
பேச்சிலிருந்து தொடங்குகிறது மனிதனின் ஆளுமை என்றால் மிகையில்லை. உரையாடல்களின் வழிதான் அனைத்தும் பகிரப்படுகின்றன; பரப்பவும்படுகின்றன.
அரிஸ்டாட்டில், பிளேட்டோ காலத்திருந்தே பேச்சுக்குப் பெரிய இடம் இருக்கிறது. பேச்சுகளின் மூலம்தான் இவர்களின் சிந்தனைகள் விரைந்து பரவின.
மதங்களை, இயக்கங்களைத் தோற்றுவித்தவர்களில் தொடங்கி, பெரும் போர்களை, புரட்சிகளை நடத்தியவர்கள் வரையிலும் பேச்சு, பேச்சு, பேச்சு.
உலக வரலாறு முழுவதும்தான் எத்தனை பேருடைய புகழ்பெற்ற உரைகள்? வரலாற்றில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கியதில்தான் இந்தப் பேச்சுகள் எத்தனை பெரிய இடம் பெற்றிருக்கின்றன?
வெறும் அஹிம்சையைக் கையிலேந்திய மகாத்மா காந்தியின் உரைகள்தான் இந்தியாவில் எத்தனை பெரிய அதிசயங்களை நிகழ்த்திக்காட்டியுள்ளன? போராட்ட காலங்களில் பேசியவை எத்துணை அரசியல் மாற்றங்களையும் பிரார்த்தனைக் கூட்டங்களில் பேசியவை எத்துணை மனமாற்றங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன?
அமெரிக்க வரலாற்றில் அழியா இடம் பெறும், ‘எனக்கு ஒரு கனவு இருக்கிறது’ என்ற மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) பேச்சு மட்டும் சமுதாயத்தில் எத்தனை மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது?
தென் ஆப்பிரிக்காவில் நிற வேற்றுமைக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறைவைக்கப்பட்ட ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் நெல்சன் மண்டேலா, ரிவோனியா நீதிமன்றத்தில் ஏறத்தாழ 4 மணி நேரங்கள் நிகழ்த்திய உரையின் சாகச வீச்சு என்ன?
மான்கடா படைத்தளத் தாக்குதலைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட கியூப புரட்சித் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ, சான்டியாகோ நீதிமன்றத்தில் தனக்காகத் தானே வழக்காடி ஆற்றிய ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்!’ என்ற உரை வரலாற்றில் பெற்றிருக்கும் இடம்தான் எத்தகையவொன்று?
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றபோது, ‘நாடென்ன செய்தது நமக்கு? நீயென்ன செய்தாய் அதற்கு?’ என, ஜான் எப். கென்னடி ஆற்றிய உரையின் மகத்துவம்தான் என்ன?
ரஷியப் புரட்சித் தலைவர் லெனின், பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன், சுதந்திரத் தினத்தில் பிரதமர் ஜவாஹர் லால் நேரு... நெடிதாகப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.
பேச்சு ஓர் ஆயுதம், எல்லாவற்றையும் சாதிக்க, எதிரியை வீழ்த்த.
தமிழ்நாட்டில் நீண்ட கால காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததற்கான காரணங்களில் மிகவும் முக்கியமானது – திராவிட இயக்கத் தலைவர்களின், தொண்டர்களின் பேச்சு, பிரசாரம்.
