தமிழகத்தை அதிர வைத்த ஆம்ஸ்ட்ராங் கொலை!

Year Ender 2024... பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக...!
ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
Published on
Updated on
3 min read

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தையே அதிர வைத்தது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், பெரம்பூர் வேணுகோபால சாமி கோயில் தெருவில் புதிதாக கட்டப்படும் தனது வீட்டின் கட்டுமானப் பணியை கடந்த ஜூலை 5-ஆம் தேதி இரவு பார்வையிட சென்றபோது, வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பம் தொடர்பாக ரௌடி பொன்னை பாலு உள்ளிட்ட 7 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து 3 நாட்டு வெடிகுண்டுகள், 5 பட்டாக் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் கடந்த காலங்களில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகளான மதுரை லீலாவதி, ஆலடி அருணா, தா.கிருட்டிணன், அமைச்சரின் நேருவின் சகோதரர் ராமஜெயம் உள்ளிட்டோருக்கு இணையாக ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பத்து ஆண்டு பகை

கைது செய்யப்பட்ட ரௌடி பொன்னை பாலு, தனது சகோதரர் புளியந்தோப்பைச் சேர்ந்த ரௌடி ஆற்காடு சுரேஷ் கடந்த 2023-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். மேலும் அவர், ஆற்காடு சுரேஷ் பிறந்த நாளன்று திட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங்கை வீழ்த்தியது காவல்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்தது.

ஆற்காடு சுரேஷூக்கும், ஆம்ஸ்ட்ராங்குக்கும் இடையே பல ஆண்டுகளாக முன் விரோதம் இருந்தது. ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டச் செயலருமான தென்னரசு கடந்த 2015ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பெரியபாளையம் அருகே ஆற்காடு சுரேஷ் தரப்பால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இச்சம்பவத்துக்கு பின்னர் இரு தரப்பும் நேரடியாக மோதின. ஒரு கட்டத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் கை ஓங்கியதால், ஆற்காடு சுரேஷ், சென்னையை விட்டு வெளியேறி தனது சொந்த ஊரான பொன்னையில் இருந்தபடி தனது திட்டங்களை நிறைவேற்றினார். இதன் விளைவாக ரௌடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டார். பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பின்னரும் தன்னை மிரட்டியதால்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யும் முடிவுக்கு வந்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக பொன்னை பாலு, பல மாதங்களாக நோட்டமிட்டுள்ளார். இதற்காக அவர், தனது கூட்டாளியான கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் திருமலை என்பவரை ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட வைத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகே வசித்து வந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான திருமலை, பல மாதங்களாக ஆம்ஸ்ட்ராங்கின் தினசரி நடவடிக்கையை நோட்டமிட்டு பொன்னை பாலுவுக்கு தெரிவித்துள்ளார்.

திருமலை கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே சம்பவத்தன்று பொன்னை பாலுவும், அவரது கூட்டாளிகளும் தனியார் உணவு பார்சல் விநியோக நிறுவன ஊழியர்கள் போலவும், கட்டடத் தொழிலாளர்கள் போலவும் அங்கு யாரும் சந்தேகப்படாத வகையில் இருந்து, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தனர்.

ஒரே அணியில் இணைந்த ரௌடிகள்

இவ்வழக்கில் பொன்னை பாலு தவிர்த்து மேலும் சில ரௌடிகளுக்கும் தொடர்பு இருப்பதை தொடர் விசாரணையில் போலீஸார் கண்டறிந்தனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக பல கோடி ரூபாய் கைமாறியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

முக்கியமாக சென்னையின் முக்கியமான ரௌடிகளான வியாசர்பாடி நாகேந்திரன், சம்பவம் செந்தில் ஆகியோர் பெரியளவில் நிதி திரட்டியிருப்பதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். நாகேந்திரனுக்கும் அவர் மகனும், காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான அஸ்வத்தாமனுக்கும் இவ்வழக்கில் தொடர்பு இருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அஸ்வத்தாமனையும் நாகேந்திரனையும் போலீஸார் அடுத்தடுத்து கைது செய்தனர்.

