
‘திருமகள் இலக்கணம்’ என்னும் இந்நூல் குறைந்த பக்கங்களைக் கொண்டதுதான் என்றாலும், வாசித்து முடிக்கக் கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டது. அந்த அளவிற்கு ஆழமான கருத்துகளை உள்ளடக்கமாகக் கொண்ட நூல். சங்க இலக்கியங்களில் இருந்தும், சிலம்பு, மணிமேகலையிலிருந்தும் செறிவான சான்றுகளுடன், மிகவும் நுட்பமான புரிதலுடன், ஆழமான ஆய்வுப் பார்வையில் எழுதப்பட்ட நூல்.
ஆணாதிக்க சமூகத்தில் பெண் அடிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், இயற்கையில் ஆதிகாலம் தொட்டே பெண் என்பவள் புதிர்ப் படைப்பாகவே இருந்து வருகிறாள். பெண்ணுக்கும் மண்ணுக்கும் தொடர்பு இருக்கிறது. பெண்ணுக்கும் விண்ணுக்கும் சொல்லப்படாத உறவு இருக்கத்தான் செய்கிறது. இவற்றை எல்லாம் பழந்தமிழர்கள் அறிந்து வைத்திருந்தார்கள் என்னும் அரிய கருத்தை இந்நூல் உள்ளீடாகக் கொண்டிருக்கிறது என்பது எனது புரிதல்.
வேற்கண்ணி, பாசறை மங்கை, வெள்ளாடு, ஏந்துகொடி, அயிராணிமடந்தை, காருக மடந்தை, வலம்புரி மங்கை, ஒள்நுதல் மடந்தை என்னும் எட்டு தலைப்புகளில் சொல்லப்படும் ‘திருமகள் இலக்கணம்’ முழு நூலாக விரிகிறது. நூலில் சொல்லப்பட்டிருக்கும் சில முதன்மையான கண்ணிகளைப் பார்க்கலாம்.
வேற்கண்ணி
இயற்கையில் அனைத்து உயிரினங்களிலும் பெண் இனமே ஆண் இணையைத் தெரிவு செய்கிறது. ஆண் - பெண் இணைச்சேர்வு என்பதே இனப்பெருக்கத்திற்காகத்தான். இனம் பெருகினால் மட்டும் போதாது. அது நீடித்து நிலைத்திருக்கவும் வேண்டும். அதற்கான தகுதி அவற்றிற்கு இருக்க வேண்டும். இதனைத்தான் ‘தகுதி உள்ளது வாழும்’ என்று சொல்கிறார் பரிணாமக் கொள்கையாளர் சார்ல்ஸ் டார்வின். அதன்பொருட்டே, இயற்கையில் பெண் இனம் தகுதி உள்ள ஆண் இணையைத் தெரிவு செய்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்கத்தமிழர், களவு வாழ்க்கையில், வேளாண்மையில் விதைநெல்லைத் தெரிவு செய்வதைப்போல, தலைவி தலைவனைத் தகுதி பார்த்துத் தெரிவு செய்திருக்கிறாள்.
“ஓஓ!, இவள், ‘பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால்
திரு மா மெய் தீண்டலர்’ என்று கருமமா
எல்லாரும் கேட்ப, அறைந்து அறைந்து, எப்பொழுதும்
சொல்லால் தரப்பட்டவள்.”
(முல்லைக்கலி, பாடல்-2; வரிகள் 9 -12)
சினந்து சீறும் நல் ஏறைத் தழுவும் வீரனை அல்லாது வேறு ஒருவனது மெய்யைத் தீண்ட மாட்டேன் என்று பலரும் அறியச் சூளுரைத்திருக்கும் தலைவி
“கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே, ஆய மகள்”
(முல்லைக்கலி பாடல் 3; வரிகள் 63,64)
பயிற்சி பெற்ற கொல் ஏற்றின் கொம்பைக் கண்டு அஞ்சுவானை, ஆயர் மகள் இப்பிறவியில் மட்டுமல்ல, அடுத்துவரும் பிறவியிலும் மணம் முடிக்க மாட்டாள். ஆயர்குலத்துத் தமிழ்ப்பெண் தனக்கேற்ற இப்படிப்பட்ட இணையரைத் தெரிவு செய்வது நன்மக்களைப் பெறுவதற்காக என்கிற புரிதல் அவசியம்.
“உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை“ என்று தொடங்கும் அகநானூறு 86-வது பாடலில் அன்றைய தமிழர் திருமணம் காட்சிப்படுத்தப்படுகிறது. திருமணத்தை நடத்திவைக்கும் பெண்கள், “கற்பு வழுவாது, நல்ல பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் பெற்றோராகுக” என்று வாழ்த்துகின்றனர். தோழியர் மணமகளை, மணமகன் இருக்கும் முதல் இரவு அறைக்குள் தள்ளி, கதவைச் சாத்தும்போதும், ‘நிறைய நன்மக்களைப் பெற்றுப் பேரில் கிழத்தி ஆகுக’ என்று வாழ்த்துகின்றனர்.
எனவே ஆண்-பெண் உறவு நன்மக்களைப் பெறுவதற்கே. நன்மக்கள் என்று சொல்லும்போது உடலாலும் உள்ளத்தாலும் நன்மக்கள் என்று கருதலாம். அதுவே சிறந்த இனப்பெருக்கமும் ஆகும். இதே கருத்தை முதல் கட்டுரையில் பதிவு செய்கிறார் தென்னன் மெய்ம்மன்.
“பெண்கள் காலக்கண்ணாடி, காலக்கணக்கின் மெல்லிய வடிவம், காலமகள், நிலவின் வளர்பிறைப் பண்பு உடையவர்கள். முழுநிலவின் குளிர்ச்சியோடு போட்டிபோடும் ஆற்றல் உடையவர்கள் என்று இலக்கியங்கள் வழியாகத் தெரிய வருகிறது”
“பெண் மென்மேலும் பெண்ணிமைப்பெற்றுப் பாவை ஆவதும், ஆண் மென்மேலும் ஆண்மை தோற்றிப் படிமை ஆவதும், அப்படி ஒரு கட்டளைகொண்ட ஆண்மகனைத் தலைவியே தெரிவு செய்வதும், நிலைபெறுவதும் புரிந்துகொள்ள இயலும் உண்மைதானா?” என்று சீவகசிந்தாமணி வரிகளை மேற்கோள்காட்டி வினவுகிறார்.
“ஒவ்வொரு மாதமும் வளர்பிறைச் சதுர்த்தியில் மாதம் இனிதே தொடங்கும்போது முதல் 12 நாள்களில் மங்கையரின் முந்நாட்கள் அமைந்துவிட்டால் 12-ஆம் நாளில் விளக்கேற்றும் தகுதி பெற்று விடுகிறாள் திருமகள் என்று நம்பப்படுகிறது.“
“முழு நிலவுக்குப் பிறகு வரும் 18 நாள்களை அகவாழ்வுக்குரிய நாள்களாகப் பகுத்துப் பயன்படுத்தியிருக்கின்றனர். அமாவாசை நாளில் விளக்கேற்றும் தகுதி திருமகளின் பாவைப்பண்பு என்று இலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவை இன்று நாம் இழந்து நிற்கிறோம்” என்று ஆசிரியர் தனது கவலையை வெளிப்படுத்துகிறார். விளக்கேற்றும் தகுதி என்பதற்கான நூலாசிரியரின் கருத்து வெளிப்படையாக முன்வைக்கப்படவில்லை. அதனால் பாவையின் விளக்கேற்றும் தகுதி என்பது அப்பெண் கருவுறுவதைக் குறிப்பதாக நான் புரிந்துகொள்கிறேன்.
வேல் என்பது அரியவகைக் காலக்கருவி என்றும் சொல்கிறார். வேல் என்னும் புனைகலம் மாதத்தின் 12 நாள்களில் மட்டும் பொருத்தப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது என்றும் மற்ற நாள்களில் பிரித்துவைக்கப்படும் என்றும், அதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் நிறையவே உள்ளதாகவும் கூறுகிறார். இலக்கியம் வியக்கும் பாவைமேனி என்பது ஓவியம் போன்ற கலைமகளாகவும், காலமகளாகவும் படைக்கப்பட்டிருப்பது நமது சொத்து அல்லவா? என்று நம்மிடம் ஒரு கேள்வியும் எழுப்புகிறார், ஆசிரியர்.
