குருதிப்பூ (சங்ககால வாழ்வியல்): நூல் அறிமுகம் | விமர்சனம்

முனைவர் மா. நயினாரின் சங்ககால வாழ்வியலை விளக்கும் குருதிப்பூ புத்தகத்தைப் பற்றி அறிமுகமும் விமர்சனமும்...
குருதிப்பூ - சங்ககால வாழ்வியல்
குருதிப்பூ - சங்ககால வாழ்வியல்
Published on
Updated on
2 min read

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் வாழ்வை நம் கண்முன் அப்படியே படம்பிடித்துக் காட்டுபவை சங்க இலக்கியங்கள். எனது அனுபவத்தில் கவிதை, கதை, கட்டுரை என்று இலக்கிய வகைமை எதுவாக இருந்தாலும் சங்க இலக்கியங்களின் வாசிப்பில் தொடங்க வேண்டும் என்பது எனது பார்வை. அதெல்லாம் தேவையில்லை என்பவர்களிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை.

எதுவுமே தெரியாமல்தான் நான் சங்க இலக்கிய வாசிப்பில் நுழைந்தேன். நுழைந்த பிறகு, பாடல்கள் வெளிப்படுத்திய தமிழர்களின் அகம், புறம் என்று பிரிக்கப்பட்ட வாழ்வியல், ஐந்திணைக் கோட்பாடு, உணவு, உடை, அறம், ஈகை, களவு, கற்பு, காதல், ஊடல், கூடல், பிரிவு, மணம், மருமணம், பரத்தையர், வாயில் வேண்டல், வாயில் மறுத்தல், உடன்போக்கு, வேளாண்மை, ஏறுதழுவல், கடலில் மீன்பிடித்தல், உப்பு விளைவித்தலும் உப்பு வணிகமும், மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், விண்ணறிவியல், உள்நாட்டு வெளிநாட்டு வணிகம், பண்டமாற்று, இயற்கையைப் போற்றிப் பாதுகாத்தல், இன்னும் இதுபோன்ற பலவற்றையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமைந்தது. ஒரு நீர்ச்சுழல்போல சங்க இலக்கியங்கள் என்னை உள்ளே உள்ளே இழுத்துச்சென்றுவிட்டன.

குருதிப்பூ - சங்ககால வாழ்வியல்
புகையிலை - வரலாறும் வழக்காறும்: நூல் அறிமுகம் | விமர்சனம்

சங்க இலக்கியங்களுக்குப் பலரும் உரை எழுதியிருக்கின்றனர். அதிலிருந்து மாறுபட்டு, சங்க இலக்கியங்களை வாசித்து எத்தனையோ பேர், எத்தனையோ தலைப்புகளில் துண்டுதுண்டாகக் கட்டுரைகள், கதைகள், நூல்கள் எழுதிவிட்டனர். நானும் என் பங்கிற்கு சில கட்டுரைகளை எழுதியுள்ளேன். அப்படி எழுதுபவர்கள் அனைவருமே சங்க இலக்கியப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டுவது வழக்கம். ஆனால் யாருமே முழுமையாகச் சங்க இலக்கியங்களை வெளிப்படுத்தியதும் இல்லை.

அவற்றிலிருந்து முற்றாக மாறுபட்டு, சங்க இலக்கிய வரிகளைப் பதிவு செய்யாமல், சங்க இலக்கியங்களை முழுமையாக வாசித்து பல தலைப்புகளில் தொகுத்து நூலாகத் தந்திருக்கிறார் நூலாசிரியரும், கேரளப் பல்கலைக்கழகத்தின் பணிநிறைவு செய்த பேராசிரியருமான மா. நயினார். இதனைப் புதுமை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், சங்க இலக்கியங்களை வாசிக்கவேண்டிய அவசியம் இல்லாமலேயே, அவற்றில் சொல்லப்பட்டிருப்பவற்றைக் காட்சிகளாக்கி நம் கண்முன் விரித்துவைக்கிறார் நூலாசிரியர் மா. நயினார்.

