சதாம் உசைனால் தேடப்பட்ட கவிஞர் அட்னான் அல்-சயேக்! கவிதைதான் குற்றம் - 23

கவிதைகளால் சிறைப்பட்டவர்களின், துயருற்றவர்களின் தொடர் - கவிதைதான் குற்றம். கவிஞர் அட்னான் அல்-சயேக் குறித்து...
கவிஞர் அட்னான் அல்-சயேக்
கவிஞர் அட்னான் அல்-சயேக்
Published on
Updated on
9 min read

பூர்வீக மக்களின் உரிமைகள் மற்றும் கருத்துக்களை ஒரு சிறிதும் பொருட்படுத்தாமல் ஒட்டோமான் மாகாணங்களை ஒன்றிணைத்து காலனித்துவ பிரிட்டன் உருவாக்கியதுதான் தற்போதைய ஈராக். அந்நாட்டின் மூன்று முக்கியப் பகுதிகளான மொசூல் மாகாணத்தில் பெரும்பான்மை சன்னி பிரிவு, குர்து இனமக்கள், பாக்தாத் மாகாணத்தில் சன்னி பிரிவு, அரேபியர்கள், பாஸ்ரா மாகாணத்தில், ஷியா பிரிவு, அரேபியர்கள் என இணையாக் கலப்பாக இருந்தனர் மக்கள். காலனித்துவம் மேற்கொண்ட இந்தப் பொருந்தா இணைப்பு முடிவு, நவீன மத்திய கிழக்கு வரைபடத்தில் ஒரு புதிய (குறும்புக்கார) நாட்டை மட்டுமல்ல, அப்பகுதியின் வரலாற்றில் இன்றும் தொடரும் பல்வேறு பிரச்னைகளையும் உருவாக்கியது.

முதல் உலகப்போர் விளைவாக உருவாக்கப்பட்ட ஈராக்கில், பலவகை ஆட்சிகள் மாறி, மாறி, புதிய ஈராக்கிய தேசியவாதம் கட்டியெழுப்பப்பட்டுவந்த காலத்தில், 1973 இல் சதாம் உசேன் அதிபரானார். அவர் ஆட்சிக்கு வந்தவுடன், ஈராக்கிய தேசியவாதம் என்ற கருத்தாக்கம், 'சதாமியிசம்' (சதாமிய்யா) என்று துல்லியமாக விவரிக்கப்பட்ட புதிய ஒன்றாகப் பரிணமித்தது. சதாம் பதவிக்கு வந்த பின்னர், தனது செல்வாக்கையும் ஆட்சியையும் பலப்படுத்திக் கொள்வதற்காக ஈராக்கிய தேசியவாதத்தின் தற்கால முத்திரையாகத் தன் தோற்றத்தை முன்னிலைப்படுத்தத் தொடங்கினார்.

சதாமின் ஆளுமை ஈராக்கிய சமுதாயத்தை எதிர்ப்பின்றி ஆக்கிரமித்தது. ஈராக் முழுவதும், எங்கு நோக்கினும் அவரது உருவப்படங்கள், சுவரொட்டிகள், சிலைகள், சுவரோவியங்கள் நிறைந்து நின்றன. அலுவலகக் கட்டடங்கள், பள்ளிகள், விமான நிலையங்கள், கடைகள் மட்டுமல்ல, அனைத்து மதிப்புகளிலும் உள்ள ஈராக்கிய நாணயங்கள், பணநோட்டுகள் யாவிலும் அவரது முகத்தையே காணமுடிந்தது. ஒவ்வொரு பொது இடத்திலும் தனது படத்தை நிறுத்தியதன் மூலம் தன்னைத் தவிர வேறு எந்த தலைவரையும் மக்கள் நினைத்துக் கூடப்பார்க்க முடியாததாக மாற்றினார். தனது ஆட்சியின்போது, பாத் கட்சி அமைப்பின் முழுமையான அதிகாரத்தையும் தந்திரமாகக் கைப்பற்றினார். தனது குடிமக்களுக்குத் தெரிந்த ஒரே தலைவர் தான்தான் என்பதை சதாம் உறுதி செய்துகொண்டார்.

அதிகாரம் (சதாமை நோக்கி) மையப்படுத்தப்பட்டதாலும், மற்றவர்கள் எவரும் பொதுத்தளத்திற்கு வருவதிலிருந்தே அடியோடு சாதுரியமாக ஒதுக்கப்பட்டதாலும், தேசிய அளவில் சதாம் உசேனைத் தவிர வேறு எந்த நபரும் மக்களால் அறியப்படுவது அறவே சாத்தியமற்றதாயிற்று.

சதாமின் பெயருக்கு "உறுதியாக நிற்கும் போராளி" என்று பொருள். 1980 -1988 ஈரான்- ஈராக் போர், 1990 இல் குவைத் படையெடுப்பு, 2003 இல் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆகியன போராளி சதாம் விரும்பி வரவழைத்துக் கொண்ட அல்லல்கள். தனது சொந்த மக்களைத் துன்புறுத்திப் பயத்தை ஏற்படுத்திய கொடூரமான சர்வாதிகாரியாக சதாம் உசேனை உலகின் பெரும்பகுதி இன்றும் நினைவில் வைத்திருக்கும். அதேவேளையில், சிரியாவிலிருந்து எகிப்து வரை, ஏன், அதற்கு அப்பாலும் அரபு உலகில் பலரும் சதாம் உசேனை ஒரு ‘அரபு வீரர்’ (Arab Hero), ‘வீரம் செறிந்த தியாகி’ என்று மதிக்கின்றனர் என்பதும் உண்மை. பல சந்தர்ப்பங்களில் சதாம் மேற்குலகிற்கு ஆதரவாக நின்று அரபு தேசத்திற்குப் பலன்கள் கிடைக்கும் வகையில் இராஜதந்திரியாக இருந்து இறந்தார் என்பதும் உண்மையே. சதாம் உசேனின் பாத் ஆட்சி மத்திய கிழக்கில் ‘ஒருகட்சி அரசு’க்கு ஈடற்ற முன்மாதிரியாக இருந்தது. "சதாம்" என்பதே ஈராக் அரசின் மறுபெயராக மாறியது. (‘சதாம் என்றால் ஈராக், ஈராக் என்றால் சதாம்!’)

