மேக்ஸ்வெல் நமக்கு எடுத்த 'மாஸ்டர்கிளாஸ்'

சூழ்ச்சிகளும் பிரச்சினைகளும் நமது வாழ்க்கையை சுற்றி வளைத்தாலும் இறுதி வரை எதிர்த்து நின்று 360 டிகிரியிலும் போராட வேண்டும் என்பதே மேக்ஸ்வெல் வான்கடேவில் நமக்கெடுத்த ‘மாஸ்டர்கிளாஸ்'.
மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகின்றன. தொடரின்  முதல் பாதி ’சப்’ என்று இருந்த நிலையில், இரண்டாம் பாதி பயங்கரமாக நடைபெற்று வருகிறது. 99 சதவிகிதம் அரையிறுதிக்கான அணிகள் முடிவாகிவிட்டன. ஆனால் நவ. 7-ம் தேதி மும்பையில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற போட்டிதான் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத போட்டியாக நிலைத்து நின்றிருக்கிறது. போட்டி முடிந்து பல நாட்கள் கடந்தாலும் அதன் தாக்கம் இன்னும் அகலவில்லை. காரணம், அந்தப் போட்டியில் மேக்ஸ்வெல் ஆடிய ஆட்டம் அப்படி.

ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் ஆடிய 50 ஓவர்களும் சரி, அடுத்து ஆஸ்திரேலியா ஆடிய முதல் 20 ஓவர்களிலும் சரி, ஆப்கானிஸ்தானின் கையே ஓங்கி இருந்தது. முதலில் ஆடிய ஆப்கன் 291 ரன்கள் குவிக்க, அதை விரட்டிய ஆஸ்திரேலியா, 18.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ‘அவ்வளவுதான் ஆஸ்திரேலியா காலி’, ‘அரையிறுதியில் ஆப்கன்தான் கன்பார்ம்’ என சமூக வலைதளங்கள் பரபரத்தன. ஆனால், களத்தில் இருந்த மேக்ஸ்வெல் வேறு மாதிரியாக யோசித்தார் என்பது போட்டியின் முடிவில்தான் தெரிந்தது. ரசிகர்களையும் குறை சொல்லவதற்கில்லை காரணம், ஆப்கானிஸ்தான் இதுவரை தொடரில் ஆடிய ஆட்டம் அப்படி. இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை என முன்னாள் சாம்பியன்களுக்கு அதிர்ச்சி அளித்திருந்தது ஆப்கன். ஆனால், அவர்களுக்கு போட்டியின் முடிவில் அதிர்ச்சி அளித்தார் ‘மேக்ஸ்வெல்’ என்ற தனிமனிதர். 

மேக்ஸ்வெல் களத்திற்கு வந்தபோது அந்த அணி, 49 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் 91-க்கு 7 விக்கெட் ஆக, அங்கிருந்து கம்மின்ஸ்ஸின் சிறிய உதவியுடன் அணியை  தனியாளாக தனது தோளில் சுமந்து வெற்றிக்கோட்டைக் கடந்தார் மேக்ஸ்வெல். 76 பந்துகளில் சதத்தை கடந்த நிலையில் அவரின் உண்மை முகம் அதன் பிறகு தான் வெளிப்பட்டது. அதன்பிறகு நடந்ததெல்லாம் இதுவரை யாரும் கற்பனையிலும் நினைத்திறாதது. 128 பந்துகளில் இரட்டை சதமடித்த மேக்ஸ்வெல் தனது அணியை வெற்றி பெற வைத்தார். இரட்டை சதத்திற்காக அவரை கொண்டாடுகிறதா கிரிக்கெட் உலகம் என்றால் அதுதான் இல்லை. ஏனெனில் இதுவரை 11 வீரர்களால் 13 முறை இரட்டை சதம் எட்டப்பட்டிருக்கிறது. அதில் இந்திய வீரர்கள் 5 பேர். உலகக்கோப்பையில் அடிக்கப்பட்ட மூன்றாவது இரட்டை சதம் இது. பின், எந்த வகையில் மேக்ஸ்வெல் அடித்த இந்த இரட்டை சதம் ‘ஸ்பெஷல்’.

