புத்தாண்டுப் பைத்தியமும் எலுமிச்சைப் பழங்களும்

உலகத்தின் பெரும் பகுதி மக்கள் ஏனோ வெறிகொண்டாற்போல 'ஆஹா பிறந்தது பார் புத்தாண்டு' என்று வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார்கள்...
புத்தாண்டுப் பைத்தியமும் எலுமிச்சைப் பழங்களும்

உயிர்கள் தோன்றி எத்தனை யுகங்களானதோ, மனிதர்கள் தோன்றி எத்தனையெத்தனை ஆயிரமாண்டுகள் ஆனதோ, நம்மைப் பொருத்த வரைக்கும் அல்லது நமக்குத் தெரிந்த வரைக்கும் இப்போது 2022 ஆண்டுகள் முடிந்து 2023 ஆம் ஆண்டு பிறக்கிறது / பிறந்திருக்கிறது.

உலகத்தின் பெரும் பகுதி மக்கள் ஏனோ வெறிகொண்டாற்போல 'ஆஹா பிறந்தது பார் புத்தாண்டு' என்று வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார்கள் (வெறும் வாழ்த்தில் என்ன இருக்கிறது? ஆளுக்கு ஆயிரம் ரூபாய் செக் கொடுங்கள் அல்லது கூகுள் பே செய்யுங்கள் என்றால் துண்டைக் காணோம், துணியக் காணோம் என்று கழன்றுவிடுவார்கள்).

புத்தாண்டு எது? இன்னமும் அந்தக் குழப்பமே தீர்ந்தபாடில்லை. சித்திரையில் பிறக்கிறதா, தையில் பிறக்கிறதா, விஷுவா? யுகாதியா? ஹிஜிரியா? ஜூலியனா? கிரிகோரியன்தானா? எல்லாருமாக, குறிப்பாக பிரிட்டனின் முன்னாள் அடிமைகள், அல்ல, காலனிகள் எல்லாமுமாக ஜனவரி 1-ல்தான் தொங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஏனெனில், வேறு வழியில்லை, அப்போதுதான் இங்கே காலண்டர்கள் மாறுகின்றன. டயரிகள் மாறுகின்றன. இப்போது கொஞ்சம் குறைந்துவிட்டாலும் இன்னமும் டயரிகள் இருக்கத்தான் செய்கின்றன. தனக்கு மேலே அல்லது வேண்டப்பட்டவர்களுக்காகக் கொடுப்பதற்கென டயரிகளைத் தூக்கிக் கொண்டு இன்னமும் அலைகிறார்கள் நிறைய பேர்.

உண்மையில் எத்தனை பேர்தான் டயரி எழுதுகிறார்கள்? எத்தனை பேர் ஆனந்தரங்கம் பிள்ளை லெவல்? எத்தனை பேர் கவிதை உளறல்? எத்தனை பேர் மளிகைக் குறிப்புகள்? எத்தனை பேர் வரவு - செலவுக் கணக்கு?

அப்புறம் ஜனவரி ஒன்றாம் தேதியானதும் எல்லாரும், குறிப்பாக, அரசு அலுவலர்கள், அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்த படிநிலையில் இருப்பவர்களைச் சந்தித்துக் கைகுலுக்கி அல்லது வணக்கம் போட்டு எலுமிச்சைப் பழங்களைக் கொடுக்கிறார்களே? எப்போது வந்திருக்கும் இந்த எலுமிச்சைப் பழங்கள் கொடுக்கிற பழக்கம்? இவ்வளவு எலுமிச்சைகளை அவர்களும்தான் என்னதான் செய்வார்கள்? ஊறுகாய் போடுவார்களா? அல்லது பக்கத்தில் ஏதேனும் சர்பத் கடைக்குக் கொடுத்துவிடுவார்களா? அல்லது வைத்திருந்து தலைக்குத் தேய்த்துக் குளிப்பார்களா? புரியவில்லை.

ஆனால், சில லெவலில் மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆப்பிள் பழங்கள், பழக்கூடைகள், பூக்கொத்துகள், மடித்துவைக்கப்பட்ட சால்வைகள்... எல்லாம் பயன்படத்தான் செய்யும். சால்வைகள் மீண்டும் கடைக்கே போகலாம் அல்லது இன்னொருவருக்குப் போர்த்தவும் படலாம். சரி, அவற்றையும் வைத்துக்கொண்டு வேறு என்னதான் செய்ய முடியும்?

நகரங்களில்தான் குடிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். கிராமங்களிலும் அப்படித்தானா? அல்லது ஹேப்பி நியு இயர் கமல்ஹாசன் பாட்டோடு சரியா? சீக்கிரமாக அந்தப் பாட்டுக்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்யுங்கப்பா. சின்னப் பிள்ளையாக இருந்த காலத்திலிருந்து ஒவ்வொரு புத்தாண்டுக்கும் இந்த ஒரே பாட்டுதானா? நடிக்கும்போது கமல்ஹாசனே நினைத்திருக்க மாட்டார், இப்படி சிரஞ்சீவியாக இந்தப் பாட்டு நின்று விளையாடும் என்று!

