இந்திய விடுதலைப் போரில் குடும்பப் பெண்கள்

மக்களிடையே எழுந்த மாபெரும் விடுதலை உணர்வு அங்கு மட்டுமல்ல உலகம் முழுவதிலும் எதிரொலித்தது.
இந்திய விடுதலைப் போரில் குடும்பப் பெண்கள்

உலகம் தோன்றிய நாள் முதல் மனித குலத்தினிடையே ஆண்டான் அடிமை சமூகம் இருந்து கொண்டுதான் இருந்தது. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தொழில் புரட்சியும் ஐரோப்பிய நாடுகளில் எழுந்த அடக்கு முறைக்கு எதிரான சிந்தனைப் போக்கும் உழைக்கும் வர்க்கத்தையும் அடித்தட்டு மக்களையும் தங்களுக்கு எதிராக செயலாற்றிய ஆட்சியாளர்களையும் மத நிறுவனங்களையும் கேள்வி கேட்கச் செய்தது.

அம்மக்களிடையே எழுந்த மாபெரும் விடுதலை உணர்வு அங்கு மட்டுமல்ல உலகம் முழுவதிலும் எதிரொலித்தது.

இந்திய நாட்டிலும் இத்தகு சிந்தனை தாக்கம் தேசிய விடுதலையில் ஈடுபட்ட தலைவர்களிடையே எழுந்தது. மகாத்மாகாந்தி, பாலகங்காதர திலகர், கோபால கிருஷ்ணகோகலே, ஜவஹர்லால் நேரு அதேபோன்று தென்னகத்தில் வ.வு.சிதம்பரனார், பாரதியார், சிவா போன்ற தலைவர்கள் அடிமைபட்டுக் கிடந்த நம்தேசம் விடுதலை பெறவேண்டும் என்று எண்ணத் தொடங்கினர்.

இதுபோன்றதொரு மனப்போக்கு தோன்ற காரணம்  அடக்கு முறைக்கு எதிராக போராடிய மக்கள் எழுச்சியும் ஒன்றாகும்.

இத்தேசியத் தலைவர்களின் எண்ணம் பேச்சாகவும் எழுத்தாகவும் இந்திய நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்ந்தது. விடுதலை வேண்டி இவர்கள் பேசிய பேச்சுக்களும் எழுதிய செய்திகளும் பட்டி தொட்டி எங்கும் பரவிக்கிடந்த பாமர மக்களை விழித்தெழச் செய்தது. அதுமட்டுமல்ல அன்னிய ஆங்கிலேயருக்கு எதிராக அவர்களை வீறு கொண்டு எழச் செய்தது.

தலைவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக பல்வேறு அறப்போராட்டங்களை அறிவித்தனர். ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், உப்பு சத்தியாக்கிரகம், அந்நிய துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு எழுந்தனர்.
 
நம்மக்களின் மாபெரும் எழுச்சி ஆங்கில ஆட்சியாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதன் விளைவாக கடும் சட்டங்களையும் கொடும் தண்டனைகளையும் மக்கள் மீது ஏவினர். அடக்குமுறை கண்டு மக்கள் அஞ்சி ஒடுங்கி விடுவர் என்று நப்பாசை கண்டனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக பெரும் தலைவர்கள் மட்டுமன்றி பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் சிறை சென்றனர்.

 இப்போராட்டக் காலத்தில்  ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் சிறை சென்றனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தன் கணவனுக்கும் பிள்ளைகளுக்குமாக வீட்டுப் பொறுப்பை மட்டுமே கவனித்து வந்த குடும்ப பெண்களான இல்லத்தரசிகளும் எத்தகு விளைவைக் கண்டும் சிறிதும் அஞ்சாமல் ஆங்கிலேயருக்கான போரில் கலந்து கொண்டது உலக வரலாற்றில் நம் பெண்களுக்கு சிறப்பிடம் பெற்றுத் தந்தது என்றால் மிகையல்ல.

அந்த வகையில் வீரமும் தீரமும் கொண்டு அடக்கு முறைக்கு எதிராக அஞ்சாது சளைக்காமல் தங்கள் குழந்தைகளை தோளிலும் இடுப்பிலும் சுமந்து கொண்டு போராடி சிறை சென்ற நம் தாய்மார்களை இந்நந்நாளில் நினைவு கூர்வதோடு இன்றைய நம் பிள்ளைகளுக்கு அவர்களைப் பற்றி சொல்லி தெரிந்துகொள்ளச் செய்வது நம் கடமையாகும். அந்த வகையில் விடுதலைக்கு வித்திட்ட தாய்மார்கள் ஒரு சிலரை இங்கு காண்போம்.

