கிறிஸ்துவுக்கு முன்பே நாடு கடத்தப்பட்ட கவிஞர் அல்கேயஸ்! கவிதைதான் குற்றம்- 24

கவிதைகளால் சிறைப்பட்டவர்களின், துயருற்றவர்களின் தொடர் - கவிதைதான் குற்றம். கவிஞர் அல்கேயஸ் குறித்து...
கிறிஸ்துவுக்கு முன்பே நாடு கடத்தப்பட்ட கவிஞர் அல்கேயஸ்! கவிதைதான் குற்றம்- 24
Published on
Updated on
8 min read

பழைய கிரேக்கக் கலாசாரத்தில் ‘நகர்களே நாடுகள்’ (City States). ‘மக்களாட்சிக் கோட்பாட்டின் தொட்டில்’ ஏதென்ஸ்; ‘ஒழுக்கம், கட்டுப்பாடு, படை வலிமைப் பாசறை’ ஸ்பார்ட்டா, ‘முன்னிரு நாடுகளுக்கும் போட்டி- எழுச்சி’ தீப்ஸ், ‘வளமும் வணிகமும் சிறந்த’ கோரிந் (Athens, Sparta, Thebes, and Corinth) போன்றவை மிகு சிறப்புற்ற கிரேக்க நகர் நாடுகள். கி.மு. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில், பிற வடக்கு ஏஜியன் கிரேக்க நகரங்களிலும் மைட்டிலீன் (Mytilene) மிகவும் செல்வாக்கு பெற்ற, சக்திவாய்ந்த, பணக்கார, புகழ்பெற்ற நகர் நாடாக இருந்தது. மைட்டிலீன், வழக்கமான காலாட் படைகளுடன், ஒரு வலுவான கடற்படையையும் வைத்துக்கொண்டு அதன் வர்த்தக வழிகளை நன்கு பாதுகாத்தது. இந்நகரம் நீண்ட காலமாக பெந்திலிட் (Penthilid clan) குல மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது.

மைட்டிலீனை உள்ளடக்கிய லெஸ்போஸ் (Lesbos) பகுதி, பொருளியல் விவகாரங்களில் மட்டுமல்லாமல், அரசியல் மாற்றங்கள், கிளர்ச்சிகள், புரட்சிகள் ஆகியவற்றாலும், அறிவுசார் ரீதியாகவும் ஆசிய- கிரேக்கர்களின் அங்கீகரிக்கப்பட்ட தலைமை மையமாக விளங்கியது. “அழகான இயற்கைக்காட்சிகள், அற்புதமான துறைமுகங்கள், நேர்த்தியான காலநிலை ஆகியவற்றைக் கொண்ட மென்மையான ஏஜியனின் மார்பில் ஒரு ‘ரத்தினமாக’ லெஸ்போஸ் பார்ப்பதற்கு அழகாகவும், அங்கே வசிக்க இனிமையாகவும் இருந்தது. அதன் குடிமக்கள் இயற்கையின் அனைத்து இன்பங்களையும் அனுபவித்தனர். மேலும், விரிவாக்கப்பட்ட வர்த்தகத்தின் மூலம் செல்வந்தர்களாக மாறினர், உலகின் அனைத்து ஆடம்பரங்களையும் துய்க்க அம்மக்களுக்கு வாய்ப்புகள் கூடின” எனக் குறிப்புகள் மூலம் அறிகிறோம்.

லெஸ்போஸைச் சேர்ந்த கவிஞர்கள், ‘லெஸ்பியன்ஸ்’ என்று அழைக்கப்படும் வழக்கம் இருந்தது. (அச்சொல், இப்போது அறியப்படும் பொருளுக்குத் தொடர்பற்றது.) அறியப்பட்டுள்ள வரலாற்றில் முதல் பெண் கவிஞரான சாப்போ (Sappho தனது கவிதையொன்றில் லெஸ்பியன் இலக்கிய அணியின் மேலாதிக்கத்தைப் பற்றி பெருமை பேசுகிறார்:

“எல்லாவற்றையும் மிஞ்சி,

லெஸ்பியன் பாடகர் நிற்கிறார்

பிறநாடுகளின் பாடகர்களை விட உயர்ந்து.”

ஏழாம் நூற்றாண்டின் இறுதியில், லெஸ்பியன்கள் ஆடம்பரம் இல்லாத, ஊழல் இல்லாத, காம விருப்பம் கொண்டவர்களாகவும், அரசியல் ரீதியாக நிலையற்றவர்களாகவும், அதே சமயம் ஒரு சுதந்திர ஆட்சியைப் பாதுகாக்க பாடுபடுபவர்களாகவும், கிரேக்கத்தில் கலை மற்றும் சிந்தனையின் அங்கீகரிக்கப்பட்ட தலைவர்களாகவும் இருந்ததை இலக்கியச் சான்றுகள் மூலம் காண்கிறோம்.

