வாங்க...
பதிவு செய்யப்பட்டுள்ள உலக வரலாற்றில், (Recorded history of the World) ‘கவிதைதான் குற்றம்’ என்ற அடிப்படையில் உலகக் கவிஞர்களிலேயே முதலாவதாக அரச தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட கவிஞரைச் சந்திக்க.
இப்பயணத்தில், நாம் நீண்ட நெடிய உலக வரலாற்றின் மிகப்பழங்காலங்களில் ஒன்றுக்கு (கிமு 43 - கிபி 17), மிகுபுகழ் கொண்டிருந்த ஒரு பண்டைக்காலச் சாம்ராஜ்ஜியத்திற்குச் (Roman Empire) சென்றுவர வேண்டும், வாங்க.
’கவிஞர்கள், இன்னதெனப் புரியாத ஒரு உத்வேகத்தின் உயிர்ச் சித்திரங்கள்; நிகழ்காலத்தின்மீது எதிர்காலம் படியச் செய்யும் பிரம்மாண்ட நிழல்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள்; கவிஞர்கள், புரியாததைப் புரியச்செய்யும் சொற்கள்; புதியதோர் உலகம் செய்யப் புறப்பட்ட போர்களுக்கெல்லாம் முன்நின்று முழங்கும் எக்காளங்கள்; உலகையே தான் உத்வேகப்படுத்துவதை உணராது, காலங்காலமாக, உலகப் பரப்பெங்கும் இயல்பாக ஓடிக்கொண்டிருக்கும் வளஞ்செய் பேராறுகள்; மானுட மேன்மைகள் மங்காது வளர்க்கும் வற்றாத ஜீவப்பிரவாகங்கள்.
‘’கவிஞர்கள், சமுதாயத்தில் அசைக்க இயலாச் செல்வாக்குப் பெறுகிறார்கள்; அதனால் எண்ணற்றவர்களுக்கு உத்வேகமளிக்கும் ஊக்கிகளாகிறார்கள்; அகிலத்தையே அசைக்கும் ஆற்றல் கொண்டவர்களாகிறார்கள். கவிஞர்கள், அங்கீகரிக்கப்படாத, ஆனால் உலகச் சட்டமியற்றுபவர்கள்.(Poets are unacknowledged legislators of the world) என்று முழங்கினான், கவிதைக்காக உரைநடைக் கேடயமேந்திக் களமாட வந்த புரட்சிக் கவிஞன் ஷெல்லி (Percy Bysshe Shelley 1792-1822-, Defence of Poetry, 1821, நூலாக வெளியானது, ஷெல்லி மறைந்து 18 ஆண்டுகள் கழிந்து 1840).
ஆனால், ஷெல்லியின் காலத்திற்குப் பலநூறாண்டுகள் முன்னர் தோன்றிப் புகழடைந்திருந்த கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ (Plato- கி.மு. 427 - 347), கிட்டத்தட்ட ஷெல்லி, போற்றிக் குறிப்பிட்டிருந்த அதே காரணங்களைச் சுட்டிக்காட்டி- கவிஞர்கள் தம் மந்திரச்சொற்களால் மற்றவர்களை ஈர்த்து, கற்பனையான தகவல்களைக்கூட நம்பவைத்து விடுகிறார்கள், ஆகவே- “கவிஞர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட வேண்டியவர்கள்” என்றும் தனது லட்சியக் கற்பனைக் ‘’குடியரசில் (Republic) கவிஞர்களுக்கு இடமில்லை’’ என்று ஆதியிலேயே அறிவித்துச் சென்றதையும் நாம் அறிவோம். பிளேட்டோ, சிறந்த கவிஞர்கள் மீது மரியாதை கொண்டிருந்தவர்தான். ஆனாலும், கவிஞர்களின் திறமைகளை “அனைவருக்கும் பரிசளிக்கப்படாத, கடவுள் அனுப்பிய பைத்தியக்காரத்தனம்"என்றுதான் உறுதிக் கருத்துக் கொண்டிருந்தார்.
ஒருவேளை, கிரேக்க நாட்டில் பிளேட்டோ அறிவித்திருந்த “கவிஞர்கள் நாடு கடத்தப்பட வேண்டும்” என்ற கி.மு. 420 காலக் கருத்து காற்றோடும் காலத்தோடும் மெல்லப் பரவி ரோமாபுரிச் சாம்ராஜ்ஜியத்திற்கு வந்து நிலைபெற்றிருந்ததோ என கி.மு. 8 இல் நடந்ததொரு நிகழ்வு எண்ணத் தூண்டுகிறது நம்மை.
ரோமாபுரிப் பேரரசில் -அதன் எல்லைகள் கடந்தும் - பெரும்புகழ் பெற்றிருந்த கவிஞர் ஒருவர், தான் செய்த கவிதைக் குற்றத்திற்காக, பேரரசர் அகஸ்டஸின் சினங்கிளறியதால் -பிளோட்டோவின் பண்டைக்கால ஆலோசனைப்படி–தண்டனையாக, நாடு கடத்தப்பட்டிருக்கிறார். பிளேட்டோவின் கற்பனை உலகில் (Utopia ‘Republic’) அல்லது அவர் வாழ்ந்த கிரேக்க நாட்டில் கவிஞர்கள் யாரும் நாடு கடத்தப்பட்டதாகப் பதிவுகளில்லை, வரலாற்றின் பக்கங்களில்.