பாசறை மங்கை
பெண்களின் நெற்றி, கன்னக்கதுப்பு, மேற்கைகள், நடுமார்பு எனப் பல இடங்களில் அறிகுறிகள் வெளிப்படையாகத் தோன்றும் என்றும், இவை முறையே நிலவின் வெற்றி, கடற்காற்று, பருவமழை, ஆட்டை, நிமிர்வு, துருவங்களின் அசைவு, உலகச்சுழற்சி பாரிப்பு, ஆண்டு நாட்கணக்குப் போன்றவற்றை உணர்த்தும் என்பதற்கு சான்றுகள் உள்ளன என்றும் மெய்ம்மன் கூறுகிறார்.
பெண்களின் மேனியில் காணப்படும் தார், தேர், தித்தி, திதலை, சுணங்கு, பசலை, மாமை என்று சொல்லப்படும் தோல் அறிகுறிகள் யாவும் இக்காலத்து மருத்துவர்களுக்குத் தெரியாதவையாக இருக்கின்றன.
பெண்களுக்கு நடு வகிடு எடுப்பது பற்றி சில புதிய கருத்துகளை இக்கட்டுரையில் ஆசிரியர் பதிவு செய்கிறார். மணமகள் நெற்றிச்சுட்டி அணியும் நடுவகிடு, கோத்தொழிலில் செந்நடையில் வகிடு எடுக்கும் திருவினை என்று தெரிகிறது.
நிலமகளின் தலைசீவி வகிடு எடுத்தோர் பேச்சுத்திரிபாக வடுகர் ஆகியிருக்கலாம் என்று ஐயம் கொள்கிறார். பெருங்குறி மகாசபை, மூன்று கை மகா சேனை, காரிய ஆராய்ச்சி ஆகிய குழுக்களில் வடுகர் என்போர் வல்லுநர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். இதனால் வடுகர் என்னும் சொல்வழக்குத் தெலுங்கரைக் குறிக்கிறது என்பதை ஆய்வுக்குள்படுத்த வேண்டும் என்று ஆசிரியர் கருத்துரைக்கிறார்.
தமிழினத்திற்கு யார் பகைவர் என்னும் கேள்விக்கும் விடை சொல்கிறார். ஒவ்வொரு காலகட்டத்திலும் மண்ணாசையால் தாக்குதல் நடத்தும் பிற அரச மரபினரே பழந்தமிழர் அறிவின் மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள். முதலில் அவர்கள் தைப்பகையாகத் தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். கலைகளைக் காயப்படுத்துகிறார்கள். பாவைக்குத் தீங்கு இழைக்கிறார்கள். அறிவுத்தளத்தில் அத்துமீறுவது அவர்களது வழக்கம். இதனால் உலகச்சுழற்சி என்னும் பரிப்புச்சீர்மையுடன் துருவ அசைவு எனும் தாளம் தடுமாறும் தீமை நடந்துவிடுகிறது. தமிழர் இனம் தலைமயங்கிச் சோர்ந்து விடுகிறார்கள். வந்தேறிகள் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் என்கிறார்.
வெள்ளாடு
‘இரவுநேர விண்ணின் தோற்றத்தை வெறுங்கண்ணால் அன்று பார்த்தவன் ‘கடுங்கண் மழவன்’. ‘இயவர்’ என்று ஒரு பிரிவினர் இதனில் வல்லுநர் என்று தெரிகிறது”. வெள்ளோலை (அகம். 337) என்றால் எழுதாத ஓலை. வெள்ளந்தி என்றால் செந்நிறம்பெறாத காலைநேரம். இவ்வாறான பொருளில் வெள்ளாடு என்றால் வெண்மையின் எளிய அசைவு. மாசு இல்லாத மனம்கொண்டோரை ‘வெள்ளந்தி’ என்று குறிப்பிடுவதும் உண்டல்லவா?
புறநானூறு 286-வது பாடல் சுட்டும் “வெள்ளை வெள்யாட்டுச் செச்சை“ ஆட்டுக்குட்டியா? அல்லது வானவீதியா? என்று கேள்வி எழுப்புகிறார். ‘வெள்யாட்டுச் செச்சை’ என்பது வெள்ளாட்டுக் கடா என்று பொருள்படும்.