அல்கேயஸ் (Alcaeus, கி.மு. 630 - கி.மு 580), வாழ்ந்து பாடி இருபத்தெட்டு நூற்றாண்டுகள் கடந்துவிட்டாலும், அவரைப்பற்றி நம்பத்தகுந்த தகவல்கள் நமக்கு இலக்கியச் சான்றுகள் மூலம் கிடைக்கின்றன. அவர் ஒரு மாபெரும் கவிஞராக மட்டுமின்றி, ஒரு பயணியாகவும், ஒரு படை வீரராகவும், பிரபுத்துவ அமைப்பின் கசப்பான ஆதரவாளராகவும், மித்திலேனின் அரசியல் விவகாரங்களில் ஒரு ‘தொந்தரவான காரணி’யாகவும் இருந்ததால், அவரது வாழ்க்கையைப் பற்றிய பல விவரங்கள் ஆவணங்களில் தற்போது நம்மிடம் உள்ளன. அவரது கவிதைகளில் எஞ்சியிருக்கும் துண்டுகளில் அடிக்கடி காணப்படும் தனிப்பட்ட குறிப்புகளையும் சேர்த்து, அவரது வாழ்க்கை, தொழில்பற்றிய துல்லியமான கருத்தை நம்மால் ஓரளவு சீராக உருவாக்க முடிகிறது. அல்கேயஸின் காலத்தின் போது, பெந்திலிட்கள் ஒரு ‘குறைந்துபோன சக்தி’யாக நலிந்து வந்தனர். போட்டி பிரபுக்களும் அவர்களின் பிரிவுகளும் உச்ச அதிகாரத்திற்காக அடிக்கடி தமக்குள் போட்டியிட்டுக் கொண்டிருந்தன. 

கி.மு. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அநேகமாக 630 ஆம் ஆண்டில் பிறந்த அல்கேயஸ். கிரேக்க தீவான லெஸ்போஸைச் (Lesbos) சேர்ந்த, மைட்டிலீனின் கவிஞர். ‘லெஸ்பியனான’ அல்கேயஸ், ‘Alcaic stanza’‘அல்காயிக் பத்தி’  என்ற பாடல் வகையை உருவாக்கிய பெருமைக்குரிய பிதாமகன். அவரது பாடல் அளவு (மீட்டர்களில்) மிகவும் பிரபலமானது ‘அல்காய்க் மீட்டர்’ ஆகும், இது அவர் கண்டுபிடித்ததாகக் கருதப்படுவதால் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது

அல்கேயஸ், மிட்டிலேனின் சர்வாதிகாரியும், கிரேக்கத்தின் ஏழு ஞானிகளில் ஒருவருமான பிட்டகஸ் (Pittagus), கிரேக்கக் கலாசாரத்தில் பெயரறியப்பட்ட முதல் பெண் கவிஞர், லெஸ்போஸைச் சேர்ந்த, சாப்போ (Sappho) ஆகியோரின் சமகாலத்தவர். ஆனால், அவர்கள் இருவரையும்விட இளையவர். இவரது பெற்றோர் பற்றிய பதிவுகள் ஏதுமில்லை. ஆனால், அவர் பழைய லெஸ்பியன் பிரபு குலத்தில் தோன்றியவர் என்பதும் சிசிஸ், அந்திமெனிதாஸ் ஆகிய இருவரும் அவருடைய சகோதரர்கள் என்பதும் உறுதி. அல்கேயஸ், ஹெலனிஸ்டிக் அலெக்சாந்திரியாவின் அறிஞர்களால் போற்றி வரிசைப்படுத்தப்பட்ட “நவ கவிகள்” (Canonical list of  Nine  Lyric  Poets ) பட்டியலில் சேர்த்துவைத்து மதிக்கப்பட்டவர். 

ஆளும் வர்க்கத்தில் பிறந்தவரென்றாலும், வறுமை (Poverty) பற்றி இவரது பாடலின் கிடைத்துள்ள துண்டுப்பகுதியில்:

வறுமை

தாங்க முடியாத, மிகுபாரமான சுமை,

கசப்பான, துயரம் நிறைந்த

ஏழ்மை,

தன் தங்கை தேவை (Want)யோடு

சேர்ந்து,

மக்களை முடமாக்கிப் போட்டு விடுகிறது. (Misc. Fragments)

என உணர்ந்து பாடியுள்ளார்.

அல்கேயஸ், மைடிலினின் ஆளும் பிரபுத்துவ வர்க்கத்தில் பிறந்தவரென்பதால், அங்குள்ள அரசியல் சர்ச்சைகள், சண்டைகளினூடேயே வளர்ந்தார். அல்கேயஸின் இளம் பருவத்தில், அவரது மூத்த சகோதரர்கள் (சிசிஸ், அந்திமெனிதாஸ்) அதிகாரப் போராட்டங்களில் நேரடியாகவே களம் நின்றவர்கள். பிற்காலத்தில் அல்கேயஸும் கூட அவ்வகைப் பதவிப் போராட்டங்களிலும் ஈடுபடுபவராக மாறினார். அல்கேயஸும் அவரது மூத்த சகோதரர்களும் அவ்வப்போது சிறுவெற்றிகளையும் அவற்றின் பலன்களையும் அனுபவித்தனர்.

