மாடுகளுடன் வாழ்வது எப்படி? (குடும்பக் கதை அல்ல!)

மாநகர்களில் மாடுகளுடன் இணைந்து வாழ்வது பற்றி...
டின்னர் @ மார்க்கெட்
டின்னர் @ மார்க்கெட்
Published on
Updated on
3 min read

தீபாவளி சிறப்புக் கட்டுரை என்றால் தீபாவளியைப் பற்றியேதான் இருக்க வேண்டுமா? தீபாவளியைப் பற்றி இன்னமும்கூட எழுதாத புதிய விஷயம் என்று ஏதாவது இருக்குமா, என்ன? அரைத்ததையே அரைத்து மட்டும் ஆகப் போவதென்ன? சரி, புதிதாகத்தான் இருக்கட்டுமே...

மாடுகளுடன் வாழ்வது எப்படி?

மிகவும் கஷ்டந்தான்.

ஆனால், சிங்காரச் சென்னை போன்ற இடங்களில் வேறு வழியே இல்லை,  ஒவ்வொருவரும் மாடுகளுடன் வாழ்ந்துதான் ஆக வேண்டியிருக்கிறது.

ஆனால், எப்படியோ, இப்போது காலம் மாறிப் போய், மனிதர்களுடன் வாழ்வது ரொம்ப கடினமான விஷயமாகிவிட்டது போல, மாடுகளுக்கும்.

மாநகரில் எங்கே பார்த்தாலும் மனிதர்களை மாடுகள் முட்டித் தள்ளுகின்றன.

அரும்பாக்கத்தில் ஸ்கூலுக்குப் போன ஒரு குழந்தை மாடு முட்டி படுகாயம். சோசியல் மீடியாவில் விடியோ வைரல்.

தாம்பரத்தில் 2 வீலரின் போன ஒரு குடும்பமே மாடு முட்டி படுகாயமடைந்தது, குடும்பத்தில் ஒரு குழந்தை இறந்தும்விட்டது.

திருவல்லிக்கேணியில் ஒரு முதியவர் மாடு முட்டியதில் காயமுற்று இறந்துவிட்டார்.

அம்பத்தூர் சோழம்பேட்டில் சாலையில் சண்டையிட்டுக்கொண்ட மாடுகள் முட்டி டூ வீலரில் சென்றவர் கீழே விழுந்து எக்கச்சக்க காயம், ஆஸ்பத்திரிக்கு ஆயிரக்கணக்கில் அழுதுவிட்டு வந்திருக்கிறார்.

அது எப்படி இந்த மாடுகளுக்கு எல்லாம் தெரிகிறது? இப்படி ஸாப்ட் டார்கெட்களாக – எளிதான இலக்குகளாகப் பார்த்துப் பார்த்துத் தாக்குதல் நடத்துகின்றன?

சரி, நம்முடைய அரசு, மாநகராட்சி எல்லாம் என்ன செய்கிறார்கள்?

எச்சரிக்கை, எச்சரிக்கை, எச்சரிக்கை...

மாட்டைப் பிடித்துக் கட்டி வைத்துவிடுவோம்...

அபராதம் போடுவோம்...

மாட்டு உரிமையாளர் மேலே கடும் நடவடிக்கை எடுப்போம்...

அப்புறம், காவல்துறையுடன் இணைந்தும் நடவடிக்கை எடுப்போம்.

பாருங்கள்,

இந்த எச்சரிக்கை எல்லாம் நம்முடைய மாடுகளுக்குக் கொஞ்சம்கூட புரிவதேயில்லை. அதது எப்போதும்போல தங்கள் வசதிக்கேற்ப அலைந்துகொண்டுதானிருக்கின்றன.

மீர்சாகிப் மார்க்கெட், அயனாவரம் மார்க்கெட், அட, வேண்டாம், சென்னையில் எந்த ஒரு மார்க்கெட்டுக்கு வேண்டுமானாலும் சென்று பாருங்களேன்.

