ஒரு கேமராவும் சில ப்ளாக் லென்ஸ்களும் - டு லெட் : நூல் அறிமுகம் | விமர்சனம்

திரைக்கதை மற்றும் காட்சி நுட்பத்தை துல்லியமாக தெரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் வழிகாட்டுபவை.
ஒரு கேமராவும் சில ப்ளாக் லென்ஸ்களும் - டு லெட் : நூல் அறிமுகம் | விமர்சனம்


திரைப்படத் துறையில் சாதனை நிகழ்த்த வேண்டும் என்னும் இலக்குடன் சென்னைப் பட்டணம் வந்து, உதவி இயக்குனர் என்னும் நிலையை எட்டவே ஐந்து ஆண்டுகளை வீணடித்து, ஒரு வழியாக தொழில்நுட்பங்களை கற்றுத் தேர்ந்து, தனக்கென ஒரு திரைக்கதையை உருவாக்கிக் கொண்டு,  தயாரிப்பாளர்களை தேடியலைந்து, முதல் திரைப்படத்தை உருவாக்கிவிடும் முயற்சியில் இறங்கும்பொழுது அவர்களது வயதில் பாதியைக் கடந்துவிடுகிறார்கள். இதில் ஏராளமான பேர் இருக்கிறார்கள். 

ஆனால் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான செழியன், அவரது ’டூ லெட்’ திரைப்படம் வழியாகவும் அந்தத் திரைப்படத்தை உருவாக்கிய அனுபவங்களை தொகுத்துத் தந்திருக்கும் ‘ டூ லெட்: திரைப்படமும் உருவாக்கமும்’ நூல் வழியாகவும் ஒரு புதிய வழிமுறையை இளைஞர்களுக்கு காட்டித் தருகிறார். ஒரு படைப்பாக்க மிக்க இளைஞர் தன் வாழ்க்கையை வீணடித்துக் கொள்ளாமல் அவரது திரைப்படமெடுக்கும் ஆவலை எளிமையாக நிறைவேற்றிக்கொள்ள இயலும் அகிம்சா வழிமுறை இது. 

அவரது முன்னுரையில் செழியன் குறிப்பிடுகிறார்: ‘நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே முதல் படத்தை துவங்குங்கள்.’ தொழில்நுட்பம், படப்பிடிப்பு சாதனங்கள், இயற்கையான வெளிச்சம், சுற்றுப்புறங்களில் கேட்கும் மெய்யான ஒலி, இசையும் பாடல்களும் இல்லாத இயல்பான காட்சிகள் என அவர் இந்நூல் வழியாக அவரது அனுபவங்களை நமக்கு சொல்லித் தரும் விதத்தில் திரைப்படம் உருவாக்குவது தொடர்பான ஒருவரின் மலைப்பை தகர்க்கிறார். 

‘திரைப்படம் மிக எளிமையான கலைவடிவம். பேராசையுடன் அதனை வணிகமாக அணுகும் போதுதான் அது நெருங்க முடியாத பிரமாண்டமாக மாறுகிறது.’ என்னும் நூலின் தொடக்க வரிகள் மேன்மையும் எளிமையும் மிக்க ஒரு கலைப் படைப்பை உருவாக்க முனைப்புகொள்ளும் ஆர்வலனுக்கு தூய்மையான நம்பிக்கையை தருபவை. 

”ஒவ்வொருவராக உங்களை கைவிட கைவிட உங்கள் வாய்ப்பை இழக்கிறீர்கள் என்பது அல்ல. நெருங்குகிறீர்கள் என்பதுதான் இதன் உண்மை.”   
மேற்சொல்லப்பட்ட வரிகள் மேற்கத்திய தத்துவ மேதையோ அல்லது அங்கிருந்து தன்னம்பிக்கை நூல்களை எழுதிக் குவித்து பல்லாயிரம் டாலர்கள்  அள்ளிக்குவிக்கும் எழுத்தாளர்களோ அல்ல.

தயாரிப்பாளரைத் தேடி என்னும் அத்தியாயத்தினூடே, அதன் அனுபவங்களின் சாரமாக அவர் உருவாக்கித் தந்தவை அவ்வரிகள்.