கி.மு. 600-க்கு முன்னர் ஒருகட்டத்தில், மைட்டிலீன் சிஜியன் என்ற நிலப்பகுதிக்காக ஏதென்ஸுடன் சண்டையிட்டது. அப்போரில் அல்கேயஸ் பங்கேற்றதாக நம்பப்படுகிறது. “அல்கேயஸ் வெற்றிபெற்ற ஏதெனியர்களிடமிருந்து தப்பிக்க தனது கேடயத்தைத் தூக்கி எறிந்துவிட்டு ஓடிவந்தவர்” என ஹெரோடோட்டஸ் (Herodotus) என்ற புகழ்பெற்ற கிரேக்கக் கவிஞரது கிண்டலான கூற்று ஒருபுறம் இருந்தாலும், அல்கேயஸ் ஏதென்ஸ் போரில் ஈடுபட்டவரென்பதை உறுதி செய்துகொள்ள உதவுகிறது.

போர்க்களத்தில் ஆயுதங்கள், கேடயம் போன்றவற்றை விட்டுவிட்டுத் தப்பித்து வந்ததை இழிவாகக் கருதவில்லை அல்கேயஸ். “தப்பித்து வந்தால், மீண்டும் திரும்பிச்சென்று இன்னொரு நாள் போராடலாம்; களத்திலேயே மாண்டுபோனால்...?” என்ற டெமஸ்தனிஸ் கருத்தைப் பிரதிபலிப்பதுபோல அல்கேயஸும் தன் பங்கிற்க்குத், தனது நண்பர் மெலனிப்பஸுக்கு அனுப்பிய ஒரு கவிதையில் இந்த போர்களத்திருந்து ஓடிவந்த நிகழ்வைக் கொண்டாடியுள்ளார். 

சிஜியத்திலிருந்து தப்பித்தபோது (Fragment xxiii)

அல்கேயஸ்

போர்க்களத்தில்...

அரேசின் கையிலிருந்து தப்பினார்;

தன் வாளை, கேடயத்தைத் தூர வீசிவிட்டுத்

சொந்த நாட்டிற்கு தப்பினார்,

ஆனால்,

அட்டிக்ஸ், கொள்ளையடித்த பொருள்களை

தெய்வீக அதீனாவின் சன்னதியில் தொங்கவிட்டார்!

என்று கேலி செய்கிறார். (தன்னையா? தான் வீசி விட்டுச்சென்ற கேடயத்தை ஆலயத்தில் தொங்கவிட்ட எதிரியையா?) நம்பிக்கையற்ற களத்திலிருந்து தப்பி ஓடுவதை அல்கேயஸ் கோழைத்தனமாகக் கருதவில்லை என்பது தெரிகிறது. அது கிரேக்கம். (தமிழ் மரபில் போர்களத்தில் புறமுதுகிட்டு ஓடிவருவது இழுக்கு; அவர் மேலும் வாழாமையே இனிது எனும் மறம் நிலைத்திருந்தது.)

அல்கேயஸின் கவிதைகள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் அலெக்சாண்டிரிய அறிஞர்களான பைசாண்டியத்தின் அரிஸ்டோபேனஸ், சமோத்ரேஸின் அரிஸ்டார்கஸ் ஆகியோரால் விரிவான வர்ணனைகளுடன் பத்து புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டன என்று தெரிவிக்கும் பல இலக்கியக் குறிப்புகள் காணப்படுகின்றன. இந்தப் பத்துப் புத்தகங்களில் ஒரு சில புத்தகங்களே எஞ்சியுள்ளன, அதுவும் முழுமையாக இல்லை. மொத்தம் இருநூறு வரிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அத்தேனியஸ், அப்பொல்லோனியஸ், ஹெப்பேசன், ஸ்ட்ராபோ, ஹெராக்ளிடிஸ் மற்றும் பலரின் மேற்கோள்கள் இல்லையென்றால், இவையும் கூட நமக்குக் கிடைக்காமல் போயிருக்கும்.

எண்ணிறந்த தமிழ் நூல்கள் (அகத்திணை, அசதிக்கோவை, ஆசிரிய மாலை, தகடூர் யாத்திரை,  முதுநாரை, முதுகுருகு, காக்கைப்பாடினியார் கணக்கியல், காரிநாயனார் கணக்கியல், பெருந்தேவனார் பாரதம் முதலிய பல நூல்கள் காலத்தின் பெருவளியில் காணாமற் போய்விட்டதுபோல (பார்க்க: மயிலை சீனி வேங்கடசாமி, மறைந்துபோன தமிழ் நூல்கள், 1959)–கிரேக்க இலக்கியப் பேரிழப்பாக மட்டுமல்ல, உலக இலக்கியப் பெட்டக இழப்பாகவும் இன்று அல்கேயஸ் செய்யுள்கள் துண்டுதுண்டாக (Fragments) கிடைத்திருப்பது மட்டுமே உள்ளன. வெறும் சொற்றொடர்கள் முதல் ஒரு சில முழு சரணங்களின் தொகுதிகள் வரை எனச் சிறு அளவு துண்டுகளே உள்ளன. எந்தக் கவிதையுமே முழுக்கவிதையாகக் கிடைக்கவில்லை.

