2023 - கிரிக்கெட் உலகில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்!

விளையாட்டுத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறை சார்ந்த விளையாட்டுகளிலும் பல சாதனைகள் படைக்கப்படுகின்றன.
2023 - கிரிக்கெட் உலகில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்!

விளையாட்டுத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறை சார்ந்த விளையாட்டுகளிலும் பல சாதனைகள் படைக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த 2023 ஆம் ஆண்டும் விளையாட்டுத் துறையின் மிகச் சிறந்த ஆண்டு என்றே கூறலாம். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையைக் கைப்பற்றியது முதல் உலகக் கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது வரை கிரிக்கெட் உலகில் பல முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டில் அரங்கேறியுள்ளன. இந்த ஆண்டில் கிரிக்கெட்டில் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஒரு தொகுப்பாகப் பார்க்கலாம். 

டபிள்யுபிஎல் அறிமுகம் 

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆடவர்களுக்கான ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நடத்தி வருகிறது. ஐபிஎல் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு மகளிர் ப்ரீமியர் லீக் (டபிள்யுபிஎல்) போட்டியை பிசிசிஐ அறிமுகம் செய்தது. 5 அணிகள் பங்கேற்ற இந்த டபிள்யுபிஎல் தொடரின் ஏலத்தில் மூலம் பிசிசிஐக்கு ரூ.4,670 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 5 அணிகள் பங்குபெற்ற அறிமுக டபிள்யுபிஎல் சீசனில் ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

பிரபல பாலிவுட் நடிகையை கரம்பிடித்த கே.எல்.ராகுல்

இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல், பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியின் திருமணம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இரு தரப்பிலிருந்தும் தலா 100 பேர் மட்டுமே இத்திருமணத்தில் கலந்துகொண்டனர். மேலும் திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் யாரும் புகைப்படம், விடியோ எடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

5-வது முறையாக மகுடம் சூடிய சிஎஸ்கே

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மிகவும் சுவாரசியமானதாக அமைந்தது. மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது அபார ஆட்டத்தை தொடர் முழுவதும் வெளிப்படுத்தியது. இந்த ஆண்டுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என நினைத்த அவரது ரசிகர்கள் மைதானத்துக்கு படையெடுக்கத் தொடங்கினர். இந்தியாவின் எந்த மைதானத்தில் சிஎஸ்கே விளையாடினாலும், அதற்கான ஆதரவு குறையவே இல்லை.

சென்னை அணியின் ரசிகர்கள் குறிப்பாக தோனியின் ரசிகர்கள் அதிக அளவில் மைதானம் நோக்கிப் படையெடுத்தனர். தங்களது நாயகனான தோனியை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலோடு மைதானத்துக்குப் போட்டியைக் காண சென்றவர்கள் ஏராளம். ஐபிஎல் தொடரின் த்ரில்லிங்கான இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை வென்று ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு

மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகித்து பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸுடன் இணைந்தவர் அம்பத்தி ராயுடு. மும்பை மற்றும் சென்னை அணிகளுக்காக 14 சீசன்களில் 204 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியுடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மும்பை மற்றும் சென்னை என இரு அணிகளிலும் விளையாடியுள்ள அவர் 6 முறை கோப்பையை வென்ற அணிகளில் அங்கம் வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முதல் முறை நியூசிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி, இம்முறை ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து ஏமாற்றமளித்தது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதினை தட்டிச் சென்றார். 

பிசிசிஐ புதிய தலைவர்

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியா் ஆடவா் தோ்வுக் குழு தலைவராக, அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளா் அஜித் அகர்கர் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நியமிக்கப்பட்டார். கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) பரிந்துரையின் அடிப்படையில் பிசிசிஐ அவரை அந்தப் பொறுப்புக்கு நியமித்தது. ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் தொடங்க சில மாதங்களே இருந்தநிலையில், பிசிசிஐ தலைவராக அகர்கர் நியமிக்கப்பட்டார். 

ஓய்வு பெற்ற வீரர்கள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்த ஆண்டு மட்டும் 10-க்கும் அதிகமான வீரர்கள் தங்கள் ஓய்வு முடிவினை அறிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்க அணி வீரர்களான டுவைன் பிரிடோரியஸ் மற்றும் ஹாசிம் ஆம்லா சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன், 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற ஜோகிந்தர் சர்மா, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான முரளி விஜய், இந்திய வீரர் மனோஜ் திவாரி, இங்கிலாந்து வீரர்களான ஸ்டுவர்ட் பிராட், மொயீன் அலி மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ்  ஆகியோர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

ஆசியக் கோப்பை சாம்பியன்

இந்த ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில்  சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வேகப்  பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தனது அபார பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்தியிருப்பார். இலங்கையின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் முகமது சிராஜ். இவரது அபார பந்துவீச்சில் இலங்கை வெறும் 50 ரன்களுக்கு சுருண்டது. மிக எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 10 விக்கெட்டுகள் விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியது.

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் தங்கம்

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஸு நகரில் இந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் இடம் பெற்றது. மற்ற விளையாட்டுகளில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை குவித்தது போன்று இந்தியா கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற ஆடவர் மற்றும் மகளிர் அணி இரண்டுமே தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 107 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 4-வது இடத்துடன் நிறைவு செய்தது.

காலமானார் பிஷன் சிங் பேடி

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மிகச் சிறந்த இடதுகை சுழற்பந்துவீச்சாளருமான பிஷன் சிங் பேடி உடல்நலக் குறைவு காரணமாக இந்த ஆண்டு அக்டோபரில் காலமானார். 1946 ஆம் ஆண்டு அமிர்தசரஸில் பிறந்த பிஷன் சிங் பேடி இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் 14 ஐந்து விக்கெட்டுகள் மற்றும் ஒரு பத்து விக்கெட்டுகள் அடங்கும். கடந்த 1970 ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவப்படுத்தியது.

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா சாம்பியன்

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற்றது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய போட்டிகள் நவம்பர் 19 வரை நடைபெற்றது. உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால் இந்திய அணிக்கே கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம் எனப் பரவலாக பேசப்பட்டு வந்தது. அதற்கேற்ப ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் அசைக்க முடியாத அணியாக வலம் வந்தது. அதேபோல இந்த உலகக் கோப்பையில் சிறிய நாடுகளான நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் சிறப்பாக செயல்பட இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் போன்ற பெரிய அணிகள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தின.

தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பெற்று தோல்வியே காணாத அணியாக வலம் வந்த இந்திய அணிக்கு இறுதிப்போட்டியில் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்படத் தவறிய இந்திய அணி கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் இழந்தது. இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன்  பட்டம் வென்றது ஆஸ்திரேலியா. இறுதிப்போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்வி ஐசிசி கோப்பையை வெல்லும் இந்தியாவின் 10 ஆண்டுகால கனவை மேலும் தொடரச் செய்துள்ளது. 

ஐபிஎல் மினி ஏலம்

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான மினி ஏலம் டிசம்பரில் துபையில் நடைபெற்றது. இந்த ஐபிஎல் ஏலத்தில் பல சுவாரசியமான விஷயங்கள் அரங்கேறின. 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் தனது பெயரை ஐபிஎல் ஏலத்துக்காக பதிவு செய்தார். இத்தனை ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத நபர் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகத் தொகைக்கு ஏலம் போனது அனைவரது புருவங்களையும் உயரச் செய்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலிய அணிக்கு உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்த பாட் கம்மின்ஸும் அதிகத் தொகைக்கு ஏலம் போனார். பாட் கம்மின்ஸை ரூ.20.50 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது. நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலை ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.