உலகெங்கும் பல்வேறு மதத்தினரால் கொண்டாடப்படும் தீபாவளி!

தீபாவளி, ஓர் அகில இந்தியக் கொண்டாட்டம் என்றாலும், பல வெளிநாடுகளிலும்கூட கொண்டாடப்படுகிறது. அதுபோல பல்வேறு மதத்தினராலும் கொண்டாடப்படுகிறது. 
உலகெங்கும் பல்வேறு மதத்தினரால் கொண்டாடப்படும் தீபாவளி!


தீபாவளி, ஓர் அகில இந்தியக் கொண்டாட்டம் என்றாலும், பல வெளிநாடுகளிலும்கூட கொண்டாடப்படுகிறது.

நேபாளத்தில் தீபாவளி வெகு சிறப்பான ஆரவாரத்தோடு கொண்டாடப்படுகிறது. அங்கு தீபாவளி கொண்டாட்டம் ஐந்து நாள்கள் நடைபெறுகிறது. ஆனால், கொண்டாடப்படும் விதத்தில்தான் வேறுபாடுகள்.

அந்நாட்டில் முதல் நாள் காகங்களும், இரண்டாம் நாள் நாய்களும் சிறப்பாக பூஜிக்கப்படுகின்றன. எமனுடைய கோபத்திலிருந்து தப்புவதற்காக இப்படிச் செய்கின்றனர். நம் நாட்டில் உள்ளதைப் போன்றே மூன்றாம் நாள் முக்கியப் பண்டிகை தினம். அன்றைய நாளில் அதிகாலையில் கோ பூஜையும், மாலையில் சந்தியா காலத்தில் ஸ்ரீலட்சுமி பூஜையும் செய்யப்படுகின்றன. நம் நாட்டைப் போன்றே மத்தாப்புக் கொளுத்திப் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. நான்காவது நாள் கோவர்த்தன பூஜை நடைபெறுகிறது. அப்போது ஸ்ரீகிருஷ்ணனுக்கு 54 வகை தின்பண்டங்கள் கொண்ட 'சப்பன் போக்' என்ற போஜனம் படைக்கப்படுகிறது. விளக்குகள் ஏற்றப்படுகின்றன. ஐந்தாம் நாள் அங்கும் நம் வட மாநிலங்களைப் போலவே, பையா தூஜ் என்னும் சகோதர, சகோதரிகள் நலன் நாடும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சகோதரி வீட்டில் சகோதரர்களுக்கு விருந்தளிக்கப்படுகிறது.

இலங்கையில் தீபாவளியன்று பலவகை உணவுகளோடு விருந்தும், இரவு வீடுகளில் தீபலங்காரமும், வாண வேடிக்கைகளும் நடத்தப்படுகின்றன.

மொரீஷியசில் நெய் தீபம் ஏற்றுவர். குறிப்பாக புதிய தம்பதி மற்றும் திருமணத்துக்குக் காத்திருப்போரால் ஏற்றப்படும். லக்ஷ்மி பூஜையோடு ஸ்ரீராமன் பூஜையும் சிறப்புப் பெற்றது.

பிஜித்தீவில் ஏறத்தாழ இந்திய பாணிக் கொண்டாட்டங்கள். குறிப்பாக ராம் லீலா நிகழ்ச்சி நடைபெறும்.

சீனாவில் தீபாவளி 'நயி மஹீவா' என அழைக்கப்படுகிறது. நம் நாட்டைப் போன்றே வீடுகளில் அலங்காரம் செய்கின்றனர். வாயிலின் இருபுறமும் சீன மொழியில் சுபம், லாபம் என்றெழுதி மனித உருவங்களை வரைந்து வைப்பர். அந்த உருவங்களை மேன்-ஷைன் என அழைக்கின்றனர். அவை வெற்றியின் அடையாளங்கள். அன்று கலாசாரப் போட்டிகள் நடத்தப்படும். தலைநகர் பீஜிங்கில் 100 அடி உயர சக்கரம் அமைத்து தீபங்களை ஏற்றி வைத்து அலங்கரிப்பர்.

தாய்லாந்தில் தீபாவளி 'கிரான்சோங்' எனப்படுகிறது. அன்றைய நாளில் வாழைக் கிண்ணங்கள் (அதாவது நமது தொன்னை போன்றது) செய்து அதனுள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து நதியில் மிதக்க விடுவர்.

ஜப்பானில் தீபாவளி மூன்று நாள் கொண்டாடப்படுகிறது. மூன்றாம் நாளை சுக-சம்ருத்தி என்று அழைக்கின்றனர். அதாவது சுகமும் நிறைவும் தரும் பண்டிகை என்று பொருள். அந்த மூன்று நாளும் வீட்டை சுத்தம் செய்ய துடைப்பம் பயன்படுத்துவதில்லை. மாறாக நீர் தெளித்துக் கையால் துணி கொண்டு துடைப்பர்.

மலேசியாவில் தீபாவளி ஒரு அரசு விழா. அன்று பொது விடுமுறை. தீப அலங்காரம் மற்றும் வாண வேடிக்கை உண்டு. பெரிய அளவில் ராம்லீலா நிகழ்ச்சி நடத்தப்படும். இலங்கை வெற்றிக்குப் பிறகு ஸ்ரீராமன் ஊர் திரும்பிய நிகழ்ச்சிதான் அங்கு தீபாவளி. ஸ்ரீலட்சுமி தேவி வெளிப்பட்ட நிகழ்ச்சியை அவர்கள் தீபாவளியுடன் சம்பந்தப்படுத்துவதில்லை. அந்நாட்டுக்கென 'ஹிகாயத் ஸ்ரீராம்' என்ற தனி ராமாயணம் உண்டு.

இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில்கூட சில இடங்களில் தீபாவளியை மக்கள் கொண்டாடுகின்றனர். இந்தியாவில் இருந்து மிக தொலைவில் இருக்கும் நாடுகளான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க நாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பெர்க்கில் தீபாவளி கொண்டாடத்துக்காகக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

தவிர, மியான்மர், லாவோஸ், வியட்நாம், இந்தோனேஷியா, மாலத்தீவு மற்றும் சிங்கப்பூரிலும் தீபாவளிப் பண்டிகை ராம்லீலா நிகழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெறுவதுடன், அங்கும் தீபோற்ஸவ நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. 

தீபாவளி நாளை நேபாளம், இலங்கை, மியான்மர், மொரிசியஸ், மலேசியா, சிங்கப்பூர், கயானா, டிரினிடாட்-டொபாகோ, சுரிநாம், பிஜி ஆகிய நாடுகளில் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் தெற்காசிய மக்கள் பலரும் தீபாவளியை தங்களுடைய வழக்கங்களுக்கு ஏற்றவாறு கொண்டாடுகின்றனர்.

பண்டைய காலங்களில் இந்தியாவுக்கு பல நாடுகளுடன் வணிகத் தொடர்பு இருந்ததால், தீபாவளி பண்டிகை கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

பல்வேறு மதத்தினரும் கொண்டாடும் தீபாவளி

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவது இந்துக்கள் மட்டுமல்ல. சமணர்கள், சீக்கியர்களாலும் கூடக் கொண்டாடப்படுகிறது. ஆனால், காரணங்கள் வெவ்வேறு.

தீபாவளி என்பது கார்த்திகை மாதத்தின் முதல் மறைமதி (அமாவாசை) நாள்களில் பதின்மூன்றாம் நாள் தொடங்கி முழுமதி (பெளர்ணமி) இரண்டாம் நாள் வரை ஐந்து நாள்கள் கொண்டாடப்படும் பண்டிகையாக இருந்தது.

தொடக்கத்தில் இந்த பண்டிகை வைணவர்களால் முழுமையாகக் கொண்டாடப்பட்டது. பிற்காலங்களில் தீபாவளியை சைவ சமயத்தினரும் கொண்டாடத் தொடங்கினர். இப்போது, இந்த பண்டிகையை பரவலாக எல்லோரும் கொண்டாடி வருகின்றனர்.

சமணர்களும் இதனை கொண்டாடுகின்றனர். சமணர்களின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் முக்தி அடைந்த நாளையே தீபாவளியாக சமணர்கள் கொண்டாடி வருகின்றனர். அதாவது, மகாவீரர் என்ற தீப ஒளி மறைந்துவிட்டதால், விளக்கு ஏற்றி வைப்போம் என காசி, கோசல மக்களும், பதினாறு கண அரச மக்களும் தங்களது வீட்டின் முன் ஏற்று வைத்ததாகக் கூறப்படுகிறது. அது, இன்றும் தொடர்கிறது.

சீக்கிய மக்கள் தீபாவளியை முக்கிய நாளாகக் கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு அர்கோபிந்த் சிங் என்பவர் சிறையில் இருந்து விடுதலையான நாளாக சீக்கிய மக்களிடையே தீபாவளி கருதப்படுகிறது.

பெளத்த மதத்துக்கும் தீபாவளிக்கும் முக்கியமான தொடர்புகள் எதுவும் காணப்படவில்லை என்றாலும், தெற்காசியாவில் பெளத்தர்கள் சிலராலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில் வாழும் பழங்குடி நெவார் சமூகத்தினர் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். அசோக மாமன்னர் பெளத்த மதத்துக்கு மதம் மாறிய நாளாகக் கொண்டாடும் இந்த பண்டிகையை அசோக விஜயதசமி எனவும் அழைக்கின்றனர்.

வங்கதேசம், இலங்கையில் வாழும் பெளத்தர்கள் சிலரும் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர். ஆனால் மகாயானம், திபெத் பெளத்த பிரிவுகளிலும், தெற்காசியாவுக்கு வெளியே உள்ள பெளத்தர்களிடமும் தீபாவளி காணப்படவில்லை.

ஆனால், பண்டைய தமிழகத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் ஏதும் இல்லை என்பதால், இந்தத் திருவிழா வட இந்தியாவிலிருந்து வந்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

பண்டைய காலங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடியதற்கான ஆதாரங்கள் இல்லை. வெடி வெடிக்கும் பழக்கம், மகிழ்ச்சியைக் குறிப்பதற்காக ஆரம்பித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்தப் பட்டாசுகள் தயாரிப்பதற்கான மூலப் பொருளான வெடி மருந்துகள் தமிழ்நாட்டுக்குப் 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் அறிமுகமானது. தொடக்கத்தில் இலைகளில் வெடிமருந்து வைத்து பட்டாசு தயாரிக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த பட்டாசுகளில் பல மாற்றங்கள் பெற்று இப்போது விதவிதமான வெடிகள், மத்தாப்புகளாக மாறியுள்ளன.

எனவே, இப்போது, துணி, எண்ணெய், மாவு, பட்டாசு போன்ற பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இந்தத் திருவிழா மாறிவிட்டது.

ஆனால், கிராமப்புறங்களில் தைத்திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இணையாக தீபாவளி கொண்டாடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தீபாவளி ஸ்பெஷல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com