ஆக, உலக வரலாற்றிலேயே முதலாவதாக நாடு கடத்தப்பட்ட கவிஞர்; படைப்பாற்றலின் அதிஉன்னத வெளிப்பாடு எனப் போற்றப்படும் கவிதைதான் (நாடு கடத்தப்படுவதற்கான) குற்றம் என ஆழிசூழ் உலகத்திலேயே முதலாவதாகத் தண்டனைக்குள்ளான கவிஞர்; கிமு 43 மார்ச் 20 இல் ரோமிலிருந்து 145 கிமீ (90 மைல்) கிழக்கே உள்ள அப்ருஸ்ஸோவில் உள்ள சுல்மோவில் பிறந்த -பப்லியஸ் ஓவிடியஸ் நாசோ (Publius Ovidius Naso) என்ற இயற்பெயர்கொண்டிருந்த - கவிஞர் ஓவிட் (Ovid).
ஏன் இந்தத் தண்டனை?
வரலாற்றில் முதன்மை பெற்றுவிட்ட இந்நிகழ்வின் பின்புலத்தை முதலிலும் அடுத்து, கவிஞர் ஓவிட் பற்றியும் கொஞ்சம் விளக்கமாகத் தெரிந்துகொள்வது அவசியமல்லவா? வாங்க.
கவிஞர் ஓவிட் பிறந்த (கி.மு. 43) காலப் பகுதியில் ரோம் குடியரசின் தூணாக இருந்த- ரோம் குடியரசு வரலாற்றில் சாதுரியமான முதல் முக்கூட்டை (Triumvirate) பாம்பியஸ், மார்க்கஸ் கிரேசஸ் ஆகியோருடன் அமைத்துக்கொண்டு அரசாண்ட -ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்டிருந்தார் (கிமு 44). குடியரசு வீழ்ந்துவிட்டது என்றே பலரும் கருதியநிலை. உள்நாட்டுப் போரும் தொடங்கியிருந்தது. அச்சமயத்தில், அப்பல்லோனியாவில் கல்வி பயின்று கொண்டிருந்த இளைஞன் ஆக்டேவியன், அங்கிருந்து கிளம்பி வந்து தனது வளர்ப்புத் தந்தையின் கொலையாளிகளைப் பழிவாங்குவதற்காக அவர்களைத் துரத்திக் கொண்டிருந்தார்.
அரசியல், ஆட்சியியலில் அதிகம் அனுபவமில்லாதவரெனக் கருதப்பட்டிருந்த இளம் ஆக்டேவியன், ரோமானிய அரசியலில் வழமையாகப் பரவிக்கிடந்த துரோகக் கடல்களைத் திறமையாகக் கடக்க, மார்க் ஆண்டனி, மார்கஸ் லெபிடஸ் ஆகிய தளகர்த்தர்களுடன் இணைந்து இரண்டாவது முக்கூட்டை (Second Triumvirate) உருவாக்கி, ரோமில் மிகவும் சக்திவாய்ந்த மூன்று படைத் தளபதிகளில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டான். இந்த ஆக்டேவியன், நட்புத் துரோகிகளால் கொலைப்பட்டு வீழ்ந்த ஜூலியஸ் சீசரின் பேரன், அவரால் தத்தெடுக்கப்பட்ட வளர்ப்பு மகன், சீசரால் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த வாரிசு, வெகு விரைவில் ரோமின் முதல் பேரரசராக- அகஸ்டஸ் சீசராக- எழுச்சி கண்ட ஆற்றலாளன்.
தனது முக்கூட்டுப் பலத்தால், உள்நாட்டுப் போர்களை ஒடுக்கி, ரோமானிய அரசை மீண்டும் கட்டியெழுப்பி, மறுசீரமைப்பு செய்யும் மகத்தான பணியில் அகஸ்டஸ் தனது கவனத்தைக் குவித்தார். பாரம்பரியக் குடியரசு நிறுவனங்களின் முகப்புகளை மீட்டெடுத்துப் பராமரிக்க அகஸ்டஸ் செயல்படுத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மூலம் அதிகாரம் பேரரசரின் கைகளில் தானாகவே குவிந்தது.
குடியரசின் பிம்பத்தை மறைத்து விடாமல், தனது எதேச்சதிகார ஆட்சியின் யதார்த்தங்களுடன் கவனமாக இணைத்து அகஸ்டஸ் சமநிலைப்படுத்தினார். எல்லைகளை நிலைப்படுத்துதல், தேவையற்ற ராணுவ நடவடிக்கைகளை–போர்களைக்- குறைத்தல், உள்வளர்ச்சியில் கவனம் செலுத்துதல் என அகஸ்டஸின் ராஜதந்திர புத்திசாலித்தனமும் முந்தைய படை வெற்றிகளும் இந்த ரோம் நாட்டிலுருவான ஸ்திரத்தன்மைக்குப் பங்களித்தன, பழைய கொந்தளிப்புகளிலிருந்து பேரரசுக்கு ஓய்வு அளித்தன.
