
காலந்தோறும், நாடுகள் தோறும், நியாயமற்ற, தன்விருப்பே தலைக்கொண்ட ஆட்சியாளர்கள் அனைவருக்குமே, கவிஞர்கள் ‘சிம்ம சொப்பனமாகவே’ இருந்து வந்துள்ளனர்; இருக்கின்றனர். அடக்குமுறையே அனைத்திலும் என ஆண்ட, ஆண்டுவரும் அதிகாரங்கள் அனைத்துக்கும் அடங்கா ‘எழுத்துப் படைகளாக’ கவிஞர்களது கவிதைகள் அணி அணியாக அணிவகுத்து வருவதாகக் கருதிக், கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள், தம்நெஞ்சத்தே. எழுகின்ற எதிர்ப்புக்குரல் எதனையும் எழவிடாமல், எழுந்து தொடர விடாமல் நசுக்குவதே ‘நல்வழி’, ‘நெறி குரல்வளையை’ என, எழுத்தாயுதம் தவிர ஏதுமிலாக் கவிஞர்களைச் சிறைப்படுத்துகிறார்கள்.
சிறைகளில் சிந்தனைக்கே எட்டாதவகைச் சித்ரவதைகளுக்குக் கவிஞர்களை உள்ளாக்குகிறார்கள். சிறைப்படுத்தப்பட்ட பெண் கவிஞர்களை இருட்டையே உடுத்திக்கொள்ளுமாறு சிறுமைப்படுத்துகிறார்கள். ஆண்டுக் கணக்கில் குடும்பத்தார்களைச் சந்திக்கவிடாமல் கொடுமைப்படுத்துகிறார்கள்; தனிமைப்படுத்துகிறார்கள். வானத்தை, வெளிச்சத்தைப் பார்க்கவே ஏங்க வைக்கும் வகையான இருட்சிறைகளில், ஒளிரும் எழுத்துக்களின் ஊற்றுகள் அடைக்கப்படுகின்றன.
கவிஞர்களது நாக்குகள் வெட்டப்படுகின்றன, தாம் நேசிக்கும் மக்களிடையே கவிதைகள் வாசித்ததற்காக. கவிஞர்கள் தூக்கிலிடப்படுகிறார்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் கவலைகளைக், கண்ணீரைக் கவிதைகளாக்கியதற்காக.
காலங்காலமாகக் கவிஞர்கள் மீது கொடுங்கோலாட்சியர்கள் வீசிவரும் விதவிதமான தண்டனை வகைகளில், ‘நாடு கடத்தல்’ என்பது மிகப்பழங்காலத்திலிருந்தே (கி.மு. காலத்து ஓவிட், அல்கேயிஸ்) நடைபெற்று வருகிறது. மேம்போக்காகப் பார்த்தால், முன்விவரிக்கப்பட்டுள்ள தண்டனை வகைகளில் நாடுகடத்தல் என்பது ஒரு இலேசான வகைத் தண்டனையோ என எண்ணத்தூண்டுவதாக இருக்கும். காரணங்கள்: சிறையில்லை; சித்ரவதையில்லை; சிறுமைப்படுத்தல்களில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக உயிர்தப்பியது. புதிய மண்ணைப் புதிய வானத்தைச் சுதந்திரமாக அனுபவிக்கலாம்.
ஆனாலும், கவிஞர்கள் தமது வேர்கள் பரந்துள்ள சொந்த மண்ணைவிட்டுப்பிரிவதை, ‘உடலைவிட்டு உயிர்பிரிநிலை’ எனக் கருதிக் கலங்குகிறார்கள். எப்படியாயினும் மீண்டும் தாம் பிறந்ததிலிருந்து பழகிய, மண், மாந்தர்கள், பண்பாடு முதலியவற்றுடன் ஒன்றவே உளங்காட்டுகிறார்கள். தம்சொந்தநாடுகளுக்குத் திரும்பும் அகலா ஏக்கங்களோடே அன்றாடம் உயிர் தாங்கி வருகிறார்கள்.
