நீலியின் கண்ணீர் பொய்யா…?

நீலியின் பாத்திரம், பல்வேறு கதைகளிலும், அன்றாட சமுக வாழ்வியலிலும் உதாரணமாக எடுத்தாளப்படுகிறது. பல நூற்றாண்டுகளைக் கடந்தும் நீலியின் கதையை இன்றும் உயிருடன்  வைத்திருக்கிறது. 
நீலியின் கண்ணீர் பொய்யா…?

அரக்கோணத்தில் அலுவலக நண்பரை இறக்கிவிடும்போது இரவு பத்து மணியிருக்கும். 

காஞ்சிபுரத்தில் இருந்து கிளம்பும்போதே நேரமாகிவிட்டது. அரக்கோணத்தில் இருக்கும் வாடிக்கையாளரைப் பார்த்துவிட்டு அப்படியே சென்னை சென்றுவிடலாம் என்று கணக்கு.

'ஒரே நேர் ரோடுதான் சார். இடையில் திருவாலங்காடு வரும் அதைத் தாண்டிட்டிங்கனா அடுத்து சென்னை திருப்பதி ரோடுதான். அங்கிருந்து  அப்படியே வலது திரும்பி, திருவள்ளூர் பிடித்து சென்னை சென்றுவிடலாம்' என்று சொல்லியிருந்தார் நண்பர்.

சாலை முழு இருட்டில் இருந்தது. முன்னப்பின்ன வந்திடாதப் பாதை இது. மருந்துக்குக்கூட சாலையில் விளக்குகள் இல்லை. காரின் ஹெட் லைட் மட்டும்தான் வெளிச்சம். காரை மிதமான வேகத்தில் இயக்கினேன். பொதுவாக கார் பயணத்தில் கண்டிப்பாக இளையராஜா பாடல் உண்டு. அன்று ஏனோ எந்தப் பாடலும் போடவில்லை. இப்படியான அந்தகார அமைதி நமக்குத் தேவையான ஒன்றாக இருக்கிறது. நெடுந்தூர பயணமும் தனிமையும் நமக்குள் நல்லதொரு உரையாடலை நிகழ்த்தும். ஏதேதோ சிந்தித்துக் கொண்டு வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தேன். எனக்குள் சிந்தனையும், சாலையில் காரும் ஓடிக் கொண்டு இருந்தது. நீண்டுக் கிடந்த அந்த யாருமற்ற சாலையில், ஒரு வளைவில் திரும்பி வேகமெடுக்கும்போதுதான் கவனித்தேன். இடதுபுறம்‘பழையனூர்’ என்ற ஊரின் பெயர் பலகை, பச்சை வெள்ளை புளோரசன்ட் வண்ணத்தில் மின்னியது. எனக்குள் பளீரென மின்னல் வெட்டியது. இது பழையனூர் நீலி ஊர்தானே எனறு?’.  ஆஹா !…. நீலி நடனமாடிய ஊரா இது? பழையனூர் நீலியை நினைத்ததும் கார் ஏசி குளிரை தாண்டி உடல் குப்பென்று வியர்த்தது. ‘நீலி’ எத்தனை நூற்றாண்டு பயம் அது ! ‘அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு நீலி’ என்று திருஞானசம்பந்தரே கிலிப் பிடித்து பாடியிருக்கிறாரே… இதில் நான் எம்மாத்திரம்? நீலி இன்றளவும் பயம் கொள்ள வைக்கும் மாயக்காரியல்லவா…?  இந்த சாலையில் நின்றுதானே, அவளது கணவனை கொலை செய்தாள். அவள் வடித்த கண்ணீர், ‘நீலி கண்ணீராய்’ இன்றளவும் நாட்டார் வரலாற்றில் வடுவாய்ப் படிந்துக் கிடக்கிறதே ?.