அரசியல் மற்றும் ராணுவ சீர்திருத்தங்களுக்கு மேலதிகமாக ரோமின் சமூக, பொருளாதாரக் களங்களில் அகஸ்டஸ் அழியாத முத்திரைகள் பதித்தார். சாலைகள், நீர்வழிகள் மற்றும் அரா பாசிஸ் போன்ற நினைவுச்சின்ன கட்டமைப்புகள் உள்ளிட்ட பொதுப்பணித் திட்டங்களுக்கு நிதியளித்துப் பேரரசின் செழிப்பை, மகத்துவத்தை வெளிப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டார். ஓரே ஆண்டில், பல ஆண்டுகளாக நலிந்து போயிருந்த 80 வழிபாட்டு கோயில்களை அவர் மீட்டெடுத்தார். பாலடைன் மலையில் அப்பல்லோ கோயிலை மீண்டும் கட்டினார். ரோமானிய தெய்வங்களின் வழிபாட்டை ஊக்குவித்தார். (அறநிலையத்துறை, அகஸ்டஸ் மாடல்)
தனது ஆட்சியை சட்டப்பூர்வமாக்குவதற்கும் சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும் அகஸ்டஸ் எடுத்த முயற்சிகளில் மதம் முக்கிய பங்கு வகித்தது. அதற்காக அவர் குறிப்பிடத்தக்க மத சீர்திருத்தங்களை மேற்கொண்டார். தனது அதிகாரத்தை வலுப்படுத்தவும், பண்டைய ரோமின் தெய்வீக, வீரயுகக்காலத்துடன் தனது ஆட்சியை இணைத்துக் காட்ட உதவும் கருத்தியல் பிரச்சாரத்தை ஊக்குவித்தார். பாரம்பரிய ரோமானிய மதத்தையும் ஒழுக்கத்தையும் மீட்டெடுப்பவராக தன்னை அகஸ்டஸ் முன்நிறுத்திக்கொண்டார்.
பேரரசரை மையமாகக்கொண்ட ஒரு பொதுவான மத மற்றும் கருத்தியல் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் பேரரசின் பல்வேறு மக்களை ஒன்றிணைக்க மிக முக்கியமான மத சீர்திருத்தங்களில் ஒன்றாக லுபர்காலியாவின் மறுமலர்ச்சி, அவரது நினைவாக ஒரு திருவிழாவான அகஸ்டாலியாவை நிறுவியது., தீர்க்கதரிசனம் மற்றும் கலைகளுடன் தொடர்புடைய அப்பல்லோ கடவுளுடனான தனது சிறப்பு தொடர்பை வலியுறுத்தியது முதலியவற்றைக் குறிப்பிடலாம். ஏகாதிபத்திய வழிபாட்டுமுறை உருவாக்கத்தின் மூலம் அகஸ்டஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை தெய்வீகமாக அல்லது அரை-தெய்வீக நபர்களாக வணங்குவதை மரபாக ஏற்படுத்தியது.
அகஸ்டஸ் இலக்கியத்தையும் கலைகளையும் தனக்கு ஆதரவான கருத்தியல் பிரச்சாரக் கருவிகளாகப் பயன்படுத்தினார். அவர் விர்ஜில், ஹோரேஸ், ஓவிட் போன்ற கவிஞர்களை ஆதரித்தார், கவனிக்க, ‘அரசியல் முக்கூட்டு’ வேறு களங்களில் பணிகள் செய்துவரும் வேளையில், அகஸ்டஸ்தான் ‘ரோமின் மீட்பர்’ என்ற பிம்பத்தை இலக்கியங்கள் மூலமும் வலுப்படுத்தக் கருதினார், பேரரசர். (அகஸ்டஸ் மாடல்!)
அதற்குதவ, விர்ஜில், ஹோரேஸ், ஓவிட் எனும் இலக்கிய முக்கூட்டு (Literary Triumvirate) அகஸ்டஸ் ஆட்சியைக் கொண்டாடும் படைப்புகளை உருவாக்குவதில் ஈடுபட்டது. உதாரணமாக, விர்ஜிலின் "ஏனெய்ட் (Aenid) ", அகஸ்டஸை வீரமிக்க ட்ரோஜன் இளவரசன் அனீஸுடன் இணைத்து, ரோமின் பழைய புராண காலத்திற்கும் அகஸ்டன் நிகழ்காலத்திற்கும் இடையிலான தொடர்ச்சியை நிறுவுவதாக எழுதப்பட்டது. ஹோரேஸ் தனது பாடல்கள், நையாண்டிகள் வழியே அகஸ்டஸின் நற்பண்புகளையும் சாதனைகளையும் பாராட்டுவதாக மலர்த்தினார்.