கிடைத்திருக்கும் அல்கேயஸ் கவிதைத் துண்டுகளை ஐந்து வகைகளாகப் பகுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசியல் கவிதைகள்: லெஸ்போஸ் மீதான அதிகாரப் போராட்டங்களை ஒரு சார்பாளருக்கே உரிய உணர்ச்சியுடனும் வீரியத்துடனும் வெளிப்படுத்துவதும், மறைப்பதும்; தனது அரசியல் எதிரிகளைச் சகட்டுமேனிக்குச் சபிப்பது; அவர்களின் மரணங்களில் (கூட) மகிழ்வது; அரசியல் செயலின்மையின் விளைவுகள் குறித்து இரத்தத்தை உறைய வைக்கும் ‘ஹோமிலி’களை வழங்குவது; தனது தோழர்களை வீரப்போராட்டங்களுக்கு உற்சாகப்படுத்துவது; கொடுங்கோலாட்சி எதிர்ப்புக்கு வழிநடத்துவது என அரசியல் கவிதைகளின் உள்ளடக்கங்கள் உள்ளன. அரசியல் எதிரிகளைச் சொற்சாட்டை கொண்டு சுளீரென விளாசுவதிலும், சுடுசொற்கள், உருவக்கேலி மிகுந்த கவிதைகளால் அவர்களைச் சின மூட்டுவதிலும் களிப்படைவராக இருந்தமையால்தான் அல்கேயஸ் மூன்று முறை நாடுகடத்தப்பட்ட நிலைக்குள்ளானார் என்று கருதத் துணியலாம்.

எடுத்துக்காட்டுகளாக, பிட்டாகஸ் (AGAINST PITTACUS Frag xxiv) என்ற ஆட்சியாளரைக் குறிவைத்து அல்கேயஸின் அமிலக் கவிதை வீச்சு இதோ;

இந்த உயர்த்தப்பட்டு நிற்கும் பிட்டகஸ்,

இந்த கீழ்த்தரமான முட்டாள்,

மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்,

பெரிய பாராட்டுக்கள், மற்றும்

விருப்பமுள்ள கொடுங்கோலனை

ஆட்சிசெய்ய அமர்த்துகிறார்கள்

சண்டைகளால் சிதைந்த நகரம்

இது.. மிகவும் துரதிர்ஷ்டமானது...

துரதிர்ஷ்டமானது.

இதுமட்டுமல்ல, பிட்டகஸை, அல்கேயஸ், மிகக் கடுஞ்சொற்களால் கசப்பான, இழிவான வசனங்களில் தாக்கியிருக்கிறார். பிட்டகஸை, அல்கேயஸ் ‘கீழ்-பிறப்பு’ என்கிறார். ஏனென்றால் அவர் உயர்குடியில் பிறந்தவர் அல்ல. மற்ற துண்டுகளில் அவர் அவரை "இழுவை-கால்," "பிளவு-கால்," "தடித்த வயிறு," "டர்ட்டி ஃபெலோ" போன்ற சுடுசொற்களால் அர்ச்சித்துள்ளார். (xxiv)

இதேபோல மிர்சிலஸ் என்ற கொடுங்கோலன் குறித்த அரசியல்  கவிதையில் -AGAINST MYRSILUS (Frag. xxv)

இந்த மனிதன், இங்கே...

இந்தவெறி பிடித்த முட்டாள்,

உயர்ந்த பதவி,

அதிகாரம் பெரியது,

ஆனாலிவன் விரைவில்

அரசை நாசமாக்குவான்,

ஏற்கனவே நெருக்கடி நெருங்கிவிட்டது

மிட்டிலினுக்கு.

அல்கேயஸ், கொடுங்கோலர்களைத் தாக்கும் போர்க் கவிதைகள் மூலம் தனது சகாக்களைத் தட்டியெழுப்பியதோடு, அவரது தீவிர வெறுப்பை வெளிப்படுத்தக்கூடிய அனைத்து கசப்பான வசைகளையும் தன் கவிதைகளில் சினம் சீற நிரப்பினார். இப்படிப்பாடினால் சும்மா இருப்பார்களா ஆட்சியாளர்கள்?

குடிப் பாடல்கள்: இலக்கண அறிஞர் அதீனியஸ், “அல்கேயஸ் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் குடிப்பதற்கான ஒரு சாக்காக மாற்றினார்.” என்று குற்றம் சாட்டுகிறார். இக்கூற்றுக்கு ஆதாரமாக இருக்கும் வகையில் அல்கேயஸ் தன் கவிதைகளில் பல மேற்கோள்களை வருங்கால சந்ததியினருக்கு வழங்கிச் சென்றுள்ளார். “ஒரு கொடுங்கோலனின் மரணத்தைக் கொண்டாடும் விதமாக குடிக்கவும்” அவரது ஒரு கவிதை அழைக்கிறது. துயரங்களைக் குடிக்க; வாழ்க்கை குறுகியதாக இருப்பதால் குடிக்க; குளிர், புயல்களின் வருத்தங்களுக்குக் குடிக்க; கோடையின் வெப்பத்திற்குக் குடிக்க என அல்கேயஸ் தனது நண்பர்கள் குடித்து மகிழ பலவாய்ப்புகளை விரிக்கிறார்.