அகமது ஷாக்கி (Ahmed Shawqi, 1868 -1932) நவீன எகிப்திய இலக்கிய இயக்கத்திற்கு முன்னோடியாக இருந்த, திறமையான, எகிப்திய நியோ கிளாசிக்கல் கவிஞர், கவிதை நாடக ஆசிரியர். குறிப்பாக, அரபு இலக்கியப் பாரம்பரியத்திற்கு ‘கவிதைக் காவியங்களின்’ (Poetic Epics) குறிப்பான, சிறப்பான இலக்கிய வகையை அறிமுகப்படுத்தியவர்.
ஷாக்கி, 1868 அக்டோபர் 16 இல் கெய்ரோவில் ஒரு பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை வழியில் அவர் செர்காசியன், கிரேக்கம், குர்திஷ் வம்சாவளியையும், தாய்வழியில் துருக்கிய, கிரேக்க வம்சாவளியையையும் சேர்ந்த பல இனப் பாரம்பரியச் செழுமையை வேர்களில் கொண்டிருந்தார். பல இன வேர்களைக் கொண்ட, ஒரு பிரபலமான குடும்பத்தில் சலுகை மிகுசூழலில், அவரது தாய் வழிபாட்டி இவரது வளர்ப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
அவரது நான்கு வயதில் ஒரு பாரம்பரிய குத்தாப்க்கு (இஸ்லாமியப் பள்ளி) அனுப்பப்பட்டார். பின்னர், கெய்ரோவின் நவீன மதச்சார்பற்ற பள்ளிகளில் கல்வி பயின்றார். கெடிவியல் மேல்நிலைப்பள்ளியில் தனது இடைநிலைக் கல்வியை முடித்தார். 1883 ஆம் ஆண்டில் கெய்ரோவில் உள்ள சட்டப்பள்ளியில் சட்டம் பயில்வதற்காக நுழைந்தார், கூடுதலாகத் தன்னார்வமாக மொழிபெயர்ப்பு பட்டமும் பெற்றார். அந்தப் பட்டம் காரணமாக, ஷாக்கிக்கு, கெடிவ் அப்பாஸ் II நீதிமன்றத்தில் ஒரு வேலை கிடைத்தது. அதை ஏற்றுக்கொண்டு கெடிவ் நீதிமன்றத்தில் ஒரு வருடம் பணியாற்றினார்.
அதன்பின், 1887 ஆம் ஆண்டில் தனது கல்வியை முடித்ததும், கெடிவ்தாவி என்பவரால் மான்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தில் சட்ட மேல்படிப்புப் படிக்க பிரான்சுக்கு அனுப்பப்பட்டார். ஷாக்கி, பாரிஸில் கழித்த இரண்டு ஆண்டுகளில், அவருக்கு பிரெஞ்சு இலக்கியம் நன்கு அறிமுகமானது. அவர் பிரெஞ்சு நாடகாசிரியர்களின் படைப்புகளால்- குறிப்பாக மோலியர் மற்றும் ரேசின்- பெரிதும் தாக்கம் பெற்றார்.
எகிப்துக்குத் 1891 ஆம் ஆண்டில் திரும்பியபின் படைத்த அவரது கவிதைகளுக்காக, ஷாக்கி கணிசமான அங்கீகாரத்தைப் பெற்றார். 1893 முதல் 1914-க்கு இடைப்பட்ட காலத்தில் அரசவைக் கவிஞராக ஷாக்கி முதன்மை பெற்றார். இக்காலத்தில் ஏராளமான நியோ கிளாசிக்கல் கவிதைகளை இயற்றிக் குவித்தார். அவரது கவிதைகளில் வடிவம், பொருள் முதலியன பாரம்பரிய அரபு செவ்வியல் தொகுப்பின் மரபு வழியிலிருந்தது. அரசவைக் கவிஞர் என்ற நிலையில், அக்காலத்தில் அவரது கவிதைகள் ஆட்சியாளர்களையும், நாட்டின் முக்கிய தேசிய நிகழ்வுகளையும் நினைவு கூர்ந்து கொண்டாடின.
