
2024 - ஆம் ஆண்டில் தமிழகம் பல்வேறு நிகழ்வுகளைக் கண்டிருந்தாலும், பெரும் அதிர்வுகளையும், அதிர்ச்சியையயும் ஏற்படுத்தியதாக அமைந்தது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள். ஏறத்தாழ 68 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக வரலாற்றில் மாறா வடுவாக மாறியிருக்கிறது.
பொதுவாக கள்ளச்சாராயம் குடித்து இருவர், மூவர், ஐவர் என இந்த எண்ணிக்கையில்தான் உயிரிழப்புகள் நிகழ்வது வழக்கமாக இருக்கும். 2023 - ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 15 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும் உயிரிழந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், கள்ளக்குறிச்சி நிகழ்வு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.
2024, ஜூன் மாதம் 18 - ஆம் தேதி கள்ளக்குறிச்சி நகரின் கருணாபுரம் பகுதியில் துக்க நிகழ்வுக்காக வந்தவர்கள், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயத்தை அருந்தியதால் முதலில் 21 பேர் ஆக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, இறுதியில் 68 என்ற எண்ணிக்கையை அடைந்திருப்பது துயரத்திலும் துயரம்தான்.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவிலுள்ள கருணாபுரம் பகுதியில் கட்டடத் தொழிலாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், கட்டடங்களுக்கு வண்ணம் தீட்டும் தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 2024, ஜூன் 18 - ஆம் தேதி நிகழ்ந்த துக்க நிகழ்வுக்கு வந்தவர்கள், அங்கு விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அருந்தியதில் உடல்நலப் பாதிப்புக்குள்ளாகினர். கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகளை சந்திக்கத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், அவர்கள் கள்ளக் குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர்களும் கள்ளச்சாராயத்தை அருந்தியதில் உடல்நலம் பாதிக்கப்பட்டதும், அவர்களும் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதன் பின்னர் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஜூன் 19 - ஆம் தேதி 21 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்தடுத்த நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.
கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயத்தை அருந்தியவர்களில் மொத்தமாக 229 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டத்தில் மொத்தமாக 68 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என மொத்தமாக 68 பேர் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 161 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர்.
இவர்களில் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரியில் 32 பேரும், புதுச்சேரி ஜிப்மரில் 10 பேரும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் 22 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 6 பேரும் என உயிரிழந்தனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து 49 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோட்டைமேடு வ. மோகன் (57) கடைசி நபராக (68 ஆவது நபர்) 2024, ஆகஸ்ட் 6 - ஆம் தேதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம்....
ஒருபுறம் கள்ளக்குறிச்சி நகரக் காவல் நிலையம், மற்றொருபுறம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஆகிய பகுதிகளுக்கு மத்தியில் அமைந்த கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதும் தொடர்ந்து வந்துள்ளது. காவல்துறை அலுவலர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உரிய கவனிப்புகள் இருந்த நிலையில், கள்ளச்சாராய விற்பனை யாராலும் அதிகமாக கண்டுகொள்ளப்படாமலே இருந்த நிலையில், அகில இந்திய அளவில் உயிரிழப்புகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய அளவில், நடவடிக்கைகளும் அதிகளவில் இருந்தன.
முதலில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வயிற்றுவலி, கண் எரிச்சல் இருப்பதாகவும், அதனால் அவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியராக இருந்த ஷ்ரவன்குமார் ஜடாவத் தனது அறிக்கையை அரசுக்கு அனுப்பிய நிலையில், பின்னர்தான் கள்ளச்சாராயத்தை அருந்தியதால் பாதிக்கப்பட்டதும், அதன் பின்னர் உயிரிழப்பு தொடங்கியதும் தெரிய வந்தது.
கள்ளச்சாராயத்தை அருந்தியவர்கள் பெரும்பான்மையவர்கள் தொழிலாளர்கள். தங்கள் உடல் அலுப்பு தீர அவர்கள் கள்ளச்சாராயத்தை அருந்தியது தெரிய வந்ததில், போதையை அவர்களுக்கு அளிக்கும் வகையில் சாராயத்தில் மெத்தனால் கலந்ததுதான் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரும் காரணமாகிவிட்டது.
எஸ்.பி. முதல் நிலைய எழுத்தர் வரை தற்காலிக பணியிடை நீக்கம்
கள்ளச்சாராய உயிரிழப்புகள் தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறிய நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த சமய்சிங் மீனா முதல் கள்ளக்குறிச்சி காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன் வரையிலான நிலைகளில் பலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் டி.எஸ்.பிக்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களும் அடங்குவர்.
இவர்களைத் தவிர மாநில அளவில் மதுவிலக்கு அமல் பிரிவு ஏ.டி.ஜி.பியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால், எஸ்.பி.யாக பணியாற்றிய செந்தில்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதுமட்டுமல்லாது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த ஷ்ரவன்குமார் ஜடாவத்தும் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமிக்கப்பட்டார். இதுபோல இந்த மாவட்டத்தின் புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதியும் நியமிக்கப்பட்டார்.
வெகுண்டு எழுந்த அரசியல் கட்சிகள்....
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில், அப்போதைய அமைச்சர், தற்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முதல் இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் வரை அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கள்ளக்குறிச்சிக்கு வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குஆறுதல்கூறிச் சென்றனர். இந்த சம்பவத்துக்கு முதல்வர் பொறுப்பேற்று, பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் வெகுண்டு எழுந்தன . இவர்களில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனும், தவெக தலைவர் விஜய்யும் கள்ளக்குறிச்சிக்கு வந்து சென்றது கவனத்தை ஈர்த்தது.