 --------------------

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தொண்டை மண்டல வணிகன் ஒருவன் செல்வச் செழிப்புடன் வாழ்ந்துவந்தான். செல்வம் சேர சேர தனவணிகனின் குணமும்  நடையும் மாறியது. சகல லௌகீக விஷயங்களையும் துய்க்கத் தொடங்கினான். குடி கூத்து என்று வாழத் தொடங்கினான். அவனுக்கு ஒரு மனைவி இருந்தாள், அவள் பெயர் நீலி. அழகே வடிவானவள். கிளி போன்று மனைவி இருந்தாலும், குரங்கு போல் வைப்பாட்டி வைத்துக் கொண்டான் வணிகன்.  கணவனின் துர் நடவடிக்கைக்கு இடைஞ்சலாக இருந்தாள் நீலி. ஒரு சுபயோக சுபதினத்தில் (?) மனைவியை வஞ்சகமாக  கழுத்தறுத்து தீர்த்துக் கட்டினான் தனவணிகன். சாகும் தருவாயில் ‘நான் பேயாக வந்து உன்னை பழித்தீர்ப்பேன்’ என்று சூளுரைத்தாள் நீலி. 

அகாலத்தில் இறந்த நீலியும், தன வணிகனை பழிவாங்க பேயாய் அலைந்து கொண்டு இருந்தாள். நீலியின் சாபத்தால் தனக்கு ஆபத்து வரும் என்று உணர்ந்த தனவணிகன், ஒரு மந்திர வாளை தன்னுடனே வைத்துக் கொண்டான். நீலி காத்திருந்தது போலவே,  வேலை விஷயமாக வெளியே சென்றிந்த தன வணிகன் இரவு நேரத்தில் பழையனூர் வழியாக காஞ்சிபுரம் திரும்பி வந்து கொண்டு இருந்தான். தனவணிகனை பழிவாங்க இதுவே சரியான நேரம் என்று உணர்ந்த  நீலி, பேய் உருவில் இருந்து பெண் உருவத்திற்கு மாறினாள். அருகில் புதரில் வளர்ந்திருந்த கள்ளிச் செடி ஒடித்து அதை கைகுழந்தையாக்கி வணிகனை நோக்கி “அத்தானே……என்னை விட்டு போகாதீங்க” என்று  அழைத்தாள். 

நீலி கோயில் மண்டபம்
நீலி கோயில் மண்டபம்

அழைப்பது  நீலி பேய் என்று உணர்ந்த தனவணிகன், ஊரை நோக்கி தலை தெறிக்க ஓடினான். நீலியும் கைக் குழந்தையோடு அவனை துரத்திக் கொண்டு ஓடினாள். சலசலப்பு கேட்டு ஊர் மக்கள் கூடிவிட, நீலி தனவணிகனின் காலைக் கட்டிக் கொண்டு “என்னை விட்டு போகாதீங்க அத்தான். இந்த குழந்தையை வளர்க்க என்னால் முடியாது.  நீங்கள் என்னை விட்டுவிட்டால், நாங்கள் இருவரும் தற்கொலை செய்துகொள்வோம் “ என்று மாஞ்சி மாஞ்சி அழுதாள். கண்ணீர் தாரை தாரையாக ஓடியது. அந்தக்  குழந்தையோ…. “அப்பா அப்பா” என்று தனவணிகனின் ஆடையைப் பிடித்துக் கொண்டு அழுதது.  நீலி வடித்த கண்ணீர் கண்டு ஊர் மக்கள் கலங்கி நின்றார்கள்.  தனவணிகனோ “இவள் பெண்ணல்ல பேய் …பேய் “ என்று கத்தினான். 