வெள்ளைநிற ஆடு வெள்ளாடு. அது விலங்கு என்றே கொண்டாலும், அதன் நிறம் கருப்பாக இருந்தால் கருப்பாடு அல்லது கருத்தாடு என்று சொல்லாமல் அதனையும் வெள்ளாடு என்றே சொல்வது ஏன்? என்று கேள்வி எழுப்பும் நூலாசிரியர், வெள்ளாடுபோலவே கருத்தாடும் சேர்த்துப் பேசப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்று சொல்கிறார். அது ‘வருத்தாடு’ அல்லது ‘வறுத்தாடு’ என்பது இன்றும் பேச்சுவழக்காக உள்ளது என்கிறார். ஆடுகளை உயிரோடு வறுப்பதில்லை என்பதால் வறுத்தாடு என்பது பொருந்தாது. எனில், வருத்தாடு என்பது கருத்தாடு என்பதன் மரூஉ-வாக இருத்தல் வேண்டும். வானில் வெள்ளையாகத் தெரியும் வெள்ளாட்டில் இடை இடையே தெரியும் கருப்புத்திட்டுகள்தான் கருப்பாடு என்றும் சொல்கிறார். இங்கே வெள்ளாடு, கருத்தாடு இரண்டுமே விண்ணில் தோன்றும் உருவத்தைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும் (ராசிகளில், ஆடு என்பது மேஷத்தைக் குறிக்கும்).
வானவீதி ‘ஆடு’ மேய்ச்சல், விலங்குக்குப் பெயராகத்தரப்பட்டதா? என்று எதிர்த்திசையில் கேள்வி எழுப்புகிறார். ‘தோடு’ துருவத்தையும், ‘பாடு’ கிழக்குப் பரிப்பையும் குறிக்கிறது என்கிறார். ‘ஆட்டைக்கடிச்சி, மாட்டைக் கடிச்சி, ஆளைக்கடிச்ச மாதிரி’ என்னும் சொலவடைக்குப் புதிய பொருளொன்றைத் தருகிறார். “ஆட்டை என்ற ஆண்டு நாள்களைத் தவறவிட்டு, மாட்டு என்ற தீப்பந்தம் எரியும் கோத்தொழில் முயற்சியைக் கைவிட்டு, ஆளும் கிழமையாகியத் தலைநாள் அறிவிப்பையும் கைவிட்ட அவலத்தைக் குறித்திருக்கலாம்”.
‘மாட்டு’ என்ற சொல் காடுகளை அழித்து எரித்து நிலத்தை நேர்த்திசெய்வதை முல்லைப்பாட்டு (25,26) குறிக்கிறது.
செங்கண் மழவர் தீப்பந்தம் எறிந்தனர், ஆநிரை ஓட்டினர், செருப்பு அணிந்திருந்தனர் என்று பேசுகிறது 101-வது அகநானூறு பாடல்.
“ஆடு ஆடு என்ப ஒரு சாரோரே !
ஆடன்று என்ப ஒரு சாரோரே !
நல்ல பல்லோர் இரு நன்மொழியே !
அம்சிலம்பு ஒலிப்ப ஓடி எம்இல்
முழாஅரைப் போந்தை பொருந்திநின்று
யான் கண்டனன் அவன் ஆடு ஆகுதலே “
(புறநானூறு, பாடல் 85)
ஒரு பெண், ஆட்டை நேர்த்தியின் வெற்றியை, நிழலைக்கொண்டு அறிந்த செய்தியை இப்பாடல் கூறுகிறது.
ஏந்து கொடி
“நெகிழா மென்பிணி வீங்கியகை சிறிது
அவிழினும் உயவும் ஆய்மடத் தகுவி
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த
திண்சுவர் நோக்கி நினைந்து கண்பனி”
(அகநானூறு, பாடல் 289)
பிரிந்துசென்ற தலைவன் குறித்த காலத்தில் திரும்பி வரவில்லை. அதனை நினைந்து தலைவி வருந்துகிறாள். ஆண்டு நாள் கணக்கு, சுவரில் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. அதனை நோக்கித் தலைவி புலம்புவதான பாடல்.
சிலப்பதிகாரத்தில், விளக்கேற்ற இந்த நாளில் இன்னார் நெய் தரவேண்டும் என்னும் நியமம் இருந்திருப்பதான செய்தி சொல்லப்படுகிறது. ஆண்டு நாள்முறை (நாட்காட்டி) இல்லையென்றால் அது எப்படி முடியும் என்று ஒரு கேள்வியை ஆசிரியர் எழுப்புகிறார்.