இந்த ‘ஒரேநாடு, ஒரே தலைவர்’ என்ற அரசியல் சூழலில், ஈராக்கிய இலக்கியக் களத்தில் ‘எண்பதுகளின் இயக்கம்’ என்று அழைக்கப்படும் (‘காலக் குழு’) கவிஞர்களது தலைமுறை ஒன்று உருவானது. அண்டை நாடுகளுடன் அனாவசியமாக சதாம் மேற்கொண்ட நீண்ட போர்களாலும், அவரது அதிகாரக் கவசம் பூண்டுநின்ற ஆள்வோரின் அடக்குமுறைப் போக்குகளாலும் மக்களிடையே மனப்புழுக்கங்கள் மானாவாரியாக வளர்ந்து மண்டிக்கிடந்தன. மக்களின் உணர்வுகளை அந்தத் தலைமுறைக் கவிஞர்கள் - ‘எண்பதுகளின் இயக்கக் கவிஞர்கள்’- வெளிப்படையாகப் பாடினர். தங்கள் ‘அதிருப்திக் கவிதைகள்’ வழியாக மக்களின் மன உணர்வுகளைப் பாசாங்குகளின்றி அவர்களது எழுத்துகள் பிரதிபலித்தமையால், அக்கவிஞர்கள் மக்களிடம் நெருங்கி நின்றனர்.

மக்களோடு நெருங்கி நின்று, அவர்களது மன ஆழக் குமுறல்களை, எதிர்பார்ப்புகளை, உள்ளார்ந்த வேட்கைகளைக் கவிதைகளாகப் பகிர்ந்த காரணத்திற்காகவே அக்கவிஞர்களில் பலர் ஆள்வோரின் தடைகளுக்கும் தண்டனைகளுக்கும் உள்ளாகி, தொடர்ந்து தங்கள் தாயகத்தின் பழமரபான ‘சியாவோஸோடு (Siyavash), கூடவே நிதர்சன ஆபத்தோடு, வாழ்வதா அல்லது தங்கள் சொந்த மண்ணிலிருந்தும் கலாச்சாரத்திலிருந்தும் தம்மைத்தாமே பெயர்த்தெடுத்து நாடுகடத்திக் கொள்வதா என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தர்மசங்கட நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஈராக்கிய அதிருப்தியாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் பிறதொழில் வல்லுநர்கள் மற்றநாடுகளில் தஞ்சம்புகும் நிலைமைகள், சதாம் காலத்திற்கு முன்னும் ஈராக்கில் வாடிக்கைதான். வெவ்வேறு ஆட்சிகளின் கீழ் ஈராக்கில் தொடரும் அடக்குமுறைகள், அரசு ஏற்படுத்தும் கட்டுப்பாடுகள் முதலியவை இத்தகு நிலைமைகளை வளர்த்து வந்துள்ளன. சதாம் காலத்தில் அலையென புலம்பெயர்ந்துள்ள ஈராக்கியர்களின் தனித்தன்மை என்னவெனில், எண்ணிக்கையில், பூகோள அளவில் பரவியிருப்பதில் முந்தைய அலைகளை எல்லாம் விஞ்சி நிற்கின்றனர் என்பதுதான். மேலும், குறிப்பாக, அரசியல் காரணங்களுக்காக ஈராக்கிய கவிஞர்கள் நாடுகடத்தப்படுவது சதாம் காலத்தில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையாகி முன்நிற்கிறது.

சதாம் தசாப்தங்களில் கவிஞர்கள் ஈராக்கை விட்டுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் (தலை தப்பிக்க அருளி!) அல்லது நாடகல மனங்கனத்தாலும், அக்கனத்தோடு தாமே வெளியேறும் சூழ்நிலைகளுக்கு நெருக்கித் தள்ளப்பட்டனர் என்பது உண்மை. நிதர்சனத்தில், ‘எண்பதுகளின் இயக்க’ ஈராக்கியக் கவிஞர்கள் தங்கள் தாயக நிலத்தின் மீதான நீங்காப் பற்றுக்கும், சதாமின் அரசுப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு எதிரான, காரண நியாயங்களுள்ள ஆழ்ந்த வெறுப்புக்கும் இடையில் நைந்து நாறாகக் கிழிந்து கிடந்தனர்.

பல ஈராக்கிய கவிஞர்கள், பிற அரபு நாடுகளில்- தங்கள் சொந்த கலாச்சார சூழலுக்குள்ளேயே- அடைக்கலம் தேடிக்கொண்டனர். அதிக எண்ணிக்கையில், மேற்கு நாடுகளில் - ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிறஇடங்களில்- தஞ்சம் அடைந்துள்ளனர். மேற்கில் குடியேறியுள்ளவர்கள், நாடுகடந்து வாழும் தங்கள் புதிய வாழ்க்கையைச் சமாளிப்பதில் மிகவும் பாதிக்கப்படுவதாக உணர்வதை அக்கவிஞர்களது புதியவானத்தின் கீழிருந்து வரும் எழுத்துகள் எதிரொலிக்கின்றன.

