பின்சுழலும் சக்கரம்! ரஷியாவில் கருக்கலைப்புக்கு நெருக்கடி!

ரஷியாவில் கருக்கலைப்புக்கு எதிரான அரசு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன, இதைத் தொடர்ந்து, நாடு, பழைய காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கருக்கலைப்புக்கு எதிரான போராட்டத்தில் மாதிரி கல்லறை... (கோப்பிலிருந்து)
கருக்கலைப்புக்கு எதிரான போராட்டத்தில் மாதிரி கல்லறை... (கோப்பிலிருந்து)

உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் 7.3 கோடி கருக்கலைப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் 61 சதவிகித கருக்கலைப்புகள், எதிர்பாராத, தேவையில்லா கருவுறுதல் காரணமாக நேரிடுகின்றன.

தேவையற்ற தருணங்களில் பெருஞ் சுமையாக மாறிவிடக் கூடிய நிலையில், உலகம் முழுவதுமே தேவையற்ற கருவைக் கலைப்பதற்கான வழிவகைகள் எளிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னலிலிருந்து பெண்களை விடுவிக்கும் வகையில் கருக்கலைப்புச் சட்டங்கள் நெகிழ்வுத் தன்மை கொண்டவையாக மாற்றப்பட்டு வருகின்றன.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா உள்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் கருக்கலைப்பு சட்டங்கள் எளிதாக்கப்பட்டுள்ளன. அயர்லாந்திலிருந்து நேபாளம் வரையிலும் கருக்கலைப்பு உரிமையானது, அடிப்படையான மனித உரிமையாக மாறிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்கா, நிகாரகுவா, எல்சால்வடார், போலந்து ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு தற்போது கருக்கலைப்புக்கு எதிரான நிலையை எடுத்திருக்கின்றன.

உலகில் 60 சதவிகிதம் பேர் கருக்கலைப்புக்கு ஆதரவான நாடுகளிலும் 40 சதவிகிதம் பேர் கட்டுப்பாடுகள் கொண்ட மற்றும் எதிரான நாடுகளிலும் வாழ்கின்றனர்.

கருக்கலைப்புக்குத் தடை மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கும் நாடுகளில் ‘சட்ட விரோதமாக’ கருக்கலைப்புகள் நிகழ்கின்றன. கருக்கலைப்பு அனுமதிக்கப்பட்ட நாடுகளிலும்கூட மருத்துவ வசதிக் குறைவு, விழிப்புணர்வின்மை, வறுமை  காரணமாக முறையற்ற – பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன.

“பாதுகாப்பற்ற 97 சதவிகித கருக்கலைப்புகள் வளரும் நாடுகளில்தான் நடைபெறுகின்றன. பாதிக்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் அனைத்தும் ஆசியாவில், அதிலும் மத்திய, தெற்கு ஆசியாவில்தான் நடைபெறுகின்றன. அதேபோல ஆப்பிரிக்காவில் நடைபெறும் கருக்கலைப்புகளில் பாதி பாதுகாப்பற்ற முறையில்தான் நடைபெறுகின்றன” என்கிறது உல சுகாதார நிறுவனம்.

இத்தகைய உலகளாவிய சூழ்நிலையில்தான் கருக்கலைப்பு விஷயத்தில் பழைய காலத்தைத் திரும்ப முயற்சி செய்கிறது விளாதிமீர் புதின் தலைமையிலான தறபோதைய ரஷிய அரசு.

ரஷியாவில் கருக்கலைப்புக்கு எதிரான அரசு நடவடிக்கைகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன, இதைத் தொடர்ந்து, நாடு, பழைய காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ரஷியாவில் இப்போதும் கருக்கலைப்பு சட்டப்படியானதே, பரவலாகக் கருக்கலைப்பு செய்துகொள்ள முடியும் என்றாலும் அண்மைக்காலமாக பிற்போக்கான ஒரு நாட்டைப் போல பல்வேறு நிலைகளில் கருக்கலைப்புகளைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

கருக்கலைப்புக்கு எதிரான முயற்சிகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் புகார்கள் செய்யுமாறும் இணையவழி மனுக்களை அளிக்குமாறும் சிறுசிறு ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறும் செயற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்; என்றபோதிலும் பெரிதாகப் பலன் எதுவுமில்லை.