• பாடல்கள் (Lyrics): அல்கேயஸ் ஹோமரிக் பாடல்களின் ஆதர்சத்தில் கடவுள்களைப் பற்றி பாடினார். அதே சமயத்தில், கடவுள்களை மகிமைப்படுத்துவதற்குப் பதிலாகத் தனது தோழர்களை மகிழ்விப்பதற்காகவும், தனது 'மதச்சார்பற்ற' பாடல் வரிகளை அவிழ்த்துவிட்டார், முன்னர் அவர் பயன்படுத்திய அதே மீட்டரில்.

• காதல் பாடல்கள்: ஏறக்குறைய அல்கேயஸின் காதல் கவிதைகள் சுவடே இல்லாமல் மறைந்துவிட்டன. கிடைத்துள்ள ஒரு சில கவிதைகளில் அல்கேயஸ், சாப்போ மீது தான் கொண்டிருந்த காதலை வெளிப்படுத்தியுள்ளாரோ எனும் யூகத்தை வளர்ப்பதாக உள்ளன.

எடுத்துக்காட்டாக;

தூய, வயலட் நிற கிரீடம் சூடிய

லெஸ்பிய மாதே

இனிய புன்னகை சாப்போ,

நான் உனக்கு ஒரு காதல் வேண்டுதல் தந்தேன்

ஆனால் வெட்கம்

உன் பெயரை சுவாசிக்கத்தான்

என்னை அனுமதிக்கிறது

(பெயரை உச்சரிக்காமல்)

இதற்கு சாப்போ பதில் கூறுவதாகக் கற்பனையாகத் தானே எழுதுகிறார்

அல்கேயஸ்,

உன் இதயமும் சிந்தனையும்

தூய்மையான, உன்னதமான

உணர்வுடன் நிறைந்திருந்தன,

உன் நாக்கு தீமையிலிருந்து விடுபட்டது,

எனக்காக இரட்டைப் பேச்சு இல்லை,

வெட்கம் உன் புன்னகையை விரட்டவில்லை,

ஆனால் நீ உள்ளத்தில் வஞ்சகமின்றி

ஒளிக்காமல் பேசினாய்.

என்று தானே பேசிக்கொள்கிறார், அல்கேயஸாக, சாப்போவாக.

சிசரோவின் ஒரு கட்டுரையில், அல்கேயஸின் காதல் கவிதை பற்றிய ஒரு சுருக்கமான குறிப்பு உள்ளது. காதலைப் பாடுவதில், பெரும்பாலும் அல்கேயஸைப் பின்பற்றி எழுதுபராகவே ஹோரேஸ், (Horace) இருந்தார் என்பதை இருவரின் கவிதைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் அறிய இயலும்...

• மற்றவை: அல்கேயஸ் தனது பன்முகப்பட்ட (அரசியல் குடும்ப பாரம்பரியம், படை வீர்ர், தளபதி, கவிஞர், இசைக்கருவி வாசிப்பவர், பாடுபவர், நிகழ்கலைஞர், பயணி எனத் தன் கதாபாத்திரத்தில்) முரண்பாடுகள் வெளிப்படும் களங்களில் பல்வேறு வகையான கவிதைகளைப் பலவகைக் கருப்பொருள்களில் எழுதினார். 

பண்டைய விமர்சகர்கள் அல்கேயஸின் கவிதைத் திறன்களைப் பற்றிய மதிப்பீட்டில்‘ பிண்டரை (Pindar) விட உயர்ந்ததாக’க் கருதினர். ஹாலி கார்னாசஸின் டயோனிசியஸ் என்ற பழங்கால அறிஞர் "அல்கேயஸில் வீரியமான சக்தி, அற்புதமான உருவங்கள், பேச்சு வழக்கால் பாதிக்கப்படாத அவரது தெளிவு ஆகியவற்றுடன் கூடிய உன்னதம், சுருக்கம் மற்றும் இனிமையைக் கவனியுங்கள்; எல்லாவற்றிற்கும் மேலாக பொதுவிவகாரங்களில் தனது உணர்வுகளை அவர் உண்மையாக, ஒளிவின்றி வெளிப்படுத்தும்விதம் நேர்த்தியானது” என்று எழுதிச் சென்றுள்ள குறிப்பு கிடைத்துள்ளது.

அல்கேயஸ் குறித்த ஓவியம்
அல்கேயஸ் குறித்த ஓவியம்

குயின்டிலியன் எனும் மற்றொரு விமர்சகர், “அல்கேயஸ், தனது கவிதைகளில் நல்ல ஒழுக்கங்களுக்கு முதன்மையளிக்கிறார்; அவரது மொழியில் ரத்தினச் சுருக்கம்; உயர்ந்த கருத்து வீச்சு; கவனமான சொற்கள், ஒரு சொற்பொழிவாளரைப்போல" என்று மதிப்பிட்டுள்ளது கிடைத்திருக்கிறது.

அல்கேயஸ் கொடுமை கண்டு கொதிக்கும் போர்க்குணம் கொண்ட; போர்களில் நேரடியாக ஈடுபட்ட; அரசியலறிந்த; நேரடியாக அரசியலில் ஈடுபட்ட; கொடுங்கோல் ஆட்சியாளர்களை எதிர்த்துக் கவிவாள் சுழற்றியவராக நிற்கிறார். அதனாலேயே ஆட்சியாளர்களின் அடங்காச்சினத்திற்கு ஆளாகி -கிடைத்திருக்கின்ற தகவல்களின், சான்றுகளின் அடிப்படையில் -மும்முறை நாடு கடத்தப்பட்டவரென்பதை அறிய முடிகிறது.

