நிகழ்த்தப்படாத கென்னடியின் கடைசி உரை!

சுட்டுக்கொல்லப்பட்ட அமெரிக்க அதிபர் கென்னடி பற்றியும் நிகழ்த்தப்படாத  அவருடைய உரையும் பற்றியும்
கென்னடி!
கென்னடி!

1963 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் நாள் – அறுபது ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள டல்லாஸ் நகர வீதியில் திறந்த காரில் அமர்ந்தபடி ஊர்வலமாகச் சென்றுகொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார் அமெரிக்காவின் அதிபராக இருந்த ஜான் எப். கென்னடி.

இளம் வயதில் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற கென்னடிக்கு அப்போது வயது 46!

டல்லாஸ் நகர வீதியில்... 
டல்லாஸ் நகர வீதியில்... 

டல்லாஸில் காலையில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த நிலையில் லீ ஹார்வி ஆஸ்வால்ட் என்பவரால் கென்னடி சுடப்பட்டார். கென்னடி சுடப்பட்டபோது அந்த காரில் அவருடைய மனைவி ஜாக்குலின் கென்னடி, டெக்சாஸ் ஆளுநர் ஜான் கானலிஸ் ஆகியோரும் இருந்தனர்.

நெற்றியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் ரத்தம் கொட்டக் கொட்ட மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட கென்னடி, சிகிச்சை முயற்சிகள் பலனின்றி உயிரிழந்தார்.

கென்னடியின் படுகொலைக்கான காரணம் என்ன? எதற்காக, யாருடைய அறிவுறுத்தலின் பேரில் கென்னடியை ஆஸ்வால்ட் சுட்டார்? 60 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்று வரை உறுதியாக – தெளிவாக எதுவும் தெரியவில்லை. இப்போதும் கென்னடியின் படுகொலை பற்றி நிறைய கதைகள் வெளிவந்துகொண்டுதானிருக்கின்றன.

திறந்த காரில் கென்னடி - சுடப்படுவதற்கு சுமார் ஒரு நிமிஷம் முன்...
திறந்த காரில் கென்னடி - சுடப்படுவதற்கு சுமார் ஒரு நிமிஷம் முன்...

கொலைச் சதியில் தொடர்பிருப்பதாக அன்றைய துணை அதிபர் லிண்டன் பி. ஜான்சன் மீதேகூட சந்தேகிக்கப்பட்டுப் பின் இல்லை என்றானது. கென்னடியைச் சுட்ட ஆஸ்வால்ட் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். ஆனால், இரு நாள்களில் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படும்போது ஜாக் ரூபி என்ற உள்ளூர் மது விடுதி உரிமையாளரால் ஆஸ்வால்ட்டும் சுட்டுக்கொல்லப்பட்டார். 

படுகொலைக்குப் பிறகு ஒரு வாரம் கழித்து, கென்னடியின் கொலை பற்றி விசாரிப்பதற்காக அமெரிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி யேர்ல் வாரன் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார் புதிய அதிபராகப் பொறுப்பேற்றிருந்த ஜான்சன்.

சுடப்பட்டதும் கென்னடியுடன் மருத்துவமனைக்குச் செல்லும் கார்
சுடப்பட்டதும் கென்னடியுடன் மருத்துவமனைக்குச் செல்லும் கார்

பத்து மாதங்களுக்குப் பிறகு நீதிபதி வாரன் ஆணையம் அறிக்கை தந்தது – ஆஸ்வால்ட் சுட்டதில்தான் கென்னடி உயிரிழந்தார், ஆளுநர் கானலிஸ் காயமுற்றார் என்று உறுதி செய்ததுடன், ஆஸ்வால்ட் அல்லது ஜாக் ரூபி ஆகிய இருவருக்கும் எத்தகைய உள்நாட்டுச் சதியிலோ அல்லது வெளிநாடுகளின் சதியிலோ தொடர்பு இருப்பதற்கான எவ்விதச் சான்றுகளும் இல்லை.

கென்னடியை ஆஸ்வால்ட் எதற்காகச் சுட்டார் என்பது பற்றி வாரன் ஆணையம் எதுவும் தெரிவிக்கவில்லை. “கென்னடியைக் கொல்வதற்கான ஆஸ்வால்ட்டின் நோக்கம் பற்றிய விளக்கமும் ஆஸ்வால்ட்டுடனேயே புதைக்கப்பட்டுவிட்டது” என்று அவர் கொல்லப்பட்ட மறு ஆண்டு டைம் இதழ் குறிப்பிட்டது.

