை அரசியலில் ஆரம்ப காலத்திலிருந்தே நிறுவப்பட்டன. ஆயினும் திருகோணமலையைப் பொருத்தவரை உள்ளாட்சி சபையே தொடர்ந்து ஆட்சி நடத்தி வந்துள்ளது.

14.11.1925 ஆம் ஆண்டு தேசிய உள்ளாட்சி சபைகளின் உத்தரவுபடி 16.12.1932 -ல், அடுத்து 1939 ஆம் ஆண்டிலிருந்து இச்சபை நகர அபிவிருத்தி சபை (U D C) ஆக உயர்வு பெற்றது. இச்சபையின் தலைவராக ரகசிய வாக்கெடுப்பு மூலம் டி. இராஜரத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரி.பாலசுப்பிரமணியம் (முகாந்திரம்) உபதலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவ்வாறு அரசியல், சமூக, பொருளாதார, வரலாற்று ரீதியாக குறிப்பிடத்தக்க வகையிலான இப்பெரு நகரம் 1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி உள்ளூர் நிர்வாக ஆட்சியமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதனைத்தொடந்து 1957 ஆம் ஆண்டு அர்பன் கவுன்சில் என அழைக்கப்படும் பெரும் நகராட்சி மன்றமாக மாற்றியமைக்கப்பட்டது. இந்நகரசபையானது 7.5 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்டுள்ளது. திருகோணமலை தமிழர்களுடைய புண்ணியஸ்தலம்.

திருஞானசம்பந்தர் அருளிய திருக்கோணமலைத் திருப்பதிகம் முதல் இரண்டு பாக்கள்…

1

நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி

வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்

கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்

குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே.

2

கடிதென வந்த கரிதனை யுரித்து அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்

பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடு முடனாய்க்

கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமு னித்திலஞ் சுமந்து

குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே

இரண்டு மலைகளுக்கு இடையில்தான் ராவணன் வதம் செய்யப்பட்டார் என்கிற ஒரு நம்பிக்கையான கருத்தைச் சொல்கிறார்கள். மேலும்,  இந்தக் கோயிலைச் சுற்றி இந்து மக்களை வேதனைப்படுத்துகின்ற வகையில், பல்வேறு ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன

திருகோணமலையின் பதிவுசெய்யப்பட்ட வரலாறு இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலானது, நவீனத்திற்கு முந்தைய காலத்தில் கோணேஸ்வரம் கோயிலுடன் தொடர்புடைய குடிமக்கள் குடியேற்றத்தில் இருந்து தொடங்குகிறது. ஆசியாவின் பழமையான நகரங்களில் ஒன்றான இது தென்கிழக்கு ஆசியாவுடனான தீவின் சர்வதேச வர்த்தக வரலாற்றில் ஒரு முக்கிய கடல் துறைமுகமாக செயல்பட்டது.

கோணேஸ்வரர் ஆலயம்
கோணேஸ்வரர் ஆலயம்

அகத்தியரால் நிறுவப்பட்ட சித்தர் தமிழ் மருத்துவப் பல்கலைக்கழகமான "அகத்தியர் தாபனம்" என்ற ஆசியாவின் ஆரம்பகால மருத்துவ ஆராய்ச்சிகளில் சில அதன் புறநகர் கிராமமான கன்குவேலியில் இருந்து கண்டம் முழுவதும் தமிழ் தாம்ரபரணியன் கலாச்சாரத்தைப் பரப்ப உதவியது. பண்டைய உலகில், இது அனுராதபுர ராஜ்யத்தின் கீழ் வளர்ந்து வரும் வன்னி நாட்டின் கிழக்கு ராஜ்யங்களின் தலைநகராக தொடர்ச்சியாக இருந்தது.

பல்லவ வம்சம், சோழ வம்சம், பாண்டிய வம்சம், வன்னிமைத் தலைவர்கள் மற்றும் யாழ்ப்பாண ராஜ்யம் கோணேஸ்வரம் ஆலயத்தின் வருவாய் மூலம் 1620 இல் டேனிஷ், டச்சு, பிரெஞ்சு, அமெரிக்கப் புரட்சிப் போரின் போரைத் தொடர்ந்து 1795 இல் ஆங்கிலேயர்களிடமிருந்து  யாழ்ப்பாண ராஜ்யத்தை போர்த்துகேயர் கைப்பற்றியதைத் தொடர்ந்து கோட்டை துறைமுக நகரமாக மாற்றப்பட்டபோது திருகோணமலையின் நகரமயமாக்கல் தொடர்ந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியில் 1815 ஆம் ஆண்டு சிலோன் மாநிலமாக இருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக நகரத்தின் கட்டடக் கலைகள் பூர்விக மற்றும் ஐரோப்பிய பாணிகளுக்கு இடையிலான தொடர்புகளின் சிறந்த எடுத்துக்காட்டுகளைக் காட்டுகிறது.