“மாலைவெண்குடைப் பாண்டியன் கோயிலில்
காலை முரசம் கனைகுரல் இயம்பும் ஆகலின்
நெய்முறை இன்று நமக்கு ஆம்”
(சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை)
அயிராணி மடந்தை
சிலம்பில் மாதவி ஆடியதாகச் சொல்லப்படும் 11 வகையான ஆடல் முறைகளைக் குறிப்பிட்டு அவை வானவியலோடு தொடர்புடையவை என்பதோடு, அன்றைய ஆண்டுக்கணக்கும் ஆகும் என்று நூலாசிரியர் கூறுகிறார். கடையம், கொடுகொட்டி, பாண்டரங்கம், அல்லியம், மல்லாடல், துடி, குடை, குடம், பேடி, மரக்கால், பாவை ஆகிய ஆடல்முறைகள், சித்திரை நீங்கலான 11 மாதங்களைக் குறிப்பதாகவும் சொல்கிறார்.
‘இந்த பதினோரு ஆடலும் வானவியல் அடிப்படையிலானது என்று மாநாகன் இளமணி 44 ஓவியவியப்பாக 15-06-2014 அன்று முதல் முறையாகச் செய்தி வெளியிட்டுக் கருத்துக்கேட்பு நடத்தியது. யாரும் மறுக்கவில்லை. ஆனால் இதுவரை யாரும் கருத்திடவும் இல்லை. ஆடற்கலைஞர்களும், ஆடற்கலை ஆராய்ச்சியாளர்களும்கூடக் கடந்துசெல்கிறார்கள்’ என்று வருந்துகிறார்.
இந்தப் பதினோரு ஆடல்களில் நான்கு இடங்களில் அவுணர் என்ற சொல் இடம்பெறுகிறது. அதாவது அவுணருக்கு எதிராக ஆடப்பட்டதாகப் பொருள்கொள்ளும் வகையில் உள்ளது. ஆனால் அது திரிபு என்று சொல்லும் மெய்ம்மன், அந்த நான்கு ஆடல்களும் அவுணருக்கு உகந்தது என்னும் பொருள்தான் பொருந்துவதாகவும் கூறுகிறார். இதுபற்றி ஆய்வு செய்து முடிவுக்கு வரவேண்டும் என்று அறிஞர் பெருமக்களுக்கு வேண்டுகோளும் வைக்கிறார். அவுணர் என்போர் தமிழ் மரபுக்கு உரியவர் என்றும் கூறுகிறார். அவுணர் என்போர் கடுவிசை ஊக்கத்துக் கோநகர் காத்தனர் என்பதற்கான குறிப்பைச் சிலம்பில் இருந்து எடுத்துக்காட்டுகிறார்.
“இந்திர விழவு கொண்டு எடுக்கும்
நாள் இது எனக்
கடுவிசை அவுணர் கனம்கொண்டு ஈண்டிக்
கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த
தொடுகழல் மன்னர்க்கு..”
(சிலம்பு. கடலாடுகாதை)
கோவலன் கொலையுண்ட பிறகு மாதவியின் கூற்றாக மணிமேகலையில் பதிவாகியிருக்கும் கருத்தை மெய்ம்மன் குறிப்பிடுகிறார். தனது காதலன் ஆகிய பாண்மகன் மறைந்தாலும் செங்கோல் வளையாதிருந்ததால் தானும் திருவின் செல்விபோல் வாழ்ந்திருப்பதாகக் கூறும் மாதவி, வினை ஒழிகாலை ஆடவர் துறப்போம் என்கிறாள். அதாவது, செங்கோல் வளைந்தால் மட்டும் உதவிக்கு வருவதாகக் கூறுகிறாள்.
மன்னராட்சி கொடியது, மக்களை அடிமைப்படுத்தியது, பெண்களைப் பள்ளியறையில் அடைத்துவைத்தது என்பதுதான் செங்கோல் உணர்த்துவது என்று சிலர் உளறிக்கொண்டிருக்கும் வேளையில், மெய்ம்மன் சிலம்பிலிருந்து சில வரிகளை மேற்கோள்காட்டித் தனது வியப்பை வெளிப்படுத்துகிறார்.