நாடகன்று வாழும் ஈராக் கவிஞர்கள் தங்கள் சொந்தமொழியில் தொடர்ந்து எழுதுகிறார்கள், அதேநேரத்தில், தங்களைத் தற்போது காத்துவரும் நாடுகளின் மொழிகளிலும் இயன்றவரை படைக்க முயற்சிக்கிறார்கள். தாங்கள் அந்நிய மண்ணில் நிற்க நேர்ந்திருப்பதால் ஏற்பட்டுள்ள தனிமைப்படுத்தல், பிற இழப்புகள், ஆகியவற்றை ஓரளவு தணித்துக் கொள்வதற்காக பிற எழுத்தாளர்களின் கூட்டு ஒத்துழைப்புடன் பல இலக்கிய வட்டங்கள் மன்றங்கள், பத்திரிகைகள், சிறுபத்திரிகைகள் ஆகியவற்றை நாடகன்று வாழ நேர்ந்துள்ள கவிஞர்கள் நிறுவியுள்ளனர்; அல்லது இயங்குபவைகளில் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.

நாடகன்று வாழ் கவிஞர்களுக்கு பல கவலைகள், தாயகங்குறித்த எண்ணங்கள், அவ்வெண்ணங்கள் கிளறும் உணர்வுகள் நிறைந்து இருந்தாலும், ஆறுதல் தரும் ஒரு பெருநன்மை கிடைத்துள்ளது! குறிப்பாக, மேற்கில் தஞ்சம் புகுந்திருப்பவர்கள், ஈராக் ஆட்சி, சதாம் உசேன் சர்வாதிகாரத்திற்கு எதிர்ப்பு, பிற அரபுநாடுகளின் ஆட்சிகள் பற்றிய நேர்மையான விமர்சனங்கள் உள்பட, பரந்த அளவிலான கருத்துக்கள் எதனையும் வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் பேசுவதற்கு அவர்களுக்குப் பூரண வாய்ப்பமைந்திருக்கிறது. சொந்த மண்ணில் கவிஞர்களது பேனாக்கள் விலங்கிடப்பட்டே தாள்களில் எழுதக் குனிந்தன; தற்போது அவர்களது கவிதைகளின் சிறகுகளுக்குத் தடைகளேதும் இல்லை.

எவருக்கும் நாடுகடந்து வாழ்தல், அதிலும் அக விருப்பமில்லாமல், புற நிர்ப்பந்தங்களால் சொந்த மண்ணைப் பிரிந்து வாழ்தல் என்பது ‘இருத்தலின் ஒரு அவலமான நிலை’தான். நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்வது குறித்து, செல்வாக்குமிக்க விமர்சகரும் ஓரியண்டலிசத்தின் ஆசிரியருமான எட்வர்ட் சையத், தனது "எக்ஸைல் மீதான பிரதிபலிப்புகள்" என்ற முக்கியமான கட்டுரையில், “நாடுகடத்தல் என்பது ஒருமனிதனுக்கும் அவரது பூர்வீக இடத்திற்கும் இடையில் நிதர்சனமாக்கப்பட்டிருக்கும் - கட்டாயப்படுத்தப்பட்ட, எளிதில் குணப்படுத்தமுடியாத-பிளவு” என்கிறார். மேலும், “அப்பிளவு விரிக்கும் ஆழிச் சோகத்தை ஒருபோதும் மனப்படகு கடக்க முடிவதில்லை" என்றும் உருக்கமாகக் குறிப்பிடுகிறார்.

நாடு கடந்திருத்தல் பற்றிய எண்ணங்களும் கவலைகளும் வெறும் புவியியல் அடிப்படையிலானது அல்ல. அது, நாடு கடந்திருத்தல் நிலையை அனுபவிக்கும் நபர்கள், தாம் ஒரு காலத்தில் பற்றாகக் கொண்டிருந்த அடையாளங்களுக்கு இனித் திரும்பவே இயலாதோ என்பதை மனதில் கனமாக உணர்வது. நாடு கடந்திருத்தலென்பது, ஒருவர் உடல்ரீதியாக வீடு திரும்ப முடியாது என்பதல்ல - அவர்கள் தற்போது வசதியாக ஒரு வீட்டில் இருந்தாலும்,“வீட்டிலிருப்பதாக உணர இயலவில்லை” என்பதுதான்.

தங்களுக்குப் பரிச்சயமான உலகத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்படுவது அல்லது எதேச்சதிகாரங்களால் விரட்டியடிக்கப்படுவது போன்ற கடினமான நிலைகளை அனுபவித்தவர்கள்தான் புலம்பெயர்ந்து வாழ்வோர்துயரை உணரமுடியும். இந்தக் கவிஞர்கள் தங்கள் உயிர்வாழ்வைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, மிகமிக அத்தியாவசியமான பலவற்றை இழந்துவிட்டதாகவே எப்போதும் புழுங்கிவருகிறார்கள்.

