அவதாரம் எடுக்கும் நடனக் கலைஞர்!

கோயில் திருவிழாக்களில் பல்வேறு கடவுள்களின் வேடமிட்டு ஆடிய ஒரு இஸ்லாமிய பெரியவரை கண்டு அதிசயித்த 17 வயது சிறுவன், இன்று நடனக் கலைஞராக அசத்தி வருகிறார். 
வேடமிட்டு ஆடும் முத்தாரம்மன் நடன கலைக்குழு.
வேடமிட்டு ஆடும் முத்தாரம்மன் நடன கலைக்குழு.

நாமக்கல்: ஆடல் கலையே தேவன் தந்தது; தேவனின் ஆடலில் தான் ஜீவன் உள்ளது என்ற திரைப்பட பாடல் வரியானது யாருக்கு பொருந்துமோ, இல்லையோ, கடவுள் வேடமிட்டு நடனம் ஆடுபவர்களுக்கு மிகவும் பொருந்தும். இதற்காக தங்களையே வருத்திக் கொண்டு நான்கு, ஐந்து மணி நேரம் அலங்காரம் செய்து ஆண்டவர்போல் வந்து நிற்கும்போது, அங்கு கிடைக்கும் மக்களின் கைதட்டல் ஆரவாரமே கலைஞர்களுக்கான அங்கீகாரம். அவ்வாறான கலைகள் அழிந்துவிடவில்லை, இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஒருவருக்கு ஆர்வமும், ஈடுபாடும் இருந்துவிட்டால் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும். தன்னால் முடியும் என்ற நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்வதும் அவசியமாகும். கோயில் திருவிழாக்களில் பல்வேறு கடவுள்களின் வேடமிட்டு ஆடிய ஒரு இஸ்லாமிய பெரியவரை கண்டு அதிசயித்த 17 வயது சிறுவன், கல்வி மீதான நாட்டத்தை கைவிட்டு கலை நாட்டத்தின் மீது தன் ஆர்வத்தைச் செலுத்தினார். 

தற்போது ஒரு நடன கலைக்குழுவையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம் துத்திக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் (36). கருப்பசாமி, காளி, ஆஞ்சனேயர், ராமர், சிவன், விஷ்ணு என பல்வேறு கடவுள்கள் வேடமிட்டு திருவிழாக்களில் அவர் ஆடுவதை காண மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

முத்தாரம்மன் நடன கலைக்குழு என்ற பெயரில் கோயில் விழாக்கள், அரசு விழாக்களில் பங்கேற்று நிகழ்ச்சிகளை நடத்தி வரும் பார்த்திபனின் நடன கலைத்தாகம் குறித்து கேட்டபோது அவர் நம்மிடம் கூறியதாவது:

என்னுடைய தந்தை சாமிநாதன் திருவிழாக்களில் மேளம் வாசிப்பவர். நான் பத்தாம் வகுப்பு வரையே பயின்றேன். அதற்கு மேல் படிப்பில் நாட்டமில்லை. தந்தையுடன் கோயில் விழாவுக்கு உதவியாக சென்று வருவேன். அப்போது மேளம் வாசிப்பதைதான் முழுமுயற்சியாகக் கொண்டிருந்தேன். 10 கிலோ எடை கொண்ட மேளத்தைத் தூக்கியபடி வாசிப்பது சிரமமான ஒன்று. நாதஸ்வரத்திற்கு ஏற்றவாறு மேளம் இசைக்க வேண்டும். என்னுடைய தந்தை அதில் வல்லவர். நான் முயற்சித்தபோது என்னால் அவருக்கு இணையான தாளத்தைக் கொடுக்க முடியவில்லை. என்னுடைய 17-ஆவது வயதில் சேந்தமங்கலம் திருவிழா ஒன்றில் கடவுள் வேடமிட்டு ஆடுவதற்காக மயிலாடுதுறையைச் சேர்ந்த இஸ்லாமிய பெரியவர் முகம்மது பைசல் என்பவர் வந்திருந்தார். 