ஒரு முடிவுக்கு வர முடியாத ஊர் மக்கள், முடிவில் ஊர் பஞ்சாயத்தில் கொண்டு விட்டார்கள், அது எழுபது பேர் அடங்கிய வேளாளர் சபை.  நீலியின் கண்ணீர் கண்டு அஞ்சிய வேளாளர்கள், தனவணிகனை நீலியோடு போகச்சொன்னார்கள். தனவணிகனோ “அவள் பேய், அவளோடு நான் செல்ல மாட்டேன். அவள் என்னை கொன்று விடுவாள்” என்று ஊர் சபையில் மன்றாடினான்.  நீலியோ தாரை தாரையாக கண்ணீர் வடித்துக் கொண்டு இருந்தாள். “அதெப்படி மனைவி கொல்லுவாள்…? நீங்கள் மூவரும் இன்றிரவு இங்கேயே தங்கியிருந்து காலையில் செல்லுங்கள், உன் உயிருக்கு நாங்கள் உத்திரவாதம்,  உனக்கு ஏதாவது அசாம்பவிதம் நடந்தால், நாங்கள் எழுபது பேரும் உயிரை மாய்த்துக்கொள்கிறோம்” என்று ஊர் வேளாளர் சபை தைரியம் சொல்லியது. தனவணிகனையும் நீலியையும் அருகில் இருந்த வீட்டில் தங்கவைத்தார்கள். தனது மனைவி நீலியைக் கொன்றதை தனவணிகனால் சொல்ல முடியவில்லை. அவள் பெண்ணல்ல பேய் என்பது வணிகனுக்கு மட்டுமே தெரியும். அவள் தன்னை கொன்று விடுவாள் என்று சொல்லிக் கொண்டே இருந்தான். இது வழக்கமாக ஒவ்வொரு கணவனும் சொல்லுவதுதானே…என்று தனிவணிகனுக்கு அறிவுரை சொன்னார்கள்.  தனவணிகனிடம் மந்திர வாள் இருக்கும்போது அவனை தன்னால் நெருங்க முடியாது என்று உணர்ந்த நீலி அந்த மந்திர வாளை, ஊர் மக்களிடம் சொல்லி வாங்கிக் வைத்துக்கொள்ளச் சொன்னாள். பொறியில் சிக்கிய எலியாக ஊரார் முன்பு உண்மையை பேச முடியாத தனவணிகன், நீலியோடு அந்த வீட்டில் இரவு தங்கினான்.  குழந்தையை தூங்க வைக்க நீலி பெருங்குரலெடுத்துப் தாலாட்டுப் பாடினாள்.

‘பச்சை பச்சை நிறத்தோனே பால் வடியும் மேனியனே
உச்சியிலே பூத்தோனே உடம்பெல்லாம் பாலோனே’ 
‘வெட்ட வெட்ட தழைத்தோனே வேலிகட்டி காத்தோனே’ 
‘மாபாவி நானுனக்கு மாதாவும் ஆனேனே
மாதாநான்  பாலுனக்கு மார்புவழி கொடுத்தறியேன்’
‘மாதாவால் உந்தன் உயிர் மாளுவதும் முன்பழியோ
பாலாநீ படுத்துறங்கு பகல்விடிந்தால் பால்தாரேன்

என்று கள்ளிச் செடியை குழந்தையாக பாவித்து இரு பொருள்தரும்படி நீலி துயருடன் பாடினாள். ஆழமான, வலி மிகுந்த  அந்த தாலாட்டுப் பாடலைக் கேட்டு பழையனூரே கண்ணீர் சிந்தியது. 

பொழுது விடிந்தது. தனவணிகனும் நீலியும் தங்கியிருந்த வீட்டின் கதவு நெடு நேரமாகத் திறக்கவில்லை. ஊர் மக்கள் திறந்து பார்த்தபோது,.. தனவணிகன் கழுத்து அறுக்கப்பட்டு, உடல் சிதறி கோரமாக இறந்து கிடந்தான். அருகில் அந்த கள்ளிச் செடியும் பால் வடியக் கிடந்தது.  

நடந்ததை தெரிந்து கொண்ட வேளாளர்கள் தாங்கள் மோசம் போனதை உணர்ந்து துயருற்றார்கள்.  நீலி அழுதழுது தங்களை நம்பவைத்துவிட்டாளே…? அந்த கண்ணீர் பொய் கண்ணீரா…? ஒரு மோசக்காரியின் கண்ணீரைக் கண்டு இந்த சபை தவறு செய்துவிட்டதே என்று குமைந்தார்கள். முடிவில் தனவணிகனுக்கு வாக்கு கொடுத்தபடி எழுபது வேளாளர்களும் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்து தீ குழி ஏகினார்கள். அதில் ஒரு வேளாளர் மட்டும் காலையிலேயே வயலுக்கு சென்றுவிட….அவரும் விஷயம் தெரிந்து ஏர் கொழுவால் தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என்று நீலியின் கதை போகிறது. 

------------------

இது நீலிக் கதையின் அடிப்படை.  விநாயகரை விதவிதமாக நமக்குப்பிடித்த வடிவத்தில் எல்லாம்  பிடித்து வைப்பது போல… நீலியின் கதையையும் தமக்குப் பிடித்தவாறெல்லாம் பாடியிருக்கிறார்கள்.