அரசவையில் அவர் பதவி வகித்த காலத்தில், 1894 இல் ஜெனீவாவில் நடந்த ஓரியண்டலிஸ்டுகளின் சர்வதேச காங்கிரஸில் "நைல் பள்ளத்தாக்கில் முக்கிய நிகழ்வுகள்" என்ற வரலாற்றுக் கருப்பொருள் கவிதையை வாசித்தார். இருபது ஆண்டுகள் அரசவைக் கவிஞராகப் பணியாற்றிய நிலையில், ஒட்டோமான் கலிபாவுக்கு தனது விசுவாசத்தை வெளிப்படுத்துவதாக இருந்த சூழலிலும், எகிப்தில் பிரிட்டிஷ் கொள்கையை வலிமையாக விமர்சிப்பதும் அவரது கவிதைகளின் முக்கிய அக்கறைகளாக நின்றன. பிரிட்டிஷார் அவரது உள்ளடக்கங்களை ரசிக்கவில்லை. அவர் மீது கசப்பு வளர்ந்து வந்தது.
எகிப்தில், பிரிட்டிஷ் அரசின் முகவராக இருந்த லார்டு குரோமர், கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரிபோலவே மக்களுக்குக் கொடுமைகள் பல விளையக் காரணமாக இருந்தார். ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் அரசே, குரோமரின் அதீதங்களைக் கண்டு, அவருக்கு ஒரு தெளிவான அறிவுறுத்தலை வழங்கியது. “ஒன்று எகிப்தில் உங்கள் அதீதக் கடுமைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். அல்லது ராஜிநாமா செய்துவிட்டு உடனடியாக லண்டனுக்குத் திரும்புங்கள்” என்பதுதான் குரோமருக்குப் பிரிட்டிஷ் அரசு வழங்கிய அறிவுறுத்தல். (பல விஷயங்களில் பிரிட்டிஷ் மாடலைப் பின்பற்றும் நமது ஒன்றிய அரசும், மாநிலங்களிலுள்ள, நியமிக்கப்பட்ட, அதீதங்களில் ஆர்வங்கொண்ட ஆளுநர்களுக்கும்- குரோமருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலைப்போல- “ ஒன்று திருந்தித் தொடருங்கள்; அல்லது உடனே ராஜிநாமா செய்துவிட்டு ஊர் திரும்புங்கள்” என்று அறிவுறுத்தல் வழங்கும் மேன்மை கொண்டிருந்தால் நலம் பயக்குமல்லவா?). அதிகாரத்தைக் குறைத்துக்கொள்ள உடன்படாத குரோமர், ரோஷமாக ராஜிநாமா செய்தார்.
ஷாக்கியின் புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்றான "குரோமர் பிரபுவுக்கு ஒரு பிரியாவிடை" என்ற கவிதை 1907 ஆம் ஆண்டில் வெடித்துக் கிளம்பியது. இக்கவிதை, குரோமர் பிரபு பதவிவிலகலுக்குப் பிறகு, மே 4, 1907 இல், கெய்ரோவில் உள்ள கெடிவால் ஓபராஹவுஸில் நடைபெற்ற குரோமரின் பிரியாவிடை (Farewell to Lord Cromer) நிகழ்வில், அதிகார மமதை குறையாமல் எகிப்து மக்களை இழித்துரைத்து குரோமர் ஆற்றிய உரைக்கான எதிர்வினையாகப் படைக்கப்பட்டது. இக்கவிதைதான் குற்றமானது, பிரிட்டிஷார்களுக்கு.
ஷாக்கி காலனித்துவ அதிகாரத்திற்கு எதிரான தனது தீரா எதிர்ப்பையும், மக்களின் அடங்காக் கோபத்தையும் பிரதிபலிக்கும் அந்த நீண்ட கவிதையில், ஷாக்கி தனது உணர்வுகளை முழுவீச்சில் வெளிப்படுத்தினார். அந்நியர் ஆக்கிரமிப்பை “தேசத்தின் இதயத்தில் வந்த நோய்” என்றார்.