ரஷியாவில் கொஞ்சம் கொஞ்சமாகக் கருக்கலைப்புக்கான வசதிகள், வாய்ப்புகள் முடக்கப்படுகின்றன. இப்போதே பல இடங்களில் தனியார் மருத்துவமனைகள் கருக்கலைப்புகளை நிறுத்திவிட்டன. தேசிய அளவில் கருக்கலைப்புக்கு எதிரான மனநிலையைக் கருவுற்ற பெண்களிடம் உருவாக்குமாறு மருத்துவர்களை நல்வாழ்வுத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டிருக்கிறது. விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறப்படும் புதிய விதிகள் காரணமாக அவசர கால கருத்தடை – கருக்கலைப்பு மருந்துகளுக்குப் பெரும் பற்றாக்குறையும் நேரிடலாம்.

அமெரிக்காவில் நடந்ததைப் போன்றே ரஷியாவிலும் படிப்படியாகக் கருக்கலைப்பு வசதிகள் இல்லாமலாக்கப்பட்டு விடும் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்க நிலை

அமெரிக்காவில் ஐம்பது ஆண்டுகளாக இருந்த கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்வதெனக் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, அமெரிக்க கருக்கலைப்புக் கொள்கையில் மாற்றம் ஏற்பட, கருக்கலைப்பு தொடர்பான அதிகாரங்கள் தற்போது அந்தந்த மாகாணங்களுக்கு மடை மாற்றப்பட்டுவிட்டன. பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்கள் கருக்கலைப்புக்குத் தடை விதித்துவிட்டன  அல்லது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன. சட்ட ரீதியான போராட்டங்கள் காரணமாக அனைத்து மாநிலங்களாலும் அப்படியே கருக்கலைப்புக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்த இயலாத நிலை இருக்கிறது (அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணமும் குறிப்பிட்ட சில விஷயங்களைத் தவிர மற்றவை தொடர்பாகத் தங்கள் விருப்பப்படி சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம், அமல்படுத்தலாம்). 

சோவியத் ஒன்றியத்தில் கருக்கலைப்பு சாதனங்கள் கிடைக்கப் பெறாத நிலையில், சட்டத்திலுள்ள வழிமுறை காரணமாக, பலமுறைகூட பெண்களால் கருக்கலைப்புகள் செய்துகொள்ள முடிந்தது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு, திட்டமிட்ட குடும்பம், குழந்தை பிறப்புக் கட்டுப்பாடு போன்றவற்றை அரசும் நலவாழ்வுத் துறையும் பிரசாரம் செய்ததால் கருக்கலைப்பு விகிதங்கள் குறைந்தன. அதேவேளை, எந்தவித நிபந்தனையுமின்றி 12 வாரங்கள் வரையிலும், விவாகரத்து, வேலையின்மை, வருவாய்ப் பற்றாக்குறை அல்லது வருவாய் இன்மை போன்ற ‘சமுதாய காரணங்களால்’ 22 வாரங்கள் வரையிலும்கூட கருவைக் கலைத்துக் கொள்ளப் பெண்களை சட்டங்கள் அனுமதித்தன. 

நிலை மாற்றம்

மாஸ்கோ செஞ்சதுக்க விழாவொன்றில் ரஷிய ஆர்த்தோடாக்ஸ் சர்ச் பேராயர் கிரில் (கோப்பிலிருந்து)
மாஸ்கோ செஞ்சதுக்க விழாவொன்றில் ரஷிய ஆர்த்தோடாக்ஸ் சர்ச் பேராயர் கிரில் (கோப்பிலிருந்து)

‘பாரம்பரியமான விழுமியங்களை’ மேம்படுத்துகிற, மக்கள்தொகை பெருக வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட ரஷிய ஆர்த்தோடாக்ஸ் (பாரம்பரிய) சர்ச்சுடன் வலுவான கூட்டை ஏற்படுத்திக் கொண்ட ரஷிய அதிபர் விளாதிமீர் புடின், அதிகாரத்துக்கு வந்த பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. 

குழந்தை பெற்றுக்கொள்வதைவிட, கல்விக்கும் வாழ்க்கைக்கும் எதிர்கால வாழ்க்கைத் திட்டமிடலுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதற்காகப் பெண்களுக்கு  ரஷிய நல்வாழ்வுத் துறை அமைச்சர் மிகையீல் முராஷ்கோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

காத்திருப்புக் காலம், கலந்தாலோசனை, பாதிரியாரின் அங்கீகாரம்

கடந்த இருபதாண்டுகளில் ரஷியாவில் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை – 1990-ல் 41 லட்சமாக இருந்தது 2021-ல் 5.17 லட்சமாக - வெகுவாகக் குறைந்திருக்கிறது.