ஒரு பக்கம் மக்கள் பர்ச்சேஸ், இன்னொரு பக்கம் வியாபாரம், இவர்களுக்கு நடுவுல மாடுகளும் மேய்ந்துகொண்டிருக்கும். நாம்தான் எச்சரிக்கையாகக் கடந்து போய்வந்து கொண்டிருக்க வேண்டும்.

அப்புறம் இந்த மாடுகள் எல்லாம் பெரும்பாலும் டின்னருக்கும்  மார்க்கெட்களுக்கு வந்துவிடுகின்றன. எப்போது இரவு 10 மணியாகும் என்று காத்திருக்கும்போல. அத்தனையும் ஒவ்வொன்றாகப் புறப்பட்டுவந்து கடைக்காரர்கள் கழித்துப் போட்டவற்றை எல்லாமும் மேயத் தொடங்கிவிடுகின்றன. இவையெல்லாம் எப்போது வீட்டுக்குத் திரும்பும்? டின்னர் முடித்து தானாகத் திரும்பிவிடுமா? சொந்தக்காரர்கள் வந்து அழைத்துச் செல்வார்களா?

ஆமாம், அப்ப நம்ம விடுத்த எச்சரிக்கை எல்லாம்? அது அதுபாட்டுக்கு, இது இது பாட்டுக்கு.

அது எப்படி, மாடுகள் என்றால் எல்லா இடத்திலேயும் வைக்கோல் தின்னும், புல்லைத் தின்னும், தவிடு தின்னும், புண்ணாக்குத் தண்ணீர், கழுநீர்த் தண்ணீர் குடிக்கும், சென்னையில் மட்டும் போஸ்டர், பேப்பர், குப்பை கூளம், மார்க்கெட் கழிவுகள், ஹோட்டல்களிலிருந்து கொட்டப்படும் மிச்சம் மீதிகள்... இப்படி, எல்லாவற்றையும்  சாப்பிட்டுவிட்டு பாலும் கொடுக்கிறது? எல்லாமே அதிசயமாகத்தான் இருக்கிறது.

பிறகு பாருங்கள்.

இது ஏதோ சென்னை மாநகரத்துக்கு மட்டுமுள்ள பிரச்சினை இல்லை, எல்லா பெரிய நகரங்களிலேயும் இருப்பதுதான் என்கிறார்கள். ஆனால், அட்ராசிட்டி அங்கெல்லாம் சென்னை ரேஞ்ச்சில் இல்லை, அவ்வளவுதான்.

சென்னையில் இவ்வளவு பேர் காயம்பட்டிருக்கிறார்கள், சில பேர் இறந்தும்போய்விட்டார்கள். சிங்காரச் சென்னை மேயரும் கமிஷனரும் மாறி மாறி எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள், ஆனால் பாருங்கள், ரோட்டில் மாடுகள் அலைவது மட்டும் குறையவே இல்ல. சர்ப்ரைஸாக சென்று பார்த்தால், மாநகரில் ‘ஃபோர் வே’யில்கூட மாடுகளும் போய்க்கொண்டிருக்கும் கண்கொள்ளா காட்சியைப்  பார்க்கலாம்... ஆனால், அதற்கு நமக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மாடு முட்டாமல் தப்பித்துவர அதற்கும் மேல் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

கார்ப்பரேஷன் என்னதான் செய்கிறது? இதுவரை 4 ஆயிரம் மாடுகளைப் பிடித்திருக்கிறது. பிடித்து... பிடித்து... அபராதம் வசூலித்துவிட்டு மறுபடியும் அவர்களிடமே ஒப்படைத்து விடுவார்கள். அப்படித்தான் மாடுகளை வீதியில் அலைய விட்டதற்காக 3 ஆயிரம் மனிதர்களைப் பிடித்திருக்கிறார்கள். பிறகு... பிறகு என்ன... அபராதம்தான்!

சரி, விடுங்க. அரசாங்கமும் அதிகாரிகளும் ஏதாவது செய்யட்டும். நாம் நம் முயற்சியில் என்னதான் செய்யலாம்?

நம் முன்னே இரண்டு, மூன்று ஆப்ஷன்கள் இருக்கின்றன.

ஒன்று,

வெளியே போகும்போது கையுடன் செல்போன்களை முழு அளவுக்கு சார்ஜ் ஏற்றி எடுத்துக்கொண்டு செல்வது.