குரோமர், தனது உரையில் முன்னர் நடந்த எகிப்து ஆட்சிகளைக் “குர்பாஷின் ஆட்சி” (குர்பாஷ் = சவுக்கு, எகிப்திய மொழியில்) என்று இழித்துரைத்தார். அதற்கு எதிர்வினையாக ஷாக்கி, அங்கதமாக, “குரோமர் குர்பாஷை ஒழிக்க முன்வந்தார்; ஆயினும் டென்ஷவாயில் எகிப்தியர்களை ஒவ்வொரு முனையிலும் ஐந்துகூர் முனைகள் கொண்ட ஒரு ஈயக்குண்டு கட்டிய ஆங்கிலேயச் சாட்டையால் தாக்கியபோது, பிரிட்டிஷார், பண்டைய எகிப்து மன்னர்களைவிட அதிமோசமாகச் செய்தனர்.” என்று சீறினார்.
“பிரியும் நாளிலும்
எங்களுக்கு அவமானத்தைக் குவித்தீர்கள்;
ஒழுக்கம்,
இவ்வளவு சீற்றம் கொண்டதாக
ஒருபோதும் இருந்ததில்லை” என்று வருத்தம் சொல்லி,
“மிருகத்தனமான பலத்தால்
அடிமைப்படுத்தப்பட்ட
எங்கள் கழுத்துச் சங்கிலிகளுக்குச் சொந்தக்காரரே;
நீங்கள், எங்கள்
இதயங்களுக்குச் செல்லும் பாதையை
ஒருபோதும் தேடவில்லையே!” என்று வியந்தார் கவிஞர்.
ஷாக்கியின் கவிதை எகிப்திலிருந்து குரோமர் வெளியேறியதைக் கொண்டாடிக் குதூகலிப்பதாக இருந்தது.
“நீங்கள் நாட்டைவிட்டு வெளியேறியது
நீங்கிப்போன கொடிய வியாதிபோல.
பெருநிம்மதி எமைச் சூழ்ந்தது’’ என்றார் ஷாக்கி, அக்கவிதையில்.
தின்ஷாவே கலவரத்தில் ஈவு இரக்கமின்றி குரோமரின் அதிகாரிகள் மக்களைக் கொன்று குவியலாக்கியதைச் சுட்டிக்காட்டி,
“தின்ஷாவேயில்
எத்தனை பேரைக் கொன்றீர்கள்?
எண்ணத் தெரியுமா?
படித்த உங்களுக்கு...“ என வினா வீசினார் அக்கவிதையில்.
ஷாக்கியின், "லார்ட்க்ரோமருக்கு ஒரு பிரியாவிடை" கவிதை மிகவும் பிரபலமானது. கவிதையின் புகழ் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல லெபனான் எழுத்தாளர் ஷாகிப் அர்ஸ்லான் (1869 -1946), "எகிப்திலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் ஷாக்கியின் இந்தக் கவிதையை மனப்பாடம் செய்யாத, அதற்காக அவருக்கு நன்றி செலுத்தாத எந்த எழுத்தாளரும் அல்லது எந்த இலக்கிய ரசிகரும் இல்லை என்றே நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்றார்.
எகிப்தில் 1882 ஆம் ஆண்டில் காலடி எடுத்துவைத்த ஆங்கிலேயர்கள், தங்கள் அதிகாரத்தைப் படிப்படியாக வலுப்படுத்தி, எகிப்து குடிமக்கள்மீது தங்கள் பிடியை இறுக்கத் தொடங்கினர், எகிப்து இந்த ஆக்கிரமிப்பின் தாக்கத்தால் கிறீச்சிட்டுக் கொண்டிருந்தது. ஆனால், ஆங்கிலேயர்கள், நேரடியாக எகிப்து ஆட்சியிலில்லாமல், தொலைவிலிருந்து கொண்டே - பின் இருக்கையிலிருந்து வண்டி ஓட்டுவதுபோல – எகிப்தை இயக்கிக் கொண்டிருந்ததால், தக்க சமயத்திற்குக் காத்திருந்தனர், ஷாக்கி மீது பாய.