இந்த வகையில் ஓவிட்டின் படைப்புகள் அவ்வளவு வெளிப்படையாக “அகஸ்டஸ் புராணம்” பாடுவதாக இல்லை. இவ்விஷயத்தில் மிகவும் தெளிவற்றதாக இருந்தாலும், அகஸ்டன் காலத்தின் கலாச்சார சூழலை ஓவிட் படைப்புகள் பிரதிபலித்தன என்பது உண்மை.
அகஸ்டஸ் தொடங்கிய சமூக, தார்மீக சீர்திருத்தங்களும் ரோமானிய சமுதாயத்தில் நீடித்த தாக்கங்களை ஏற்படுத்தின. பாரம்பரிய ரோமானிய மதிப்புகளை மேம்படுத்துவதற்கும், குடும்பம் என்ற அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மத நடைமுறைகளை மீட்டெடுப்பதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் ரோமானிய சமூக கலாச்சார வாழ்க்கையை உறுதிப்படுத்திப் புத்துயிர் பெற உதவியது. இந்த சீர்திருத்தங்கள் ரோமின் கடந்தகால மரபுகளில் வேரூன்றிய ஒரு ஒருங்கிணைந்த மற்றும் தார்மீக ரீதியாக நேர்மையான சமூகம் பற்றிய அகஸ்டஸின் பார்வையைப் பிரதிபலித்தன.
மொத்தத்தில் அகஸ்டஸின் ஆட்சிக்காலம் ரோமானிய மதிப்புகள், லட்சியங்களைக் கொண்டாடும் கலாச்சார மறுமலர்ச்சி, இலக்கியச் செழிப்பு (விர்ஜிலின் "ஏனெய்ட்"), கலை, கட்டடக் கலை வளர்ச்சி முதலானவைகள் இணைந்து இது அகஸ்டன் யுகம் என்று அழைக்கப்படும் சிறப்படைந்தது.
இன்று நாம் அறிந்திருக்கும் ரோமைக் கட்டியெழுப்பியது குறித்து "நான் ரோமை செங்கற்களால் ஆன நகரமாகக் கண்டேன்; அதைப் பளிங்கு நகரமாக ஆக்கி ஒப்படைத்துச் செல்கிறேன்" என்று அகஸ்டஸ் தனது பணிகள் குறித்துப் பெருமிதமாகக் குறிப்பிட்டது, ‘உண்மை, வெறும் (தற்)புகழ்ச்சியில்லை.’
இவ்வளவு சிறப்பாக ஆண்டு, குடியரசாக இருந்த ரோமைப் பேரரசாக நிலைநிறுத்தி, ஆக்டேவியனாக இருந்த தன்னை அகஸ்டஸ் (மரியாதைக்குரியவர்) என்றும் “முதன்மையர்” என்றும் மக்களே அழைக்குமாறு சாதுரியம் செய்த பேரரசர் அகஸ்டஸ் மக்களிடையே தளர்வாகிக்கிடந்த தனிமனித ஒழுக்கம்; இறைச் சிந்தனையின்மை; ‘குடும்பம்’ எனும் அமைப்பைப் பேணாதது; ஆண்களும் பெண்களும் திருமண உறவுதாண்டி அலைதல் போன்ற இழிபோக்குகளைக் களைந்து, சீராக்கி, சுய ஒழுக்கம் பேரரசின் மக்களிடையே இயல்பான பண்பாக வளரவேண்டும் எனக் கருதினார். சமுதாய விழுமியங்களாக வளர்ந்து நிலைபெற வேண்டிய ஒழுக்கக் கோட்பாடுகளைச் சட்டங்கள் மூலமாகச் செயல்படுத்த விரும்பினார் அகஸ்டஸ். (இதுவும் அகஸ்டஸ் மாடல்!)
அகஸ்டஸின் முதல் மனைவி ஸ்க்ரிபோனியா மூலம் அவர் பெற்ற ஒரே மகள் ஜூலியா, தி எல்டரை திருமண உறவுகடந்த சீர் கேட்டிற்காக அரச தண்டனைக்குள்ளாக்கி நாடு கடத்தப்பட்டதும் நடந்தது. தவறு செய்த தன் ஒரே மகனைத் தேர்ச்சக்கரத்தினடியிட்டு நசுக்கிக் கொன்று, கன்றை இழந்த பசுவுக்கு நீதி வழங்கிய மனுநீதிச் சோழனைப்போல, தன் நாட்டின் ஒழுக்க விதிகளை மீறியது தனது ஒரே மகள் என்றாலும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதை உறுதிப்படுத்தி, மகளை நாடுகடத்திய வளையா நேர்மை அகஸ்டஸ் காட்டியது!
இவற்றைக் குறிப்பாக இங்கு எடுத்துரைப்பது, அகஸ்டஸின் நேர்கோட்டு ஒழுக்க நிர்வாக மனப்பாங்குதான், புரவலராகத் தன்னால் முன்னர் ஆதரிக்கப்பட்டிருந்த இலக்கிய முக்கூட்டு அணியில் ஒருவரான கவிஞர் ஓவிட் நாடு கடத்தப்பட்டதற்கும் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டவே.