குருதிப்பூ - சங்ககால வாழ்வியல்
க.நா.சு.வின் இலக்கியச் சாதனையாளர்கள்: நூல் அறிமுகம் | விமர்சனம்

இந்நூலை வாசிப்பதற்கு இலக்கணம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தாலே போதும். இதுவரையில், எனக்குத் தெரிந்து, யாருமே செய்யாத ஒன்றை மா. நயினார் முயன்று பார்த்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். சங்க இலக்கியப் பாடல்கள் முழுவதையும் நான் வாசித்திருக்கிறேன் என்பதால், இந்நூலை வாசிக்கும்போது காட்சியோடு தொடர்புடைய பாடல்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. பாடல்களை வாசிக்கும்போது காட்சி வெளிப்படும். ஆனால் இங்கு விளக்கப்படும் காட்சி, பாடலை நினைவுக்குக் கொண்டுவருகிறது. சாதாரண வாசகர்களுக்கு, ஒரு நாவல் வாசித்த அனுபவத்தை இந்நூல் தரும். கதை சொல்வதுபோல் மிக அருமையாகப் பாடல்களைக் காட்சிப்படுத்துகிறார். இதுபோன்ற நூல்களும் தமிழ் வாசகப்பரப்பில் அவசியமாகிறது. எங்குமே பாடல் வரிகளை அல்லது பாடல்களைப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குருதிப்பூ - சங்ககால வாழ்வியல்
திசைகளுக்குள் அடங்காத நீர்ப்பெருவெளி: நூல் அறிமுகம் | விமர்சனம்

போர் காரணமான அழிவுகளும், ஆண்கள் பரத்தையரை நாடிச் சென்றதால் ஏற்பட்ட பிரிவைத் தாங்காமல் குடும்பப்பெண்கள் அனுபவித்த கொடுமைகளும் சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றையும் நூலாசிரியர் நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

‘தமிழகம்‘ என்னும் தலைப்பில் தொடங்கி ‘களப்பிரர்’ என்று முடியும் இந்நூலில் 55 தலைப்புகளில் பண்டைய தமிழர் வாழ்வு பேசப்படுகிறது. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருசில பாடல்களை மட்டுமே சொல்லாமல், அத்தலைப்போடு தொடர்புடைய அனைத்துப் பாடல்களையும் வாசித்து, அவற்றின் காட்சிகளைச் சுருக்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

குருதிப்பூ - சங்ககால வாழ்வியல்
காத்திரமான மார்க்ஸியக் கலைச்சொற்கள் - நூல் அறிமுகம் | விமர்சனம்

நாச்சிமுத்து, கா.வானமாமலை ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர். தனக்குக் குறுந்தொகை மிகவும் பிடிக்கும் என்றும், அதனால் குறுந்தொகையின் முதல் பாடலில், ஈற்றடியில் வரும் ‘குருதிப்பூ’ என்பதையே நூலுக்குத் தலைப்பாக்கிவிட்டதாகவும் நூலின் முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

“செங்களம் படக்கொன்று அவுணர் தேய்த்த

செங்கோல் அம்பின் செங்கோட்டு யானைக்

கழல்தொடிச் சேஎய் குன்றம்

குருதிப் பூவின் குலைக்காந் தட்டே”

(குறுந்தொகை, பாடல் 1)

குருதிப்பூ - குருதி நிறத்தில் பூக்கும் செங்காந்தள் மலர். சிறார்களும் வாசித்துப் புரியும் விதத்தில் எளிமையாக எழுதப்பட்டுள்ள நூல். பள்ளிகளுக்கும் நூலகங்களுக்கும் பரிந்துரை செய்யலாம். வாங்கிப் பரிசளிக்கலாம்.

குருதிப்பூ (சங்ககால வாழ்வியல்) -மா. நயினார், பக்கங்கள்: 308, விலை: ரூ. 100, பதிப்பகம்: திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com