
பரபரப்பாகக் கழிந்திருக்கிறது ஒரு வாரம்... பஹல்ஹாம் படுகொலை பற்றி ஒருவழியாக நாடாளுமன்றத்திலும் பேசியாகிவிட்டது; பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து விவாதத்துக்குப் பதிலளித்து உரையாற்றியிருக்கிறார்.
ஏதோ இந்த நாளுக்காகவே காத்துக்கொண்டிருந்தாற்போல, மிகச் சரியாக நாடாளுமன்றத்தில் விவாதம் தொடங்குகிற நாளில், தொடங்குவதற்குச் சற்று முன்னர், பஹல்காம் படுகொலைக்குத் தலைமை தாங்கியவர் என்று கூறப்படும் பயங்கரவாதியுடன் மேலும் இருவரும் ஜம்மு – காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் – ஆபரேஷன் மகாதேவ்! (கொல்லப்பட்ட பயங்கரவாதிகள், இரு பாகிஸ்தானிய வாக்காளர் அட்டைகளும் சாக்லேட்களும் வைத்திருந்தனர் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். படுகொலை நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகும் இவற்றையெல்லாம் தங்களுடன் வைத்திருப்பார்களா?).
மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘இந்தியா – பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்’ என்று மீண்டும் மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டு வருவதைச் சுட்டிக்காட்டி, இந்திரா காந்திக்கு இருந்த துணிச்சலில் 50 சதவிகிதம் இருந்தால்கூட, ‘டிரம்ப் பொய் சொல்கிறார்’ என்பதை நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ராகுல் காந்தி பேசி முடிக்கும் வரையில் உள்ளே வராமல் அறையிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த பின், அவைக்குள் வந்து பதிலளித்துப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி – கிட்டத்தட்ட தயார் செய்யப்பட்ட உரை எனலாம். விவாதத்தில் பேசப்பட்ட பல விஷயங்களுக்கு, சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக எதிர்வினையாற்றவில்லை.
பாகிஸ்தானுடன் 65 ஆண்டுகளுக்கு முன் கையொப்பமிடப்பட்ட சிந்து நதிநீர் உடன்பாட்டுக்காக, 61 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவைச் சாடினார் மோடி.
பஹல்காம் படுகொலையைப் பேசிய பிரதமர் மோடி, கொலையுண்ட 26 பேர் குடும்பங்களைப் பற்றி ஒரு சொல்கூட சொல்லவில்லையே என இறந்தவரின் உறவுப் பெண் ஒருவர் பொதுவெளியில் வருத்தம் தெரிவித்தார்.
என்ன, இவ்வளவுக்குப் பிறகும், படுகொலை நடந்த நாளில், ஆயிரங்களில் சுற்றுலா பயணிகள் குவியும் அந்தப் பள்ளத்தாக்கில் ஏன் ‘சுத்தமாகப்’ பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவுமில்லாமல் இருந்தது என்ற கேள்விக்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை; அல்லாமல், 26 பேர் கொல்லப்படக் காரணமான இந்தப் பாதுகாப்புக் குறைபாட்டுக்காக ஒருவரும் பொறுப்பேற்கவுமில்லை (இழப்பீடாக – உயிரின் விலை? – ஜம்மு – காஷ்மீர் அரசு ரூ. 10 லட்சம், தவிர அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மகாராஷ்டிர அரசு ரூ. 50 லட்சம், கர்நாடகமும் மேற்கு வங்கமும் ரூ. 10 லட்சம், குஜராத் அரசு ரூ. 5 லட்சம் அறிவித்தன).
மக்களவையில் பெயர் எதுவும் குறிப்பிடாமல், ‘ஆபரேஷன் சிந்தூரை நிறுத்த வேண்டும் என்று எந்த உலகத் தலைவரும் சொல்லவில்லை’ என்று மட்டும் தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார் நரேந்திர மோடி. ஆனால், என்ன கொடுமையென்றால் அடுத்த சில மணி நேரங்களிலேயே, இந்தியா – பாகிஸ்தான் போரைத் தாம்தான் நிறுத்தியதாக 30-வது முறையாக மீண்டும் அறிவித்தார் அமெரிக்காவின் அதிபர் டிரம்ப்! (இப்ப என்ன செய்வீங்க?).