மிகப் பிரமாண்டமான கூட்டங்கள், மாநாடுகள், மணிக்கணக்கில் தலைவர்கள் நிகழ்த்திய பேச்சுகள். வானத்தை வில்லாக வளைத்து வாசலில் கொண்டுவந்து வைப்பதைப் போன்ற சாகசங்களை வெளிப்படுத்தும் தலைவர்களின் உரைகள். திராவிட இயக்கமும் பேச்சும் பிரித்துப் பார்க்க முடியாதவையாக இருந்தன; திமுகவிலிருந்து கிளைத்துப் பலவாகத் திராவிட கட்சிகள் தோன்றியும் ஒவ்வொன்றிலுமே இந்தப் பேச்சுத் திறன் மட்டும் ஏதோவொரு வகையில் எப்போதும்போலத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
திராவிட இயக்கத்தின் தலைமுறை கடந்த தாக்கத்தின் காரணமாகத் தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளிலுமே தலைவர்களுக்கு இணையாகப் பேச்சுக்கும் பேச்சாளர்களுக்கும் ஒரு மதிப்பு இருக்கிறது.
இவற்றுக்கெல்லாம் இடையே காலங்காலமாக இணையாக இன்னொரு இரண்டாந்தரமான பேச்சுப் பாணியும் தொடர்ந்துகொண்டிருந்தது. குறிப்பிட்ட கட்சிகளின் அல்லது இயக்கங்களின் ஏற்பாட்டில் நடைபெறும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் கூடியிருக்கும் கூட்டம் இவர்கள் பேசியதை ரசித்துவிட்டு அல்லது சிரித்துவிட்டுக் கலைந்துவிடும். கட்சியின் உயர் தலைவர்கள் பங்கேற்கும் பெரிய கூட்டங்களில்கூட தொடக்கத்தில் இவர்களில் ஓரிருவர் பேசுவது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது (மாறி மாறி திராவிட கட்சிகளின் மேடைகளில் முழங்கிய புகழ்பெற்ற பேச்சாளர் ஒருவரின் கதை சொல்லலைக் கேட்கக் கட்சி சாராதவர்களேகூட ரசிகர்களைப் போல திரளுவார்கள் – எல்லாவற்றையும் எக்குத்தப்பாகச் சொல்லிவிட்டுக் கடைசியாக – புரிஞ்சவங்க புரிஞ்சுக்கோங்க, புரியாதவங்க போய்க்கோங்க என்று சொல்லி முடித்துவிடுவார் அவர்).
ஆனால், காலவெள்ளத்தில் பொதுக்கூட்டங்களுக்கும் மேடைப் பேச்சுகளுக்குமான இடங்களே அற்றுப் போய், சர்வம் சமூக ஊடக மயம் என மாறிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த பாணி பேச்சுகளே ஏறத்தாழ ஒழிந்து அல்லது குறைந்துவிட்டன எனலாம்; இப்படிப் பேசுவோரும்கூட இப்போது அவ்வளவாக இல்லை. ஆனால்...
விட்ட குறை தொட்ட குறையாக இன்னமும் சிலர் இதுபோல அருவருக்கத் தக்க வகையில் அவ்வப்போது பேசுகின்றனர். அந்தக் காலத்தில் எங்கோ ஒரு மேடையில் அவர்கள் பேசுவதை அங்கிருப்பவர்கள் கேட்டுச் சிரித்துவிட்டுப் போவதுடன் எல்லாம் ஓவர். ஆனால், இப்போதோ இந்தப் பேச்சுகள் எல்லாம் யாராவது ஒருவரால் பதிவு செய்யப்படுகின்றன. ஆண்ட்ராய்ட் போன் வைத்திருக்கிற எல்லாருமே இப்போது எல்லாவற்றையும் ஒளிப்பதிவு செய்பவர்கள்தான்; பதிவு செய்கிற எல்லாருமே பரப்புவோர்தான்.
பேசுகிறவர்கள் யாராக இருந்தாலும் சரி, இந்தப் பேச்சுகளில் சர்ச்சையாக ஏதாவது சிக்கும்போது உடனடியாக சமூக ஊடகங்களில் யாராவது ஒருவரால் பதிவேற்றப்பட்டு விடுகின்றன. அடுத்தடுத்து ஆயிரக்கணக்கில் பலராலும் அவரவர் கணக்குகளில் மீண்டும் மீண்டும் அதே பேச்சுகள் ஒளி-பரப்பப்படுகின்றன. எங்கோ அறைக்குள் பேசிய பேச்சுகள் எல்லாம் அதே டெம்போவுடன் அனைவருக்குமாக அம்பலத்தில் ஏற்றப்பட்டு விடுகின்றன. உடனுக்குடன் எதிர்வினைகளும் பூதாகாரமாகப் பெருகத் தொடங்கிவிடுகின்றன.