தந்தை - மகனிடம் நடத்திய விசாரணையில், புழல் அருகே 150 ஏக்கர் நில விவகாரத்திலும் நாகேந்திரனுக்கும், ஆம்ஸ்ட்ராங்குக்கும் நேரடியாக பகை ஏற்பட்டிருப்பதும், தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்ததாக அஸ்வத்தாமன் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பதற்கு ஆம்ஸ்ட்ராங் தூண்டியதாக நாகேந்திரன் நினைத்ததும் தெரியவந்தது.

இதற்கிடையே பொன்னை பாலு, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு செயல்படுவதை அறிந்த நாகேந்திரன், அவர்களை சந்தித்து, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய தான் நிதி உதவி செய்வதாக உத்தரவாதம் அளித்ததது விசாரணையில் கண்டறியப்பட்டது.

இதேபோல ரியஸ் எஸ்டேட் விவகாரங்களில் ஆம்ஸ்ட்ராங்குடன் பகை ஏற்பட்டதால் ரௌடி சம்பவம் செந்திலும், நாகேந்திரன், பொன்னை பாலுவுடன் சேர்ந்து கொண்டார். இதன் பின்னர் ஆம்ஸ்ட்ராங் தரப்பால் பாதிக்கப்பட்ட ரௌடி அஞ்சலை உள்ளிட்ட சில ரௌடிகள் ஒரு அணியில் திரண்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக ரௌடி அஞ்சலை மூலமாக மட்டும் ரூ.50 லட்சம் கைமாறியது விசாரணையில் தெரியவந்தது.

இவ்வழக்கில் மொத்தம் 3 பெண்கள் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ரௌடி திருவேங்கடம் மட்டும் போலீஸாரின் என்கவுண்டரில் இறந்தார். வழக்கின் முக்கிய எதிரியாக கருதப்படும் சம்பவம் செந்தில், வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்யும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை மத்திய அரசு மூலம் சர்வதேச காவல்துறையினரால் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

3 என்கவுன்டர்கள்

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னர், ரௌடிகள் மீதான நடவடிக்கைகளில் காவல்துறை தீவிரம் காட்டத் தொடங்கியது. முக்கியமாக, ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட திருவேங்கடம் என்கவுன்டர் மூலம் கொலை செய்யப்பட்டார். இதற்கு அடுத்த சம்பவம் தொடர்பாக பிராட்வே பகுதியில் உள்ள பிஆர்என் கார்டன் பகுதியைச் சேர்ந்த ரௌடி ரா. காக்காதோப்பு பாலாஜி என்கவுன்டரில் பலியானார். இறந்த பாலாஜி மீது 6 கொலை வழக்குகள்,17 கொலை முயற்சி வழக்குகள், ஒரு கஞ்சா வழக்கு உள்பட 59 குற்ற வழக்குகள் இருந்தன.

தாம்பரம், சேலையூர்,பெருங்களத்தூர், மாடம்பாக்கம் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரௌடி சீசிங் ராஜா, கிழக்கு கடற்கரைச் சாலையில் என்கவுன்டரில் இறந்தார். அடுத்தடுத்து ரௌடிகள் என்கவுன்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டது, ரௌடிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் ரௌடிகள் மீதான நடவடிக்கையை காவல்துறை மேலும் தீவிரப்படுத்தியது.

சென்னையில் ரௌடிகள் பட்டியலில் இருக்கும் 6 ஆயிரம் பேரையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தது காவல் துறை. இதில் 800 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும், 760 பேர் பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிறையிலும் அடைக்கப்பட்டிருப்பதாக காவல் துறை தெரிவித்தது.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னர், ரௌடிகளுக்கு எதிராக கடுமை காட்டும் காவல் துறை , ஆம்ஸ்ட்ராங் வழக்கில் இன்னும் பல முடிச்சுகளை அவிழ்க்காமல் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com