2023: ஹிந்தி சினிமாவின் புத்தெழுச்சி!

கரோனாவுக்குப் பிறகு ஹிந்தி சினமாவின் ஆதிக்கம் குறைந்துவிட்ட நிலையில் தற்போது மீண்டும் புத்தெழுச்சி பெற்றுள்ளது. 
2023: ஹிந்தி சினிமாவின் புத்தெழுச்சி!

சினிமாவை வெறுமனே கலையாக மட்டுமே பார்க்க முடியாது. அது வியாபாரம் ஆகிவிட்டதனால் தற்போதைய காலகட்டத்தில் பணம் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. நடிகர் கமலின் விக்ரம் படத்தின் கமர்சியல் வெற்றி அவரை இன்னும் பல ஆண்டுகள் சினிமாவில் இயங்க வைக்கும் உந்து சக்தியை கொடுத்திருக்கிறதை யாரும் குறைவாக மதிப்பிட முடியாது. அதனால் தற்போதெல்லாம் தேவைப்படுவது செமி-ஆர்ட் எனப்படும் கலவையான கலையே. 

நல்ல கதைகளுடன் கூடிய கமர்சியல் சினிமாக்களே கரோனாவுக்கு பிந்தைய சினிமாவாக மாறியிருக்கிறது. வலுவான கதையில்லாத பல பெரிய படங்கள் மக்களால் தூக்கி எரியப்பட்டதை பார்க்க முடிந்தது. 

2022-இல் பாதாளத்தில் ஹிந்தி சினிமா: 

இந்திய சினிமாவில் ஹிந்திப் படங்களின் ஆதிக்கம் எப்போதுமிருக்கும். ஹிந்தி பேசும் மக்கள் வட இந்தியாவில் அதிகம் என்பதால் அதன் வணிகம் மற்றைய மொழிகளைவிட இயல்பாகவே மிக அதிகம். கரோனாவுக்குப் பிறகு ஹிந்தி சினிமாவின் ஆதிக்கம் குறைந்துவிட்டது. சொல்லப்போனால் படுத்தேவிட்டது. அந்தளவுக்கு படங்கள் வரிசையாக படுதோல்வியடைந்தன.

பாலிவுட் பிரபலங்கள் புரமோஷனுக்காக தென்னிந்தியாவை நோக்கி படையெடுத்ததையும் மறக்க முடியாது. 

இந்திய சினிமா வரலாற்றில் வசூல் மட்டுமல்ல படத்தின் தரத்திலும் ஹிந்தி சினிமா முதன்மையான இடத்திலேயே இருந்து வந்திருக்கிறது. முன்பெல்லாம் ஹிந்தி சினாமாவை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் ரீமெக் செய்வார்கள். தற்போது சில வருடங்களாக தென்னிந்திய படங்களை ஹிந்தியில் ரீமெக் செய்கிறார்கள். தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி, ஜெர்ஸி, மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம், தமிழில் வெளியான கைதி ஆகிய படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. 

குறிப்பாக த்ரிஷ்யம் 2,  கைதி, காந்தாரா, லவ் டுடே போன்ற சிறிய படங்களின் வெற்றி ஹிந்தி சினிமாவையே அதிர வைத்தது. 

வணிக ரீதியாக இந்திய அளவில் 2022இல் அதிகம் வசூலித்த படங்கள் பட்டியலில் முதல் 5 இடங்களில் ஒரு ஹிந்திப் படம்கூட இல்லை. ஆமாம், அந்தளவுக்கு தென்னிந்திய சினிமாக்கள் ஆதிக்கம் செலுத்தின. 

கே.ஜி.எஃப்.2 - ரூ.1,008 கோடி (கன்னடம்) 
ஆர்ஆர்ஆர்-  ரூ.944 கோடி (தெலுங்கு) 
அவதார் 2 -  ரூ.484 கோடி (ஆங்கிலம்) 
காந்தாரா - ரூ. 361 கோடி (கன்னடம்) 
பொன்னியின் செல்வன் - ரூ. 326 கோடி (தமிழ்) 


ஹிந்தி சினிமாவின் தோல்விக்கு காரணங்கள் என்ன? 