கென்னடி கொல்லப்பட்ட நாளில் மாலையில் டல்லாஸ் நகர வணிக மன்றத்தில் அவர் சிறப்புரையாற்றவிருந்தார். திட்டமிடப்பட்ட அந்த உரையை நிகழ்த்தாமலேயே அவர் கொல்லப்பட்டுவிட பின்னர் அவருடைய உரை வெளியிடப்பட்டது.

மனைவி ஜாக்குலினுடன் கென்னடி
மனைவி ஜாக்குலினுடன் கென்னடி

உலகின் இன்றைய சூழலிலும் பொருந்திப் போகிற - பேசப்படாத அவருடைய உரையின் சில பகுதிகள்:

"டல்லாஸ் பேரவையுடன் இணைந்து டல்லாஸ் மக்கள் கவுன்சிலின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றக் கிடைத்த இந்த வாய்ப்புக்காகப் பெருமைப்படுகிறேன். மேலும் சௌத்வெஸ்ட்டின் பட்டதாரி ஆய்வு மையத்தைப் பாராட்டுவதிலும் மகிழ்ச்சியடைகிறேன்…

"டல்லாஸ் வளர்ச்சியின் இவ்விரு அடையாளங்களும் இணைந்து இக்கூட்டத்தை நடத்துவது மிகவும் பொருத்தமானது. ஏனெனில் இவையிரண்டும் இந்த நகரின்  தலைமைத்துவத்தையும் கற்றலையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன - தலைமைத்துவமும் கற்றலும் ஒன்றுக்கொன்று இன்றியமையாதவை… 

“கற்றலின் வளர்ச்சி என்பது நிதி - அரசியல் ஆதரவுக்காக சமுதாயத் தலைமையைச் சார்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, அந்தக் கற்றலின் விளைவுகள், தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தலைமையின் நம்பிக்கைகளுக்கு அவசியமானவை.

“சிறந்த ஆய்வும் படிப்பும் ஒருசேர இங்கே அமைந்து, புதிய, வளர்ந்துவரும் தொழில்களை ஈர்க்கின்றன என்பது தற்செயலான ஒன்றல்ல. டல்லாஸில் தனித்துவமான, தொலைநோக்கு கொண்ட இந்த ஆய்வு மையத்தை உருவாக்கியதற்காக உங்களை நான் பாராட்டுகிறேன்.

“தலைமைத்துவத்துக்கும் கற்றலுக்கும் இடையிலான இந்த இணைப்பு சமுதாய  அளவில் மட்டுமல்ல, உலகளாவிய விவகாரங்களிலும் மிகவும் தவிர்க்க முடியாதது.

“சிக்கல்கள் மற்றும் தொடர்ச்சியான பிரச்சினைகள் நிறைந்த உலகில், ஏமாற்றங்களும் எரிச்சல்களும் நிறைந்த உலகில், கற்றல் மற்றும் அறிவொளியால் அமெரிக்காவின் தலைமைத்துவம் வழிநடத்தப்பட வேண்டும் - இல்லாவிட்டால் வெற்றுப் பேச்சுக்காரர்கள் உண்மையைக் குழப்பி, எல்லா உலகப் பிரச்சினைகளுக்கும் எளிதான தீர்வுகளைச் சொல்லி பிரபலமடைந்துவிடுவார்கள்.

"நாட்டில் எப்போதும் அதிருப்தியாளர்களின் குரல்கள் ஒலிக்கத்தான் செய்யும். இவை மாற்று எதுவுமில்லாமலேயே எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றன, குற்றத்தை மட்டும் கண்டுபிடிக்கின்றன, ஒருபோதும் ஆதரவாக இருப்பதில்லை. எல்லா  பக்கங்களிலும் இருளை மட்டுமே பார்த்து, எவ்விதப் பொறுப்பும் இல்லாமல் செல்வாக்கைச் செலுத்த முனைகின்றன.

“ஆனால், இன்று நாட்டில் வேறு குரல்களும் ஒலிக்கின்றன – யதார்த்த நிலைக்குத்  சற்றும் தொடர்பில்லாத கோட்பாடுகளை உபதேசிக்கும் குரல்கள், முற்றிலும் அறுபதுகளுக்குப் பொருத்தமற்றவை, வெளிப்படையாக, ஆயுதங்கள் இல்லாமல் சொற்கள் போதுமானவை என்று கருதுகின்றன, கடுமையான விமர்சனங்களே வெற்றிக்கு இணையானவை என்றும் சமாதானம் என்பது பலவீனத்தின் அடையாளம் என்றும் கருதுகின்றன.