கடலூர் அஞ்சலையம்மாள்

1927-ல் நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் பங்கேற்று வீரத்துடன் சிறை சென்றவர். தான் மட்டுமன்றி தன்னுடைய 9 வயது மகளான அம்மாக்கண்ணு என்கிற லீலாவதியையும் இப்போராட்டத்தில் ஈடுபடுத்தினார். சிறு வயதில் இருந்தே தன்னை சமூகப் பணிகளுக்கு அர்ப்பணித்துக் கொண்ட இவர், 1921ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்ட முதல் பெண்மணி என்கிற சிறப்பினைப் பெற்றார். இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக தன் சொத்துக்கள் மட்டுமன்றி தன் குடும்பத்தினருடைய சொத்துக்களையும் விற்றார். இவரை காந்தியடிகள் அடிக்கடி சந்திந்துப் பேசினார் என்பது சிறப்புக்குரிய ஒன்றாகும். அதேபோல 1932 ஆம் ஆண்டு போராட்டத்தில் கலந்து கொண்டதால் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார், ஆங்கில அரசின் அனுமதியை மீறி காந்தியை சந்தித்தார், எனவே காந்தியடிகளால் தென்னகத்தின் ராணி என்ற பெயரைச் சூட்டப்பெற்றார்.

திருப்பூர் எஸ்.என். சுந்தராம்பாள்

1913-ல் மிகவும் பணக்கார குடும்பத்தில் பிறந்த போதிலும் எளிமையாக வாழ்ந்தார். காந்தியடிகளால் ஈர்க்கப் பெற்ற இவர் விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டார். 1941 ல் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது தன்னுடைய சிறு குழந்தையான ஆண்மகவுடன் சேர்த்து கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் 3 மாதங்கள் அடைக்கப்பட்டார். இருப்பினும் தன்னுடைய போராட்டங்களை திருப்பூர் மாவட்டங்களில் பல இடங்களில் நடத்திய இவர் எப்போதும் சிறை செல்ல தயங்கியது இல்லை. சுதந்திரத்திற்குப் பின் விவசாயிகளுக்கான பல பிரச்சினைகளை முன்னெடுத்துப் போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது,

மதுரை கே.பி. ஜானகியம்மாள்

மேடைப் பேச்சுகள் மூலம் ஆங்கில அரசை எதிர்த்தவர். நாங்கள் உங்களுக்கு அடிமைப்பட்டு கிடப்பதால்தானே எங்கள் வீரர்களை வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடுத்துகிறீர்கள் என்று துணிச்சலாகக் கேட்டார். அதன் காரணமாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதன்படி கைது செய்யப்பட்ட தென்னிந்தியாவின் முதல் பெண்மணி இவர். பல போராட்டங்களில் ஈடுபட்டாலும் மதுரை ஹார்வி மில் போராட்டம் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.

சிறுவயதிலேயே நாடகத் துறையில் இருந்ததால் அங்கிருந்தபடியே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். 5 முறை இதற்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். காங்கிரசு சோசலிஷக் கட்சியில்  தன்னை இணைத்துக் கொண்டார். அவ்வியக்கம் கம்யூனிஸ்ட் இயக்கமாக மாறிய போதும் அந்த இயக்கத்திலேயே தொடர்ந்து இருந்தார். பின்பு சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி விவசாயிகள், மற்றும் நலிவடைந்தோருக்காகவும் பாடுபட்டார்.

தேச விடுதலையில் இவர்களைப் போல பல எண்ணற்ற வீரப் பெண்மணிகள் பங்கேற்று சிறை சென்று பல்வேறு இன்னல் கண்டு பெற்ற விடுதலையையும் அதன்வழி வந்த குடியரசு நாளினையும் போற்றுவோம். அனைவருக்கும் குடியரசு நாள் நல்வாழ்த்துகள்.

கட்டுரையாளா்: ஆசிரியர் கோ. ஜெயலெட்சுமி, தஞ்சாவூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com