140 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவைப் பற்றி என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார் டிரம்ப் என்று யாருக்கும் தெரியவில்லை. நட்பு நாடு என்கிறார், நம் பிரதமரை நண்பர் என்றும் கூறிக்கொள்கிறார். இன்னொரு பக்கம் மூச்சுவிடக்கூட இடைவெளி இல்லாமல் போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார்.
ஏதோ ஊர்ப்பக்கம் மீட்டர் வட்டி என்பார்களே, அதைப் போல மீட்டர் மேலே மீட்டர் என வரியை அறிவித்துக் கொண்டே இருக்கிறார். இந்தா, பிடி, இந்தியப் பொருள்கள் மீது 20 – 25% மீட்டர் வரி, அப்புறம் தண்ட (அபராத) வரி தனி. ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குகிறீர்களாமே, அப்படியானால், அதற்காக ஒரு வரி. ஸ்ஸப்பபா, எந்தெந்தப் பொருளுக்கு எவ்வளவு வரி? இன்னும் புரியவில்லை, ஆக. 7 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்துவிட்டார். எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறார்களே என்கிற மாதிரி இருக்கிறது அதிபருடைய அடுத்தடுத்த நடவடிக்கைகள். ஆனால், அதெல்லாம் ஒன்றுமில்லை, பார்த்துக் கொள்ளலாம் என்கிற பாணியில் நம் நாட்டுத் தலைவர்களும் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ம். நமக்கு நம்ம கவலை. டிரம்ப் அதிரடிகளால் செல்போன் தயாரிப்புகளுடன் சேர்த்து, ஐ.டி. துறைகளில் ஏதோ ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது. இப்போது செய்யறிவும் சேர்ந்துகொண்டிருப்பதால் தெளிவாகத் எதுவும் தெரியவில்லை; அல்லாமல் தமிழ்நாட்டின் ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், காலணிகள் ஏற்றுமதியில் பெரும் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் என்று அஞ்சுகிறார்கள். ஏதோ, தலைக்கு வருவது தலைப்பாகையுடன் போய்விட்டால் சரி.
இவ்வளவுக்கும் நடுவிலேதான், ரஷியாவுடன் சேர்த்து இந்தியாவையும் ‘செத்த பொருளாதாரங்கள்’ (ஆங்கிலத்தில் டெட் எகானமிஸ் என்ற சொல்லைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்; ரொம்பவும் கஷ்டப்பட்டு வேறுவேறு மாதிரியில் மொழிபெயர்ப்பதில் பயனில்லை) என்பதாக ஒரே போடாகப் போட்டிருக்கிறார் அதிபர் டிரம்ப். எங்களைப் பற்றி இவ்வளவு கீழாக எவ்வாறு விமர்சிக்கலாம் என்று இன்னமும் இந்தியாவின் பெரிய தலைவர்கள் யாருமே கண்டனம் தெரிவிக்கவில்லை! (அல்லாமல், பாகிஸ்தானுக்கு வேறு நற்சான்றிதழ்களாக வழங்கிக்கொண்டு இந்தியாவைவிட வரிகளையும் குறைவாக விதித்து நட்பு பாராட்டிக் கொண்டும் இருக்கிறார் டிரம்ப்).
உலகம் சரி, உள்ளூரில் என்ன நிலைமை என்று பார்த்தால் ரொம்பவே ஷாக்கிங். காலையில் வாக்கிங் சென்றபோது சந்தித்துக்கொண்டதைத் தொடர்ந்து, மாலையில் வீட்டுக்கே சென்று முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்திருக்கிறார் அதிமுககாரராக மூன்று முறை முதல்வர் பதவி வகித்த ஓ. பன்னீர்செல்வம் (எப்பவுமே இந்த ஏரியாவுலதான் ஓபிஎஸ் வாக்கிங் போவாரா? அடுத்து யார் யாரெல்லாம் வாக்கிங் செல்லப் போகிறார்கள்?). பாரதிய ஜனதாவின் செல்லப் பிள்ளையாக வலம்வந்துகொண்டிருந்தவருக்கு என்ன திடீர் கோபம் என்று தெரியவில்லை. பா.ம.க. தலைவர் ராமதாஸ் எதற்கோ சொன்னபடி, போகப் போகத்தான் தெரியும். ஏனென்றால், அவரும்கூட தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்திருக்கிறார்.
