தஞ்சாவூரில் பிறந்த சந்திரகலா - சூரியகலா!

தமிழ்நாட்டில் மிகப் பிரபலமான சந்திரகலா, சூரியகலா  ஸ்வீட்ஸ்கள் உருவான இடம் தஞ்சாவூர். 
சந்திரகலா
சந்திரகலா

தமிழ்நாட்டுப் பண்பாட்டில் அதிரசம், அக்கார அடிசில், தேங்காய் பர்பி, தேன்குழல் உருண்டை, பொரிவிளங்காய் உருண்டை, வெல்லச் சீடை, வேர்க்கடலை உருண்டை உள்ளிட்டவை பிரபலமானவை. பிற்காலத்தில் வடக்கத்திய பண்பாட்டிலிருந்து வந்த பல இனிப்புகளும் இங்கு பிரபலமாகி நம் வாழ்வில் அவையும் அங்கமாகிவிட்டன. இந்த வரிசையில் சந்திரகலா, சூரியகலா தமிழ்நாட்டில் மிகப் பிரபலமான ஸ்வீட்ஸ்களாக திகழ்கின்றன.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்த இரு இனிப்புகளும் உருவான இடம் தஞ்சாவூர். திருவையாறு அசோகா, தஞ்சாவூர் சர்க்கரை பொம்மை போன்ற பாரம்பரிய வரிசையில் சந்திரகலா, சூரியகலா ஸ்வீட்ஸ்களும் இடம்பெறுகின்றன.

இந்த சந்திரகலா, சூரியகலா உருவான வரலாறு குறித்து தஞ்சாவூர் பாம்பே ஸ்வீட்ஸ் உரிமையாளர் பி.ஜி. சுப்பிரமணி சர்மா கூறியதாவது: 

சந்திரகலா, சூரியகலா ஸ்வீட்ஸ்களை முதல் முதலில் உருவாக்கி தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியவர் உத்தர பிரதேச மாநிலம், ஹத்ரஸ் நகரைச் சேர்ந்த குருதயாள் சர்மா. இவர் சுதந்திரத்துக்கு முன்பு சென்னையில் இனிப்புகள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தார். பின்னர் தஞ்சாவூரில் 1949 ஆம் ஆண்டில் குடியேறிய இவர், ரயிலடியில் பாம்பே ஸ்வீட்ஸ் என்ற பெயரில் சிறிய அளவில் ஸ்வீட் கடையைத் தொடங்கினார். பல்வேறு சிரமங்களுக்கு இடையே அந்தச் சிறிய இடத்தில் இனிப்புகளையும் தயாரித்து விற்பனை செய்து வந்தார். 

    சந்திரகலா, சூரியகலா இனிப்புகளை அறிமுகப்படுத்திய குருதயாள் சர்மா    
    சந்திரகலா, சூரியகலா இனிப்புகளை அறிமுகப்படுத்திய குருதயாள் சர்மா    

அப்போது, உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்த பிரபல ஸ்வீட்ஸ்களில் ஒன்றான குஜியா என்ற ஸ்வீட்டை தஞ்சாவூரில் அறிமுகப்படுத்த முடிவு செய்தார். அப்படி உருவானதுதான் இந்த சந்திரகலா, சூரியகலா ஸ்வீட்ஸ்கள்.

சுத்தமான பசும்பாலில் முந்திரி, பாதாம்பருப்பு, குங்குமப்பூ ஆகிய மூன்றும் கலந்த கோவா (பால்கோவா) தயாரிக்கப்படுகிறது. அதன்பின்னர், மைதா மாவை அப்பள வடிவில் தேய்த்து, அதில் கோவா வைத்து மூடப்படுகிறது. இதை ஒரே அப்பள வடிவிலான மைதா மாவில் வைத்து அரை வட்டமாக மூடுவதை சந்திரகலா என்றும், இரு முழு வட்ட மைதா மாவு அப்பளங்களுக்கு நடுவில் கோவாவை வைத்து மூடுவதை சூரியகலா எனவும் அழைக்கப்படுகிறது. இதை சுத்தமான நெய்யில் பொரித்து எடுத்து, சர்க்கரை ஜீராவில் ஊற வைப்பதன் மூலம் சந்திரகலா, சூரியகலா தயாராகிறது. 

இந்தப் புதிய இனிப்புகள் தஞ்சாவூர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக, மாதந்தோறும் முதல் தேதிகளில் ஊதியம் போடப்படும்போது இக்கடையில் கூட்டம் அதிகமாகவே இருக்கும். தீபாவளி பண்டிகையின்போது பகலில் மட்டுமல்லாமல், இரவு நேரத்தில் கூட வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவு செய்ய முடியாத அளவுக்குக் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். என்றாலும், வாடிக்கையாளர்களுக்கு இயன்ற அளவுக்கு கொடுத்துவிடுவோம்.

காலப்போக்கில் சந்திரகலா, சூரியகலாவின் பெருமை சுற்றியுள்ள நகரங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் பரவியது. இதனால், இங்குள்ள மக்கள் வெளியூரில் உள்ள தங்களது உறவினர்களுக்கும் இந்த ஸ்வீட்ஸ்களை வாங்கிச் செல்வதைப் பெருமையாக நினைக்கத் தொடங்கினர். இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களுக்கும் சந்திரகலா, சூரியகலா பெரும் வரவேற்பைப் பெற்றது. 

சூரியகலா
சூரியகலா

இதைப் பார்த்து தமிழகத்தில் பல்வேறு ஸ்வீட்ஸ் நிறுவனங்கள், கடைகளிலும் சந்திரகலா, சூரியகலா ஸ்வீட்ஸ்களும் முதன்மையான இனிப்புகளில் ஒன்றாக இடம்பெறுகின்றன. ஆனால், மற்ற ஸ்வீட்ஸ் நிறுவனங்கள், கடைகளில் செய்தாலும், இந்த அளவுக்கு அசல் ருசி இருப்பதில்லை என்ற கருத்து மக்களிடையே நிலவுகிறது. இதனால், பாம்பே ஸ்வீட்ஸ் சந்திரகலா, சூரியகலா ஸ்வீட்ஸ்களுக்கு இருக்கும் வரவேற்பு குறையவில்லை. இப்போது, ரயிலடியில் மட்டுமல்லாமல், பயை பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், மங்களபுரம் உள்பட 13 இடங்களில் கிளைகள் உள்ளன. வேலை நிமித்தமாக அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வசித்து வரும் தமிழ்நாட்டு மக்களும் இணையவழி மூலம் ஆர்டர்கள் செய்து வாங்குகின்றனர். 

இப்போது, ஒரு கிலோ சந்திரகலா ரூ. 400-க்கும், சூரியகலா ரூ. 600-க்கும், கோவாவில் பாதாம், குங்குமப்பூ அதிகமாக நிறைந்த கேசர் பாதாம் சந்திரகலா ரூ. 680-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் வீணை உள்ளிட்டவற்றின் வரிசையில் சந்திரகலா, சூரியகலாவுக்கும் புவிசார் குறியீடு பெற விண்ணப்பம் செய்துள்ளோம். விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் சுப்பிரமணி சர்மா. 

தீபாவளி ஸ்பெஷல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com