ஹிந்தியில் தேவ். டி, ராமன் ராகவ் 2.0, கேங்ஸ் ஆஃப் வஸிப்பூர், மன்மர்ஜியான் ஆகிய படங்களை இயக்கிய அனுராக் காய்ஷய் நேர்காணல் ஒன்றில் ஹிந்திப் படங்களின் தோல்விக்கு காரணம், “ஹிந்தியில் ஒரிஜினலான (அசலான) படங்கள் வருவதில்லை. ஹாலிவுட் படங்களின் மலிவான காப்பியடிக்கப்பட்ட வடிவங்களாகவே நமது ஹிந்தி சினிமாக்கள் இருக்கின்றன.  மேலும் சினிமாவில் இருந்தே சினிமாவை எடுக்கிறார்கள். வாழ்க்கையில் இருந்து சினிமாவை எடுப்பதில்லை. அதனால் மக்களுக்கு ஹிந்திப் படங்கள் பிடிப்பதில்லை. தென்னிந்தியாவில் அவர்கள் மக்களின் வாழ்க்கையில் இருந்து கதைகளை சினிமாவாக எடுக்கிறார்கள். அதனால்தான் அவை வெற்றியடைகின்றன” எனக் கூறினார். 

இயக்குநர் அனுராக் காய்ஷய்
இயக்குநர் அனுராக் காய்ஷய்

இயக்குநர் வெற்றி மாறன் நேர்காணல் ஒன்றில், “சமீபத்திய ஹிந்தி சினிமாக்களில் பொது மக்களின் பிரதிநிதி குறைந்துவிட்டது. பொது மக்களின் பிரச்னைகளை பேசுவதில்லை. அதனால்தான் தோல்வியை சந்தித்து வருகின்றன” எனக் கூறினார். 

மேலே இருவர் சொல்வதும் ஒன்றேயாகினும் எனக்கு அனுராக் காஷ்யப் சொன்னதுதான் நெற்றிப் பொட்டில் அடித்தமாதிரி இருக்கிறது. மக்களின் வாழ்க்கையில் இருந்து சினிமாவை எடுக்கும்போது அது தோற்பதில்லை. எல்லோருக்கும் பொதுவான உணர்ச்சிகளை படமாக்கினால் நிச்சயம் வெற்றி பெறும். பாக்ஸ் ஆபிஸில் ஜெயிக்க தேவையானது சுவாரசியமான திரைக்கதை மட்டுமே. 

ஆஸ்கருக்கு தேர்வான மலையாள படம்.
ஆஸ்கருக்கு தேர்வான மலையாள படம்.

மலையாளத்தில் எடுக்கப்படும் பல படங்கள் மக்களின் வாழ்வியலில் இருந்து எடுக்கிறார்கள். இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு செல்லும் திரைப்படங்கள் பெரும்பாலும் மலையாள சினிமாவாகவே இருக்கின்றன. அந்தளவுக்கு அவர்கள் நேர்த்தியாக குறைந்த செலவில் அற்புதமான படங்களை எடுக்கிறார்கள். 

அசலான படங்கள் எடுக்காவிட்டால் மக்கள் விரும்பமாட்டார்கள். ஏனெனில் கரோனாவுக்குப் பிறகு அனைவரும் ஓடிடி மூலமாக பல்வேறு நாட்டு மொழியின் படங்களையும் பார்த்து விடுகிறார்கள். எந்த மொழியில் நல்ல படம் வந்தாலும் பார்த்துவிடுகிறார்கள். ரீமேக் செய்ய யாரும் இப்போது முன்வருவதில்லை. அந்தந்த மொழிகளில் டப்பிங் செய்தால் போதுமானதாக இருக்கிறது. அதனால்தான் பான் இந்தியா ரிலீஸ் இப்போது சாதரணமாகிவிட்டது. 