ஒரு கதையில்… நீலி சோழனின் மகளாக காவேரிபூம்பட்டணத்தில் பிறந்தவள் என்றும் அவளுக்கு நீலன் என்ற சகோதரன் இருந்தான் என்றும் கூறப்படுகிறது. ஊழ்வினைப் பயனால் நீலி பேயாக மாறி நாட்டு மக்களை துன்புறுத்தினாள், அவளது கணவனை கொலை செய்தாள் என்றும் கூறப்படுகிறது. இன்னொரு கதையில் நீலி காசியில் பிறந்தவள் என்றும், வியாபாரம் விஷயமாக காசிக்கு சென்ற காஞ்சி வணிகன் அங்கிருந்த  நீலியை ஏமாற்றி அழைத்து வந்து அவளையும் அவள் சகோதரனையும் கொலை செய்துவிட்டான். தன்னை ஏமாற்றிய கணவனை கொலை செய்ய நீலி பேயாக அலைந்து கொண்டு இருந்தாள் என்றும் பல கதைகள் கூறப்படுகிறது.  இக்கதைகளில் முற்பிறவியில் செய்த கொடுஞ்செயல்கள் இப்பிறவியிலும் தொடரும் என்று உணர்த்தப்படுகிறது. ‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ என்ற சிலப்பதிகாரப் பாடலுக்கு ஏற்ப அன்றைய கதைகள் யாவும் முடிவில் நீதியை போதித்தன. தொடக்கத்தில் செவிவழியாக வந்த இந்நாட்டார் கதைகள் கை கால் முளைத்து பல ரூபங்களில் பரவி இருக்கிறது.

நீலி என்றால் கொற்றவை என்றும் தாய் தெய்வம் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன் மூலம் சிலப்பதிகார காலத்திற்கு முன்னரே நீலி வழிபாடு தொடங்கிவிட்டது தெரிகிறது. நீலியின் காலம் முதலாம் நூற்றாண்டு என்றும், பத்தாம் நூற்றாண்டு என்றும் இருவேறு கருத்து நிலவுகிறது. தமிழின் தொன்மை இலக்கியங்கள் நீலியின் கதையை பேசி இருக்கின்றன. பழகநல்லூர் நீலி, பழையனூர் நீலி, பழவூர் நீலி என்று விதவிதமான பெயர்களில் நீலி அழைக்கப்படுகிறாள்.

திருஞானசம்பந்தர்  தேவாரத்தில் நீலி கதையைப் பதிவு செய்திருக்கிறார். எழுபது வேளாளர்கள் தாங்கள் கொடுத்த வாக்கினைக் காப்பதற்காக தீயிட்டு மடிந்ததை தேவாரம் பெருமைபட பேசியிருக்கிறது.

“இன்னும் புகழ் நிற்க வூர் பழிக்காம எழுபதின்மர்
துன்னுந் தழல்புக் கொளிந்த தெல்லாங் கருதிப் பொருளா
யுன்னும் புரிசைத் திரு வலங்காட்டி னானபதி 
மன்னுந் தமிழில் வகுத்ததன்றோ தொண்டைமண்டலமே”

 

வஞ்சப் படுத் தொருத்தி வாணாள் கொள்ளும் வகைகேட்
டஞ்சும் பழையனூர் ராலங்காட்டெம் மடிகளே

அதேபோன்று உமாபதி சிவாச்சாரியார் தனது ‘திருத்தொண்டர் புராண வரலாறு’ என்னும் ‘சேக்கிழார் சுவாமிகள் புராணத்திலும்’  நீலி கதையைப் பற்றி விஸ்தாரமாக பேசியிருக்கிறார்.  

 மாறுகொடு பழையனுயர்  நீலி செய்த
     வஞ்சனையால் வணிகன் உயிர் இழப்பத் தங்கள்
கூறிய சொல் பிழையாது துணிந்து செந்தீக் 
    குழியில் எழுபது பேரும் மூழ்கிக் கங்கை 
ஆரணி செஞ்சடை திருவாலங் காட்டப்பர் 
    அண்டமுற நிமிர்ந்தாடும் அடியின் கீழ்மெய்ப்
பேறுபெறும் வேளாளர் பெருமை எம்மால்
    பிரித்து அளவிட்டு இவளவெனப் பேசலாமோ?” 