அவர் பலவித இந்து கடவுள்களின் வேடமிட்டு நடனமாடுவதை மக்கள் ஆர்வத்துடன் கண்டு களிப்பர். அவருடைய நடன அசைவுகள், கடவுள்போல் தோற்றம், முகபாவணை போன்றவை என்னை ஈர்த்தது. அதேபோன்று நானும் ஆக வேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும் என்னை அந்த கலையின் பக்கம் இழுத்தது. அவர் பங்கேற்கும் விழாக்களுக்கு எங்கிருந்தாலும் சென்று விடுவேன். நான் அவருடைய நடன அசைவைக் காண வருவதை ஒருமுறை தெரிந்துகொண்டார். அப்போது என்னைப் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். அதன்பிறகு எனது தந்தை சாமிநாதனுடன் சென்று சந்தித்தேன். அப்போது, இஸ்லாமிய பெரியவர் பைசலிடம் பயிற்சி பெற வேண்டும் என்கின்ற எனது எண்ணத்தைத் தெரிவித்தேன். இதனையடுத்து தந்தையின் ஆசிர்வாதத்துடன் மயிலாடுதுறைக்குச் சென்று ஐந்து ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்து பயிற்சி பெற்றேன்.

அதன்பிறகு 23-ஆவது வயதில் சொந்த ஊர் திரும்பி தனியாக விழாக்களில் பங்கேற்று நடனமாடத் தொடங்கினேன். அவ்வாறான நிலையில் எனக்கு திருமணம் நடைபெற்றது. மனைவி, ஒரு ஆண் குழந்தையுடன் தற்போது வசித்து வருகிறேன்.

காளி, கருப்பண்ணசாமி, சிவன், பார்வதி, முருகன், விநாயகர், ஆஞ்சனேயர் போன்ற சுவாமிகளின் வேடமிட்டு ஆடும்போது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். தற்போது என்னுடைய குழுவில் 15 பேர் உள்ளனர். ஒவ்வொரு விழாவிற்கும் செல்வதற்கு முன்பாக ஒத்திகை செய்துகொள்வோம். குறிப்பாக தீ வட்டத்திற்கு நடுவில் நின்றபடி நடனமாடும்போது சற்று அச்சமாக இருக்கும். இருப்பினும் கடவுள் துணை இருப்பார் என்ற நம்பிக்கையுடன் நடனமாடுவேன்.

குழுவில் உள்ளவர்கள் எந்த வேடமிடுகிறார்களோ, அதற்கான உடைகளை நானே வாங்கி வைத்துள்ளேன். அரசு சார்ந்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளிலும், ஏற்காடு கோடை விழா, கொல்லிமலை வல்வில் ஓரி விழா போன்ற்வற்றிலும், சென்னை சங்கமம் நிகழ்ச்சியிலும், தில்லியில் உள்ள மத்திய அரசின் விழாக்களிலும் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி உள்ளேன். குறிப்பாக, தை, மாசி, பங்குனி, ஆடி, ஆவணி, கார்த்திகை, மார்கழி போன்ற மாதங்களில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கும். தமிழகம், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் எனது கலைக்குழுவை அழைத்துச் சென்று நடன நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். 

ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.30, 40 ஆயிரம் வரை கட்டணமாகப் பெறுகிறோம். நாமக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் என்னுடைய திறமையை பாராட்டி கலைவளர்மணி விருதினை அளித்தார். கிராமங்கள்தோறும் உள்ள எங்களைப் போன்ற நடனக் குழுவினரை ஊக்கப்படுத்தும் வகையிலான சலுகைகளை தமிழக அரசு வழங்க வேண்டும். நாடகக் கலைக்கு நிகரானது நடனக் கலை, நாங்களே அந்தந்த கோயில்களின் வரலாறுகளை தெரிந்து கொண்டும், கடவுள்களின் வாழ்வியல்களை அறிந்து கொண்டும் விழாவில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்துகிறோம் என்றார்.  

தீபாவளி ஸ்பெஷல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com