2023-இன் சாதனை நாயகன் பாட் கம்மின்ஸ்! 

2023ஆம் ஆண்டில் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லுதல் என மறக்க முடியாத ஆண்டாக இருக்கிறது கம்மின்ஸுக்கு. 
2023-இன் சாதனை நாயகன் பாட் கம்மின்ஸ்! 

2023ஆம் ஆண்டில் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லுதல் என மறக்க முடியாத ஆண்டாக இருக்கிறது கம்மின்ஸுக்கு. 

யார் இந்த பாட்ரிக்ஸ் ஜேம்ஸ் கம்மின்ஸ்? 

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 1993இல் பிறந்த பாட்ரிக்ஸ் ஜேம்ஸ் கம்மின்ஸ் முதன்முதலாக ஆஸ்திரேலிய அணிக்கு தனது 18வது வயதில் தேர்வாகிறார். 2011இல் டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்துப் பிரிவு போட்டிகளிலும் களமிறங்குகிறார். 

தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியவர். பின்னர் துரதிருஷ்டவசமாக காயம் காரணமாக 6 ஆண்டுகள் விளையாடமுடியாமல் போகிறது.  மீண்டும் 2017இல் டெஸ்டில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்துகிறார்.

தானாக வந்து சேர்ந்த கேப்டன்ஸி எனும் கிரீடம்! 

2017-18 ஆஷஸ் டெஸ்டில் 23 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். 2018இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில்  பந்தினை சேதப்படுத்திய சர்சையில் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.  அதனால் ஸ்மித்துக்கு பதிலாக டிம் பெயின் கேப்டனானார். 

பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியாக குறுஞ்செய்தி அனுப்பியதால் டிம் பெய்னி தனது கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகினார். அடுத்து யார் கேப்டன் என்ற கேள்வி எழுந்தது. துணைக் கேப்டனாக இருந்த டிராவிஸ் ஹெட், பாட் கம்மின்ஸ் இருவருக்கு இந்த வாய்ப்பு இருந்தது. 

டிம் பெயின், இளம் வீரர் லபுஷேன் சிறந்த சிந்தனையாளராக  இருப்பதாக தெரிவித்திருந்தார். பலரும் லபுஷேனை முன்னிருத்தினார்கள். ஆனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கம்மின்ஸை தேர்வு செய்தது.  வேகப்பந்து வீச்சாளர் கேப்டன் ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு கேப்டானாவது 1956க்கு பிறகு இதுவே முதன்முறையென கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. மிதமான வேகப்பந்து வீச்சாளர்கள் சிலர் கேப்டன்சி பதவி வகித்திருந்தாலும் கிட்டதட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு வேகப் பந்து விச்சாளர் ஆஸி. டெஸ்ட் அணிக்கு கேப்டனாகியது அதிசயம்தானே! 

ஆரம்பமே அதிரடி: 

கேப்டனாக தனது முதல் தொடர் ஆஷஸ். இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேயாவுக்கும் நடக்கும் பிரத்யேகமான டெஸ்ட் போட்டி ஆஷஸ். இதில் இரு நாட்டு பிரதமர்களும் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு அவர்களுக்கு முக்கியமான போட்டி. மினி உலகக் கோப்பை அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இவ்விரு நாட்டினரும் அதை அணுகினார்கள். 

முதல் ஆஷஸ் போட்டியிலேயே டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்து 5 விகெட்டுகளை வீழ்த்தினார் கம்மின்ஸ். அந்தப் போட்டியில் ஆஸி. அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 150 ரன்கள் எடுத்த டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆனால் 5 விக்கெட்டுகள் எடுத்த கம்மின்ஸும் ஆட்ட நாயகனே. ஆங்கிலத்தில் Unsung Hero (பாராட்டப்படாத நாயகன்) என்பார்கள் அந்தமாதிரி அவரும் அந்தப் போட்டியில் ஆட்ட நாயகனே. 

ஆஷஸ் தொடரை 4-0 என வென்று அசத்தினார். கேள்விக்குறியுடன் தொடங்கிய முதல் தொடரினையே வென்று அசத்தினார். 

2023இல் படைத்த சாதனைகள்: 

2022இல் தனது நீண்ட கால காதலியை திருமணம் செய்தார். கிரிக்கெட்டில் ரசிகர்கள் கிண்டலுக்காக சொல்வதுண்டு. திருமணம் ஆனவர்கள் நிச்சயமாக கோப்பையை வெல்வார்களென. அது கிண்டலுக்காக சொன்னாலும் கம்மின்ஸ் வாழ்க்கையிலும் அது நடந்தது. 

  •   ஆஷஸ் தொடர்

 2023 ஆஷஸ் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. இங்கிலாந்து அணி பேஸ்பாலில் உச்சத்தில் இருந்த காலத்தில் இது மிகப்பெரிய சாதனையே. 2021இல் தொடரை வென்றதனால் ஆஷஸ் தொடர் தக்க வைத்தது கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி. அணி. 