இந்த நிலையை வேறு சொற்களில் எதிரொலிப்பதுபோல, வந்துள்ள, அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை (1997) குறிப்பிட உரியதாகிறது. அந்த அறிக்கையில், "அரபு கவிதை ஈராக்கில் பிறந்தது என்று ஒரு பழைய பழமொழி உள்ளது. இப்போது, எண்ணற்ற ஈராக்கிய கவிஞர்கள், எழுத்தாளர்கள், பிற அறிவாரந்த கலைஞர்கள், படைப்பாளிகள் நாடுகடத்தப்பட்ட / தப்பி வேறிடங்களுக்குப் புலம் பெயர்ந்திருக்கும் சூழலில், அது (கவிதை) அங்கேயே (ஈராக்கிலேயே) கிட்டத்தட்ட மடிந்து மண்ணாகி விட்டதாகத் தெரிகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை, ஈராக்கிற்குள் கவிதைகளின் அழிவை ஒருவேளை மிகைப்படுத்தியிருப்பதுபோலத் தோன்றினாலும், அக்கூற்று உண்மைக்கு அருகிலேயேதான் உள்ளது என்பதையும் அடிக்கோடிட்டுக்காட்ட வேண்டியுள்ளதாகிறது.

இத்தகைய பின்புலத்தில், தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக தாய்மண்ணை விட்டகன்று, தவித்துக் கொண்டிருக்கும் கவிஞர்களில் ஒருவரான அட்னான் அல்-சயேக் (Adnan Al-Sayegh)கைச் சந்திக்கலாம் வாங்க.

கவிஞர்,1955 இல் ஈராக்கில், யுப்ரேட்ஸ் நதிக்கரையருகேயுள்ள அல்-குஃபாவில் பிறந்தவர். தனது 21 வயதில் தந்தையை இழந்ததால் கல்லூரிக் கல்வியைத் தொடரமுடியாது போயிற்று அவருக்கு. இளமையிலேயே குடும்பப் பொறுப்பேற்க வேண்டிய ஆயத்தங்களை அல்-சயேக் மேற்கொண்டுவந்த நிலையில், ஒரு பேரிடி வந்திறங்கியதுபோல,1980 இல் (முற்றிலும் தேவையற்ற ஈராக் - ஈரான் போரைச் சதாம் உசேன் தொடங்கியபோது) கட்டாய ராணுவப் பணியாற்ற அவரது விருப்பமின்றி அழைத்துச் செல்லப்பட்டார்.

பத்து வயதிலேயே கவி புனையும் ஆற்றலும், ஆர்வமுங்காட்டிய, அப்போதைய 25 வயது இளைஞன் அல்--சயேக்கின் அடுத்த 12 ஆண்டுக்காலம் அவருக்கு அடியோடு விருப்பமில்லாத, மனவெறுப்பு நிறைந்த, அவரது கவிமனத்திற்கு ஒவ்வாத, அழிவுதரும் போர்களில்- ராணுவப் பணியில்- கரைந்தது. ராணுவப் பணியில் சிறிதும் மனம் ஒப்பாமல் நீடித்ததால், அடிக்கடி கண்டிப்புகள், தண்டனைகள் அவர் மேலிறங்கியது.

 கவிஞர் அட்னான் அல்-சயேக்
கவிஞர் அட்னான் அல்-சயேக்

ஒரு கவிஞராக, அல்-சயேக், ஈராக்கிய இலக்கியக் களத்தில் ‘எண்பதுகளின் இயக்கம்’ என்று அழைக்கப்படும் (‘காலக் குழு’) கவிஞர்களது தலைமுறையின் மிகவும் அசலான குரல்களில் ஒருவர் என மதிக்கப்படுபவர். எண்பதுகளின் இயக்கக் கவிஞர்கள், ஈராக்கிற்கு எந்த நற்பலனும் விளைவிக்காத -சதாம் உசேனால் ஏற்பட்ட- ஈரான் - ஈராக் போரின் (1980-1988) கோரங்கள் கண்டு கொதித்தவர்கள்; அதனால் சர்வ அதிகாரியின் அடங்காக் கோபத்திற்கு ஆளானவர்கள்.

பின்னாள்களில், எண்பதாம் தலைமுறைக் கவிஞராக வளர்ந்த அல்-சயேக், மிக இளம் (10) வயதிலேயே கவிதைகள் புனையும் ஆர்வமும் ஆற்றலுங் காட்டுபவராக இருந்ததை அவரது அன்னை அறிந்தாராம். யுப்ரேட்ஸ் நதிக்கரைக்குத் தனக்குப் பிடித்தமான கவிதைப் புத்தகங்களை எடுத்துச்சென்று நதிக்குக் கேட்குமாறு உரக்க வாசிப்பதை, நதியில் குளிக்கும்போது கவிதைகளை மனப்பாடமாக ஒப்பிப்பதை அல்-சயேக் வழக்கமாகக் கொண்டிருந்ததாக அவரது இளவயது நண்பர்கள், கவிஞருடனான நினைவுகளைப் பகிரும்போது குறிப்பிட்டுள்ளார்கள்.

“மிக உயர்ந்த இலக்கிய மொழியிலில்லாமல், மக்கள் பழகுமொழியுடுத்தி, நேர்த்தியுடனும், அம்புமுனை போன்ற கூர்மையுடனும் செதுக்கப்பட்ட கவிஞர் அல்-சயேக்கின் கவிதைகள், சுதந்திரம், இயற்கை, அழகு, காதல், ஆகியவற்றின் மீதான அவரது தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்துவனவாக இருக்கின்றன. மனிதகுலத்தில் பேரழிவுகளையே மாறாது உருவாக்கிவரும் போர்களை எதிர்த்தும், சதாம் உசேனின் சர்வாதிகாரக் கொடூரங்களைச் சமரசமின்றிச் சாடும் ஆயுதங்களாகவும், அட்னான் தனது கவிச் சொற்களை வார்த்தெடுத்திருந்தார்” என்பது கவிதை விமர்சர்களின் ஒருமித்த மதிப்பீடாக இருக்கிறது. கவிஞர் அல்-சயேக் கவிதைகளில் ‘அம்பு’ ஒருகுறியீடாக பல முறை பயன்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிட உரிய உண்மை. எடுத்துக்காட்டாக, ஒரு கவிதையில்,

அம்பை விடும் தருணத்தில்...

