2024-ல் - அரியலூர் ரயில் விபத்தும் சாஸ்திரியின் ராஜிநாமாவும் - 6 ... மக்கள் மீதான கரிசனம்!
2024-ல் ஒரு விபத்துக்காக இவ்வளவெல்லாம் பேசக் கூடியதாகவா இருக்கிறது நிலைமை? ஒருவேளை பேசினாலும் எவ்வளவுதான் பேசிக்கொண்டிருப்பார்கள்?
ஒரு கணக்குக்காகத் தற்போதைய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே துறையின் பொறுப்பைத் ஏற்றுக்கொண்டதற்குப் பிறகு பேரிழப்பு ஏற்படுத்திய சில விபத்துகளைப் மட்டும் பார்த்தால்...
2023 ஜூன் 2 : ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் – கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ், நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் - ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன – 295 உயிர்கள் பலிகொள்ளப்பட்டன. ஏறத்தாழ 80 பேரின் உடல்கள் அடையாளம்கூட காணப்படாமல் – முகவரியில்லாமலேயே - எரியூட்டப்பட்டன. சிக்னல் பிரச்சினை என்று கூறப்பட்டது.
2023 அக். 11: பிகாரில் பக்ஸார் மாவட்டம் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே தில்லி – காமாக்யா வடகிழக்கு எக்ஸ்பிரஸ் தடம்புரண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
2023 அக். 29 : ஆந்திரத்தில் விஜயநகரம் மாவட்டத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்டு தடம் புரண்டதில் 14 பயணிகள் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமுற்றனர். மனிதத் தவறு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது.
2024 ஜூன் 17 : கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்து! 10 பேர் பலி. இன்னமும் காரணம் உறுதி செய்யப்படவில்லை.
கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்துக்குப் பிறகான சுமார் இரு வார காலத்தில் மட்டுமே நாட்டில் எத்தனை விபத்துகள், கொத்துக்கொத்தாக எத்தனை மரணங்கள் நேரிட்டுவிட்டன?
மக்கள் திரளக் கூடிய இடங்களான ஜபல்பூர், தில்லி, ராஜ்கோட் விமான நிலையங்களில் மேற்கூரைகள் தகர்ந்து விழுந்தன...
கட்டிய, கட்டப்படும் பாலங்கள் இடிந்துவிழுந்தன...
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் ஹாத்ரஸில் தனிநபர் ஒருவரின் ஆன்மிகச் சொற்பொழிவில் நேரிட்ட நெரிசலில் 110-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.
இன்றைய சூழலில் நாம் எத்தகைய இடத்தில் இருக்கிறோம் என்பதை உணர்த்தக் கூடியவை, நேரு, சாஸ்திரியின் அன்றைய பேச்சுகளில் சில வரிகள்.
ரயில் பயணத்தில் மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற சாத்தியமான எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற நேரு, சம்பிரதாய நேர்மையை முன்னிட்டு இதை (சாஸ்திரியின் ராஜிநாமாவை) ஒரு முன்னுதாரணமாக நிலைநிறுத்துவது அவசியம் என்கிறார்.
என்ன நடந்தாலும் சரி, அதைப் பற்றிக் கவலைப்படாமல் - கண்டுகொள்ளாமல் அரசு எப்போதும்போல பழையபடியே தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் என்று எவரும் நினைத்துவிடலாகாது என்று அச்சம் கொள்கிறார்.
விபத்துக்குப் பொறுப்பு இந்திய அரசுதான். இந்தப் பொறுப்பை நாங்கள் தட்டிக் கழிக்க விரும்பவில்லை என்று வெளிப்படையாகத் தெரிவிக்கும் நேரு, இந்த விபத்து ஏற்பட்டதிலிருந்து கடந்த சில தினங்களாக தன் மனம் மிகவும் சங்கடப்படுவதாகவும் தன்னுடைய சகா ரயில்வே அமைச்சரின் மனம் இன்னும் அதிகம் சங்கடப்பட்டது; துக்கப்பட்டது போலும் என்றும் குறிப்பிடுகிறார்.
