ஆபரேசன் இரும்பு வாள்கள்! காஸா - இஸ்ரேல் போர்க்கள சிக்கலின் பின்னணி என்ன?

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ஆரம்பித்திருக்கும் போர் நடவடிக்கையின் பெயர் 'ஆபரேசன் இரும்பு வாள்கள்'. 
காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

ஆபரேசன் இரும்பு வாள்கள் (ஆபரேசன் ஸ்வார்ட்ஸ் ஆப் அயர்ன்) -  பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ஆரம்பித்திருக்கும் போர் நடவடிக்கையின் பெயர் இது.

காஸா பகுதி என்பது 45 கிலோ மீட்டர் நீளமும், 5 முதல் 12 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட ஒரு குறுகிய கடலோர நிலப்பரப்பு என்பது நமக்கு ஏற்கெனவே தெரிந்த சங்கதிதான்.  

2 லட்சம் பாலஸ்தீனர்கள் நெருக்கியடித்து வாழும் 363 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பகுதி இது. ஹாங்காங் நகரத்தைவிட மக்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதி காஸாதான்.

ஈழத்தில் தமிழர் பகுதிகளைச் சுருட்ட சிங்களத்தில் அந்த இடங்களுக்குத் தனியாக ஒரு பெயர் வைத்திருப்பார்கள் இல்லையா? அதேப்போலே காஸா பகுதி என்பது பாலஸ்தீனர்களுக்குத்தான் காஸா. இஸ்ரேல் நாட்டின் எபிரேய மொழியில் காஸாவுக்குப் பெயர் ரிசுவாத் அசா. 

காஸா பகுதியில் அதன் தலைநகரமாக இருக்கும் நகரத்தின் பெயரும் காஸாதான். இதுபோக காஸாவில் 8 அகதிகள் முகாம்களும் உள்ளன. ஒட்டுமொத்த காஸாவும்கூட ஒருவகையில் ஒரு பெரிய அகதிகள் முகாம்தான். 

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான இந்த சண்டை முதல் சண்டை அல்ல. ஏற்கெனவே மூன்று முறை மோதல் நடந்திருக்கிறது.

2008 ஆம் ஆண்டு, காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிய நகரங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்தனர். பதிலுக்கு, ஆபரேசன் கேஸ்ட்லீட் என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுத்தது. அல்-`ஃபுர்கான் சண்டை என பாலஸ்தீனர்களால் அழைக்கப்பட்ட இந்த சண்டை 3 வார காலம் நீடித்தது. 

2012-ல் அடுத்த மோதல். இந்தமுறை ‘பில்லர் ஆப் டிபன்ஸ்’ என்ற ராணுவ நடவடிக்கையை ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் கைக்கொண்டது. 8 நாள்கள் நடந்த இந்த சண்டையில் ஹமாஸ் ராக்கெட்களுக்கு எதிராக, ‘ஐயர்ன் டோம்‘ (இரும்பு குவிமாடம்) என்ற தடுப்புவித்தையை இஸ்ரேல் இந்த சண்டையில்தான் முதன்முறையாகக் கையாண்டது. 

ஹமாஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அகமத் ஜபாரி, இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் பலியானதுகூட இந்த சண்டையில்தான். 

2014-ல் ஹமாசுடன் மீண்டும் ஒரு சடுகுடு. இந்தமுறை ‘ஆபரேசன் ‘புரொடெக்டிவ் எட்ஜ்’ என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்தது. 1967 ஆம் ஆண்டு நடந்த ஆறுநாள் போருக்குப் பிறகு இஸ்ரேல் எடுத்த மிகப்பெரிய ராணுவ நடவடிக்கைகளில் ஒன்று இது. 

இந்த மூன்று மோதல்களிலும் மொத்தம் 4 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். சண்டையில் பலியான யூதர்களின் எண்ணிக்கை நூறுக்கும் குறைவு.

ஆனால், அக்டோபர் 7 ஆம் தேதியன்று ஆரம்பித்து 5 வாரங்களாகத் தொடரும் புதிய சண்டையில், இதுவரை 8,718 உயிரிழப்புகள். 3,320 குழந்தைகள் உள்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை காயம். இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும், இடையிலான சண்டையில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தி வரும் சண்டை இதுதான்.