எகிப்து ஆட்சியின்மீது இருகப்பிடித்த ஆதிக்கம் செலுத்திவந்த பிரிட்டிஷார், அவர்களுக்கு வாய்த்த ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கெடிவ் அப்பாஸை 1914 இல் பதவியிலிருந்து அகற்றி, எகிப்தை ஒரு பிரிட்டிஷ் காப்பாட்சி நாடாக அறிவித்தனர். கெடிவ் அப்பாஸ் அரசவையில் ஷாக்கியின் பதவி, கெடிவ் அப்பாஸுக்கு அவரது விசுவாசம், ஒட்டோமான் கலீபகத்திற்கு ஆதரவாக அவரது புகழ்பெற்ற கவிதைகள், எகிப்தில் பிரிட்டிஷ் கொள்கையை விமர்சித்தல் (குறிப்பாக, ‘குரோமருக்குப் பிரியாவிடை’) ஆகியவற்றின் காரணமாக அகமது ஷாக்கி நாடு கடத்தப்பட்டார்.
கவிஞர் ஷாக்கியை, அவரது கவிதைகளுக்காக – கவிதைதான் குற்றம் என்ற நிலைப்பாட்டில் - 1914 இல் அவரை தெற்கு ஸ்பெயினிலுள்ள அண்டலூசியாவிற்கு நாடு கடத்துமாறு ஆணையிடச் செய்தனர். 1915 ஆம் ஆண்டில் ஷாக்கி, தனது மனைவி, இரண்டு மகன்கள், மகள் மற்றும் பேத்தியுடன் எகிப்தை விட்டுப் பெரும் வருத்தமுடன் நீங்கினார்.
எகிப்திலிருந்து ஸ்பெயினுக்குச் செல்லும் வழியில் மார்சேய்க்கு அவரை ஏற்றிச் சென்றகப்பலில், ஷாக்கி சூயஸ் கால்வாயைக் கடந்துசென்றார். அக்கால்வாயைக் கடக்கும்போது, சூயஸ்கால்வாய்; என்ற தலைசிறந்த ஒரு படைப்பை எழுதினார். நாடுகடத்தப்பட்ட கவிஞன் தனது தாயகத்தை விட்டு நாடுகடத்தப்படும்போது அவனது ஆன்மாவின் குரலானது அக்கவிதை. பின்னர் வெளியிடப்பட்ட அவரது அஸ்வக் அல்-தஹாப் (தங்கச் சந்தை) என்ற நூலில் பத்து பக்கங்களை அக்கவிதை நனைத்துள்ளது.
அவரையும் அவரது குடும்பத்தையும் நாடுகடத்திய ஸ்பானிஷ் கப்பல் சூயஸ் கால்வாயைக் கடந்தபோது அவர் எழுதத் தொடங்கிய அக்கவிதை, ஷாவ்கியின் திறமை வெள்ளம்போல் பாயும் மிக அழகான படைப்புகளில் ஒன்றாக நிற்கிறது. இந்தக் கவிதையில், எகிப்தின் வரலாற்றின் கட்டங்களையும், சூயஸ் கால்வாயின் கட்டங்களையும் ஷாக்கி மறுபார்வை செய்கிறார். ஸ்பானிஷ் கப்பலில் தன்னுடன் இருந்த தனது இரு மகன்களான அலி மற்றும் ஹுசைனுக்கு எகிப்து வரலாற்றின் ஊர்வலங்களின் சுருக்கத்தை அவர் விவரித்தார்.
கவிஞரும் அவரது குடும்பத்தினரும் நாடுகடத்தப்பட்டுச் செல்லும் வழியில் கால்வாயைக் கடந்து, கால்வாய்க் கரையில் ஆக்கிரமிப்பாளர்களின் முகாம்களைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த நேரம் வரை -இக்கால்வாயைக் கடக்கும் முன்நாள்களில் கெடிவில், ஷாக்கி அரபு இலக்கியக் கலாசாரத்தின் அதிமுக்கிய உறுப்பினராக வாழ்ந்தார். சூயஸ் கால்வாயைக் கடந்த ஷாக்கி ஐந்து ஆண்டுகள் (1920 வரை) ஸ்பெயின், அண்டலூசியாவில் ‘இருந்தார்’. நாடு திரும்ப முதல் வாய்ப்பு அவரை எட்டிப் பார்த்தபோது, பள்ளம் நோக்கிப்பாயும் வெள்ளமெனப் பாய்ந்து மீண்டார், எகிப்துக்கு 1926 இல்.