“செங்கோல் வளைய
உயிர் வாழாமை
தென் புலங் காவல்
மன்னவர்க்களித்து”
(சிலம்பு, நடுகல், 212,213)
மன்னராட்சி என்றாலும், மக்களாட்சி என்றாலும் நியதி ஒன்றுதான் என்று அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
காருக மடந்தை
அரசனின் நல்லாட்சியில் நிலமகள் திருமகளாக விளங்க வேண்டும் என்று எல்லா அரசர்களும் விரும்புவர். கலை என்னும் சொல்லுக்கு ‘ஆடை’ என்றும் ஒரு பொருள் இருக்கிறதாம். நிலமகள், திருமகள், அரசன், இறைவன் இவர்களைக் கலைப்படைப்பாக வெளிப்படுத்தி எளிமையாக விளக்கிச் சொல்ல முடியுமானால், மாமல்லபுரம் ஆதிராகவர் குகைக்கோயில் சுவர்ச்சிற்பங்களாக உள்ள சிற்பக்காட்சி அதனைத்தான் செய்துகொண்டிருக்கிறது என்னும் செய்தியும் நமக்குக் கிடைக்கிறது.
பல்லவர் காலத்தில் தமிழ்ப் புத்தாண்டுப் புரிதல், ஆண்டு நாள்களின் எண்ணிக்கை, முழு நிலவுகளின் வெற்றி தோல்வி, நிலமகள், திருமகள் கருத்தியல் மக்கள் மொழியில் , கலைகளின் மொழியில் பேசப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
வலம்புரி மங்கை
ஒரு வலம்புரிச்சங்கு திருமகளாக, வலம்புரி மங்கையாகத் தலைவனை மனதில் நிறுத்திப் பூரிக்கிறாள். தன் மன்னவனோடு வலது தோளோடு பின்னிப் பிணைந்து ஒவ்வொரு நாளும் திருநடம் புரிகிறாள் என்பதை ‘வலம்புரி மங்கை’ கட்டுரை பேசுகிறது.
வலம்புரிச்சங்கு, உலகச் சுழற்சியில், வலச்சுற்றாகப் பாரிக்கும் பெண்ணியல்பான உயிர் வகை என்று சொல்லி, வலம்புரிச்சங்கின் பண்புகளைப் பெண்களுக்கு ஒப்பிட்டு இக்கட்டுரை பேசுகிறது.
ஒள்நுதல் மடந்தை
மகளிர் வாழ்வில் கருவுறும் தகுதி என்பது ஒருவகையில் காலக்கணக்கு. கருவுறும் பேறு வானவியல் அடிப்படையில் அமைகிறது. எண்ணம், உணர்வு, அறிவு, காட்சி எனப் பலவகை நுட்பங்கள் ஒன்றுக்குள் ஒன்றாகப் பொதிந்துள்ளன. அந்த நுட்பம் அறிந்த பெண்கள் நன்மக்களைப் பெற்றார்கள். அது அன்றைய புலவர்களுக்கும் புரிந்திருக்கிறது என்று சொல்லும் ஆசிரியர் மெய்ம்மன், பதிற்றுப்பத்து 74-வது பாடலைச் சான்றாகக் காட்டுகிறார்.
புலவர் ஒரு சேரமன்னனைப் பார்த்துக் கூறுவதுபோன்ற பாடல். மன்னனின் குடும்ப வரலாற்றில் ஒரு பெண் ஞானத்தாயாகவும் இருந்திருக்கிறாள். பருந்து ஒன்று விசும்பில் வட்டமிட்டு, கூர்மையாகத் தரை நோக்கிப்பாய்ந்து, தரையில் முட்டாமல் இரையைக் கொண்டுசெல்வது போன்ற ஊஞ்சல் கோட்பாட்டை உணர்ந்து உள்வாங்கிக் கருவுற்று ஒரு மகனைப் பெற்றிருக்கிறாள். ஏர் என்ற பாதுகாப்பான திருப்பத்தை, எண்ண அலைகளை உணர்வலைகளுடன் இசைத்துப் பொருத்திக் கருவுற்று வெற்றி பெற்றிருக்கிறாள். அக்குழந்தை திருமகனாக வளர்ந்திருக்கிறான். அச்சாயல் அம்மன்னனுக்கு இருப்பதாகவும் கூறுகிறார்.