இரட்டை சதம் அடித்த டாப் ஆர்டர் அல்லாத முதல் வீரர் மேக்ஸ்வெல் தான். அதுவும் ஒரு அணி சேஸிங் செய்யும்போது அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதமும் இதுதான். குறிப்பாக ஆஸ்திரேலியா அடித்த 293 ரன்களில் 201 ரன்கள் மேக்ஸ்வெல் அடித்ததுதான். முதல் 100 ரன்களை முழு உடற்தகுதியுடன் அடித்த மேக்ஸ்வெல், பின்பு களத்தில்  தசைப்பிடிப்பால் அவதிப்படத் தொடங்கினார். குறிப்பாக 41 ஓவர்களில்லாம் அவர் துடித்ததைப் பார்த்ததும் மருத்துவக்குழு ‘ஸ்ட்ரெச்சருடன்’ தயாரானது. ஆனால், அந்த ஸ்ட்ரெச்சரில் ஆப்கனை அனுப்பிவைத்தார் மேக்ஸ்வெல். 

அதிரடிக்கு பெயர்போன மேக்ஸ்வெல் இந்த முறை ஒரு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் திருப்புமுனை எல்பிடபுல்யூ - ரிவியூவில் மேக்ஸ்வெல் அவுட் இல்லை என்று வரும்போதுதான். 

வழக்கமாக, கண்ணில் படும் பந்திற்காகவெல்லாம் பேட்டை காற்றில் சுற்றி விக்கெட்டை பறிகொடுக்கும் மேக்ஸ்வெல்லை சமீபகாலமாக பார்க்க முடியவில்லை. இதனாலேயே 2015 உலகக்கோப்பை தொடருக்குப் பின் அணியில் தனது இடத்தை இழந்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் மன அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற கிரிக்கெட்டில் இருந்தும் சில காலம் விலகி இருந்தார். ஆனால், அன்று களத்தில் அவர், கடைசி நின்று  ஆடிய ஆட்டம் அவரின் மனோதிடத்தை படம் பிடித்துக் காட்டியது. 

தோனி ஒருமுறை , "கிரிக்கெட்டில் திறமையானவரைவிட தன்னம்பிக்கை உள்ளவரே வெல்லுவார்" என்பார். அதுதான் அன்று நடந்தது.

கிரிக்கெட் இருக்கும் வரை மேக்ஸ்வெல் ஆடிய இந்த ஆட்டம் நிலைத்து நிற்கும், 1971-ம் ஆண்டு முதல் கிரிக்கெட் உலகில் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அப்படியிருக்க இப்படி ஒரு ஆட்டத்தை இப்போது நாம் பார்த்திருக்கிறோமென்றால் ஏதோவொரு வகையில் நாம் நிச்சயம் புண்ணியம் செய்திருக்கவேண்டும். கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சினே,’என் வாழ்நாளில் நான் பார்த்த மிகச்சிறந்த ஆட்டம் இதுதான்’ என்று பாராட்டியிருந்ததே இதற்கு சான்று. சச்சின் ஆடாத ஆட்டமா, அவர் சந்திக்காத பந்துகளா, அவரின் பாராட்டுகள் போதாதா, இது வழக்கமான போட்டியல்ல என்பதற்கு ஆதாரமாக. 

கால்கள் நகரத்தாமல் கோல்ஃப் அடிப்பது போல ஆப்கன் வீரர்களின் பந்துகளை 360 டிகிரியிலும் அடித்து நொறுக்கிய இந்தப் போட்டியை யார்தான் மறக்க முடியும். இந்த மாதிரியான வழக்கத்துக்கு மாறான ஷாட்கள் அடிக்க முக்கிய காரணம் மேக்ஸ்வெல்லின் கோல்ஃப் பயிற்சிதான். அவரது கோல்ஃப் மீதான விருப்பமே அவருக்கு கிரிக்கெட்டிலும் உதவியிருக்கிறது.

உடல் நொறுங்கி, உடலெங்கும் வலி நிறைந்து, கால்கள் நகர மறுத்தாலும், ஆப்கன் வீரர்கள் வீசிய சுழற்பந்துகள்போல் சூழ்ச்சிகளும் பிரச்சினைகளும் நமது வாழ்க்கையை சுற்றி வளைத்தாலும் இறுதி வரை எதிர்த்து நின்று 360 டிகிரியிலும் போராட வேண்டும் என்பதே, மேக்ஸ்வெல் வான்கடேவில் நமக்கெடுத்த ‘மாஸ்டர்கிளாஸ்'. 

தீபாவளி ஸ்பெஷல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com