பாலியல் வன்கொடுமை காரணமாகக் கருவுற்றிருக்கும்பட்சத்தில் மட்டும் 12 வாரங்களிலிருந்து 22 வாரங்கள் வரையிலான கருவைக் கலைக்க சட்டப்படி அனுமதியளிக்கப்படுகிறது. சில பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்துவிடுகின்றன. கருவின் நிலைமையைப் பொருத்து, மருத்துவரைச் சந்தித்த பிறகு இரு நாள்களிலிருந்து ஒரு வாரம் வரையிலும்கூட, அதுவும் மருத்துவர்கள் ஒப்புக்கொள்ளும்பட்சத்தில், கருவைக் கலைக்கக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. தவிர, இதனிடையே, கருக்கலைப்பு எண்ணத்தைக் கைவிடும் நோக்கில் உருவாக்கப்பட்ட மனோரீதியிலான ஆலோசனைகளும் வழங்க முன்வருகின்றனர்.

இந்தக் காத்திருப்புக் காலம் என்பதே கருவுற்றுக் கலைக்க நினைக்கும் பெண்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது. கருத்தரித்த பெண்களுக்கான பிரச்சினைகளையெல்லாமும் சந்திக்க நேரிடுகிறது. 

ரஷியாவில் குறிப்பிட்ட ஒரு பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைகள், கருக்கலைப்புக்கு முன்னர் கிறிஸ்துவ பாதிரியார் ஒருவருடன் கலந்தாலோசிக்குமாறு அறிவுறுத்துகின்றன. விருப்பத்தைப் பொருத்ததே இந்த ஆலோசனை என்று கூறப்பட்டாலும் கருக்கலைப்பை அனுமதித்து பாதிரியாரின் கையெழுத்தைப் பெற வேண்டியதாகத்தான சூழ்நிலை இருக்கிறது.

கருக்கலைப்பு மாத்திரைகளுக்குக் கட்டுப்பாடு

உக்ரைன் போர், நிலையற்ற பொருளாதாரச் சூழல் போன்றவற்றின் காரணமாக மேலும் குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் ரஷிய பெண்களுக்கு ஆர்வம் இல்லாத தற்போதைய சூழ்நிலையில்தான் கருக்கலைப்புக்கு எதிரான சூழல் உருவாக்கப்படுகிறது.

2022-ல் கருக்கலைப்பு மாத்திரைகளின் விற்பனை 60 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மருந்து நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு 35 சதவிகிதம் குறைந்தாலும் 2022-க்கு முன்னர் இருந்ததை விடவும் அதிகம்தான். கருத்தடை மருந்துகளின் விற்பனையும் 2022-23-ல் அதிகரித்துள்ளன.

தொடக்க நிலையிலேயே கருவைக் கலைப்பதற்கான கருக்கலைப்பு மாத்திரைகளின் புழக்கத்துக்குக் கடும் கட்டுப்பாடுகளை நலவாழ்வுத் துறை அமைச்சகம் விதித்திருக்கிறது. கருக்கலைப்பு மாத்திரைகளில் பயன்படுத்தப்படும் சில குறிப்பிட்ட மருந்துகளுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து, இவற்றுக்கான இருப்பு – பயன்பாட்டுக்கான பதிவுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 

கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கும் மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் இதற்கான நடைமுறைகளைக் கடுமையாக்கியிருக்கின்றனர். ஆனால், இதனால் அவசர கால கருத்தடை மாத்திரைகள் கிடைப்பதில் பிரச்சினைகள் ஏற்படும். 2024 செப். 1 முதல் இந்த விதிகள் கடுமையாகப் பின்பற்றப்படும்போது பெருமளவில் பாதிப்புகள் ஏற்படும் நிலை உருவாகும்.

இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து மருந்தகங்களிலும் கருத்தடை மாத்திரைகளை இருப்பு வைக்க முடியாத நிலையேற்படும். உறவுக்குப் பின் காலையில் எடுத்துக்கொள்ளக் கூடிய மாத்திரைகள் கிடைக்காத நிலையேற்படும்.  தேவையானபோது உடனுக்குடன் பயன்படுத்தக் கூடிய வகையில் கருத்தடை மாத்திரைகள் கிடைக்க வேண்டும், இதற்காக, மருத்துவரைச் சந்தித்து பரிந்துரைச் சீட்டுகளைப் பெறுவதென்பதெல்லாம் சிக்கலான நடைமுறையாக மாறிவிடும் என அஞ்சப்படுகிறது.