அக்டோபர் 7 ஆம் தேதியன்று ஹமாஸ் தந்த அடி மிக  பலமான அடி. 75 ஆண்டு கால வரலாற்றில் இந்த மாதிரி அடியை இஸ்ரேல் இதுவரை சந்தித்ததே இல்லை என்பதுதான் உண்மை. (என்னா அடி!)

இந்த அக்டோபர் 7 தாக்குதலை அடுத்து 3 லட்சத்து 60 ஆயிரம் ராணுவத்தினருடன் காஸாவை முற்றுகையிட்டிருக்கிறது இஸ்ரேல் ராணுவம். ஆனால் கிட்டத்தட்ட 17 ஆண்டுகாலமாக இஸ்ரேலின் முற்றுகைக்குள்தான் இருக்கிறது காஸா. இருந்தும் ஹமாஸ் அமைப்பினரின் ஏவுகணைகளை, ஏவப்படுவதற்கு முன்னாலேயே இஸ்ரேல் ராணுவத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 

இஸ்ரேல் ராணுவத்திடம் இருப்பதுபோல மெர்கேவா டாங்கி, கிஃபிர் விமானம் எதுவும் ஹமாஸ் அமைப்பினரிடம் இல்லை. ஏழைக்கேற்ற எள்ளுருண்டை மாதிரி, ஹமாஸ் அமைப்பினர் நம்பியிருப்பது ஏவுகணைகளைத்தான். 

ஹமாஸ் அமைப்பின் ராக்கெட்களால் இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ், பென்குரியன் விமானநிலையம், ஹைபா துறைமுகம், ஜெருசலேம், அஸ்கெலான் உள்பட இஸ்ரேலின் எந்த ஒரு பகுதியையும் தாக்க முடியும். அதுபோல லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணைகளாலும் இஸ்ரேலின் எந்தப் பகுதியையும் தொட முடியும்.

இஸ்ரேலின் உயிர்நாடியாக இருப்பவை 9 மின்னுற்பத்தி நிலையங்கள், 9 விமானப்படை தளங்கள். இந்த விமானப்படை தளங்கள் தகர்க்கப்பட்டால் வானத்தில் தன் கட்டுப்பாட்டை இஸ்ரேல் இழந்துபோகும். இஸ்ரேலின் நாடி தளர்ந்து கதை கிட்டத்தட்ட முடிந்து போகும். இந்தநிலையில் ஹமாஸ், ஹிஸ்புல்லாவின் முதன்மை குறிகள், இஸ்ரேலின் விமானப்படைத் தளங்கள்தான். 

இஸ்ரேல் நாடு முன்புபோல இல்லை. அக்டோபர் 7-ல் ஹமாஸ் தாக்குதல் நடத்தும் என்பது இஸ்ரேலின் மொசாத் உளவுப்படைக்குத் தெரியவில்லை. 

காஸா பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கில் சீறி வந்த ஹமாஸ் ராக்கெட்களை தடுத்து ஆடி, முனைமுறிக்கும் முயற்சியில் இஸ்ரேலின் அயர்ன் டோம் ஏவுகணைத் தடுப்புத் திட்டம் முதன்முறை தோல்வி கண்டிருக்கிறது.

இஸ்ரேல் ராணுவமும் இப்போது பழைய பளபளப்பில் இல்லை. போர் தொடங்கி விட்டால் ஒரேநாளில் பல நூறுமைல் தொலைவுகளைக் கடக்கக்கூடிய திறமை இஸ்ரேல் ராணுவத்திடம் முன்பு இருந்தது. இப்போது இல்லை. 

2002 ஆம் ஆண்டுக்குப்பின், லெபனான் நாட்டுக்குள் 2 முதல் 4 கிலோ மீட்டர் முன்னேறுவதற்குள்ளேயே இஸ்ரேல் ராணுவம் மூச்சுத்திணறிப் போய்விடுகிறது. 

2006 வரைக்கும் இஸ்ரேல் ராணுவம் எதிரிகளை துடைத்து அழித்து எந்தப் போரையும் உடனே முடிவுக்குக் கொண்டுவந்து விடும். இப்போது அப்படி இல்லை. 2018க்குப் பிறகு முழு அளவிலான ஒரு பெரிய போருக்கு இஸ்ரேல் தயாராக இல்லை. 