அம்பு மகிழ்வது

தனது விடுதலைக்கா?

இலக்கைத் தாக்கி

நிர்மூலம் செய்யப் போகிறோம்

என்பதற்கா?

என்ற வினாவை வீசுகிறார். இலக்கைத் தாக்கி, அதனை அழிக்கப்போகும் நிலையிலும், அடைபட்டுக்கிடந்த அம்பு தனது சுதந்திர வேட்கையை வெளிப்படுத்துவதாகக் காட்டியிருப்பது கவனங்கொள்ள உரியது.

கவிஞரது ‘சுதந்திர ’மனப்போக்கையும், பன்னிரண்டு ஆண்டுக்காலம் ஈராக் ராணுவத்தில் கட்டாயமாகப் பணியாற்ற வேண்டியிருந்த அவரது பின்புலத்தையும் அறிந்தவர்கள், கவிஞர் தன்னையே அந்த அம்பின் நிலையில் வைத்துப் பாடியதாகவே எடுத்துரைக்கிறார்கள். மனித உரிமைகளை அடியோடு நசுக்கும் போர்கள் விளைவிக்கும் பிற பேரழிவுகளையும் அதன் கொடூரங்களையும் கண்டிக்கத் தனது வார்த்தைகளையே அம்புகளாக (ஆயுதங்களாக) அல்-சயேக் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர் என்பதற்கு அவரது கவிதைகளே சான்றாகும். கவிதைகள் சமுதாயத்தில் மாற்றத்தை விளைவிக்க வல்ல வீரியங்கொண்டவை என்று உறுதியாக அவர் நம்பினார். அந்த நம்பிக்கையோடு, எந்த அரசியல் கட்சியையும் சாராமல், எந்தக்கட்சியிலும் சேராமல், சமூக, அரசியல், தார்மீகக் கோபங்களை, மாற்றங்களுக்கான விதைகளாக, ‘சொல்லேருழவனாக’ (ஒரு கவிஞனாகவே) நின்று விதைத்து வருகிறார்,

கவிதை, உரைநடை எதுவானாலும், சர்வாதிகாரத்தின் ஒவ்வொரு வடிவத்தையும், வெளிப்பாட்டையும் தனது அதிகூர்மைக் கண்டனச் சொற்களால் குத்திக் கிழிப்பவராக அல்-சயேக் பயணப்பட்டு வருகிறார். குறிப்பாகத் தனது சொந்த நாடான ஈராக்கையும் அதன் சர்வாதிகாரி(யாக இருந்த) சதாம் உசேனையும் அவர் மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார். தணிக்கை (Censor) மிரட்டல் எனும் எவ்வகை அழுத்தத்திற்கும் அசையா உறுதியொடு அவரது கவிப்பாதை விரிந்து படைப்புகள் பல வெளிவந்து கொண்டிருந்தன. இணையாக அதிகாரக் கோபமும் அவர்மீது வளர்ந்து கொண்டே வந்தது.

அரசாங்கச் சீற்றத்தின் அலை அவரை நெருங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில், சர்வாதிகாரி சதாம் உசேனின் மகன்களில் ஒருவரான உதய் உசேன், ஈராக்கில் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார்! (ஈராக்கில் இலக்கிய வளம் பெருகச் செய்யவா? எதிர்ப்பு எழுத்தை நசுக்கத்தான்!) இதனால் கவிதைக் கிளர்ச்சி செய்து வந்த கவிஞர் அல்-சயேக்குக்கு எதிராக ஆட்சியினரின் கடுமையும் அழுத்தங்களின் கூர்மையும் அதிகரிக்க ஆரம்பித்தது.

எடுத்துக்காட்டாக, 1993 இல் ஒருமுறை அட்னானின் நீண்ட கவிதையின் (உரூக்கின் கீதம்) சில பகுதிகளை, இயக்குநர் ஹமீது அல்-காஸ்னம் என்பவரது நாடகக் குழுவினர், நாடகமாகத் தயாரித்து அந்நாடகம் அரங்கேற்றப்பட்டபோது, அதில், வளைகுடாப் போர், போருக்குப் பொறுப்பான ஈராக்கியப் ‘பெருந்தலைகள்’ விமர்சிக்கப்பட்டதாகக் கருதிப் போலீசார்-நாடகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே –‘யானைபுக்க நிலம்போல’- அதிரடியாக அரங்கில் நுழைந்து அராஜகச் சோதனையிட்டனர். நாடக அரங்கேற்றம் கலைந்தது, பெருமழையில் ஒப்பனையாய்!

உண்மையில் கவிதைதான் அல்-சயேக் எழுதியது. அதன் குறிப்பிட்ட சில பகுதிகளைத் தொகுத்து நாடகமாக்கியது கவிஞரல்ல; நாடக வசனங்களும் இவரெழுதியதல்ல. நாடகத்திற்கு வசனம் எழுதி, இயக்கிய ஹமீது, காவல் துறையினரால், “நாடகங்களுக்கு இனிமேல் மென்மையான, எளிதில் புரியும் வசனங்களாக எழுதுங்கள்” என்று அறிவுறுத்தி அனுப்பப்பட்டுவிட்டார்.