அல்கேயஸால் மூன்று ஆட்சியாளர்கள் கவிதையில் கடுமையாகத் தாக்கப்பட்டனர்; அதே மூவருக்கும் எதிராக அரசியல் ரீதியான சதிகள் நிகழ்ந்தபோது அல்கேயஸும் அவரைச் சார்ந்திருந்த ஒரு பிரிவினரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டதாக இலக்கியக்குறிப்புகள் கூறுகின்றன.

முதலாவது ஆட்சியாளர் மெலன் க்ரஸ், இவரைப்பற்றி மிகக் குறைவாகவே விவரங்கள் அறியப்பட்டுள்ளன. கி.மு. 612 இல் பிட்டகஸால் தூக்கியெறியப்பட்ட மெலன் க்ரஸின் கொடுங்கோன்மையைப் பற்றி அல்கேயஸின் கவிதைகளில் ஆரம்பகால, சமகால குறிப்பு உள்ளது. அல்கேயஸின் மற்றொரு சுருக்கமான துண்டில் (Fragment), மெலன் க்ரஸின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஸ்ட்ராபோ எழுதியுள்ளதொரு பத்தியிலும் அவர் குறிப்பிடப்படுகிறார், அல்கேயஸின் ஸ்டாசியோடிகா அல்லது"பார்ட்டிசன் சாங்ஸ்" இன் கருப்பொருளில் பேசப்படும் ‘உள்நாட்டு அமைதியின்மை காலத்தின்’ கொடுங்கோலர்களில் மெலன் க்ரஸும் ஒருவர் என்று ஸ்ட்ராபோ நமக்குக் கூறுகிறார்.

அல்கேயஸின் கவிதைகளிலிருந்தும் ஸ்ட்ராபோவின் விவரிப்பிலிருந்தும் அறியப்பட்ட இரண்டாவது கொடுங்கோலன் மிர்சிலஸ் ஆவார். 605-க்கும் 590-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அவர் அதிகாரத்தில் இருந்தார். அல்கேயஸின் கவிதைகள் மற்றும் வேறு சில துணை ஆதாரங்களிலிருந்து, மிர்சிலஸ் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, ஹெட்டாய்ரோயின் சதி அவருக்கு எதிராக உருவானதை அறிய முடிகிறது.

அச்சதியில் அல்கேயஸ், பிட்டகஸ் இருவரும் தீவிர செயல்பாட்டாளர்களாக இருந்தனர். ஆனால், நம்பிக்கைத் துரோகச் செயலாகப் பிட்டகஸ் அச்சதியிலிருந்து விலகி மிர்சிலஸுடன் அதிகாரத்தில் சேர்ந்துகொண்டார். அதனாலேயே, பிட்டகஸ் மீது அல்கேயஸ் வீசிய (‘பானை வயிரன்’, ‘மனிதமற்ற விலங்கு’, போன்ற பலவசவுச் சொற்களோடு) ‘நரி’ என்றும் குறிப்பிட்டார். அல்கேயஸின் கவிதைத் துண்டொன்றில் மிர்சிலஸ் மரணம் குறிப்பிடப்படுகிறது. அந்தக் கொடுங்கோலனின் மரணச் செய்தி அறிந்து, அச்சமயத்தில் நாடுகடத்தப்பட்டு வேறிடத்திலிருந்த அல்கேயஸ் மகிழ்ச்சியின் உச்சக் கூச்சலில் (THE DEATH OF MYRSILUS (Frag xxvi)

இப்போது மது

இது தெய்வீக மகிழ்ச்சிக்காக,

மிர்சிலஸ் மடிந்தான்!

இப்போது பூமியை நாம்

விரைவாக மகிழ்ச்சியாக

அடிக்க சுற்ற வேண்டும்.

மிர்சிலஸ் இறந்துவிட்டான்!

மிர்சிலஸ் இறந்துவிட்டான்!

என்று குதிக்கிறார், கொண்டாட்டமாக.

அல்கேயஸ் தாக்குதலுக்கு உள்ளான ஆட்சியாளர்களின் வரிசையில் மூன்றாவதாக இருப்பவர், அல்கேயுஸுடன் மிர்சுலுக்கு எதிரான சதியில் ஆரம்பத்தில் இணைந்திருந்து, திடீரென்று விலகி, மிர்சுலுடன் இணைந்த பிட்டகஸ். இவரைப் பற்றிய அல்கேயிஸின் வசை புராணம் ஏற்கனவே இங்கு நாம் படித்து வந்துள்ளோம்

இந்த பிட்டகஸ், பிற்காலத்தில் வரலாற்றில் குறிப்பிடப்படும் ஒரு நபராக மாறினார். பிற்காலக் கிரேக்க வரலாற்றில் பிட்டகஸ், தங்கள் கலாச்சாரத்தின் ஏழு ஞானிகளில் ஒருவராக உயர்த்தி மதிக்கப்படும் நிலையடைந்தார். ஆனாலும், அல்கேயஸ் அதிகம் தாக்கியது இவரைத்தான். அதனால், கோபங்கொண்ட பிட்டகஸ், அல்கேயிஸை நாடு கடத்தினாலும், பிறகு மன்னித்து அவர் திரும்பிவரக் கருணை காட்டியதும் குறிப்புகள் மூலம் அறியப்பட்டிருக்கிறது. (இத்தகைய பெருந்தன்மைகள் பிட்டகஸை பின்னர் ஏழு கிரேக்க ஞானிகளில் ஒருவராக உயர்த்தப்பட்டதை நியாயப்படுத்தும்.)