ஷாக்கியின் வாழ்க்கையை, அவரது படைப்புகளை மூன்று காலகட்டங்களாக வகைப்படுத்தலாம். முதலாவது, கெடிவ் அரசவையில் அவர் அரசவைக் கவிஞராகப் பதவி வகித்த காலகட்டம். இக்காலத்தில், ஏற்கனவே குறிப்பிட்டதுபோலக் கெடிவ் ஆட்சியாளர்கள், அவர்களது வம்சத்தினர் மீது புகழ்ச்சிக் கவிதைகள் பிறந்தன.
இரண்டாவது, ஸ்பெயினில் அவர் நாடு கடத்தப்பட்டிருந்த காலம். இந்தக் காலகட்டத்தில், சொந்த நாட்டிலிருந்து தான் அந்நியப்படுத்தப்பட்டதால் விளைந்த ஆறாத ஏக்கம், தன் நாட்டுணர்வுகள் கிளர்ந்த நேசம் (தேசபக்தி?), அரபு உலகில் மீண்டும் ஒன்றிணைய நாட்டம் முதலிய கருப்பொருள்கள் நிறைத்ததாகவே அவரது படைப்புகள் வெளியாயின.
மூன்றாவதுகட்டம் அவர் நாடுகடத்தப்பட்டிருந்த ஐந்தாண்டு அவலத்தில் இருந்து திரும்பியபின். இந்த காலகட்டத்தில் அவர் பண்டைய எகிப்து, இஸ்லாம் குறித்த வரலாற்றுப் பெருமைகளைத் தமது புகழ்பெற்ற படைப்புகளில் நிரந்தரப்படுத்தினார். இந்தக் காலகட்டத்தில் அவர் நபிகள் நாயகத்தைப் போற்றும் (மதம் சார்) புகழ்ந்து கவிதைகளை எழுதினார். அவரது கவிதைப்பாணியின் முதிர்ச்சி, பின்னர் அவர் முயன்ற கவிதை நாடகங்களிலும் பிரதிபலித்தது,
நாடு திரும்பிய கவிஞர் ஷாக்கிக்கு 1927 ஆம் ஆண்டில், இலக்கியத்துறையில் அவர் செய்த கணிசமான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக அவரது கவிதா சகாக்கள், அமீர் அல்-ஷோரா' ("கவிஞர்களின் இளவரசர்") என்று இவருக்குப் பட்டமளித்து முடிசூட்டினர்.
கவிஞர் ஷாக்கி எகிப்தில் உயிரோட்டமான இலக்கியச் சூழலில் முன்னணி இலக்கியவாதியாக இருந்தார்; நோபல் பரிசுபெற்ற ரவீந்திரநாத் தாகூர் 1926-ல் எகிப்துக்கு விஜயம் செய்தபோது, ‘’பெங்காலி கவிஞருடன் ஒரு சிறப்பு நட்பை உருவாக்கி, அவரது வருகை நினைவாக, அவரது கிசா புதிய வீட்டில் ஒரு கொண்டாட்டத்தை நடத்தினார்’’ என்று ஷாக்கியின் நாட்குறிப்பில் பதிவுகள் உள்ளன.
ஷாக்கி, தனது படைப்புகளான அல்ஷவ் கிய்யாத்தை, நான்கு நீண்ட தொகுதிகளாக வெளியிட்டார். அவரது படைப்புகளின் முதல் மற்றும் இரண்டாவது தொகுதிகள் முறையே 1926 மற்றும் 1930 இல் வெளிவந்தன. இருப்பினும், மூன்றாவது மற்றும் நான்காவது தொகுதிகள் முறையே 1936 மற்றும் 1943 ஆம் ஆண்டுகளில் அவரது மரணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டன.