தலைநகரில் இணக்கம் என்றால் தெற்கே ஒரு முரண்.
என்னவோ, இருபத்தியோராம் நூற்றாண்டு, சீர்திருத்தங்கள், முன்னேற்றங்கள், நாகரிகங்கள் பற்றியெல்லாம் பேச்சு பேச்சாகப் பேசிக்கொண்டே இருந்தாலும் இன்னமும் வேரடி விஷமாக ஊறிப் போய்க் கிடக்கும் சாதிவெறியை மட்டும் யாராலும் எதுவும் செய்யவில்லை. இதில் இல்லையென எந்த சாதியும் விதிவிலக்கு அல்ல. எத்தனை தலைவர்கள், எத்தனை நெறிகள், எத்தனை சீர்திருத்தவாதிகள், எத்தனை பாடுகள்... ம். இன்னமும் அப்படியே உறைந்து கெட்டிதட்டிப் போயிருக்கிறது சாதி. சாதியின் பெயரால், சாதிப் பெருமையின் பெயரால் இன்னும் எத்தனை கொலைகள்தான் நடத்தப் பெறும்? எத்தனை உயிர்கள்தான் பறிக்கப்படும்? எப்போதுதான் இந்தப் பேயின் பெரும் பசி தீரும்?
இத்தனை செய்திகளின் பரபரப்புகளுக்கு இடையே யாருக்கு நினைவில் இல்லை, அநியாயமாகக் கொல்லப்பட்ட அந்த மூன்று உயிர்களைப் பற்றி. இன்னமும் முப்பது நாள்கள்கூட முடியவில்லை...
அந்தப் பெற்றோருக்கு அந்த நாள் விடிந்திருக்கவே கூடாது; கடைசியாகக் கையசைத்துவிட்டுச் சென்ற அந்தக் குழந்தைகளின் முகங்களை வாழ்நாள் முழுவதும் அவர்களால் இனி காண முடியாது. ஒரு தனி நபரின் அலட்சியம், ஒரு நிறுவனத்தின் பொறுப்பின்மை அந்தக் குழந்தைகளைக் காவு கொண்டுவிட்டது.
கடலூர் அருகே திறந்திருந்த செம்மங்குப்பம் ரயில்வே கடவுப் பாதையின் வழியே குழந்தைகளுடன் கடந்து செல்ல முனைகிறது அந்தப் பள்ளி வாகனம். கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனத்தின் மீது வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதித் தூக்கியெறிகிறது. ஒரே கணம், எல்லாம் ஓவர்.
அந்த இடத்திலேயே ஒரு உயிர் பலி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு இரண்டு உயிர்கள். சின்னக்காட்டு சாகையைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி சாருமதி (16), இவருடைய உடன்பிறந்த தம்பி 10-ம் வகுப்பு படிக்கும் செழியன் (15), தொண்டமாநத்தத்தைச் சேர்ந்த 6-வது வகுப்பு மாணவன் நிமலேஷ் (12). அப்போதுதான் பயணம் தொடங்கியது என்பதால் வாகனத்தில் இருந்தவர்கள் 5 பேர் மட்டுமே. நிமலேஷின் அண்ணனான 10 வகுப்பு படிக்கும் விஸ்வேஷ் (15), டிரைவர் சங்கர் (47) ஆகியோர் காயங்களுடன் தப்பிவிட்டனர்.
அத்தனை விரைவாக எப்படிக் கண்டுபிடித்தார் என்றே தெரியவில்லை, விபத்து நடந்த இடத்துக்கு வந்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் (இப்போது இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார்), கடவுப் பாதையின் கதவுகள் சாத்தப்பட்டுதான் இருந்தன; டிரைவரும் மற்றவர்களும் வற்புறுத்தியதால்தான் காவலாளி திறந்துவிட்டிருக்கிறார் என்று சான்றிதழ் தந்தார்.