ஏதென்ஸுடன் நடைபெற்றதொரு போரில் பிட்டகஸ் செய்த சேவைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மிர்சுலுக்குப் பின்னர் மைட்டிலேனின் சர்வாதிகாரியாக பிட்டகஸ் தக்க அதிகாரங்கொண்ட  சபைகளால் நியமிக்கப்பட்டார் என்று வரலாறு சொல்கிறது. ஆனால், மிர்சிலஸ் கொடுங்கோலனுடன் அதிகாரத்தில் பிட்டகஸ் தொடர்புடையவர். மேலும் பழைய, வெறுக்கப்பட்ட சிப்செலஸ், ஒரு பாக்கியாட்டை மணந்து கொரிந்துவின் கொடுங்கோலனாக மாறியது போலவே, பிட்டகஸ்ஸும், வெறுக்கப்பட்ட பெந்திலுவின் குடும்பத்தாருடன் திருமண உறவு கொண்டதன் மூலம் சர்வாதிகாரப்போக்கே அவரது இயல்பாயிற்று. பிட்டகஸைப் பற்றிய இந்த இரண்டு குறிப்புகளும் அல்கேயஸின் கவிதைகள் மூலமே நமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, அரிஸ்டாட்டிலின் குறிப்பொன்றில் “மிர்சிலஸின் மரணத்திற்குப் பிறகு, பிட்டகஸுக்கு சர்வாதிகார பதவி வழங்கப்பட்டது குறித்து, "விருப்பத்தால் கொடுங்கோன்மை" என்று பதிவு செய்துள்ளார். பத்தாண்டுகள் ஆட்சிசெய்த பிறகு பிட்டகஸ் தன் அதிகாரத்தை மனமுன்வந்து சரண் செய்து தானாகவே விலகினார் என்பதும் குறிப்பிட உரியது.

சில ஆய்வாளர்கள், அல்கேயஸ் நாடு கடத்தப்பட்டது அவரது அரசியல் நடவடிக்கைகள் காரணமாகவாகவா? அல்லது சர்வாதிகாரிகளைக் கண்ட வசவுச்சொற்களால் கடுமையாகத் தாக்கிய அவரது கவிதைகள் காரணமாகவா? என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை என்று சந்தேகத்திரை விரிக்கிறார்கள். நியாயம்தான். இருபத்தெட்டு நூற்றாண்டுகள் இடை நிற்கின்றன நிகழ்ந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் முன்னால். மேலும், உறுதிப்படுத்தப் போதிய ஆவணங்களில்லைதான். கவிஞரது படைப்புகளே சிறு சிறு துண்டுகளாகத்தான் நமக்குக் கிடைத்திருக்கின்றன என்பதைச் சற்று முன்னர் குறிப்பிட்டுள்ளோம். பின்னர் எந்த அடிப்படையில் கவிதைதான் குற்றம் என்ற வகையில் அல்கேயஸ் தண்டனைக்குள்ளானார் என்று முடிவுக்கு வருவது?

கவிஞர் அல்கேயஸ்
கவிஞர் அல்கேயஸ்

முதலில் அல்கேயஸ் ‘கவிதைகளே அரசியல்’தான் என்பதை அறிவது அவசியம். அவர் அரசியல் குடும்பத்தில் பிறந்தவர், நேரடியாகப் போர்களில் - ஏதென்ஸ் போன்ற வேற்று நாட்டவர்களுடன் நடைபெற்ற போர்களில் மட்டுமல்ல – உள்நாட்டில், ஆள்பவர்களை எதிர்த்தும், ஆட்சிமாற்றங் காணக் கிளர்ந்து எழும்பிய போராட்டங்களிலும் களம் நின்றவர். கவிதையே அவரது கையாயுதமானதால், அவரிடமிருந்து, அவரது கவிதைகளிலிருந்து அரசியலை அறவே அகற்றிவைத்துப் பார்க்க அதிக வாய்ப்புகளில்லை. மேலும், அவரது கவிதைகளிலும், அவரது சமகாலக் கவிஞர்கள் பாடல்களிலும், அரிஸ்டாடில் போன்ற தத்துவ அறிஞர்களின் குறிப்புகளிலும், பிற்கால ஆய்வாளர்களின் குறிப்புகளிலும் அவரது கவி வீரியம், கொடுங்கோன்மைக்கு எதிரான கடும் வாசகங்கள், வசவுச் சொற்கள் குறித்து அறிய அகச்சான்றுகள் அதிகம் உள்ளன.