"அமெரிக்க மக்களிடம் அறிவுபூர்வமாகப் பேச வேண்டும் என்று பத்தாண்டுகளுக்கு முன் பயன்படுத்திய சொற்றொடரையே ஒவ்வொருவரும் பேச வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், மிகக் குறைவான மக்களே அறிவுக்கொவ்வாதவற்றில் கவனம் செலுத்துவார்கள் என்று நாம் நம்பலாம்.  பற்றாக்குறையால் இந்த நாடு தோல்வியுறும் என்பதும் வலிமை என்பது வெறும் முழக்கங்களே என்பதும் வெறும் முட்டாள்தனமே.

"எல்லாவற்றுக்கும் மேலாக வெறும் சொற்கள் மட்டுமே போதுமானவையல்ல. அமெரிக்கா ஓர் அமைதியான நாடு. நம் வலிமையும் உறுதிப்பாடும் தெளிவாக உள்ளபோது, எங்கள் சொற்கள் நம்பிக்கையைத் தருவதற்கானவை மட்டுமே, போர்க் குணம் கொண்டதல்ல. நாம் வலுவாக இருந்தால், நம்முடைய வலிமையே தனக்காகப் பேசும். நாம் பலவீனமாக இருந்தால், சொற்களால் எந்தப் பயனுமில்லை.

"நான் வலிமை என்பதைப் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதலை முறியடிக்கும் நோக்கிலேயே பேசியிருக்கிறேன். ஆனால் இன்றைய உலகில், துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டுகூட சுடப்படாமல், வாக்குகள் மூலமும் தோட்டாக்கள் மூலமும் சுதந்திரம் இழக்கப்படலாம். நம் தலைமைத்துவத்தின் வெற்றி என்பது நம்முடைய லட்சியப் பயணத்தின் - அதேவேளையில் நம்முடைய ஏவுகணைகளின் மீதுள்ள மதிப்பைப் பொருத்திருக்கிறது - சுதந்திரத்தின் நன்மைகள் மற்றும் கொடுங்கோன்மையின் கேடுகளுக்கான தெளிவான அங்கீகாரம் மீது. 

"நண்பர்களே, மக்களே, அமெரிக்கா முன்னெப்போதையும்விட இன்று வலுவாக இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தவே இந்த உண்மைகளைக் கூறுகிறேன். இந்த வலிமை, ஒருபோதும் ஆக்கிரமிப்பு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குப்  பயன்படுத்தப்படாது - எப்போதும் அமைதியைப் பின்பற்றவே பயன்படுத்தப்படும். இது ஒருபோதும் ஆத்திரமூட்டல்களை ஊக்குவிக்கப் பயன்படுத்தப்படாது - இது எப்போதும் தகராறுகளை அமைதியான முறையில் தீர்க்கவே பயன்படுத்தப்படும்."

"நாம், இந்த நாட்டில், இந்தத் தலைமுறையில் – தேர்ந்தெடுத்ததால் மட்டுமல்ல, விதியின் மூலம் - உலகளாவிய சுதந்திரத்தின் சுவர்களின் மீது காவலர்களாக இருக்கிறோம். எனவே, நாம் நம் அதிகாரத்துக்கும் பொறுப்புக்கும் தகுதியானவர்களாக இருப்போம், நம் வலுவை அறிவுடனும் கட்டுப்பாட்டுடனும் பயன்படுத்துவோம்.

“மேலும் எல்லா காலத்திற்கும் பொருத்தமான "உலகில் சமாதானம், மனிதர்களிடம் நல்லெண்ணம்" என்ற பழமையான தொலைநோக்கை நம்முடைய காலத்தில்   எட்டுவோம். அதுவே எப்போதும் நம்முடைய இலக்காக இருக்க வேண்டும், மேலும் எப்போதும் நீதியே நம்முடைய வலிமையின் அடித்தளமாக இருக்க வேண்டும்."

சுட்டுக் கொல்லப்பட்டு அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் அமெரிக்கா முழுவதும் மக்களும் ஊடகங்களும் பேசிக் கொண்டிருக்கின்றனர் கென்னடியைப் பற்றி – நிற வேற்றுமையைக் களைவதிலும் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதிலும் தொடங்கி அவருடைய தாக்கம் அப்படி.

[நவ. 22- கென்னடி நினைவு நாள்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.