செழியன் ஒவ்வொரு அத்தியாயத்தையும் சிறுகதையாக்கத்தின் கலைநேர்த்தியோடு எழுதியமைத்திருக்கிறார். தனக்கு நிகழ்ந்த அனுபவங்களை வெறுமனே பகிர்ந்துகொண்டால் மட்டும் போதும் என்ற எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு, அவர் மிகவும் துல்லியமான சொற்கள் கொண்டு, சற்று  கவித்துவமான  மொழிநடையில் அமைந்திருக்கும் இந்நூல் தொழில்நுட்பங்களையும் அனுபவங்களையும் நல்லதொரு வாசிப்பு இன்பத்துடன் சொல்லித் தருகிறது.  

சிறுகதை, கவிதை,  கட்டுரை, நாடகம், நாவல் என படைப்பாக்கத்தின் பல்வேறு வடிவங்களில் பயணித்த அனுபவங்கள் இருந்தபோதிலும் ஒரு திரைக்கதையை எழுத அமர்கையில் அவருக்கு நேர்ந்த தயக்கங்கள் குறித்தும் அதை வென்று கடந்ததையும் இன்னொரு அத்தியாயத்தில் பேசுகிறார் செழியன். காரணம், தமிழ் திரைப்பட உலகத்தில் ஒரு சுதந்திரமான, தூய கலைப்படைப்பு உருவாக்கப்பட்டதின் முன்மாதிரிகள் அதிகம் இல்லை.’ திரைக்கதைத் தாளின் ஒரு பக்கம் என்பது ஒரு நிமிடம்’ என்னும் ஹாலிவுட் திரைக்கதை சூத்திரத்தை கைவிட்டு ஐரோப்பிய பாணியிலான சுதந்திரமான திரைக்கதை எழுத்து முறையை முன் உதாரணமாகக் கொண்டு, காட்சிக்குள் இயங்கும் காலத்தின் தன்மையை, உள்ளுணர்வில் நிலை நிறுத்தி, அவர் ஒரு திரைக் கதையை எழுதியமைத்ததின் அனுபவப் பகிர்தல் திரைக்கலையை கற்கும் மாணவர்களுக்கும் நல்ல ஒரு திரைக்கதை எழுதும் எதிர்பார்ப்பிலிருக்கும் இளைஞர்களுக்கும் ஒரு கலைத் தன்மை வாய்ந்த பயில் தடம்.

’காலத்தைச் செதுக்குதல்’ என்னும் தார்க்கோவ்ஸ்கியின் கோட்பாட்டை தன்  திரைக்கதை நிகழ்வுகளில் பொருத்திப் பார்த்து செயல்படுத்திய அனுபவங்களை பகிர்ந்திருப்பது காட்சி நகர்வு தொடர்பான தெளிவுகளை தருகிறது. ஒரு செயல் தொடங்கும் விதம், அது நிறைவடையும் முறை, ஒரு கதாபாத்திரத்திற்கும் இன்னொரு கதாபாத்திரத்திற்குமான செயல் இடைவெளி, காட்சிக்குள் மௌனம் உருவாக்கும் விளைவு என இவை திரைக்கதை மற்றும் காட்சி நுட்பத்தை துல்லியமாக தெரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் வழிகாட்டுபவை.

படத்தொகுப்பு என்னும் அத்யாயம் ஒரு புதுமுக திரைக்கதை எழுத்தாளருக்கு மிகவும் பயனுள்ள அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறது. படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், செழியன் எடுத்திருந்த சில காட்சிகளை அவற்றின் வரிசையை மாற்றியும் சில காட்சிகளை நீக்கியும் படத்தை செம்மைப்படுத்திய விதத்தையும் பற்றி அழகாக சொல்லிச் செல்கிறது. படமாக்கப்பட்ட 129 நிமிடக் காட்சிகளை 99 நிமிடங்களாக எடிட் செய்யப்படுகையில், நீக்கப்பட்ட காட்சிகள் குறித்தும் அவற்றை நீக்குவதில் இருந்த தயக்கங்கள் பற்றியும் நீக்கப்பட்டதின் காரணங்கள் பற்றியும் தரப்பட்டிருக்கும் விரிவான விளக்கங்களை வாசிக்கையில் அது ஐந்து படங்களில் உதவியாளராகப் பணியாற்றிய திறனை ஒருவருக்கு வழங்கி விடக்கூடும். 