பாவம் பொன்முடி, சிக்கிக்கொண்டுவிட்டார்!
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற திருவாரூர் கே. தங்கராசு நூற்றாண்டு விழாவில் சிறப்புரை என்ற பெயரில் கொஞ்சமும் சிறக்காத உரையொன்றை ஆற்றியுள்ளார் பொன்முடி.
திருவாரூரின் பெருமையையும் திராவிட இயக்க உணர்வுகளையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர் திடீரென அந்தக் காலத்தில், நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன், கடவுள் மறுப்புத் தொடர்பாக டிக்கெட் வைத்து நடத்தப் பெற்ற அடல்ட்ஸ் ஒன்லி பட்டிமன்றங்களைப் பற்றி உற்சாகமாகப் பேசத் தொடங்கிவிடுகிறார். மேடையில் இருக்கும் கோவை ராமகிருட்டிணனையும் இழுக்கிறார். இத்தனைக்கும் விடியோவைப் பார்க்கும்போது, ராமகிருட்டிணன் ஏதோ தடுக்க முயன்றிருப்பார் போலத் தோன்றுகிறது. கூட்டத்தில் பெண்கள் இருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டே, ஆபாசமாகவும் அருவருப்பாகவும் ஒன்றைச் சிலாகித்து விவரித்து அவரே ரசித்தும் சிரிக்கிறார். ஆனால், பின்னால் நின்றிருக்கும் இளைஞர்கள்கூட பொன்முடியின் இந்த ‘ஸோ கால்ட் நகைச்சுவை’யை ரசித்த மாதிரி தோன்றவில்லை. எதிரே இருந்தவர்கள் என்ன நினைத்திருப்பார்கள் தெரியவில்லை. ஆனால், அவர் பேசிய விஷயம் – சல்லிக் காசு பெறாதது, யாரும் யாரிடமும் என்ன பேசினார் என்று கேட்கவும் முடியாது; யாரும் யாரிடமும் என்ன பேசினார் என்று சொல்லவும் முடியாது. வெட்கக்கேடு!
சில நாள்களிலேயே அம்பலத்துக்கு வந்து பரவிவிட்டது இந்தச் ‘சிறப்புரை’. திமுகவைச் சேர்ந்த கனிமொழியே பொதுவெளியில் எதிர்வினையாற்ற பொன்முடியின் கட்சிப் பதவி – துணைப் பொதுச் செயலர் – பறிக்கப்பட்டுவிட்டது. அமைச்சர் பதவி தப்பியது அதிசயம்தான்.
உயர் கல்வித் துறைக்கெல்லாம் அமைச்சராக இருந்தவரான பொன்முடி இப்படிப் பேசி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது இதுவொன்றும் முதல் முறையல்ல. பொது நிகழ்ச்சியொன்றில் ஒரு பெண்ணைப் பார்த்து நீ எஸ்சிதானே? என்றார். பெண்களிடம் பஸ்ஸில இப்ப ஓசியிலதானே போறீங்க... என்று நிறைய சொல்லலாம். ஆனால், இந்த முறையோ ஜமக்காளத்தில் வடிகட்டின ஆபாசம், அருவருப்பு!