முதல்தொகுதி, சமூக, அரசியல், வரலாற்று நிகழ்வுகள் தொடர்பான கவிதைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி, நவீன எகிப்தில் பெண்கள், இஸ்லாமிய, வரலாற்று கருப்பொருள்கள் பற்றிய கவிதைகளையும் உள்ளடக்கியது.
இரண்டாம் தொகுதியில் பல இலக்கிய விளக்கக் கவிதைகள் உள்ளன. மூன்றாவதுதொகுதி, சாத்ஸக்லுல், முஸ்தபாகாமில், காசிம் அமீன் மற்றும் ஹை இஸ் இப்ராஹிம் போன்ற முக்கிய பிரபலங்களின் மரணங்களைப் பற்றி இயற்றப்பட்ட இரங்கல் கவிதைகளைக் கொண்டுள்ளது. நான்காவது தொகுதியில் பல்வேறு சமூக, அரசியல் கருப்பொருள்கள் குறித்த உணர்வூட்டும் கவிதைகள் உள்ளன.
ஷாக்கி, 1924 ஆம் ஆண்டில், தனது நண்பரும் தேசியவாதத் தலைவருமான சாக்லுலின் உதவியுடன் எகிப்திய செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் அரபு உலகம் முழுவதும் ஒரு கவிஞராகப் பெரும் புகழை அடைந்தார். எகிப்து கடந்து, பலநாடுகளிலிருந்து, குறிப்பாக சிரியா மற்றும் லெபனானில் இருந்து தனது இரசிகர்களைப் பெற்றார். 1932 ஆம் ஆண்டில் அப்பல்லோ குழுமத்தின் முதல் தலைவராக இருந்து, அரபு உலகில் இலக்கிய மற்றும் கலாசார அக்கறைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒருமாத இதழை வெளியிட்டார்.
தனது வாழ்க்கையின் இறுதியில், அவர் எகிப்திய, இஸ்லாமிய வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்ட பாடங்களில் ஆறு கவிதை (வசன) நாடகங்களை இயற்றினார். தனது கவிதை நாடகங்களிலும் செவ்வியல் மெட்ரிக் மரபுகளைப் பயன்படுத்தினார், அவற்றில் மஸ்ராகிலியுபத்ரா (கிளியோபாட்ராவின் மரணம், 1929); காம்பிஸ் (1931); மஜ்னூன் லைலா , கைஸ் - லைலாவின் இஸ்லாமியத்திற்கு முந்தைய காதலை அடிப்படையாகக் கொண்டது (1931); அமிரத் அல் - அண்டலூஸ் (அண்டலூசியாவின் இளவரசி, 1932); அந்தாரா (1932); அலிபைக் அல் - கபீர் (1893 இல் இயற்றப்பட்டது மற்றும் 1932 இல் மீண்டும் வெளியிடப்பட்டது).
அக்டோபர் 13, 1932 இல் கெய்ரோவில் ஷாவ்கியின் மரணம், எகிப்தில் நியோகிளாசிக்கல் கவிதையின் பொற்காலத்தின் முடிவாகவும் ஆனது.
அகமது ஷாக்கி கவிதை குற்றமானது, ஒரு விநோத வகை என்று கூற வேண்டும். அவரது கவிதை சொந்த நாட்டு அரசால் குற்றமாகக் கருதப்பட்டு, அவர் தண்டனைக்குள்ளாகவில்லை. அவரது சொந்த நாட்டின் ( எகிப்து) மீது, திரைமறைவு ஆதிக்கம் செலுத்திவந்த அரசால் (பிரிட்டன்) அவர் “பின்னிருந்து இயக்கப்பட்ட விசையில்” நாடு கடத்தப்பட்டார். அவரது கவிதைகள் அரபு இலக்கியப் பரப்புகளில் எழுத்து இரத ஊர்வலமாகச் சென்று கொண்டிருக்கிறன்றன இன்றும்.
**
[கட்டுரையாளர் - ஆங்கிலப் பேராசிரியர். ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்கள் எழுதியுள்ளார்] (wcciprojectdirector.hre@gmail.com)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.