ஒளிப்பதிவு என்னும் அத்தியாயம் வழியாக, ஒரு வீட்டுக்குள் பெரும்பாலான காட்சிகளை படமாக்குவதில் இருந்த சவால்களையும் அவற்றைச் சமன் செய்த வழிமுறைகளையும் சொல்கிறார். ஒரு கேமராவும் சில ப்ளாக் லென்ஸ்களையும் மட்டும் வைத்துக் கொண்டு ஸ்டெடி கேம், கிரேன், ட்ராலி  இவை இல்லாமல் அதிக அளவு காட்சிகளை இயற்கை வெளிச்சத்திலேயே படமாக்கிய  விதத்தையும் reaction shots, over shoulder shots, time lapse shots, establishment shots இத்தகைய வழக்கமான காட்சிகளை தவிர்த்து, ஒரே வீட்டுக்குள் படமாக்கிய போதும் மாறுபட்ட வெவ்வேறு கோணங்களில் காட்சிகளை எடுத்த வழிமுறைகள் அனைத்தையும் விளக்கமாக தந்திருப்பது திரைத் தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள பேருதவியாக இருக்கும். 

முழு திரைக் கதையும் உரையாடலும் இந்நூலில் இணைக்கப் பட்டிருப்பது இந்நூலின் மிக முக்கியச் சிறப்பு. திரைக் கதை நகரும் போக்கையும் அதன் திருப்பங்களையும் காலவோட்டத்துடன் இணைத்து நிதானமாகப் புரிந்துகொள்ள இது ஒரு வழிகாட்டியாக இருக்கும். 

'டூ லெட் ' திரைப் படத்தின் காட்சிப் படங்கள் இடம் பெற்றிருப்பது வழியாக காட்சிக் கோணங்களை நிர்வகிப்பதன் கலை நுணுக்கங்களை துல்லியமாக உணர்ந்துகொள்ள இயலும்.

DAY INTERIOR, DAY EXTERIOR, NIGHT INTERIOR, NIGHT EXTERIOR  இவற்றுடன் CLOSE UP SHOTS, MID LONG SHOTS, LONG SHOTS, EXTREME LONG SHOTS ஆகிய வகைமைகளின் காட்சிப் படங்கள் மற்றும் ஒவ்வொரு காட்சிக்கான வரை படங்கள்  தரப்பட்டிருப்பதோடு ஒளி அமைப்புக் குறிப்புகளும் அத்துடன் அந்தந்தக் காட்சிகளுக்கான ஒளி புகும் அளவெண் [ f – stop ]  விவரங்களும் கொடுக்கப்பட்டிருப்பது, இவற்றை வாசிக்கும் ஒருவருக்கு உதவி இயக்குனராகப் பணிபுரியாமலேயே தனது முதல் படத்தை எடுப்பதற்கான தொழில்நுட்ப அறிவையும் செயல் துணிவையும் தந்து விடும் என்பது உறுதி.

திரைக்கதை, வரை படக் குறிப்புகள், காட்சிக் கோணங்கள், காட்சிகளின் தொலைவு சார்ந்த குறிப்புகள் மூன்றையும் இணைத்துப் புரிந்து கொள்ளும் வகையில் இந்த நூல் செம்மையாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

மேலும் -

ஒலி, முன் தயாரிப்புக் குறிப்புகள், நேர்காணல்கள், சுவரொட்டிகள், விருதுகள், நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், கட்டுரைகள் என விரிவாக, இந்தத் திரைப் படம் எடுத்ததின் அனைத்து அனுபங்களையும் வாசகர்களிடையே பகிர்ந்துகொள்கிறார் செழியன்.

காட்சி ஊடகவியல் மாணவர்களுக்கும்  திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கும், காட்சி ஊடகக் கலையை கற்றுத் தரும் பேராசிரியர்களுக்கும் ஒரு நல்ல திரைப்படத்தை குறைந்த பொருட் செலவில் எடுக்க விரும்பும் திரைப்பட ஆர்வலர்களுக்கும் திரைக் கலையை எளிதாகச் சொல்லித் தரும் அரிய பொக்கிஷம் இந்நூல்.

காட்சி ஊடகத் துறையைப் பயிற்றுவிக்கும் கல்லூரிகள் இதை ஒரு பாடத் திட்டமாக இணைத்துக்கொள்ளவும் முடியும். அத்தகையப்  பெருந் தகைமை மிக்க நூல் இது.

டு லெட் – திரைக் கதையும் உருவாக்கமும், ஆசிரியர் : செழியன், (ஒளிப்பதிவாளர், இயக்குனர்), வெளியீடு : உயிர் எழுத்து பதிப்பகம், கண்மணி எலைட், 92, கல்யாண சுந்தரம் நகர் முதல் தெரு, கருமண்டபம், திருச்சி-620001, தொலைபேசி ;0431- 2483229, 99427 64229, பக்கங்கள்: 420,  விலை : ரூ- 600. மின்னஞ்சல் : ueirezhutthu@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com