ஆனால், அரங்க அராஜகச் சோதனையைத் தொடர்ந்து, கவிஞர் அட்னான் அல்-சயேக் நாட்டின் கலாச்சார அமைச்சகத்திற்கு “அழைத்துச்” செல்லப்பட்டு மூன்று மணிநேரத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்டார். இறுதியாக “ உங்கள் எழுத்து நடையை மாற்றத் தவறினால், இனிச் சிறையில்தான்” என்று போலீசார் அவரிடம், ‘அதிகார அன்போடு’ கடும் எச்சரிக்கை  வழங்கினர்.(கவிதை எழுதும் நடை எப்படியிருக்க வேண்டும் எனக் கவிஞருக்குக் ‘காக்கிகள்’ பாடம் நடத்தியது போலும்!).

இந்தச் சம்பவம் நடந்த பிறகு, ஈராக்கில் அல்-சயீக் வாழ்க்கைக்கு ஆபத்து முளைவிடத் தொடங்கி விட்டதை அவரது நண்பர்கள், கவிதை ரசிகர்கள் உணரத் தொடங்கினர். அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு எளிய தொடக்கமாக, அட்னானின் அனைத்து படைப்புகளும் ஈராக்கிய புத்தகச் சந்தையிலிருந்து அகற்றப்பட்டன.

கவிஞர் அட்னான் அல்-சயேக், 1980-களில் கட்டாய ராணுவப் பணியாற்ற வேண்டியிருந்ததையும், ராணுவப் பணியில் மனம் ஒட்டாமல் அவர் செயல்பட்டு வந்ததால் அடிக்கடி, கண்டிப்புகளுக்கும் தண்டனைகளுக்கும் அவர் உள்ளாக நேர்ந்ததையும் முன்னர் அறியத் தந்தோமல்லவா? அதிலொரு நிகழ்வு. (1984?) குறிப்பிட உரியது. ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அவர் தடை செய்யப்பட்டபுத்தகங்களைத் தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில், ஈரான் எல்லைக்கருகில், சுலாய்மனியா எனுமிடத்துப் பகுதியிலுள்ள ஷேக் ஓசால் எனும் ஊரில், வெறிச்சோடிய, ஆளரவமே அற்றுக்கிடந்த ஓரிடத்தில்- ஒரு தொழுவத்தில்- மனப் பிறழ்வடைந்த சில வீரர்களோடும், ஒன்றரை ஆண்டுக்காலம் அடைக்கப்பட்டார்.

அவ்வாறான இழிந்த நிலைமைகளில் அவர் அடைக்கப்பட்டிருந்த சூழலில்தான், ‘ஆழ்ந்த விரக்தி சூழ் ஈராக்கிய வாழ்க்கை அனுபவத்தின் உயிர்க் குரலாக ஒலிக்கும்’ ஒரு நெடுங் கவிதையை -அரபு இலக்கிய வரலாற்றில் மிக நீண்ட கவிதையை (548 பக்கங்கள்) - எழுதத் தொடங்கினார். அக்கவிதை உரூக்கின் கீதம் (Uruk’s Anthem) என்றுபெயர் கொண்டது. அங்கு, ஆளரவமற்ற அத்தொழுவத்தில், ஆரம்பிக்கப்பட்ட கவிதை எழுதி முடிக்கப்பட 12 ஆண்டுகள் ஆனதென்கிறார்கள், அறிந்தோர். அக்கீதம் உலகின் ஆரவாரத்தை, சர்வதேச அங்கீகாரத்தை அவருக்குக் கொண்டுவந்தது; அதே சமயத்தில், பின்னாட்களில், கையோடு அவரது உயிருக்கும் ஆபத்தை அழைத்து வருவதாகிவிட்டது. தன் கழுத்துக்குப் போடப்படத் தயாராகிவந்த சுருக்கிலிருந்து தப்பிக்க ஜோர்தானில் 1993 இல் நடந்த கவிதைத் திருவிழாவை ஒரு (மூடிமறைப்பு) வாய்ப்பாகப் பயன்படுத்த அட்னான் முடிவுசெய்து, கவிஞர் தனது தாயகத்தைவிட்டு மிகுமனச்சுமையோடு வெளியேற வேண்டிய கட்டாயம் (1993 இல்) ஏற்பட்டது.

அவரது குடும்பம் ஆறுமாதங்களுக்குப்பின் அம்மான் சென்றடைந்தது. அங்கேயே அல்-சயேக் குடியேறினார். சிலகாலம், அம்மானில் ஜோர்தான் மன்னரின் ஆதரவில் கவிஞர் வாழ்ந்தார். ஆனாலும் விடாது அவரைத் தேடிவந்த ஈராக்கிய ரகசியப் படை, அட்னான் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றிபெற்றது. அதன்பின், அவருக்கும், அவரது குழந்தைகளுக்கும் மரண அச்சுறுத்தல்கள் வந்துகொண்டேயிருந்த நிலைமைகளை உருவாக்கி கவிஞரையும் குடும்பத்தினரையும் மனதளவில் கலவரமடையச் செய்துகொண்டேயிருந்தது ஈராக்கின் ரகசியப்படை.