வழக்கம் போல சிபிசிஐடி விசாரணை
பெரிய அளவில்நிகழ்வு நடைபெற்றால் உள்ளூர் போலீசார் மூலம் சரியாக விசாரணை நடத்தப்படாது. வேறு விசாரணை அமைப்புகளைக் கொண்டு குற்றம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுவது வழக்கம். ஆனால், இந்த நிகழ்வு நிகழ்ந்தவுடனேயே மாநில அரசு சிபிசிஐடி வசம் இந்த வழக்கை ஒப்படைத்தது. ஆனாலும், அதிமுக முதலான அனைத்து எதிர்க்கட்சிகளும் சிபிசிஐடி விசாரணையை நடத்தக்கூடாது. சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் நிகழ்வாக பல்வேறு பிரிவினர் தொடர்ந்த வழக்குகளை ஒருங்கிணைத்து விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், பல்வேறு கேள்விகளை விசாரணையின் போது எழுப்பி வந்தது. கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க தவறியது முதல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மலைப்பகுதியாக உள்ள கல்வராயன்மலை மக்களுக்கு கிடைக்காத வசதிகள் வரை பல்வேறு கேள்விகளை எழுப்பி நடவடிக்கை உத்தரவிட்ட நிலையில், விசாரணையின் இறுதியில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
21 பேர் கைது
இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மெத்தனால் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்ததாக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, புதுச்சேரி மாநிலம், மடுகரை மாதேஷ், சின்னத்துரை, ராமர், சக்திவேல், கண்ணன், சென்னையைச் சேர்ந்த கெüதம்சந்த், பன்சிலால்,சிவக்குமார் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி பகுதியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக கள்ளச்சாராயத்தை விற்பனை செய்து வந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தை கலந்த மெத்தனாலின் அளவு அதிகமாகிபோனது உயிரிழப்புகளுக்கு பெரும் காரணமாக அமைந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரணை நடத்திய நிலையில், பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படவர்களில் முக்கியமானவரான மடுக்கரை மாதேஷிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கடலூர் மாவட்டத்தின் பண்ருட்டி வட்டம், வீரப்பெருமாநல்லூர் பகுதியில் செயல்படாத பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மெத்தனாலை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார், சுமார் 2 ஆயிரம் லிட்டர் மெத்தனாலை பறிமுதல் செய்து அந்த நிலையத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
சென்னையிலுள்ள ரசாயன நிறுவனத்திலிருந்து ஒரு பேரல் ரூ.19 ஆயிரம் என்ற விலையில் 19 பேரல் மெத்தனாலை மாதேஷ் வாங்கியதும், பின்னர் ஒரு பேரலை ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததும் சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்தது.
மெத்தனால் விற்பனையை முதன் முதலில் கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்ததாகவும், அங்கு மெத்தனாலை கலந்து கள்ளச்சாராயத்தை விற்பனை செய்ததால் உயிரிழப்புகள் அதிகளவில் நிகழ்ந்த நிலையில், இதர மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதில் இடையூறு ஏற்பட்டதால் வீரப்பெருமாநல்லூரில் மாதேஷ் பதுக்கியதையும் சிபிசிஐடி போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைப்பு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் 68 பேர் உயிரிழந்த நிலையில், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், அந்த ஆணையமும் விசாரணையை நடத்தி வருகிறது. மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய ஷ்ரவன்குமார் ஜடாவத், எஸ்.பி.யாகப் பணியாற்றிய சமய்சிங் மீனா முதல் புகார் கூறப்பட்ட காவல் ஆளிநர்கள் என பலரிடமும், பாதிக்கப்பட்டமக்களிடமும் விசாரணை நடத்தி வருகிறது.
ஆணையங்கள் ஆய்வு
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தியதால் உயிரிழப்புகள் அதிகமானது. இந்த நிலையில் இதுதொடர்பாக தாமாகவே வழக்கை எடுத்துக் கொண்ட தேசிய மகளிர் ஆணையம், 3 பேர் கொண்ட குழுவை அமைத்து கள்ளக்குறிச்சிக்கு நேரில்சென்று விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறுஉத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஆணையத்தில் அப்போது குழு உறுப்பினராக இருந்த திரைப்பட நடிகை குஷ்பு தலைமையிலான 3 பேர் குழுவினர் கள்ளக்குறிச்சிக்கு வந்து விசாரணை நடத்திச் சென்றனர்.
உயிரிழந்தவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் தாழ்த்தப்பட்டோர் என்பதால், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் விசாரணை மேற்கொண்டது. ஆணையத்தின் தலைவரான கிஷோர் மக்வானா தலைமையிலான குழுவினரும் கள்ளக்குறிச்சிக்கு வந்து விசாரணையை மேற்கொண்டனர். இதுபோல தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையமும் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு, மாநில அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது.
உள்ளூர் போலீசார் முதல் சிபிஐ போலீசார் வரை விசாரணை நடத்துவது, பல்வேறு ஆணையங்கள் மக்களிடம் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்புவது வரை நடந்தாலும், கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க தவறியவர்கள், அதற்கு துணை போனவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். அவர்கள் அரசு அலுவலர்களாக இருந்தாலும், அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி. இல்லையெனில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.