எங்கேயாவது, யாரையாவது மாடு முட்டினா, உடனே விடியோ எடுக்க வேண்டியது. அது நமக்கு எப்போதும் ஈசிதானே. இப்போதெல்லாம் யாராவது அடிபட்டுக் கிடந்தாலும் சரி, சண்டை போட்டுக் கொண்டாலும் சரி, யாரும் காப்பாற்றுவதும் இல்ல, விலக்கிவிடுவதும் இல்லைதானே, எல்லாரும் விடியோதானே எடுப்பார்கள். அதே மாதிரி மாடு முட்டுவதையும் விடியோ எடுத்து சோசியல் மீடியாவில் எல்லாம் அப்லோட் செய்தால், லைக்ஸ் அள்ளிக்கொட்டும். ஒருவேளை நம்ம ஆபீஸர்ஸ் பார்த்தா, மறுபடியும் ஒரு முறை எச்சரிக்கவும் வசதியா இருக்கும். முடிந்தால் யாரையாவது பிடித்து அபராதம்கூட விதிக்கலாம்.

ஆப்ஷன் எண் 2

இது கொஞ்சம் சீரியஸானது.

இந்த பள்ளிக்கூடங்களில் பெற்றோர் – ஆசிரியர் சங்கங்கள் மாதிரி எல்லா ஏரியாவிலேயும் மனிதர்கள் – மாடுகள் நல்லுறவு சங்கங்களை ஏற்படுத்த முயற்சி செய்யலாம். எப்படியாவது மாடுகளுக்குப் புரிய வைத்துவிட்டோம் என்றால் நம்முடைய பிரச்சினை தீர்ந்துவிடும் அல்லவா? சாட்சிக்காரன் காலில் போய் விழுவதற்குப் பதிலாக சண்டைக்காரனிடமே சரணடைந்து விடுவது...

மூன்றாவது இன்னொரு ஆப்ஷன், ரொம்பவும் கடினமானது.

இதை இரண்டாவது ஆப்ஷனில் இருக்கிற ‘எப்படியாவது’ என்பது பற்றிய - எக்ஸ்டென்டட் கட் - விளக்கமாகக் கூட வைத்துக்கொள்ளலாம்.

மனிதர்கள் மாதிரியே மற்ற விலங்கினங்களும் தங்களுக்குள் உரையாடிக் கொள்கின்றன, தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. அவற்றுக்கு ஏதோவொரு மொழி இருக்கிறதுபோல என்கிறார்களே. நம்புகிறார்போல இருக்கிறதா, தெரியவில்லை (ஆமாம், பல நேரங்களில், நடுச் சாலைகளில்கூட இரண்டு மூன்று மாடுகள் சேர்ந்தாற்போல படுத்துக்கொண்டு அசைபோட்டபடி சீரியசாக ஏதோ பேசிக்கொண்டிருக்கின்றன). இருந்தாலும் நம்பிக்கையாக, அப்படியொரு மொழி இருக்கிறதா என்று தீவிரமாக ஆராய்ச்சி நடத்தி, மாடுகளின் மொழியை இயன்றளவுக்கு உள்ளூர் அதிகாரிகளுக்கு மட்டுமாவது கற்றுக் கொடுப்பது. பிறகு மாடுகளுடன் பேசி முடிவுக்கு வந்துவிடலாம்.

என்ன இது, காமெடியாக இருக்கிறது என்று தோன்றலாம், காமெடி இல்லை, எல்லாம் வயிற்றெரிச்சல். சீரியஸாகவே வயிற்றெரிச்சல்தான். வேலைக்குப் போகும்போதும் வரும்போதும், பேருந்தை விட்டு இறங்கினால், மாடு எதுவும் முட்டி விடாமல் வீடு போய்ச் சேர முடியுமா என்பதுதான் சென்னை சிட்டிசன் ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஒரு கவலையாக இருக்கிறது! அது தீபாவளி என்றாலும் சரி, பொங்கல் என்றாலும் சரி. 

தீபாவளி ஸ்பெஷல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.