அகஸ்டஸை இங்கு நிறுத்தி வைத்துவிட்டு நாம் கவிஞர் ஓவிட் குறித்துச் சற்று அறிந்து வரலாம், வாங்க.
முன்னரே குறிப்பிட்டறிந்துள்ளோம், ரோமானிய கவிஞர் ஓவிட், பேரரசர் அகஸ்டஸின் இலக்கிய முக்கூட்டு அணியில் ஒருவராக மதிக்கப்பட்டிருந்ததை.
கவிஞர் ஓவிட், பிறந்தது மார்ச் 20, கிமு 43, ரோமானியப் பேரரசிலிருந்த சுல்மோ, [இப்போது இத்தாலியில், சுல்மோனா]; அவர் இறந்தது: கிமு 17, டோமிஸ், மோசியா [தற்போது ருமேனியாவிலுள்ள கான்ஸ்டாண்டா). கவிஞரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் டிரிஸ்டியா (சோரோஸ்) என்ற தலைப்பில் அவரே எழுதியுள்ள ஒரு சுயசரிதைக் கவிதையில் விவரிக்கப்பட்டுள்ளன.
அவரது குடும்பம் பாரம்பரியமானதாகவும், மரியாதைக்குரியதாகவும் இருந்தது, ரோமானிய நைட்லி (Knightly) வகுப்பின் உறுப்பினராக –சாதாரணப் பொது மக்களுக்கும் செனட்டர்களுக்கும் இடைப்பட்ட சமுதாயப் படிநிலை- இருந்த அவரது தந்தை அவரையும் அவரது மூத்த சகோதரரையும் ரோமுக்கு கல்வி கற்க அனுப்பும் அளவுக்கு வசதியுடன் இருந்தார்.
ரோமில், அன்றைய சிறந்த ஆசிரியர்களின் கீழ், அவர் கல்வி கற்றார். ஓவிட் ஒரு நல்ல பேச்சாளருக்கான குணங்களைக் கொண்டிருப்பதாக ஓவிட் அறியப்பட்டதால், அவரது தந்தையின் அவரைச் சட்டம் சார்ந்த கல்வி பயில வலியுறுத்தினார். இருந்தபோதிலும், தனக்கு இயல்பாக வந்த, ‘எழுத்துக்காக’, இலக்கியத்துக்காக ஓவிட் தந்தையின் அறிவுரையை ஏற்கவில்லை; இலக்கியம் புகுந்தார். படைப்புப் பல படைத்துச் சிறந்தார்.
ரோமில் கல்வி முடிந்ததும், உலகறிவு பெற, ஓவிட் ஏதென்ஸ் சென்று சிறிது காலம் கழித்தார். அது அப்போது உயர் வகுப்பு லட்சிய வேட்கைகொண்ட இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம். ஆசியா மைனர், சிசிலியில் பயணங்கள் மேற்கொண்டார். பின்னர் ரோம் திரும்பியதும் தொடக்கநிலை நீதித்துறை பதவிகள் சிலவற்றில் கடமையாற்றினார். அவை அரசு அதிகார ஏணியில் முதல் படிகள்தாம். ஆனால், ‘இவ்வாழ்க்கை தனக்குப் பொருந்தாது’ என்று அவர் விரைவிலேயே முடிவு செய்தார். கவிதை, கவிஞர்களின் சமூகத்தை வளர்ப்பதற்காக தனது அதிகார அலுவல் வாழ்க்கையைக் கைவிட்டார்.
அவரது ஆர்ஸ் அமடோரியா, மெட்டாமார்போசஸ் ஆகியவற்றிற்காக ஓவிட் அதிகம் அறியப்பட்டவர். பாரம்பரிய தொன்மத்தின் கற்பனை விளக்கங்களாக மற்றும் உச்சநிலைக் கவிதா நுட்ப சாதனைக்கான எடுத்துக்காட்டுகளாக அவரது எழுத்துகள் இருந்தன. அவரது கவிதைகள் மகத்தான செல்வாக்குப் பெற்றிருந்தன. ஆனால், அகஸ்டஸின் இலக்கிய முக்கூட்டினரில் “பேரரசர் புராணம்” பாடிய மற்ற இருவர் போல இல்லாமல் விலகிநின்று, தன் மனஞ்சொல்லும் வழியில் காதலைப் பாடினார். காதல் பற்றிப் பெரிதும் பாடிய ஓவிட் குறித்து, வெறுப்பாளர்கள் –‘மன்னர் போற்றிகள்’- “ஓவிட்டுக்குத் தெரிந்த ஒரே தொழில், காதலை, காதலை மட்டும் பாடுவதுதான்” என்று இகழ்ந்த விமர்சனங்கள் எழுந்தன.