லண்டனில் அவருடைய ஒரு புதிய கவிதைத் தொகுப்பு, கவிஞர் ஜோர்தானில் இருக்கும்போதே 1995 இல் வெளியானது. அந்நியவானத்தின் கீழிருந்து வெளிவந்த அக்கவிதைகளில் அவர் ஈராக்கிய அதிகாரிகளை, ஈட்டிக்கூர்மை எழுத்துகளால் விமர்சித்துத் தாக்குகிறார். ஒரு சர்வாதிகார ஆட்சியின்கீழ், சுதந்திர எண்ணம் கொண்டிருக்கும் தன்போன்றோர், வாழும்/ வாழ்ந்த அவல வாழ்க்கையைச் சொற்சித்திரங்களாகப் பரப்புகிறார். எரிதழலில் எண்ணெய் ஊற்றியது போலாயிற்று இத்தொகுப்பின் உள்ளடக்கங்களால்.

ஈராக் எழுத்தாளர் சங்கத்தலைவர், சதாம் உசேனின் மகன், உதய் உசேன் 1996 இல் ஈராக்கில் ஒரு பட்டியல் வெளியிட்டார். “இறுதியாக்கப்பட வேண்டியவர்கள் பட்டியல்” (Death List). அதில் கவிஞர் அட்னான் அல்-சயேக் பெயரும் இடம்பெற்றிருந்தது.

குற்றம் என்ன?

கவிஞர் அல்-சயேக்கின் ‘உரூக்கின் கீதம்’ என்ற நீள்கவிதைதான் குற்றம்!

அந்தக்கவிதை,1984 இல் ராணுவத்தில் பணியிலிருந்த அல்-சயேக் தடைசெய்யப்பட்ட சில புத்தகங்களைத் தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒன்றரையாண்டுக்காலம் ஈரானிய எல்லைக்கருகே ஒரு தொழுவத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது எழுத ஆரம்பிக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியும்.

அதற்கு ஏன் 1996 இல் தண்டனை? இதெல்லாம் கேட்டறிந்து விடைபெற முடியுமா சதாம் உசேன் சர்வாதிகார ஆட்சிக்காலத்தில்?

நல்வாய்ப்பாகக் கவிஞர் அல்-சயேக் “இறுதியாக்கப்பட வேண்டியவர்கள் பட்டியல்”  வெளியிடப்பட்டபோது ஈராக்கிலில்லை. 1993 இல் ஒரு கவிதை நிகழ்ச்சியைச் சாக்காக வைத்துக்கொண்டு கவிஞர் ஜோர்தான் சென்றடைந்ததை அறிவோம். பின்னர், அவரது மனைவியும் குழந்தைகளும் ஜோர்தான் வந்து அவருடன் சேர்ந்து கொண்டார்கள் என்பதும் தெரியுமே நமக்கு.

உதய் உசேனின் பட்டியல் வெளியாவதற்குச் சிலமாதங்களுக்கு முன்பு 1996 இல் அல்-சயேக்கின் மற்றொரு கவிதைத் தொகுப்பான Hymne of the Leaves வெளியிடப்பட்டது. இந்நூலும் வெளிவந்தபின், ஈராக் பட்டியலில் கவிஞர் பெயர் இடம் பெற்றிருந்த சூழலில் கவிஞர் அல்-சயேக்குக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தேவையான பாதுகாப்பிற்கு ஜோர்தான் உத்தரவாதம் அளிக்க முடியாத வகையில் ஈராக்கிலிருந்து அழுத்தம் வந்தது. இதற்கிடையில், ஈராக்கிய அரசாங்கத்தின் அழுத்தத்தின் விளைவாக அட்னானின் படைப்புகள் ஜோர்தானிலும் கூடத்தடை செய்யப்பட்டன.

ஐ.நா அமைப்பு இவ்விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு கவிஞர் அல்-சயேக், அவரது குடும்பத்தினர்க்கு ஸ்வீடன் நாட்டில், 1996 இறுதியில் தற்காலிகப் புகலிடம் ஏற்பாடு செய்தது. அதன்பின், அங்கிருந்து அல்-சயேக் குடும்பத்துடன் லண்டன் வந்தடைந்து, 2004 முதல், லண்டனில் வசித்து வருகிறார். நாடுகடத்தப்பட்டு நிற்கும் தன் அவல நிலையைக் கவிஞர் அல்-சயேக் –யுலிசிஸ் என்ற கவிதையில்,

மால்மோவின் பாலத்தில்...

யூப்ரடீஸ் நதி தனது கைகளை நீட்டி

என்னை அழைப்பதைக் கண்டேன்-

....

....

கனவு முடிந்திருக்கவில்லை.

....

இடிபாடுகளின் தேசத்தில்

ஒரு ஜன்னலுக்கு பிரியாவிடை,

குண்டு வீசப்பட்டுப்,

தன் பசுமையை இழந்த

ஒரு பனைமரத்திற்கு பிரியாவிடை,

என் தாயின் களிமண் அடுப்புக்குப்

பிரியாவிடை,

அலமாரிகளில் குவிந்துகிடக்கும்

எங்கள் சோர்வடைந்த வரலாற்றிற்குப்

பிரியாவிடை.

....... .........

எனக்கு நிழல் கொடுத்தபனை மரங்களின்

வெற்று உருவங்களைத் தவிர

வேறெதுவும் அங்கே எஞ்சியிருக்கவில்லை.

வெற்று பெஞ்சுகளும்,

எங்கள் தலைகளைக்கோரும்

தூக்கு மேடைகளின் அடிமரங்களும் தவிர

வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை.