கூண்டில் இருந்து புலியை வெளியே வரவிடாமல் தடுப்பதுபோல, காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் வெளியே வராமல் தடுக்கும் பொறுப்பில் இருந்த இஸ்ரேலிய ராணுவப்பிரிவு ஒன்று அக்டோபர் 7-ல் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. 

இஸ்ரேல் ராணுவம் பழைய மாதிரி இல்லை என்பதைத் தெரிந்துதான் ஹமாஸ் அமைப்பினரும் அதன்மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். சீண்டி விளையாடி இருக்கிறார்கள்.

போரில் பொதுவாக எதிரிக்கும் நமக்கும் இடைவெளி வேண்டும். அமெரிக்கா விமானந்தாங்கிக் கப்பலில் கடல்கடந்து போய் எதிரிநாடுகளுடன் சண்டையிடும். போர்க்களத்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கும்.

இஸ்ரேலின் கதை அப்படியில்லை. மடியில் உட்கார்ந்திருக்கும் எதிரியுடன் மல்லுக் கட்டுவது போன்ற கதை இஸ்ரேலின் கதை. மடியில் இருக்கும் கைக்கு எட்டும் தொலைவில் இருக்கும் எதிரியை ஈசியாக ஊமைக்குத்து குத்தலாமே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் எதிரிக்கு நாமும் கைக்கெட்டும் தொலைவில்தான் இருப்போம். எதிரி நமது தாடையைத் தகர்க்கவும் சமவாய்ப்பு இருக்கிறது.

காஸாவைப் பொறுத்தவரை இஸ்ரேல் ராணுவம் இதுவரை அங்கே மட்டுப்படுத்தப்பட்ட போர் நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டிருக்கிறது. வீட்டின்மீது தாக்குதல் நடத்துவதற்குப் பதிலாக, வீட்டு முற்றத்தில் புல் வெட்டுவது போன்ற நடவடிக்கைகளையே இஸ்ரேல் இதுவரை கையாண்டிருக்கிறது.

ஆனால், இந்தமுறை 3 லட்சத்து 60 ஆயிரம் ராணுவத்தினருடன் காஸாவுக்குள் இறங்கி தரைப்படை தாக்குதலை நடத்த இஸ்ரேல் தயாராக உள்ளதாக சொல்கிறது. 

காஸா பகுதி கட்டடத் தொகுதிகள் அதிகம் கொண்ட பகுதி. அங்கே நிலத்துக்கு அடியில் காஸாவுக்கு இணையாக மற்றொரு காஸா இருப்பதாகக் கருதப்படுகிறது. அந்த அளவுக்கு தரைக்கு அடியில் குகைகளும், சுரங்கப் பாதைகளும் அங்கே அதிகம்.

வியட்நாம் போரின்போது அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக வியட்நாமிய போராளிகள் நிலத்தடி சுரங்க வழிகளைப் பயன்படுத்தினர். ஆனால், காஸாவில் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்க வழிகளுடன் ஒப்பிட்டால், வியட்நாமிய சுரங்க வழிகள் எல்லாம் சிறுபிள்ளை விளையாட்டுபோலத் தோன்றுமாம்.

இந்த பாதாள உலகத்துக்குள்தான் ஹமாஸ் படையின் மொத்த பலமும் பதுங்கியிருக்கிறது. இஸ்ரேல் ராணுவம் காஸாவுக்குள் கால்வைத்தால் அதை எதிர்கொள்ள ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவான எசெடினா-அல்-காசம் பிரிகேட் தயராக உள்ளது. டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகள், சூழ்ச்சிப் பொறிகள் என ஹமாஸ் பக்காவாக தயார்.

இஸ்ரேல் ராணுவத்தின் மெர்கேவா டாங்கி, கிஃபிர் விமானம் எல்லாம் நிலத்தடி சண்டைகளுக்குப் பயன்படாது. அதேப்போல கட்டடங்கள் நிறைந்த ஒரு நகர்ப்பகுதிக்குள் சண்டையிடுவது தனிக்கலை. அது எல்லா ராணுவத்துக்கும் கைவராது.

ஒரு திறந்தவெளியில் இரு நாட்டு ராணுவங்கள் மோதினால் வெற்றி யாருக்கு தோல்வி யாருக்கு என்பது தெரிந்துவிடும். எதிரி விட்டுச் சென்ற ஆயுதங்கள், சிதைந்த டாங்கிகள், சுட்டுவீழ்த்தப்பட்ட விமானங்கள் தோல்வி யாருக்கு என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடும்.