ஓவிட்டின் முதல் படைப்பான தி அமோர்ஸ் ( தி லவ்ஸ் ) உடனடி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, எபிஸ்டோலே ஹெராய்டம் அல்லது ஹீரோயிட்ஸ் (கதாநாயகிகளின் கடிதங்கள் ), மெடிகாமினாஃபேசி ("அழகுசாதனப் பொருட்கள்"; ஆங்கில மொழிபெயர்ப்பு. அழகுக் கலை ), ஆர்ஸ் அமேடோரியா ( காதல் கலை ), மற்றும் ரெமீடியா அமோரிஸ் (காதலுக்கான வைத்தியம்) என அணி அணியாக அவரது படைப்புப் பட்டறையிலிருந்து கிளம்பின ‘எழுத்துக் கூட்டம்’. அவரது படைப்புகள் அனைத்தும் செழிப்பான சமுதாயத்தில், புத்திசாலித்தனமான, அதிநவீன, இன்பம் தேடும் சமூக உறுப்பினர்களைப் பிரதிபலிக்கின்றன என்று ஒரு விமர்சகர் மதிப்பீடு செய்துள்ளார்.
ஓவிட்டின் ஆரம்பகாலக் கவிதைகளின் பொதுவான கருப்பொருள் காதல், காதல் சூழ்ச்சி முதலியன. ஆனால், அவை ஓவிடின் சொந்த வாழ்க்கையை மிக நெருக்கமாக பிரதிபலித்ததாகச் சொல்ல வாய்ப்பில்லை. ஓவிட் செய்துகொண்ட மூன்று திருமணங்களில் முதல் இரண்டு திருமணங்கள் குறுகிய காலம் மட்டுமே நிலைத்தன. தன் கவிதைகளில் மரியாதையுடனும் பாசத்துடனும் பேசப்படும் அவரது மூன்றாவது மனைவி, அவர் இறக்கும் வரை அவருக்கு மாறாத் துணையாக இருந்தார்.
ரோமில் ஓவிட், கவிஞர் அல்பியஸ் டிபுல்லஸை உள்ளடக்கிய ஒரு இலக்கிய வட்டத்தின் புரவலரான மார்கஸ் வலேரியஸ் மெசல்லாவின் நட்பையும் அனுசரணையையும் அனுபவித்தார். ஓவிடின் மற்ற நண்பர்களில் கவிஞர்கள் ஹோரேஸ், செக்ஸ்டஸ் ப்ராபர்டியஸ், இலக்கண நிபுணர் ஹைஜினஸ் ஆகியோர் குறிப்பிட உரியர். அவர் காலத்துக் கவிஞர்களிடையே ஒரு உறுதியான இடத்தைப் பெற்றிருந்த ஓவிட், மெட்டாமார்போசஸ், ஃபாஸ்டி ("காலண்டர்") போன்ற லட்சியப் படைப்புகளைத் தொடங்கினார். மெட்டாமார்போசஸ் கிட்டத்தட்ட முழுமையடைந்த நிலையில், அவரது வாழ்க்கை திடீரென ஏற்பட்ட ஒரு பேரிடியால் நிலைகுலைந்து சிதைந்தது.
கி.பி. 8 இல் பேரரசர் அகஸ்டஸ் அவரை கருங்கடலில் உள்ள டோமிஸுக்கு (அல்லது டோமி; நவீன கான்ஸ்டாண்டா, ருமேனியாவிற்கு அருகில்) நாடுகடத்தினார். ஏன்?
ஓவிட் நாடு கடத்தப்பட்டதற்கான காரணங்கள் இன்றுவரை ஒருபோதும் முழுமையாக அறியப்படாத நிலையில்தான் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன.
நாடு கடத்தப்பட்டதற்கான காரணங்கள் குறித்துப் உலகின் பல பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வுகள், தனிப்பட்ட இலக்கிய, வரலாற்று வல்லுநர்கள் ஆய்வுகள் என வரிசைகட்டி வந்துகொண்டேயுள்ளன. இவ்வளவு விரிவான சந்தேகங்களுக்கும், அவற்றிற்கான விடைகள் எனப் பலரது ஆய்வுகள் அடுக்கி வருவனவற்றிற்கும் இடைவெளிகள் குறைந்தபாடில்லை. அதிமுக்கிய காரணம், ஓவிட் நாடு கடத்தப்பட்டதற்கான ரோமானிய வரலாற்று ஆவணங்கள் ஏதும் இதுவரை கிட்டவில்லை என்பதுதான்.
பிறகெப்படி ஓவிட் நாடு கடத்தப்பட்டாரென்பதையும், அதற்கு காரணம் அவரது கவிதைதான் என்பதையும் உறுதிப்படுத்துவது?
மெட்டமார்போசஸ் (Metamorphosis) எழுதிய ஓவிட் தானே ஒரு வளர்சிதை மாற்றத்தை அனுபவித்தார் என்பது ஒரு நகைமுரண். சொல்லப்போனால் ஓவிட் வாழ்க்கை ஒரு கிரேக்க துன்பியல் நாடகம்போலவே விரிந்துள்ளது.
