மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை விதைக்கும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை!

நம்பிக்கையினை மாணவர் மனதில் விதைத்து விட்டால் அதுவே மரமாக, உரமாக, வாழ்வின் வரமாக அமைந்துவிடும் என்கிறார் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் ந.கு.தனபாக்கியம்.
உற்சாகத் துள்ளல் விளையாட்டில் மாணவிகள்
உற்சாகத் துள்ளல் விளையாட்டில் மாணவிகள்
Published on
Updated on
3 min read


மகத்தான காரியங்களுக்கு மகத்தான நம்பிக்கைகளே பிறப்பிடம். அந்த நம்பிக்கையினை மாணவர் மனதில் விதைத்து விட்டால் அதுவே மரமாக, உரமாக, வாழ்வின் வரமாக அமைந்துவிடும் என்பதை முழுமையாக நம்புவேன் என்கிறார் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் ந.கு.தனபாக்கியம்.

பாடப்புத்தகங்களை புரிந்துகொள்ளுதல், பாடத்திட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளித்தல், சிறந்த மதிப்பெண் பெறல் இச்செயல்பாடு மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை நிச்சயம் ஊட்டும். ஆனால் வாழ்நாள்வரை அவர்கள் தன்னம்பிக்கையோடு வலம் வர இந்த மதிப்பெண் மட்டும் போதாது.

அவர்கள் வாழ்வின் நீளம் வரை அவர்கள் தன்னம்பிக்கையோடு திகழ இங்கு முழுமை நலக்கல்வியே பள்ளியில் முக்கியம். அந்த முழுமை நலக்கல்விதான் மனிதனுக்குள் புதைந்திருக்கும் பரிபூரண தன்மையை வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை என்ற விதையை விதைத்து வருகிறார் ஈரோடு மாவட்டம், திருவாச்சி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ந.கு.தனபாக்கியம். 

இதுகுறித்து அவர் கூறியதாவது: ஒரே செடியில் பூக்கும் இரண்டு ரோஜாவைக்கூட நாம் ஒப்பிடக்கூடாது என்பதில் கவனம் வேண்டும்.  ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள் ஒவ்வொரு குழந்தையையும் கூர்ந்து, பொறுமையாய் கவனித்து வழிநடத்தும்போது மாணவர்களின் பரிபூரணத்தன்மை அழகாய் வெளிப்படுகிறது.

அந்த பரிபூரண நிலையில் அவர்கள் தன்னையே மறப்பர். தன்னுள் மலர்வர்.
அதுவே சிறந்த கற்றல் செயல்பாடு. பள்ளியில் இந்த செயல்பாடுகளை கட்டமைத்துவிட்டால் பள்ளிச்சூழல், பாடப்புத்தகம் இவை சுமையாக இல்லாமல் சுகமாக அவர்களுக்கு மாறிப்போகும். 

ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொன்றில் ஆர்வம் இருக்கும். அந்த ஆர்வத்தை மெருகேற்றும் களமாக பள்ளியை மாற்றும்போது நம்மால் முடியுமா என்று கலங்கி நிற்பவரும்கூட நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையை பெறுகின்றனர்.

   பள்ளி மாடித்தோட்டத்தில் விளைந்துள்ள பீர்க்கங்காய்  
   பள்ளி மாடித்தோட்டத்தில் விளைந்துள்ள பீர்க்கங்காய்  

உதாரணத்திற்கு மாடித்தோட்ட கட்டமைப்பு. காய்கறி விதை, நாத்து சேகரித்தல், ரசாயன கலப்பில்லாத மண்ணை சேகரித்து பள்ளிக்குக் கொண்டு வரல், இயற்கையான குப்பை, ஆட்டாம் புழக்கை, மலை மாடு இட்ட சாணி இவற்றை கொண்டு வந்து மண்ணில் கலந்து, சில நாள் பதப்படுத்தி வைத்தல், பின் விதையூனல், நாத்து நடல், இவற்றை பள்ளி வேளையில் காலை மாலை கண்காணித்து  நீர் பாய்ச்சல், பின் களை பிடுங்குதல், செடி, கொடி படர சணலோ, குச்சியோ நட்டு வைத்தல், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளரும் காய்கறிச் செடிகளை பார்த்துப் பார்த்து பரவசப்படல், நிறைவாய் புதினா, செங்கீரை இவற்றை தட்டு நிறைய வைத்து அவற்றோடு இவர்கள் அகமும் முகமும் மலர்ந்து நிற்கும் தருணம் அவர்களின் வாழ்நாளுக்கானது. 

ஆசிரியை ந.கு.தனபாக்கியம்
ஆசிரியை ந.கு.தனபாக்கியம்

பள்ளியின் சின்ன சின்ன செயல்பாடுகளில் தன்னம்பிக்கை ஒளிந்து கிடைக்கிறது. அதில் பெறும் தன்னம்பிக்கை மகத்தானது. கீரை மட்டுமல்ல, மிளகாய், கத்தரி, தக்காளி, கொத்தமல்லி, வெண்டை இந்தக் காய்கறிகளை அவர்கள் அறுவடை செய்யும்போது நம் வீட்டிற்குத் தேவையான காய்கறிகளை நாமே பயிரிட முடியும் என்ற நன்னம்பிக்கை தற்சார்பு வாழ்வை நோக்கி கொண்டு செல்கிறது.

தன்னுள் மலர்தல் அழகழகான வண்ணத்தாள், செய்தித்தாள், வீட்டில் கிடைக்கும் எளிய அட்டை இவற்றை  வெட்டி, ஒட்டி, மடித்து வண்ணம் தீட்டி தங்கள் கைவிரலால் மாயாஜாலத்தை பள்ளியில் நிகழ்த்துகின்றனர். அவர்களை அறியாமல் அதில் ஒன்றி மலருகின்றனர். மாணவர்களுக்கான திளைப்பை, உயிர்ப்பை இந்த கைவினைப்பொருள் தருகிறது. நிறைவாய் இந்த உயிர்ப்பு வாழ்வதற்கான தன்னம்பிக்கையை கொடுக்கிறது.

இலக்கிய செயல்பாடு:

பேச்சு, கட்டுரை, ஒப்புவித்தல், நடிப்பு, நாட்டுப்புற விளையாட்டு, நடனம், கதை சொல்லல், மாத இதழ் படைப்பு இவற்றில் எது தனக்கு வசப்படுகிறது? எதில் எவ்வித அச்சமும் இல்லாமல் தன்னை பொருத்திக்கொள்ள முடிகிறதோ அதில் தன்னை தொடர்ச்சியாய் வெளிப்படுத்தி நிற்கும் களமாக பள்ளி உருமாறுகிறது.

அப்படி உருமாறும்போது மாணவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாக பள்ளியில் மட்டுமல்லாமல் வீட்டில், சமூகத்தில் மிளிர்ந்து நிற்கிறார்கள். அந்த மிளிர்வின் உயரம்தான் ஒரு ஆசிரியருக்கு ஆகப்பெறும் மனநிறைவு.

காலப்போக்கில் அவர்களே மற்றவர்களுக்கு அள்ளஅள்ளக் குறையாத அட்சய பாத்திரமாய் தன்னம்பிக்கையை மற்றவருக்கு வழங்கும்போது பள்ளியில் கொடுக்கப்பட்ட சிறு சிறு செயல்பாடு பூரணத்துவம் பெறுகிறது இவர்களைப் போலவே என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com