உறவுக்குப் பின் காலையில் எடுத்துக்கொள்ளக் கூடிய மாத்திரைகளுக்குப் புதிய உத்தரவில் விலக்கு அளிக்கப்படுமா? என்பது பற்றி நல்வாழ்வுத் துறை அமைச்சகம் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த மாத்திரைகளைப் பொருத்தவரை பிரச்சினையில்லை என்று அலுவலர்கள் கூறியிருந்தாலும், ஏற்கெனவே சில மருந்தகங்கள் பரிந்துரைக் கடிதங்கள் இருந்தால் மட்டுமே இந்த மாத்திரைகள் விற்கப்படும் என்று தெரிவிக்கத் தொடங்கிவிட்டன.

கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிட, 2023 ஆகஸ்ட் மாதத்தில், அவசரகால கருத்தடை மாத்திரைகளின் விற்பனை 71 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. புதிய கட்டுப்பாடுகளால் கருத்தடை மாத்திரைகளின் விலைகளும் உயரும் ஆபத்து இருக்கிறது. குறிப்பிட்ட காலத்துக்குத் தட்டுப்பாடும்கூட நேரிடலாம்.

ரஷிய ஆர்த்தோடாக்ஸ் தேவாலயத்தில் கருக்கலைப்பு எதிர்ப்பு பிரார்த்தனையில் ஏற்றப்படும் மெழுகுதிரிகள் (கோப்பிலிருந்து)
ரஷிய ஆர்த்தோடாக்ஸ் தேவாலயத்தில் கருக்கலைப்பு எதிர்ப்பு பிரார்த்தனையில் ஏற்றப்படும் மெழுகுதிரிகள் (கோப்பிலிருந்து)

தனியார் மருத்துவமனைகளுக்குத் தடை

விரைவில் நாடு தழுவிய அளவில் தனியார் மருத்துவமனைகளில் கருக்கலைப்புக்குத் தடை விதித்து சட்டம் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 20 சதவிகித கருக்கலைப்புகள் தனியார் மருத்துவமனைகளில்தான் நடைபெறுகின்றன. இத்தகைய தடையொன்றை ஏற்படுத்த இதற்குமுன் கன்சர்வேடிவ் பிரதிநிதிகளால் இயலவில்லை என்றாலும் தற்போது இதுபற்றிப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக நலவாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அந்தந்தப் பிராந்திய அரசு நிர்வாகங்கள், தனியார் மருந்தகங்களை அணுகி கருக்கலைப்புகளை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் பெற்றுவருகின்றன. 

குழந்தை பெற்றுக்கொள்ள அறிவுரை

மேலும், கருக்கலைப்புக்கு எதிரான முன்னோடி திட்டமொன்றையும் 7 பிராந்தியங்களில் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது – திட்டத்தின்படி கருக்கலைப்பு யோசனையை மறுபரிசீலனை செய்யுமாறு மகப்பேறு மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை கூறுவார்கள்.

‘குழந்தைப் பேறு என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் இயற்கை அளித்துள்ள அழகிய வரம்’, ‘கருக்கலைப்பு என்பது உங்கள் உடல்நலனைக் கெடுக்கும், சிக்கல்களை ஏற்படுத்தும் ஆபத்தும் இருக்கிறது’ என்பது போன்று அறிவுரைக்குமாறு உள்ளூர் மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதனிடையே, ரஷியாவின் கட்டுப்பாட்டிலுள்ள கிரீமியா பகுதியில் தனியார் மருத்துவமனைகள் தாங்களாகவே முன்வந்து கருக்கலைப்புகளை நிறுத்திக்கொண்டுவிட்டதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பெண்கள் விடுதலை பெற்றுவரும் நிலையில் - உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுவரும் நிலையில் - தங்கள் உடல், தங்கள் உரிமை என்பதையெல்லாம் மறுத்துப் பெண்களைப் பின்னோக்கி இழுத்துக்கொண்டிருக்கிறது உலகத்தில் ஒருகாலத்தில் பெரும் புரட்சியை நிகழ்த்திக் காட்டிய ரஷியா! அடுத்தடுத்து என்னென்ன நடக்குமோ என்ற அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் ரஷிய பெண்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com