ஓரளவு செல்வச் செழிப்பில் பிறந்த ஓவிட் அரசியல் ரீதியாக சுயாதீனமானவராக நின்றார். (apolitical); அகஸ்டஸ் சார்பு இல்லாமலிருந்தார். கல்வி கற்கும் காலத்திலேயே தனது வாழ்க்கையை எழுத்துக்கு அர்ப்பணிக்க முடிவுசெய்தார். என்பதைக் கண்டோம். விர்ஜில் மற்றும் ஹோரேஸ் போன்ற பிற ரோமானிய இலக்கியவாதிகளின் சமகாலத்தவராக நிலைநின்ற ஓவிட், கிபி 8-க்கு முந்தைய படைப்புகளில் (அதாவது நாடு கடத்தப்படும் முன்) புதிய பார்வையில் காதல், காதலின்பம் போன்ற மென்மையுணர்வுகளை நேர்த்தியான கவிதைகளாக- கிரேக்க புராண விவரிப்புகளின் தொடர்ச்சியை உள்ளடக்கியதாக – வெளிப்படுத்தினார். வாதமேதுமின்றி சிறந்த ரோமானிய கவிஞராக அங்கீகாரம் பெற்றிருந்தார்.
அவரது ஆரம்ப காலபடைப்புகளைப் பொறுத்தவரை, ஓவிட் "ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலியல் ஒழுக்கத்தை வெளிப்படையாக கேலி செய்வதில் முன்னர் பிறரெவர் முயற்சித்த எதையும் விஞ்சி, தொடர்ச்சியான நேர்த்தியான படைப்புகளை இடைவிடாத ஒழுங்குடன் பொழிந்தார்." எனக் கூல்ட் என்ற விமர்சகர் (கூல்ட், 96). கூறுகிறார். இந்த படைப்புகளே அவரது விதியை மூடி முத்திரையிட்டிருக்கலாம்!
கி.பி. 8 இல் அவர் அகஸ்டஸால் கருங்கடலில் உள்ள ரோமானியப் பேரரசின் தரிசு புறமான நகர் டோமிஸுக்கு நாடு கடத்தப்பட்டபோது அவரது படைப்புகளில் பெருமாற்றம் ஏற்பட்டது. தனது வாழ்நாள் முழுவதும் மன்னிப்புக்கான புலம்பல்களையே எழுதினார். இதுவே அவர் தண்டனைக்குள்ளானதற்கான அகச்சான்று.
”Carmen et Error: ஒரு கவிதை, ஒரு தவறு’ என்ற ஓவிட்டின் ஒற்றைச் சொல்லைப் பிடித்துக்கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளாக ஆய்வாளர்கள், அறிஞர்கள், ஓவிட் நாடு கடத்தப்பட்ட மர்மத்திற்குப் பதில்களைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டேயிருக்கின்றனர். இவற்றில் மிகப் பல முயற்சிகள் வெறும், ஊகம், ஊகம், ஊகம்தான். வேறொன்றையும் விளைவிக்கவில்லை" (திபோ 1).
கி.பி. 8-க்குமுன்பு, ஓவிட் அமைதியான, மரியாதைக்குரிய வாழ்க்கையை நடத்தியதாகவே நம்பப்படுகிறது. நாடு கடத்தப்பட்ட பின் (Exilic ) ஓவிட்டின் சொந்த எழுத்துக்கள், விவேகமான, சட்டத்தை மதிக்கும் அவரது வாழ்க்கைமுறையை மிகவும் வெளிப்படையாக விவரிக்கின்றன. அவர் அரசியலில் ஆர்வமின்மை கொண்டவர் என்றும், "அகஸ்டன் அல்லது அகஸ்டன் அல்லாதவர்" அல்ல என்றும் அவரது எழுத்துக்களாலேயே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது; மாறாக, அவர் எந்த அரசியல் கட்சிக்கோ அல்லது தலைமைக்கோ விசுவாசம் இல்லாதவராகத் தோன்றுகிறார் (ஓடிஸ் 189).
அவர் சொல்லாட்சிக்கலை, கவிதா விவரிப்பதில் திறமையானவர், அகஸ்டன் ஆட்சியின்கீழ் அவர் விரும்பியதை எழுதுவதன் மூலம் படைப்பு வெளிப்பாட்டின் அனைத்து சுதந்திரத்தையும் அனுபவித்ததாகவே தெரிகிறது (ஓடிஸ் 189; ஜான்சன் 11). இத்தகைய கவலையற்ற சுதந்திரங்கள்தான் அவரை ஆர்ஸ் அமடோரியா, (திஆர்ட்ஆஃப்லவ்) என்ற படைப்பை வெளியிட வழிவகுத்தது. சாராம்சத்தில், காதற்கலையில் ஆண்களுக்கு (பின்னர், பெண்களுக்கு) படிக்கப்படும் புத்தகமாக அது இருந்தது.