ஆகவே, தொல்பழங்காலத்திலேயே (கி.மு காலத்தில்) கவிதைதான் குற்றம் என்ற அடைப்படையில், கவிதைக்காகத் தண்டனைக்குள்ளாகி, ரோம் சாம்ராஜ்ஜியத்தில், அகஸ்டஸ் ஆட்சியில் நாடுகடத்தப்பட்ட கவிஞர் ஓவிட் போலவே, கிரேக்கக் கவிஞர் அல்கேயிஸ், அவரது கவிதைகளுக்காகவே – அரசியல் கவிதைகளுக்காகாகவே - கவிதைதான் குற்றம் என்ற அடைப்படையில், கவிதைக்காகத் தண்டனைக்குள்ளாகி நாடுகடத்தப்பட்டவர் என்று அகச் சான்றுகளின் அடிப்படையில் துணியலாம்.

முன்னர் குறிப்பிட்டிருந்தபடி, ஒரு தசாப்தத்திற்குப் பிறகு சர்வாதிகார அதிகாரங்களை பிட்டகஸ் தானாக முன்வந்து ராஜினாமா செய்தது பற்றி,

“அல்கேயஸை நாட்டைவிட்டு விரட்டிய

புயல் ஓய்ந்தது, இனி

அவரும், அவர் நண்பர்களும்

மாநிலத்தில் பொறுத்துக் கொள்ளப்படலாம்

அதாவது அல்கேயஸ் நட்டிற்குத் திரும்புவதற்கு பிட்டகஸின் இம்முடிவு உதவியானது எனக் குறிக்கிறது.

ரோமானியக் கவிஞர் ஓவிட் கி.மு. 43-ல் பிறந்தவர்; கி.பி. 8 இல் அவரது கவிதை - ஆர்ஸ் அமடோரியா (தி ஆர்ட் ஆப் லவ்) – குற்றமாகக் கருதப்பட்டுப், பேரரசர் அகஸ்டஸால் நாடுகடத்தப்பட்டார். இதுகுறித்த பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் குறிப்புகள் இருப்பதால், ரோமானியக் கவிஞர் ஓவிட்தான் கவிதைதான் குற்றம் என்ற வகையில், தண்டனைக்குள்ளாகி, உலகிலேயே முதன்முதலாக நாடுகடத்தப்பட்ட கவிஞர் என்று பிரகடனப்படுத்தினோம். (தினமணி.காம், 29 மார்ச் 2025)

கிரேக்கக் கவிஞர் அல்கேயிஸ்ஸும் கி.மு. காலத்தில் (630) பிறந்தவர். அவரது பிறந்த ஆண்டு, மறைந்த ஆண்டு (கி.மு. 580) அடிப்படையில், ரோமானியக் கவிஞர் ஓவிட்டுக்கு காலத்தால் முந்தியவர். ஆனால், அவர் நாடுகடத்தப்பட்டாரென்பதற்கு இலக்கிய அகச் சான்றுகள் மட்டுமே உள்ளன. மிகப் பழங்காலமானதால், இதுவரை நாம் கால உறுதி செய்துகொள்ள உதவும் வரலாற்று ஆவணங்கள் ஏதும் கிட்டவில்லை. மேலும் அல்கேயிஸ் நாடுகடத்தப்பட்டதற்கான காரணங்கள் குறித்து ஆய்வாளர்கள் விரித்திருக்கும் சந்தேகத் திரை குறித்தும் ( நம் கருத்தும்) இங்கு முன்னரே பேசப்பட்டுள்ளது.

இந்த விஷயங்கள் மீது காலம் படியச்செய்திருக்கும் ஐயங்கள் தீர்க்கும் ஆவணங்கள், சான்றுகள் வசப்பட்டால் – தமிழ்நாட்டில் பல்கலைக் கழகங்களுக்கு ‘வேந்தர்’ இனிமேல் மாநில ஆளுநர்  இல்லை என்பதுபோலத் தெளிவு பிறந்து –உலகிலேயே கவிதைதான் குற்றம் என்ற அடிப்படையில், தண்டனைக்குள்ளாகி, நாடுகடத்தப்பட்ட முதல் கவிஞர் (ரோமானிய ஓவிட்டுக்குப்பதில்) கிரேக்கக் கவிஞர் அல்கேயிஸ் என்று நேர்மையுடன் அறிவித்து விடலாம். (ஆவணச் சான்றுகளுக்குக் காத்திருக்கலாம், கவிஞரும் நாமும்.)

முதலிடம் மாறலாம், ஆனால் கவிஞர்களின் முதன்மை மாறாது.

குறிப்பு: இங்கு எடுத்து வழங்கப்பட்டுள்ள அல்கேயஸின் கிரேக்கக் கவிதைகள்,THE SONGS OF ALCAEUS,Ed. By J. S. EASBY-SMITH. (1901) என்ற ஆய்வுப்பதிப்பிலுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழ்ப்பிழிவு. வழங்கியது: திருப்பூவனத்தான்.

 **

[கட்டுரையாளர் - ஆங்கிலப் பேராசிரியர். ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்கள் எழுதியுள்ளார்] (wcciprojectdirector.hre@gmail.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com