2023இல் ஹிந்தி சினிமாக்களின் எழுச்சி: 

2022இல் வசூலில் முதல் 5 இடங்களில் ஒரு இடத்தினைக் கூட பிடிக்காத ஹிந்தி சினிமாக்கள் 2023இல் மீண்டும் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளனர். இதை தொடக்கி வைத்தது கிங் கான் எனும் ஷாருக்கான். அவரது பதான் படம் முதன்முறையாக இந்தாண்டில் (2023) ஆயிரம் கோடியை தாண்டியது. 

பதான்:

பதான் படத்தில்  ஹாலிவுட் படங்களின் சாயலில் இருந்தாலும் வில்லனுக்கு தேவையான அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையில் வேலை பார்த்திருப்பார்கள். பலரும் வில்லனுக்கு அனுதாபப்பட்டிருப்பார்கள். ஜோக்கர் படத்தில் வில்லனுக்கு இருந்த மாதிரி நியாயங்கள் இந்தப் படத்திலும் கமர்சியலுக்கு உதவியாக இருந்தது. தீபிகா படுகோனின் கவர்ச்சி, ஸ்டைல், சண்டைக் காட்சிகள் என விறுவிறுப்பாக பயணித்து படம் மக்களை மகிழ்வித்தது. 

ஜவான்: 

அடுத்து சன்னி தியோலின் ‘கடார்2’ திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸில் (ரூ.690 கோடி) கலக்கியது. அடுத்து, அட்லி இயக்கத்தில் வெளியான ‘ஜவான்’ படம் பதானையே விஞ்சிவிட்டது. ஜவான் படம் தமிழில் அதிகமாக விமர்சிக்கபட்டாலும் அது மக்கள் பிரச்னைகளை பேசியதால் பெருவாரியன வெற்றியை பெற்றதாக நான் கணிக்கிறேன். விவசாயிகள் குறித்த காட்சிகள் மிகவும் அழகாக எடுத்திருந்தார். அதே நேர்த்தியை மற்ற கதைகளுக்கும் பயன்படுத்தியிருந்தால் இன்னமும் கூடுதல் வெற்றியை பெற்றிருக்கும். 

ராக்கி அர் ராணி கி பிரேம் கஹானி​:

ஜூலையில் ரன்வீர், ஆலியா பட் நடிப்பில் வெளியான ராக்கி அர் ராணி கி பிரேம் கஹானி படமும் பாலிவுட் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. காதல், நகைச்சுவை கலந்த படமாக வெளியானது. பாலியல் ரீதியாக ஒடுக்குதல், உருவ கேலி போன்ற சமூக பிரச்னைகள் குறித்தும் படம் பேசியிருந்தது பாராட்டத்தக்கது. ஆலியா பட்- ரன்வீர் ஜோடி சேர்ந்தாலே ஹிட் அடிக்கிறது. 

அனிமல்:

இறுதியாக டிசம்பரில் வெளியான அனிமல் திரைப்படம் 3வது வாரத்தில் ரூ.862 கோடியை வசூலித்தது. எனக்கு இந்த வரிசையில் மிகவும் பிடித்த திரைப்படம் என்றால் அனிமல்தான். இதில் பெரிய நடிகரில்லை; ஆபாச பாடல்களில்லை; படத்தின் பிரதானமே டிராமாதான். அதுவும் 3 மணி நேரம் 21 நிமிடம் என்பது சாதாரண முயற்சி அல்ல.  இயக்குநர் சந்தீப் வங்காவுக்காக மட்டுமே இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கொடுத்தது. படத்தின் நான் லீனியர் திரைக்கதை, சிறந்த நடிப்பு, அதிரடியான சண்டைக் காட்சிகள், பின்னணி இசையென அனைத்திலும் மிரட்டியிருந்தார்கள். 

அனிமல் படத்தின் பின்னணி கதை வேண்டுமானால் பணக்கார குடும்பமாக இருந்தாலும் அதன் கரு அனைத்து மக்களுக்கும் பொதுவானது. அப்பா - மகன் உறவு குறித்து இந்திய சினிமாவில் குறைவாகவே பேசப்பட்டுள்ளது. அது எல்லோரையும் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. 