1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது இந்தியப் பெருங்கடல் தாக்குதலின் ஒரு பகுதியாக ஜப்பானியர்களால் தாக்கப்பட்டது . பின், 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான அரசியல் உறவு மோசமடைந்து உள்நாட்டுப் போராக வெடித்தபோது நகரமும் மாவட்டமும் பாதிக்கப்பட்டன.

திருகோணமலை காரிசனில் உள்ள முக்கிய கடற்படை மற்றும் விமானப்படை தளங்களைக் கொண்டுள்ள இந்த நகரம், தீவின் மிகப் பெரிய டச்சு கோட்டையையும் கொண்டுள்ளது.

திருகோணமலை வளைகுடா என்பது தெற்கே மகாவில்லி கங்கை ஆற்றின் பாலம், சமஸ்கிருதத்தில் வரலாற்று "கோகர்ணம்", "பசுவின் காது" என்றும் பொருள்படுகிறது.

மேலும், இது இந்திய துணைக்கண்டம் முழுவதும் சிவ வழிபாட்டின் மற்ற தலங்களைப் போன்றது.

தனித்துவமாக, திருகோணமலை ஒரு பஞ்ச ஈஸ்வரம், ஒரு பாடல் பெற்ற தலமாகவும் இலங்கையில் உள்ள முருகனின் மகா சக்தி  பீடம் என்றும்  ’தட்சிணா-பின் கைலாசம்’ அல்லது ’தெற்கின் கைலாச மலை’ மற்றும் ’கிழக்கத்திய பாகன்களின் ரோம்’ என அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக, பெரிய அளவு கொண்ட அதன் துறைமுகத்தால் புகழ் பெற்றது. இந்தியப் பெருங்கடலில் உள்ள மற்றதைப்போல் அல்லாமல், இது அனைத்து வானிலைகளிலும் அனைத்து கைவினைப் பொருட்களுக்கும் அணுகக்கூடியது. 

’உலகின் மிகச்சிறந்த துறைமுகம்’ என்றும், ஆங்கிலேயர்களால், உலகின் மிக மதிப்புமிக்க காலனித்துவ உடைமை என்றும், நமது இந்தியப் பேரரசுக்கு வேறெங்கும் இருந்து அனுபவிக்காத பாதுகாப்பைக் கொடுப்பது" என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைகளில் அமைந்துள்ள உப்புவேலி, சல்லி, நிலாவெளி, கோயில் வருகைகள், சர்ஃபிங் , ஸ்கூபா டைவிங் , மீன்பிடித்தல் மற்றும் திமிங்கலத்தைப் பார்ப்பது மற்றும் கன்னியா வெந்நீர் ஊற்று ஆகியவை பிரபலமான சுற்றுலாத் தலங்கள்.

திருகோணமலை கிழக்குப் பல்கலைக்கழகம், பல நூற்றாண்டுகளாக உள்நாட்டு மற்றும் சர்வதேச கவிதைகள், திரைப்படங்கள், இசை மற்றும் இலக்கியம் ஆகிய செயல்பாட்டிற்கு உத்வேகம் அளித்துள்ளது.

மூன்றாம் குலோத்துங்கன் (பொது ஆண்டு 1178 - 1218) - ஈழத்தை நிலைநிறுத்திய வேந்து, சோழப் பேரரசின் இறுதி நட்சத்திரம் என்று கூறப்படும் இந்த அரசன் வெற்றி மேல் வெற்றி பெற்று முதிய வயதில், தனது இறுதிக் காலத்தில் புதிதாக எழுச்சி பெற்றுவந்த பாண்டியர்களிடம் தோல்வியைக் கண்டான்.

மாறவர்மன் சுந்தரபாண்டியனிடம் தோல்வியுற்று (பொது ஆண்டு 1216-1217) அவன் தங்கியிருந்த பொன்னமராவதிக்கு பாண்டியருக்குக் கட்டுப்பட்ட அரசாக சோழநாடு இருப்பதற்கு ஒப்புதல் தெரிவிக்கத் தனது முதிய வயதில் மூன்றாம் குலோத்துங்கனும், பின்னர் ஆட்சிக்கு வந்த அவன் மகன் மூன்றாம் ராஜராஜனும் செல்லும் காட்சியை யோசிக்கும்போது ஒரு காவியத் துயரம் ஏற்படுகிறது.

ஆனால், மூன்றாம் குலோத்துங்கன் இதற்கு முன்னரே பொது ஆண்டு 1215 இல் இலங்கையில் கலிங்க மாகோன் ஆட்சியேற உதவிபுரிந்து வடக்குக் கிழக்கில் தமிழர்கள் வலிமையாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டான் என்பது சென்ற ஆண்டு திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து தெரிய வருகிறது.

திருகோணமலையில் இருந்த குலோத்துங்க சோழ காலிங்கராயன் என்னும் அதிகாரி, கலிங்க மாகோனுக்கு வீராபிஷேகம் செய்த செய்தியை அந்தக் கல்வெட்டு கூறுகிறது. முக்கியமாக, பாண்டிய மன்னர்களின் பங்களிப்பையும் நினைவுபடுத்த வேண்டும்.

                                                                                                                                   (தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com