சாஸ்திரியோ, தான் வகிக்கும் பதவியைச் சந்தடியின்றி விட்டுவிடுவதே தனக்கும் அரசு முழுமைக்கும் நல்லதெனக் கருதுவதாகவும் இது பெருமளவுக்கு மக்கள் மனதில் ஆசுவாசத்தை ஏற்படுத்தும், அரசைக் கண்டிப்போரையும் சாந்தப்படுத்தும் என்றும் கூறுகிறார்.
‘உடலளவில் நான் பலம் குன்றியவனாக இருந்தபோதிலும் உள்ளுக்குள் – உள்ளத்தளவில் நான் அவ்வளவு பலவீனமானவன் அல்ல என்றே நான் நினைக்கிறேன்’ என்பதுதான் சாஸ்திரி பேச்சின் உச்சம்!
67 ஆண்டுகளுக்குப் பிறகும் உள்ளம் கனியச் செய்பவை மக்கள் மீதான நேரு, சாஸ்திரி போன்ற தலைவர்களின் கரிசனம்.
அஸ்வினி வைஷ்ணவ் பதவியேற்ற பிறகான ரயில் விபத்துகளுக்கும் சரி, வேறு பல விபத்துகளுக்கும் சரி, ஏதேனும் ஒரு விபத்துக்கு எவரேனும் ஒருவர் இதுவரையில் பொறுப்பேற்றிருக்கிறார்களா?
லால் பகதூர் சாஸ்திரியைப் போல யாரேனும் ஒருவர் பதவி விலகவோ, தன்னைத் தண்டித்துக்கொள்ளவோ முன்வந்திருக்கிறார்களா?
அரசு, ஆட்சியாளர்கள், அரச எந்திரங்களைப் போலவே ஒட்டுமொத்த மக்களுடைய மனமும்கூட மழுங்கடிக்கப்பட்டுவிட்டதாகவோ, மரத்துவிட்டதாகவோதான் தோன்றச் செய்கிறது நிலைமை. மனித உயிர்கள் பற்றியதான மதிப்பும் அறம்சார் விழுமியங்களும் அருகிவருவதாக அச்சம் மேலிடுகிறது.
மக்களுடன் ஊடகங்களும் சேர்த்து, ஒரு செய்தியைப் பற்றி ஒரு நாள் முழுவதும் பேசிவிட்டு மறுநாள் மற்றொரு செய்தியை நோக்கி நகர்ந்துவிடுகின்றனர்.
சாஸ்திரி பதவி விலகக் காரணமான அரியலூர் ரயில் விபத்துக்கும் இப்போதைய விபத்துகளுக்கும் மிகப் பெரிய – மிகவும் முக்கியமான ஒரு வித்தியாசம் இருக்கிறது!
அரியலூரில் நடந்தது முற்றிலுமாக, எதிர்பாராமல் நடந்த, உண்மையிலேயே ஒரு விபத்து. விபத்தில் சிக்கிய ரயிலுக்கு முன்னதாக அதே பாதையில் ரயில்கள் சென்றிருக்கின்றன. திடீர் வெள்ளப் பெருக்கில் பாலத்தின் கரை அரிக்கவே வலுவிழந்த தடத்தில் ரயில் கவிழ்ந்துவிட்டது.
இப்போதைய ரயில் விபத்துகள் எதுவும் எதிர்பாராத, திடீர் இயற்கைச் சீற்றங்கள் போன்றவற்றின் காரணமாக நேரிட்டவை அல்ல. சிக்னல் பிரச்சினைகள், தொழில்நுட்ப சிக்கல்கள், நிர்வாகக் கோளாறுகள், மனிதத் தவறுகள் போன்றவை மட்டுமே காரணங்கள். இவை அனைத்துமே நிர்வாகமும் சம்பந்தப்பட்டவர்களும் கவனமாகவும் பொறுப்பாகவும் இருந்தால் தவிர்க்கக் கூடியவையே.
ஆனாலும், இவை எதற்காகவும் பதவி விலக அல்ல, பொறுப்பேற்கக்கூட யாரும் தயாராக இல்லை!