ஆனால், ஹமாஸ் போன்ற போராளி இயக்கங்களுடன் மோதும்போது இந்த கதை செல்லாது. வெற்றி யாருக்கு தோல்வி யாருக்கு என்பதை கணிப்பது கடினம். 

காஸா சண்டையைப் பொறுத்தவரை தெளிவான போர்த் திட்டங்கள் எதுவும் இஸ்ரேலிடம் இப்போதைக்கு இருப்பதாகத் தெரியவில்லை. 

காஸாவுக்குள் புகுந்து அதன் உள்கட்டமைப்பை உடைத்தெறிவது, முடிந்த அளவுக்கு ஹமாஸ் தீவிரவாதிகளைக் கொல்வது, கைது செய்வது, ஹமாஸ் ஏவுகணைத் தயாரிப்புக் கூடங்களை தகர்ப்பது, சுரங்கப் பாதைகளை நொறுக்குவது, பாலஸ்தீன மக்களை எகிப்து நாட்டின் எல்லையோரம் தள்ளுவது. இவைதான் ஒருவேளை இஸ்ரேல் வகுத்திருக்கும் திட்டமாக இருக்கக் கூடும்.  

காஸா ஒருவேளை இஸ்ரேலின் கைப்பிடிக்குள் வந்தால்கூட அதை என்ன செய்வது? அங்கேயே ராணுவத்தை நிறுத்துவதா, இல்லை வெற்றி என்று அறிவித்து விட்டு ஓடிவந்துவிடுவதா? போருக்குப்பிறகு காஸாவை எப்படி ஆள்வது? போருக்குப் பிந்தைய நிலை என்ன? இதைப்பற்றியெல்லாம் கூட இஸ்ரேலிடம் எந்த முடிவும் இருப்பதாகத் தெரியவில்லை. 

ஒரு போருக்குள் எப்போதும் நழைவது எளிது. அந்த போரை விட்டு விட்டு விலகி வருவது கடினம். போருக்குள் நுழையும் எந்த ஒரு ராணுவத்துக்கும் ஒரு சிக்கல் உண்டு. புலி வாலை பிடித்த நாயர் கதையாக, போரை விட்டுவிட முடியாமல் அதனுடன் சிக்கி, மல்லுக்கட்டும் சிக்கல் பல நாட்டு ராணுவங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. 

வியத்நாமில் அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானில் ரஷியாவும், ஈழத்தில் இந்திய ராணுவமும் இந்த சிக்கலில் சிக்கித் தவித்திருக்கின்றன.  

இஸ்ரேல் இப்போது பெரிய போர்களுக்குத் தயாராக இல்லை.  நீண்ட காலம் போர் நடத்தும் நிலையிலும் அது இல்லை. இந்தநிலையில் இஸ்ரேலுடன் நீண்டகாலம் போர் நடத்துவதையே ஹமாஸ் அமைப்பு விரும்புகிறது.

போர் நீள வேண்டும், இஸ்ரேல் அரசிடமும், மக்களிடமும் குழப்பம் ஏற்பட வேண்டும் என ஹமாஸ் நினைக்கிறது. போர் விரிவடைந்து, தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் போன்ற நாடுகள் களத்தில் இறங்கினாலும் ஹமாசுக்கு அது வெற்றிதான். 

தற்போதுள்ள சூழலில், காஸா மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா விரும்பவில்லை. இதனால் பெட்ரோலிய சந்தை பாதிக்கப்படும் என அமெரிக்கா கருதுகிறது. 

ரஷியாவைப் பொறுத்தவரை உக்ரைன் போரில் இருந்து உலகத்தின் கவனத்தைத் திருப்ப காஸா உதவும் என்பதால் ரஷியா இந்தப் போரை விரும்புகிறது.

சீனாவுக்கு மத்திய கிழக்கின் பெட்ரோலிய எண்ணெய் தங்கு தடையின்றி தனக்கு வர வேண்டும் என்பதுதான் கவலை. அதற்கு காஸா போர் உதவும் என்று சீனா கருதுகிறது. பாலஸ்தீனர்களை ஆதரிக்கிறது. 

ஹமாஸ், இஸ்ரேல் இடையிலான போர் இனி எந்தவித சூழலைக் கொண்டுவருமோ தெரியவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com