பொன்முடி மட்டுமல்ல. முன்னாள் நடிகையின் வல்லுறவுப் புகார் தொடர்பாக விசாரணைக்கு வந்தபோது அரசியல் கட்சித் தலைவரான சினிமாக்காரர் ஒருவர், தொலைக்காட்சிகளில் நேரலையில் எல்லாமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே, இதைவிடக் கேவலமாகவும் பெண்களை இழிவுபடுத்துவதாகவும் பேட்டியளித்தார். எல்லாவற்றுக்கும் ‘பொங்குகிற’ அரசியல் புள்ளிகளும் திரைப் பிரபலங்களும் ஏனோ இவரைக் கண்டித்துத் துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. இயக்கங்களும்கூட ஏனோ அடக்கிவாசித்து அப்படியே விட்டுவிட்டன. கட்சிக்கும் அவரே தலைவர், எனவே அவருடைய பதவியைப் பறிக்கவும் வாய்ப்பில்லை.
முன்னாள் நடிகரும் இந்நாள் அரசியல்வாதியுமான இன்னொருவர், மகா கேவலமாகப் பெண்களை இழிவுபடுத்திப் பேசிவிட்டு, நீதிமன்றத்திலும் சிக்கிக்கொண்டு, இன்னொரு பக்கம் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் நேரில் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்.
இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், காமெடியன் என அறியப்படும் கூல் சுரேஷ், அரசியல் கட்சிகளின் சில மேடைப் பேச்சாளர்கள் எல்லாரும் யாரைப் பற்றியாவது எதையாவது அருவருக்கத் தக்கதாக ஒவ்வாமல் பேசுகிறார்கள், சிக்கிக் கொள்கிறார்கள், மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறார்கள். பொன்முடியும் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.
பெண்களைப் பற்றி இவர்கள் எல்லாம் ஏன் இவ்வளவு இழிவாகவும் தரக் குறைவாகவும் பேசுகிறார்கள்? எத்தகைய மனநோய், எத்தகைய வக்கிரம் இவர்களைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது? எவ்வளவோ உயரங்களில் இருந்தாலும் தரத்தில் ஏன் இவ்வளவு தாழ்ந்து போகிறார்கள்?
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (திருக்குறள் -127)
(எவற்றைக் காக்காதவராயினும் தன் நாவைத் தவறாமல் காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பம் அடைவர் - புலியூர்க்கேசிகன் உரை).
குத்துமதிப்பான நம்முடைய கணக்குப்படியே இரண்டாயிரத்துச் சொச்சம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒன்றே முக்கால் அடித் திருக்குறள்தான் இது. இந்த நெடுங்காலத்தில் எத்தனை ஆயிரம் கோடிப் பேரால், எத்தனை ஆயிரம் கோடி முறை இந்தக் குறள் வாசிக்கப்பட்டிருக்கும்? எத்தனை ஆயிரம் கோடி முறை சொல்லப்பட்டிருக்கும்? விளக்கப்பட்டிருக்கும்?
இன்னமும் இதே குறளை மீண்டும் மீண்டும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குத்தான் வெறுமனே வாய்வார்த்தையாகவே நாம் சொல்லிக் கொண்டு மட்டுமே இருக்கப் போகிறோம்?
பேச்சு ஆயுதம். உலகில் புகழ்பெற்ற பேச்சுகளால் எவ்வளவோ நல்லவை நடந்திருக்கின்றன. வரலாறுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த வாயாடிகள் மட்டும் எப்போதுமே பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்!
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் (திருக்குறள் - 98)
(சிறுமையான எண்ணங்களில்லாத இனிய சொற்கள், மறுமையிலும் இம்மையிலும் ஒருவனுக்கு இன்பத்தைத் தரும்).
டெயில் பீஸ்: தன்னுடைய தொகுதியான வாரணாசிக்கு 50-வது முறையாகச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில் இரு வாரங்களுக்கு முன் 19 வயது இளம் பெண் ஒருவர், 7 நாள்கள் வெவ்வேறு இடங்களில் அடைத்துவைக்கப்பட்டு, போதை மருந்து கொடுத்து, 23 பேரால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த வேதனையும் கவலையும் தெரிவித்ததுடன், இதுபற்றி உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.