அதே அளவுக்கு போலியான பெண்ணியவாதிகளிடம் இருந்தும் சலசலப்பு ஏற்பட்டன. இருந்தும் மக்கள் இந்தப் படத்தினை கொண்டாடினார்கள். மக்கள் கொண்டாடினால் அது நல்ல படமா? எனக் கேட்பதைவிட நல்ல படத்தினை மக்கள் கொண்டாட தவறுவதில்லை என்பதாகவே நான் பார்க்கிறேன். ஹிந்தி சினிமா ஆதிக்கம் செலுத்தினாலும் ஜவான், அனிமல் படத்தின் இயக்குநர்கள் தென்னிந்தியர்கள் என்பதுதான் இதன் சுவாரசிய முரணே. 

ஓடிடியில் கவனம் பெற்ற ஹிந்தி சினிமா: 

கதல்: 

நடிகை சன்யா மல்ஹோத்ரா நடிப்பில் ஓடிடியில் வெளியான படம் கதல். பழாப்பழத்தினை மையமாகக் கொண்டு நகைச்சுவை, த்ரில்லர், அரசியல் பகடி என சுவாரசியமான படம். இது பொது மக்களின் பிரதிநிதியாக உருவாகிய படம் எனலாம். ஹிந்தி சினிமா சமீப காலமாக இழந்த அத்தனையும் இந்தப் படத்தில் இருப்பதை கவனிக்க முடிந்தது. சன்யா மல்ஹோத்ராவின் நடிப்பு மிகவும் பாராட்டும்படியாக இருந்தது. 

டிகு வெட்ஸ் ஷுரூ: 

நடிகர் நவாசுதீன், அவ்னீத் கௌர் நடிப்பில் நடிகை கங்கனா ரணாவத் தயாரிப்பில் ஓடிடியில் வெளியான படம்தான் டிகு வெட்ஸ் ஷுரூ. சினிமாத்துறையில் நடக்கும் சுரண்டல் குறித்தான படம். அசோகமிதரனின் கரைந்த நிழல்கள் நாவலை நினைவுப்படுத்தும் நல்ல படம். இதுவும் ஓடிடியில் வெளியானது. திரையரங்கில் வெளியாகியிருந்தாலும் நல்ல வரவேற்பினை பெறக்கூடிய அத்தனை கூறுகளையும் கொண்டிருந்தது. 

இந்திய சினிமாவுக்கே எழுச்சியான ஆண்டு:  

தற்போது கேஜிஎஃப் புகழ் பிரசாந்த நீல் இயக்கத்தில் சலார் வெளியாகியிருக்கிறது. நிச்சயமாக இந்தப் படமும் ரூ.1000 கோடியை தாண்டும். ஜவான் படத்தினை விஞ்சுமென கணிக்கப்படுகிறது. 

தமிழில் வெளியான கூழாங்கல் திரைப்படம் மிகவும் எளிய மனிதர்களை பற்றி எடுக்கப்பட்டிருந்தது. அந்தப் படம் பல திரைப்பட விழாக்களில் பங்கேற்றது. அந்த இயக்குநரின் கொட்டுக்காளி படமும் தற்போது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளது. முதன்முறையாக ஒரு தமிழ் சினிமா அங்கு திரையிடப்படுவது பெருமைக்குரிய விஷயம். 

ஹிந்தி சினிமாவுக்கு மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே புத்தெழுச்சியான ஆண்டாக 2023 இருக்கிறது. தமிழ் (ஜெயிலர் ரூ. 607 கோடி, லியோ ரூ.620 கோடி), தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் சினிமாக்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றுள்ளன. 

உள்ளூரே சர்வதேசம் (Local is International) என்ற ஒரு ஆங்கில பழமொழி இருக்கிறது. அதற்கேற்றார்போல நாம் எவ்வளவு நமது மண்ணின் வாழ்வியலோடு கதைகளை எடுக்கிறோமோ அது அவ்வளவு சர்வதேச தரத்துக்கு உயரும்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com