வி.பி. சிங்கும் தமிழ்நாடும்! தந்தை கனவை நிறைவேற்றிய தனையன்!

மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்குத் தமிழகத்தில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் சிலை திறப்பது பற்றி...
வி.பி.சிங் / கருணாநிதி
வி.பி.சிங் / கருணாநிதி

முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் முழு உருவச் சிலையை நாளை நவ. 27 அவருடைய நினைவு நாளில் சென்னையில் மாநிலக் கல்லூரி வளாகத்தில் திறந்துவைக்கிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதிக்கும், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கும் இடையே இருந்த நட்பைப் போற்றும் விதமாகவும் இவ்விழா நடைபெறுகிறது.

தமிழர்களை தனது ரத்த சொந்தங்களாக கருதியவர், பெரியாரைத் தன் தலைவர் என்று சூளுரைத்தவர், காவிரி நதிநீர் ஆணையம், மண்டல் கமிஷன் என மறக்க முடியாத நிகழ்வுகளுக்குரிய மாமனிதர், கருணாநிதியால் மண்டல் கமிஷன் நாயகன் என்று புகழப்பட்டவர் மறைந்த முன்னாள் பிரதமர் விசுவநாத் பிரதாப் சிங்.

அவர், பிரதமராக பதவி வகித்த காலத்தில் கட்சி பேதமின்றி அனைத்து மாநில அரசியல் கட்சிகளாலும் விரும்பப்பட்டவர். பிரதமர் என்ற பதவிக்கு பொருத்தமானவராக விளங்கிய வி.பி. சிங்கிற்குத் தமிழ் சமுதாயத்தின் நன்றியை தெரிவிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முழு உருவச் சிலை திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் இச்சிலை திறப்பு விழா என்பது பொருத்தமான ஒன்று எனக் கருதப்படுகிறது.

1980ல் உத்தரப் பிரதேச மாநில முதல்வர்,  1984ல் மத்தியில் வர்த்தகம், வெளியுறவு, நிதி, பாதுகாப்பு என முக்கிய துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்தவர் வி.பி.சிங். நிதித் துறையில் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வந்த இவரை அப்பதவியில் இருந்து அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி நீக்கி விட்டு பாதுகாப்பு துறையை வழங்கினார். அதிலும் தடம் பதித்த நிலையில் அப்பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிய அவர் ஜனமோர்ச்சா என்ற கட்சியைத் தொடங்கி மாநில கட்சிகளான திமுக, அசாம் கண பரிஷத், தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை இணைத்து தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மை இடங்களைப் பெற்று இந்தியாவின் 8-வது பிரதமராக ஆனார். அவர் பிரதமராக இருந்தது 11 மாதங்கள்தான் என்றபோதிலும், அக்காலகட்டத்தில் அவர் செய்த சாதனைகள் மெச்சத்தக்கவை.

10 வருடங்களுக்கு பிறகு ஜனதா கட்சியின் நீட்சியாக மாறிய ஜனதா தள மத்திய ஆட்சியில் வி.பி.சிங் தலைமையில் 1990ல் மண்டல் கமிஷன் பரிந்துரை உயிர்பெற்றது. தேசிய அளவில் சமூக நீதி தொடர்புடைய கருத்துகளையும், பிரச்னைகளையும் முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்து மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்தார்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பொதுத் துறை அமைப்புகள், மத்திய அரசு சார்ந்த வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட சதவிகித இடங்களை ஒதுக்கீடு செய்ய மண்டல் கமிஷன் பரிந்துரைத்தது.

இந்த மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பு திட்டம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சலுகையாகவும் சாதகமாகவும் இருந்தாலும் உயர் சாதியினருக்கு இந்த இட ஒதுக்கீட்டில் எந்த பலனும் இல்லை என்ற நிலையில் எதிர்ப்பு கிளம்பியது. வட இந்தியாவில் நகர்ப்புறங்களில் போராட்டங்களும் கலவரங்களும் நடைபெற்றன.

மேலும், மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு திட்டத்தை வி. பி. சிங் அமல்படுத்த முற்பட்டால் ஆதரவு விலக்கிக் கொள்ளப்படும் என்று கூட்டணியில் இருந்து ஆதரவு கொடுத்து வந்த அன்றைய பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான அத்வானி எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், இத் திட்டத்தை அமல்படுத்த கூடாது என்று வட இந்தியாவில் பல கலவரங்களும், தீக்குளிப்பு உயிர்ப் பலி போராட்டங்களும் நடந்தேறின. இதனால், வி.பி.சிங் ஆட்சியைப் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்தனர். இது பெரும் சிக்கலை அவருக்கு உருவாக்கியது.

அதோடு மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தியதாலும், அப்போது வட இந்தியாவில் நடந்த ராமர் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தி அத்வானி கைது செய்யப்பட்டதாலும் ஜனதா தளம் ஆட்சிக்கு பாஜக அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டதால் வி.பி.சிங் பிரதமர் பதவியை இழந்து ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்தது.

தொடர்ந்து இட ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் 1992-ம் ஆண்டு நவம்பர் மாதம் மண்டல் கமிஷன் உத்தரவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கிரீமி லேயர் முறையில் தீர்ப்பு வழங்கியபோது, இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது, பல்லாண்டுகளாக ஒன்றிய அரசாங்கம் தொடர்புடைய வேலைகளை சுரண்டி வந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு பெரும் சவுக்கடி என்று கூறிய அவர், தனது முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டார்.

மண்டல் கமிஷன் நாயகன் வி.பி.சிங் என கலைஞரால் அப்போது புகழப்பட்டார். இந்த நிலையில் ரத்த புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு ஆகியவற்றால் 17 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த வி.பி.சிங், கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று தில்லியில் காலமானார்.

சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் அச்சமூகத்துக்கு அரசு பணியிடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தியவர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியைத் தனது சொந்த சகோதரர் போல மதித்த வி.பி. சிங்கின் புகழைப் போற்றும் வகையில் மகன் முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் சிலை திறப்பது பொருத்தமான ஒன்றே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com