  •   உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 

இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கம்மின்ஸ் தலைமையிலான அணி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. ஸ்மித், ஹெட் சிறப்பாக விளையாடினார்கள்.  கம்மின்ஸ் பௌலிங்கில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். 

<strong>உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி...</strong>
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி...
  • ஒருநாள் உலகக் கோப்பை:

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் ஒருநாள் போட்டிகளில் மோசமான நிலைமையிலேயா கம்மின்ஸ் இருந்தார். உலகக் கோப்பை 2023க்கு முன்பாக அவர் 4 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். 

இந்தியாவுக்கு எதிரான தொடரில் தோல்வியே பெற்றிருந்தார்.  மிகப் பெரிய சவாலுடனும் ஒருநாள் உலகக் கோப்பையில் களமிறங்கிய கம்மின்ஸுக்கு ஹெட் காயம், அஸ்டன் ஏகர் காயம் என முக்கியமான வீரர்கள் இன்றி களமிறங்க வேண்டியிருந்தது. 

கம்மின்ஸின் கேப்டன்ஸி கேள்விக்குறியாகும் விதமாக முதல் 2 போட்டிகளில் ஆஸி அணி தோல்வியை சந்தித்தது. ஒரு வாரத்துக்குப் பிறகு மீண்டும் தனது 3வது போட்டியில் இருந்து அனைத்துப் போட்டிகளிலும் ஆஸி வென்று கோப்பையை வென்றது. 

தொடர் தோல்விகளுக்குப் பிறகு இலங்கை அணியின் விளையாடுவதற்கு முன்பாக, “2019இல் இப்படி நடந்திருக்கிறது. இந்த இரண்டு அணிகளை தவிர மற்ற அணிகளுடன் நல்ல ரெகார்ட் இருக்கிறது. நிச்சயமாக எல்லோரும் கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைக்கிறார்கள். சிறந்த வீரர்கள் நாங்கள்.. நிச்சயமாக மீண்டு வருவோம்” எனக் கூறியிருந்தார். சொன்னது மாதிரியே வென்றும் காட்டினார். 

சொல்லி அடித்த கில்லி! 

பாட் கம்மின்ஸ் மற்ற ஆஸ்திரேலிய கேப்டன்கள் மாதிரி கிடையாது. ஆஸி, அணியின் கேப்டன்கள் என்றாலே ஆக்ரோஷமாக இருப்பார்கள்; எதிரணியை கிண்டல் செய்து வெறுப்பேற்றி ஆட்டத்தின் போக்கினையே மாற்றுவார்கள். அதனாலயே பலருக்கும் ஆஸி. அணியின் வெற்றியை கொண்டாடுவதில்லை. திறமையாக இருந்தாலும் அவர்களது செயல்பாடுகளை பலரும் விமர்சித்து இருக்கிறார்கள். ஆனால் கம்மின்ஸ் வித்தியாசமானவர். 

கூல் கேப்டன் என தோனியை, கேன் வில்லியம்சனை குறிப்பிடுவார்கள். கம்மின்ஸும் அந்த வகையராதான். மிகவும் பொறுமையாக கையாள்பவர். அணியினர் கேட்ச் விடும்போதும் முறைப்பதில்லை; திட்டுவதில்லை. பொறுமையாக அணியை வழி நடத்துபவர். மேலும் தனது நேர்காணல்களில் போலித்தனமின்றி பேசுபவர். மிகவும் ஜாலியான நேர்மறையான நம்பிக்கையுடவர் என்பது அவரது நேர்காணல்கள் சாட்சி. 

அதுமட்டுமில்லாமல் சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வுக்காக குரல் கொடுப்பவர். ஸ்பிரிட் ஆஃப் த கிரிக்கெட் எனும் சர்சை வரும்போதும் விதியில் இருந்தால் செய்ய வேண்டுமென நியாயமாக தைரியமாக பேசியவர். அணி வீரர் க்வாஜா இஸ்ரேல்- ஹமாஸ் போர் குறித்து பேசியதற்கு ஆதரவு தெரிவித்து மனிதாபிமானியாகவும் நடந்து கொண்டார்.  

இந்தியாவில் இந்திய அணிக்கு எப்படி ஆதரவு இருந்தது எனத் தெரியும். இன்றைய சமூக ஊடங்களில் யாராவது அதிகமாக பேசினால் எப்படி கிண்டல் செய்வார்கள் என்று தெரியும். இதெல்லாம் தெரிந்தும் போட்டிக்கு முன்பாக கம்மின்ஸ் பேசியது கிரிக்கெட் சரித்திரத்தில் நிற்கும்.

இந்திய ரசிகர்களை அமைதியாக்கிய தருணம்... 
இந்திய ரசிகர்களை அமைதியாக்கிய தருணம்... 