தனது வலிகளோடு

எனக்கு ஞானஸ்நானம் செய்த யூப்ரடீஸ்நதி

இன்னும் வளைந்து, நெளிந்துசெல்கிறது.

அக்கறையற்ற கிராமங்களின்

துயரங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஓ, யுலிஸஸ்,

நீங்கள் மட்டும் வராமல் இருந்திருந்தால்...

மால்மோவுக்குச் செல்லும்பாதை

இன்னும் நீண்டதாக இருந்திருந்தால்...

ஓ, மகிழ்ச்சியின் ஒரு கணத்தையும் காணாத அந்நியனே!

ஒவ்வொரு நாடுகடத்தப்பட்டவரும்

சுவர்களற்ற சிறைகளாக மாறியிருப்பது

எப்படி?

எதனால்? 

அட்னான் அல்-சயேக், தற்போது, ஈராக், அரபு எழுத்தாளர் சங்கங்கள், ஈராக், அரபு பத்திரிகையாளர்கள் சங்கங்கள், சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பு, ஸ்வீடிஷ் எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் ஸ்வீடிஷ் பேனா கிளப் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார். பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்; அவற்றில், பேச்சு சுதந்திரத்திற்கான அட்னானின் வற்றா முயற்சிகளுக்காக வழங்கப்பட்டிருக்கும் ஹெல்மேன்- ஹம்மெட் சர்வதேச கவிதை விருது (நியூயார்க் 1996), ரோட்டர்டாம் சர்வதேச கவிதைவிருது (1997) மற்றும் ஸ்வீடிஷ் எழுத்தாளர்கள் சங்க விருது (2005) ஆகியன குறிப்பிட்டுச் சொல்ல உரியவை. இவரது கவிதைகள் ஆங்கிலம், ஸ்வீடிஷ், ஸ்பானிஷ், பிரஞ்சு, ஜெர்மன், ரோமானியன், நோர்வேஜியன், டேனிஷ், டச்சு, பாரசீக மற்றும் குர்திஷ் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

சதாம் உசேனின் ஆட்சியில் இருந்து ஈராக் இறுதியாக விடுபட்டுவிட்டது. இருப்பினும், சதாம் காலத்தோடு, அவரது “வீர மரணத்தோடு”, ஈராக் இயல்பு நிலைக்கு வந்திருக்கும் என்று யாரும் சிறிதும் எதிர்பார்க்க வாய்ப்பேயில்லை என்பது கவிஞர் அல்-சயேக்கைப் பொறுத்தவரை உண்மையாகியுள்ளது.

ஈராக்கின் பாஸ்ராவில், 2006 வசந்த காலத்தில் நடந்த மூன்றாவது அல்-மார்பெட் கவிதை விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டார் கவிஞர் அட்னான் அல்-சயேக். ஈராக்கில் எல்லாம் சரியாகியிருக்கும் என நம்பித் தனது கவிதைகளை வாசிக்க லண்டனிலிருந்து கவிஞர் வந்தார். வழக்கம்போல, அவர் வாசித்த கவிதைகள் “சகிப்புத்தன்மையற்ற ஆயுதமேந்திய தீவிரவாதிகள் / போராளிகளுக்குச் சவுக்கடியாய்ச்”சுழன்றன. இதனால் தீவிரச் செயல்பாட்டாளர்கள் நிலைகுலைந்தனர். அல்-சயேக்கிற்கு மரண அச்சுறுத்தல் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டதுடன், அவரது நாக்கு வெட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

லண்டனில்  அட்னான் அல்-சயேக்
லண்டனில் அட்னான் அல்-சயேக்

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அவசர, அவசரமாக, ஆபத்தான ஒரு பயணத்தை ஏற்பாடு செய்து, பாஸ்ராவைவிட்டு கவிஞர் அல்-சயேக் குவைத் வழியாக வெளியேற உதவி, அவர் தன் வாழிடம் (லண்டன்) அடையச் செய்தனர்.

சொந்த நாடான ஈராக்கில், சொல்லப்போனால் வருத்தம் விளைவிக்கும் தொடர் இன்னல்களை, சிறைவாசங்களைப் பலகாலம் சர்வாதிகாரி சதாம் உசேன் ஆட்சியில் அனுபவிக்க நேர்ந்த கவிஞர் அட்னான் அல்-சயேக்கின் (உரூக்கின் கீதம் - Uruk’s Anthem), கவிதைதான் குற்றம் என்று கவிதை வெளியான பல ஆண்டுகள் கழிந்து அறிவிக்கப்பட்டது. அதோடு, அக்குற்றத்திற்குத் தண்டனையாக கவிஞர் பெயரை “இறுதி செய்யப்பட வேண்டியவர்கள்” பட்டியலில் சர்வாதிகாரி சதாம் உசேனின் மகன் சேர்த்து அறிவித்த கொடூரம் நிகழ்ந்தது. கொடூரம் ஈராக்கில் குறைந்தபாடில்லை என 2006 இல் பாஸ்ராவில் நடத்தப்பட்டிருக்கும் குரூரம் எடுத்துக்காட்டுகிறது.

நாடகன்று தப்பிப்பிழைத்திருக்கும் கவிஞர் அல்-சயேக் லண்டனிலிருந்து சுதந்திரமாகக் கவிப்பயணம் தொடர்ந்து வருவது கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள் களம் நிற்போரனைவர்க்கும் நிறை ஆறுதல்.

**

[கட்டுரையாளர் - ஆங்கிலப் பேராசிரியர். ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்கள் எழுதியுள்ளார்] (wcciprojectdirector.hre@gmail.com)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com