இந்தியா பொருளாதார வல்லரசாவது சாத்தியமா?

இந்தியா இன்று இருக்கும் நிலையில் பொருளாதார வல்லரசாக முடியுமா? என்று அலசுகிறது கட்டுரை...
இந்தியா பொருளாதார வல்லரசாவது சாத்தியமா?

மத்தியில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரும்போது, உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் வரிசையில் மூன்றாம் இடத்துக்கு இந்தியா முன்னேறும் என்று பெருமிதம் பொங்க பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருப்பது உள்ளபடியே சாத்தியம்தானா?

தற்போது உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில்  அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்ததாக ஐந்தாம் இடத்தில்  இந்தியா உள்ளது.

இந்தப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் உள்ள நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்புடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் நிலைமையோ மிகவும் பின்தங்கியே உள்ளது.

உலகில் மிக அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. நம்மைவிட மிகக் குறைவான மக்கள்தொகை கொண்ட அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஜிடிபி மதிப்பு இந்தியாவைவிடப்  பல மடங்கு அதிகமாக உள்ளது.

மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால், சீனா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளைவிட இந்தியாவின் ஜிடிபி மதிப்பு அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், உண்மை நிலவரமோ இதற்கு நேர்மாறாக உள்ளது.

அதோடு, வெறும் ஜிடிபி மதிப்பை மட்டும் வைத்து ஒரு நாட்டைப் பொருளாதார வல்லரசு என்று அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. தனிநபர் சராசரி ஆண்டு வருமானம், அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம், சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில்தான் ஒரு நாட்டை பொருளாதார வல்லரசாகத் தீர்மானிக்க முடியும்.

தனிநபர் சராசரி ஆண்டு வருமானத்தைப் பொருத்தவரையில், உலக  நாடுகளின் பட்டியலில் இந்தியா இன்னமும் 146-ஆவது இடத்தில்தான்  உள்ளது. சீனா 71-வது இடத்திலும் ஜப்பான் 35-வது இடத்திலும்  ஜெர்மனி 22-வது இடத்திலும் அமெரிக்கா 8-வது இடத்திலும் இருக்கிறது. பெரிய அளவு பொருளாதாரம் என்பதால் மக்கள்தொகையின் பெரும்பகுதிக்குத் தேவைகள்  அனைத்தும் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக அர்த்தமல்ல.

அனைவருக்கும் உணவு, உடை, வசிப்பிடத்தைப் பொருத்தவரையில் இந்தியாவின் நிலைமை என்ன என்பதைச்  சொல்லவே வேண்டாம். அந்த  அளவுக்கு நாம் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளோம். தினமும்  ஒருவேளை உணவுக்கே அல்லல்படும் பல கோடி மக்களைக் கொண்ட நாடாகத்தான் இந்தியா இன்னமும் உள்ளது.

நமது நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு மாதந்தோறும் தலா 5 கிலோ  அரிசியை மத்திய பாஜக அரசு வழங்கி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி  பெருமைப்பட்டிருக்கிறார். சற்று யோசித்தால் இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? மொத்தம் 140 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில் 80 கோடிப் பேர்  உணவுக்காக அரசின் தயவை எதிர்நோக்கி இருக்கிறார்கள் என்பது எப்படிப் பெருமை தரக்கூடிய ஒரு விஷயமாக இருக்க முடியும் என்பதை பிரதமர் நரேந்திர மோடிதான் விளக்க வேண்டும்.

உணவுக்கே இந்தத் திண்டாட்டம் என்றால், உடை, வசிப்பிடம் ஆகியவற்றில் நமது நாட்டு மக்களின் நிலையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த விஷயத்தில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது.

வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருந்தால் மட்டுமே ஒரு நாடு பொருளாதார வல்லரசாக முடியும். இந்தியாவின் வளர்ச்சி என்பது நமது மொத்த மக்கள்தொகையில் ஒரு சதவீத பெரும் பணக்காரர்களை மையமாகக் கொண்டுதான் உள்ளது. நமது நாட்டின் ஒட்டுமொத்த வருவாயில் 80 சதவீதம் இந்த ஒரு சதவீத பெரும் பணக்காரர்களிடம்தான் குவிந்துள்ளதாக புள்ளிவிவரங்கள்  கூறுகின்றன. பிற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையேயான வளர்ச்சி விகித இடைவெளி மிக மிக அதிகமாக உள்ளது. இந்த இடைவெளி குறைந்து, அனைத்துத் தரப்பினரும் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே ஒரு நாடு பொருளாதார வல்லரசாக முடியும்.

மேலும், உலகில் மிக அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளதாக நமது ஆட்சியாளர்கள் பெருமை கொள்கின்றனர். ஆனால், உலகில் வேலையில்லாத் திண்டாட்டத்தால் அல்லல்பட்டு வரும் இளைஞர்களை மிக  அதிகமாகக் கொண்டுள்ள நாடும் இந்தியாதான் என்பதை ஆட்சியாளர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.

இன்றைய சூழலில், ஒரு குடும்பத்தில் வயது வந்த ஆண்டு, பெண் அனைவரும் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டினால் மட்டுமே செலவினங்களைச் சமாளிக்க முடியும் என்பதுதான் யதார்த்த நிலை. ஆனால், நிரந்தர வருமானம் இல்லாமல், அன்றாடம் கிடைக்கும் வேலைகளைச் செய்து, வாழ்க்கையைக் கடத்தி வரும் பல கோடி மக்களைக் கொண்ட நாடுதான் இந்தியா என்பதை நாம் புறந்தள்ளிவிட முடியாது.

பெருமளவிலான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கக்கூடிய பெரும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தினால் மட்டுமே, நமது  நாட்டின் தனிநபர் ஆண்டு சராசரி வருமானம் உயரும். ஆனால், அம்பானி, அதானி போன்றோரின் பெரு  நிறுவனங்களின் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு உயர்வதற்குத்தான் ஆட்சியாளர்கள் உதவி வருகின்றனர்.

எனவே, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில்  ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தினால் மட்டுமே இந்தியா பொருளாதார  வல்லரசாவது பற்றிக் கனவு காணலாம்.  இந்தக் கனவும் நனவாகுமா என்பது  கடவுளுக்கே வெளிச்சம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com