அரியலூர் ரயில் விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகியதைப் பாராட்டித் தலையங்கம் ஒன்றை அப்போது எழுதியிருந்தது ‘தினமணி’ (நவ. 27, 1956).
இன்றைக்கும் பொருத்தமான அந்தத் தலையங்கம்:
அதிர்ச்சி வைத்யம்
அரியலூர் ரயில் விபத்துக்கு தாமே ஜவாப்தாரி என்று கருதி தமது பதவியை ரயில்வே மந்திரி ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி ராஜிநாமா செய்துவிட்டார். தீர்க்காலோசனை செய்த பின், அதை ஏற்றுக்கொள்வதென்று பிரதம மந்திரி முடிவு செய்து லோகசபைக்கு அறிவித்துள்ளார். இந்த முடிவு ரயில்வேக்களில் வேலை செய்யும் அத்தனை பேரையும் கருத்திற்கொண்ட “அதிர்ச்சி வைத்தியம்” என்பதில் சந்தேகமில்லை. என்ன நடந்தாலும் சரி, அதனால் பாதிக்கப்படாமல் பழையபடியே காரியங்கள் நடந்துகொண்டிருக்கும் என்று யாரும் நினைத்துவிட இடந்தரலாகாது. அதற்காகத்தான் இது ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்று கருதி, ராஜிநாமாவை தாம் ஏற்றுக்கொள்வதாக நேருஜி சொன்னார். எவ்வளவு மனத்துயரும் கடமையுணர்ச்சியும் இருந்தால் ரயில்வே மந்திரியும் பிரதம மந்திரியும் இப்படிச் செய்வார்கள் என்பதை ஊகித்துப் பார்க்க வேண்டும். மக்கள் மனதில் ஒரு பீதி ஏற்பட்டிருக்கிறது; ரயில்வே பிரயாணத்தைப் பற்றி மீண்டும் நம்பிக்கை ஏற்படும்படி செய்ய வேண்டும் என்று பிரதம மந்திரி கூறியிருப்பதைப் பற்றி ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அரியலூர் விபத்துக்கும் மந்திரிக்கும் சம்பந்தமில்லை என்று வாதிக்க முடியும். ஆனால், ரயில்வேக்களில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் இறுதிப் பொறுப்பு அவருடையதுதான், ஏராளமான பேர் அப் பொறுப்பைப் பகிர்ந்துகொண்டு தத்தம் கடமைகளைச் செய்ய வேண்டியவர்கள்.
சாதாரண ‘காங்குமன்’, பாதை இன்ஸ்பெக்டர் முதல் ரயில்வே பிரதம அதிகாரி வரை எல்லோருமே இந்தக் கடமையுணர்ச்சி நிறைந்தவர்களாக செயலாற்ற வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன்தான் ஸ்ரீ சாஸ்திரி தமது பதவியைத் துறக்கிறார். சமீப காலத்தில் ஒரே மாதிரி விபத்துகள் இரண்டு மூன்று அடுத்தடுத்து நடைபெற்று ஏராளமான உயிர்களைக் கொள்ளை கொண்டது நெஞ்சைப் பிளக்கும் நிகழ்ச்சித் தொடர். ஆகையால்தான், இதைப் பெரிய எச்சரிக்கை என்று கருதி, கடமை உணர்ச்சியை வற்புறுத்தும் சீரிய நோக்குடன் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ராஜிநாமாவை நேருஜி ஏற்றுக்கொண்டார். இதன் விளைவாக ரயில்வே சர்வீஸ் பூராவிலும் மட்டுமின்றி, மத்திய ஆட்சியிலும் ராஜ்யங்களிலும் உள்ள எல்லா இலாகாக்களிலுமே பொறுப்புணர்ச்சியும் செய்நேர்த்தியும் வளருவதற்கான சூழ்நிலை வேகமாக உருப்பெறும் என்று எதிர்பார்ப்போமாக. ஸ்ரீ சாஸ்திரியின் இந்த சீரிய தியாகம் வீண் போகாது என்று நம்புகிறோம். இந்த முடிவுக்காக அவரை எல்லோரும் வாழ்த்துவர்.
[வரலாற்றின் பக்கங்களிலிருந்து - நிறைவுற்றது]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.