‘ஊஞ்சல் கோட்பாட்டை’ உணர்ந்து ‘உறவில் உய்த்து’ ‘திருமகனை’ ஈன்ற ஞானத்தாய் என்பதை ஊன்றிக்கவனித்தால் நாம் வியப்பின் உச்சிக்கே சென்றுவிடுகிறோம். இதனை அறிவியல் என்றும் நம்பலாம்தான்.
தலைநாள்
தமிழர் மெய்யியல் தமிழர் அழகியல் என்றும், அழகு ஒருவகை ஏர்வண்ணம் என்றும், அதன் கோட்பாடு ஆடு கோட்பாடு என்றும், ஆடு என்பது ஆட்டை (ஆண்டு) என்றும், ஆட்டை நிமிர்வு திருநிமிர்வு என்றும் புரிந்துகொள்ள 12 முறை 12 நாள்களை ஆளும் கிழமையில் பொருத்திப் புரிந்துகொள்வோம். எந்த நாள் வளர்பிறை நான்கு என்று வல்லுநர்கள் வெவ்வேறு பார்வையில் சொல்லலாம். ஆனால் வளர்பிறை நான்கே தலைநாள் (ஆண்டு முதல் நாள்) என்ற தமிழர் நம்பிக்கையில் மாற்றம் இல்லை” என்று இறுதியாக நூலை முடிக்கிறார், தென்னன் மெய்ம்மன்.
72 பக்கங்களைக்கொண்ட சிறிய நூல்தான். ஆனால், எளிதாக வாசிக்கவும், கடந்துசெல்லவும் முடியவில்லை. செவ்விலக்கியங்களின் துணையுடன் மிகவும் செறிவாக, மிகவும் ஆழமாக, மிகவும் நுட்பமாகச் சொல்லப்படும் பல செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. என்னுடைய வாசிப்பிலும் போதாமைகள் உண்டு என்பதை நான் அறிவேன்.
“நோன்பிருந்து, ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் பிறையையும் கடும்பாடியில் கண்டு, மாதப்பிறப்பு அறிவிப்பை மாமல்லபுரம் கேவாத பெருந்தச்சன் கல்வெட்டுத் தொட்டிக்கு அருகில் நடத்தி, நாளெண்ணி, நிழல் அளந்து, புறச்சூழல் தாக்கங்களை எதிர்நீந்தி ஆக்கியவை இக்கட்டுரைகள்” என்று தனது முன்னுரையில் தென்னன் மெய்ம்மன் குறிப்பிடுகிறார். அக்கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நூலை வாசிக்கும் எவருக்கும் அக்கூற்று உண்மை என்பது புலப்படும்.
தென்னன் மெய்ம்மன் சிற்பி, ஓவியர், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழ்ப்பாவை அவரது படைப்பு. இந்நூலில் ஒவ்வொரு தலைப்புக்கும் ஒவ்வொரு பொருத்தமான ஓவியமும் தீட்டப்பட்டுப் பதியப்பட்டுள்ளது. நாம் இழந்து நிற்கும் காலக்கணக்கீடு, மண்ணோடு தொடர்புகொண்ட விண்ணியல் அறிவு ஆகியவை பற்றிப் பேசுவதால் தமிழ் உணர்வுடையோர் மட்டுமல்ல, ஆய்வாளர்களும் அவசியம் படிக்கவேண்டிய நூல். சிறந்த படைப்பாளியும், சங்க இலக்கிய வாசிப்பு அனுபவமும் கொண்ட சிராப்பள்ளி மாதேவனும், பெரியார்ப் பல்கலைக்கழகத்தின் இதழியல்துறைப் பேராசிரியரான தமிழ்ப்பரிதி மாரியும் இந்நூலுக்கு அணிந்துரைகள் வழங்கியுள்ளனர்.
திருமகள் இலக்கணம் - தென்னன் மெய்ம்மன், பக் - 72, விலை: ரூ.120, யாம் தமிழர் செயற்களம், எப்-3, ஜெயந்த் வளாகம், முனிசிபல் காலனி, தஞ்சாவூர், செல்லிடப் பேசி: 8270450565
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.