நள்ளிரவில் குடித்துக் கொண்டாடிவிட்டு வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் வழிநெடுக சந்திப்பவர்களுக்கு எல்லாம் Happy New Year சொல்லிக் கொண்டு செல்லலாம், தப்பித் தவறி ஏதேனும் தெரு முனைகளில் ஒளிந்து நின்றுகொண்டிருக்கும் போலீஸ்காரர்களிடம் சிக்கிக் கொண்டால் Shabby New Year தான். எல்லாம் நேரம்தான்.

நேரம் என்றதும் நினைவுக்கு வருகிறது. புற்றீசல்கள் போல இந்த யூ டியூப் சேனல்கள் எல்லாம் வந்ததும் போதும், திரும்புகிற பக்கமெல்லாம் புத்தாண்டு எப்படியிருக்கும் என்று நம்ம ஜோதிடர்கள் வரிந்துகட்டிப் பேசிக்கொண்டிருக்கிறார்களே. புத்தாண்டில் நம்ம நேரம் எப்படி இருக்கும் என்று எந்த ராசிக்கு எந்த ஜோதிடர் சொன்னாலும் காதுகள், கண்கள் எல்லாவற்றையும் கொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். தப்பித் தவறி ஒரு ராசிக்கு என்ன பலன் என்று பார்த்துவிட்டால் போதும், அந்த ராசி பற்றிப் பேசிய அத்தனை ஜோதிடர்களின் விடியோவும் அடுத்தடுத்து வரிசைகட்டி வந்துவிழுகின்றனவே? எவ்வளவு பெரிய சதி?

ஜோதிடர்களில் சிலர் ரொம்பவும்தான் பயமுறுத்துகிறார்கள், இந்த ஆண்டு பிறக்கிற நேரமே சரியில்லையாம், தலைவர்களுக்கு நல்லது இல்லையாம், நாடுகளுக்கும் நல்லது இல்லையாம். வெச்சு செய்யப் போகுது பாருங்க என்கிறார். நிஜமாகவா?

இதற்கு நடுவே இந்த ஆண்டில் நிறைய கிரகங்களின் - சனி, குரு, ராகு, கேது -  பெயர்ச்சிகள் இருக்கின்றன, கவனமாக இருங்கள் என்ற எச்சரிக்கை வேறு.

இவற்றையெல்லாம் கேட்டுப் பயந்தோ என்னவோ, கோவில்களில் எல்லாம் ஒரே கூட்டம். 364 நாள்களும் கடவுளைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்துவிட்டு, புத்தாண்டு மட்டும் அட்டென்டன்ஸ் போடுவதும் என்னதான் நியாயம்? இதெல்லாம் அவருக்குத் தெரியாதா, என்ன?

முன்னரெல்லாம் கிறிஸ்துவர்கள்தான் புத்தாண்டுப் நள்ளிரவுப் பிரார்த்தனைக்காகத் தேவாலயங்களுக்குச் செல்வார்கள். இப்போது எல்லாரும் புறப்பட்டுவிட்டார்கள். கோவில்கள் எல்லாம்கூட புத்தாண்டு தரிசனத்துக்குத் திறக்கப்படுகின்றன. அதெல்லாம் கூடாது, எல்லாம் சாஸ்திர விரோதம் என்று இன்னொரு பக்கம் எதிர்ப்பும்கூட.

என்ன மாற்றம் வருகிறதோ, இல்லையோ, காலண்டர்கள் மாறுவது மட்டும் கண்டிப்பாக நடக்கும். அதுவும்கூட இப்போது காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை என்றாகிவிட்டது. ஜவுளிக் கடை, மெடிக்கல் ஷாப் என எங்கிருந்தாவது ஓசியில் வந்து குதித்துவிடுகிறது. மாத காலண்டருக்கெல்லாம் இப்போது மரியாதை இருப்பது போலவும்  தெரியவில்லை.

ஆனால், மாறாமல் இருக்கப் போகின்றவைதான் நிறைய (யாருக்கும் நினைவுக்கு வராவிட்டாலும்). அதே படிப்பு, அதே வேலை, அதே ரேஷன் கடை, அதே டாஸ்மாக் கடை, அதே அரசியல் தலைவர்கள், அதே வீராவேசங்கள், அதே பஞ்சப் பாட்டுகள், அதே நோய், அதே டாக்டர், அதே மருந்துக் கடை, அதே கோவில், அதே தெய்வம்... அதே வேண்டுதல்கள்...

இவற்றுக்கெல்லாம் நடுவில் நிறைய புத்தாண்டு சபதங்கள் வேறு. நிறைய படிக்க வேண்டும், நிறைய எழுத வேண்டும், வீடு வாங்க வேண்டும், திருமணம் செய்ய வேண்டும், வாகனம் வாங்க வேண்டும், தொழில் தொடங்க வேண்டும்... எல்லாம் வேண்டும் வேண்டும்தான். ஒன்றும் நடக்கப் போவதில்லை என்றாலும். எல்லாம் நம்ம கையில்தானே இருக்கிறது, அதுவாக எதுதான் நடக்கும்? நடக்க முடியும்? அடுத்த ஆண்டுக்கும் இவற்றையெல்லாம் அப்படியே நினைவில் வைத்துக்கொள்ளலாம்.

ஏதோவொன்று... எப்படியும் புத்தாண்டு பிறக்கிறது / இப்போதும் பிறந்திருக்கிறது. புத்தாண்டு பிறக்கும்போதெல்லாம் எலுமிச்சைப் பழங்கள் மட்டும் உறுதி, எல்லாருக்கும் கிடைக்காவிட்டாலும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com