என்று நீலியால் தன்னுயிர் நீத்த வேளாளர்களின் சிறப்பு விளக்கப்படுகிறது. 

நீலகேசி, தேவாரம், திருத்தொண்டர் புராணம், கம்ப ராமாயணம், பெரிய புராணம், திருப்புகழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ், தொண்டை மண்டல சதகம், அபிதான சிந்தாமணி, அபிதான கோசம், கலைக்களஞ்சியம், சிறப்பு பெயர் அகராதி போன்ற நூல்கள் நீலியின் கதையை விதவிதமாகப் பேசுகின்றன.  

‘நீலகேசி’ தமிழில் தோன்றிய முதல் தருக்க நூல். இது குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்த நூலாகும். பழையனூர் நீலியே குண்டலகேசியாகப் பிறந்து சமண சமயத்தினும் பௌத்த சமயமே மேலோங்கியது என உணர்த்துவது குண்டலகேசிக் காப்பியம். அதே பழையனூர் நீலியே நீலகேசியாகப் பிறந்து குண்டலகேசியை வாதில் வென்று சமணமே உயர்ந்த சமயம் என நிறுவுகிறது நீலகேசிக் காவியம். குண்டலகேசி, நீலகேசி, அஞ்சனகேசி, காலகேசி போன்ற நூல்கள் தருக்க நூல்களாகவே அமைந்துள்ளன. இது கி.பி.முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தது ஆகும். 

நீண்ட நெடிய தமிழ் நாட்டர் வழக்காற்றலில் நீலிக்கு நீங்காத இடமுண்டு. அவள் கொற்றவையாக, இசக்கியம்மனாக, சடையச்சியாக, பேயாக, இன்றும் உலவுகிறாள். தென் தமிழகத்தில் நீலியை இசக்கியம்மனாக வழிபடுகின்றனர். குமரி மாவட்டத்தில் முப்பந்தலில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு சிறப்பாக திருவிழா நடப்படுத்தப்படுகிறது. கேரளத்தில் தெக்கன்பாட்டு வகையைச் சேர்ந்த பஞ்சவன் காட்டு நீலிப்பாட்டு    நீலிகதையை கூறுகிறது. இதனை ‘நீலிக்கதா’ என்றும் அழைக்கின்றனர்.  இன்னும் சொல்லப்போனால், இந்தியா முழுவதுமே நீலிக் கதைகள் பல்வேறு பெயர்களில் பாடப்படுகின்றன.

காதல் கணவனின் நயவஞ்சகத்தால் கோரமாக உயிர்விட்ட ஒரு அபலைப் பெண், தனது கணவனை பழிதீர்க்க  கண்ணீரை ஆயுதமாக பயன்படுத்துகிறாள். அதனாலயே அவளது கண்ணீரை பொய் என்றும் போலியானது என்றும் கூறிவிட முடியாது. ஆணாதிக்க சிந்தனை நீலியை வில்லியாக வரலாற்றில் உலாவ விட்டிருக்கிறது. கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யும் ஆண்களை பயமுறுத்தவும், நீலியின் கதைகள் அன்று தொட்டு இன்று வரை தேவைப்படுகிறது. எத்தனை எத்தனை கதைகள், எத்தனை எத்தனை பழிவாங்கும் படலங்கள். அதன் விளைவால் எழுந்த துயரங்கள். கண்ணகியின் கண்ணீர் மதுரையை எரித்தது. சீதையின் கண்ணீர் இலங்கையை எரித்தது. நீலியின் கண்ணீர் பழிபாவம் அறியாத எழுபது வேளாளர்களை எரித்தது.  மோசமானவள், பொய்க்காரி, வேடதாரி, வஞ்சகி என்றால்… கூசாமல் நீலியை உதாரணமாக கூறிவிடுகிறார்கள்.  இதனாலேயே நீலியின் பாத்திரம், பல்வேறு கதைகளிலும், அன்றாட சமுக வாழ்வியலிலும் உதாரணமாக எடுத்தாளப்படுகிறது. பல நூற்றாண்டுகளைக் கடந்தும் அறிவுக்கு பொருந்தா மிகையாக்கம், நீலியின் கதையை இன்றும் உயிருடன்  வைத்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com