ஓவிட் தற்போது மிகவும் பிரபலமான மெட்டமார்போசஸ் போன்ற "புதிய இலக்கிய முயற்சிகளுக்கு" நகர்ந்திருந்தாலும், ஆர்ஸ் அமடோரியா வெளியாகி ஏழாண்டுகள் கழிந்து அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய பாதிப்பை ஏற்படுத்தியது கால விநோதமே.
இவ்விநோதத்திற்கான பின்புலமாக அறிய வேண்டியது: கிமு 2 இல் அகஸ்டஸின் மகள் ஜூலியா தி எல்டர் திருமணங்கடந்த செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டபோது ரோம் உலுக்கப்பட்டது. அவரது ஒழுக்கக்கேடான குற்றங்களுக்கான குற்றச்சாட்டுகள் செனட் கவுன்சிலில் வாசிக்கப்பட்டன, அவர் குற்றவாளி என்று கண்டறியப்பட்டார். அகஸ்டஸ் தன் மகளான ஜூலியாவையும், குற்றம்சாட்டப்பட்ட அவளது காதலர்களையும் நாடு கடத்தினார் (கூல்ட் 97; கோஹன் 206). ஓவிட் அந்தக் குற்றவாளிகளுடன் தொடர்புடையவர் அல்ல. கிபி 8 இல், அகஸ்டஸ் தனது பேத்தி ஜூலியா மைனர் தனது தாயின் செயல்களைப் பின்பற்றுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்;
அவளும் விரைவாகக் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டாள் (கூல்ட் 102). அகஸ்டஸின் சகாப்தத்தில் பெண்கள், கிரேக்க காலங்களில் இருந்ததைப்போலவே திருமணத்தடம் மாறுவது கிரிமினல் குற்றமாகத் தடை செய்யப்பட்டிருந்தது என்பது தெளிவாகிறது, ஒடிஸியில், ஒடிசியஸ் தடம் மாறிய பெண்களைக் கொல்லும்போது. தடம் மாறும் செயல்கள் "தேசத் துரோகத்திற்கு சமமானவை", என்று கருதப்பட்டதாகக் கூல்ட் என்ற வரலாற்றறிஞர் குறிப்பிடுகிறார்.
தற்போது, வழக்கில் (கி.பி. 8 இல்) ஜூலியா மைனரின் காதலன் சிலானஸ் மற்றும் ஓவிட் உள்பட மற்ற சதிகாரர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஓவிட் மீது இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டன, அவற்றில் ஒன்று அவரது ஒரு கவிதை (ஆர்ஸ் அமடோரியா) மற்றும் ஒரு ‘பிழை’. (அந்தப்பிழை என்னவென்று ஆயிரக்கணக்கான ஆய்வுகள், யூகங்கள் வளர்ந்துள்ளன. இங்கே விரிக்க இடமில்லை.)
ஓவிட் மீது உரிய செயல்முறைகளோடு முறையான ஒரு விசாரணை நடத்தப்பட்டதா என்பது குறித்து அறிஞர்களிடையே விவாதம் நீண்டு கொண்டேயிருக்கிறது இன்று வரை. ஓவிட் பகிரங்கமாக விசாரிக்கப்படவில்லை என்பது புலப்படுகிறது. மேலும், "ஓவிட் செனட் நீதிமன்றத்திலோ அல்லது ஒரு குவாஸ்டியோவிலோ விசாரிக்கப்படவில்லை என்று வெளிப்படையாகக் கூறுகிறார்" ரோஜர்ஸ் (373).
அரச மாளிகையின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காகவும், குற்றச்சாட்டுகள் தெளிவற்றதாக இருப்பதாலும், ஓவிட் "மூடிய கதவுகளுக்குப் பின்னால்" விசாரிக்கப்பட்டார் என்று கோஹன்யூகம் வைக்கிறார். (கோஹன் 212). ஓவிட் உள்ளறையில் (in camera) விசாரிக்கப்பட்டார் என்று அறிஞர்கள் தவறாக முடிவுசெய்துள்ளனர் என்று ரோஜர்ஸ் எதிர்வாதிடுகிறார்.
ஓவிட் மீது "தண்டனை" விதிக்கப்பட்ட பின்னரே குற்றங்கள் பற்றி அறியப்பட்டன. அதிலும் ‘பிழை’ என்பது என்னவென்று இதுவரை தெரியவில்லை. ஒரு குற்றம் கவிதை; அக்கவிதை ஆர்ஸ்அமடோரியா என்பது பல்வேறு குழப்பங்களுக்கிடையே தெளிவாகியுள்ளது.
இன்னும் வளர்ந்து கொண்டே வரும் ஓவிட் ஆய்வில் புதிய நிரூபனமான உண்மைகள் கண்டறியப்பட்டால் இக்கட்டுரையும் அகஸ்டஸ் ரோமைச் சீர்படுத்தியதுபோல சீர்திருத்தப்படலாம்.
**
[கட்டுரையாளர் - ஆங்கிலப் பேராசிரியர். ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்கள் எழுதியுள்ளார்] (wcciprojectdirector.hre@gmail.com)