யார் மறந்தாலும் இந்தியர்கள் மறக்க மாட்டார்கள். அவர் பேசியதென்ன? “நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கான ஆதரவாளர்கள் மட்டுமே அதிக அளவில் இருப்பார்கள் என எனக்குத் தெரியும். மைதானத்தில் இருக்கும் 1,30,000 பார்வையாளர்களும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று அவர்களை உற்சாகப்படுத்துவார்கள். நாளைய இறுதிப்போட்டியில் ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு” எனக் கூறினார். 

இது பெரும் விவாததினையே கிளப்பியது. சொன்னது மாதிரியே இதிலும் வென்று காட்டினார் கம்மின்ஸ். விராட் கோலியின் விக்கெட்டினை எடுத்தபோது அஹமதாபாத் மைதானமே அமைதியில் உறைந்தது.

இந்தியர்களைவிட இந்திய மண்ணின் தன்மையை ஆஸி. அணியினர் நன்றாக புரிந்து வைத்துள்ளதாக அஸ்வின் கூறியதும் கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும். 

மேக்ஸ்வெல்லின் அதிரடி 200க்கு (128 பந்துகளில்) இன்னொரு புறம் கம்மின்ஸ்ஸின் 12  (68 பந்துகளில்) பாராட்டத்தக்கது. ஏனெனில் கம்மின்ஸ் ஆட்டமிழந்திருந்தால் மேக்ஸ்வெல்லின் உழைப்பு வீணாக போயிருக்கும். 

ஐபிஎல் இல் அதிரடி அரைசதமும் 56 (15 பந்துகளில்) அடிக்க முடியும். தேவையானபோது டெஸ்ட் மேட்ச் மாதிரியும் ஆட முடிவது திறமையின் அடையாளம். 

பிரதமர் மோடியிடமிருந்து கோப்பையை பெற்ற தருணம்...
பிரதமர் மோடியிடமிருந்து கோப்பையை பெற்ற தருணம்...

உலகக் கோப்பை முழ்வதும் சுமாராக பந்து வீசிய கம்மின்ஸ் அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினார். அதிலும் இறுதிப் போட்டியில் அவர் வீசிய ஒவ்வொரு பந்துகளும் ஒரு வேகப் பந்து வீச்சாளர் எப்படி பந்து வீச வேண்டும் என்பதை பாடம் எடுப்பது போல் இருந்தது. 

உலகக் கோப்பை வரலாற்றில் பௌலர் -கேப்டன் கோப்பையை வெல்வது இது 3வது முறையாகும். 1983-இல் இந்தியாவுக்காக கபில் தேவும் 1992-இல் இம்ரான்கான் பாகிஸ்தானுக்காகவும் கோப்பையை வென்ற பந்து வீச்சாளர்- கேப்டன்களாவர். 

ஒருநாள் உலகக் கோப்பை வெற்றி... 
ஒருநாள் உலகக் கோப்பை வெற்றி... 

கம்மின்ஸ் கேப்டன்சி படிப்படியாக வளர்பிறை போல உயர்ந்து கொண்டே வந்தது. லெஜண்டரி கிரிக்கெட் வீரர் கிரேக் சாப்பல் கம்மின்ஸின் கேப்டன்சி குறித்து யாரோ பெரியவர்கள் முன்பு சொல்லியதுபோல, “சிறந்த கேப்டன்சி என்பது ஆபாசப் படம் மாதிரி. அதை வரையறுப்பது கடினம் ஆனால் பார்க்கும்போது கண்டறிந்துவிடலாம். அப்படித்தான் கம்மின்ஸின் கேப்டன்சி. மெருகேறிக் கொண்டே செல்கிறார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா எடுத்த முடிவு சரிதான் என நிரூபணம் ஆகிறது” எனக் கூறியிருந்தார். 

  • ஐபிஎல் ஏலம்

ஜெண்டில்மேன் கிரிக்கெட்டர் கம்மின்ஸ் ஐபிஎல்-இல் அதிகத் தொகைக்கு ஏலம் போனார். பின்னர் சிறிது நேரத்திலேயே ஸ்டார்க் அதனை மிஞ்சி விட்டார். இருப்பினும் 2023 கம்மின்ஸுக்கு மறக்க முடியாத ஆண்டாகவே இருக்கும்.

அடுத்த இலக்கு?  

அடுத்து இன்னும் எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடிக்க வாய்ப்பிருக்கிறது. அனைத்து சரவதேச கோப்பைகளையும் வென்ற கேப்டன் என்ற சாதனை மிச்சம் இருக்கிறது. டி20 உலகக் கோப்பை 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அதையும் வென்று சரித்திர சாதனைப் படைப்பாரா கம்மின்ஸ்?  பிறப்பில் இந்தியராக இருந்தாலும் கிரிக்கெட்டின் ரசிகனாக கம்மின்ஸின் இந்தச் சாதனைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்... 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com