இவருடைய கருத்தை அப்படியே பிரதிபலித்து, தெற்கு ரயில்வேயின் சார்பில் அதே நாளில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பும், ‘பள்ளி வேன் வந்தபோது கேட் மூடப்பட்டிருந்தது. ஆனாலும் பள்ளிக்குச் செல்வதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க கேட்டைத் திறந்துவிடுமாறு பள்ளி வேன் டிரைவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, விதிகள் மற்றும் நெறிமுறைகளை மீறி வேனைக் கடந்து செல்ல கேட் கீப்பர் அனுமதித்துள்ளார். ரயில்வே விதிமுறைகளின்படி கேட் கீப்பர் கேட்டைத் திறந்திருக்கக் கூடாது’ என்றெல்லாம் விளக்கம் தந்தது.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் பலத்த காயமுற்றோருக்கு ரூ. 2.5 லட்சம், லேசாகக் காயமுற்றோருக்கு ரூ. 50 ஆயிரம் ரயில்வே சார்பில் வழங்கப்படும் என்ற தகவல்களுடன் நிறுத்திக்கொள்ளாமல், இந்த இடத்தில் சுரங்கப் பாதை அமைக்க அனுமதி கோரியும் கடந்த ஓராண்டாக மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கவில்லை என்றொரு குற்றச்சாட்டையும் செய்திக்குறிப்பு முன்வைத்தது.
ஆனால், நல்லவேளையாக காயமுற்ற பள்ளி வேன் டிரைவர் சங்கருடன் சேர்ந்து உண்மையும் தப்பிப் பிழைத்துக்கொண்டுவிட்டது.
‘கேட் திறந்திருந்ததால்தான் கடந்தேன், ரயில் ஹார்ன் சப்தம் எதுவும் கேட்கவில்லை’ என்று கறாராக டிரைவர் சங்கர் குறிப்பிட்டார். ‘கேட் திறந்துதான் இருந்தது, ரயில் ஹார்ன் சப்தம் எதுவும் கேட்கவில்லை; எனவேதான் டிரைவர் கடந்தார்’ என்று தப்பிப் பிழைத்த மாணவன் விஸ்வேஷும் உறுதிப்படுத்தினான்.
ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது; பங்கஜ் சர்மா போர்த்திக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார் என்றெல்லாம் ஊரே சொன்னபோது, முற்றிலுமாக மறுத்துக்கொண்டிருந்தது ரயில்வே நிர்வாகம்.
கடைசியில் விபத்து பற்றிய விசாரணையில் – ரயில் நிலையத்திலுள்ள குரல் பதிவுக் கருப்புப் பெட்டியில் பதிவான உரையாடல்களிலிருந்து - கேட்டை மூடாமலேயே ஆலப்பாக்கம் நிலைய மேலாளருக்குக் குறியீட்டு எண்ணைக் காவலாளி பங்கஜ் சர்மா தந்திருக்கிறார் என்ற உண்மை அம்பலமானது.
கதவை மூடாமலேயே மூடிவிட்டதாகப் பொய் சொல்லி எண்ணை (எக்சேஞ்ச் ஆப் பிரைவேட் எண்) தந்திருக்கிறார் காவலாளி பங்கஜ் சர்மா. எனினும், இந்த விபத்து நடந்தவுடன் நிலைய மேலாளரை அவரே அழைத்து, தான் கதவைச் சாத்தவில்லை என்பதைத் தெரிவித்திருக்கிறார். நல்லகாலமாக, இவை எல்லாமே குரல் பதிவில் இடம் பெற்றிருந்ததால் – விசாரணையில் வெளிப்பட்டதால் – பள்ளிக் குழந்தைகளுடன் டிரைவர் சங்கர் தற்கொலைக்கு முயன்றார் என்பதைப் போன்ற பெரும் குற்றச்சாட்டிலிருந்து எல்லாருமே தப்பிவிட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு இழப்பீடாகத் தமிழக அரசு, தலா ரூ. 5 லட்சம் அறிவித்தது. ரயில்வே நிர்வாகமும் ரூ. 5 லட்சம் அறிவித்தது. ஒரு குடும்பத்தில் அக்கா, தம்பி இருவருமே உயிரிழந்துவிட்டனர். இந்தப் பணத்தை யாரோ ஒரு பெற்றோர் இன்னமும்கூட பெற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தப் பத்து லட்சம் பணத்துடன் எல்லாமும் முடிந்துவிட்டதா? இவ்வளவுதானா, இந்த உயிர்களுக்கான விலை? இந்த ரூ. 5 லட்சம் பணத்தைத் தாண்டி ரயில்வே நிர்வாகத்துக்கு எவ்விதப் பொறுப்பும் இல்லையா? முழுக்க முழுக்க நிர்வாகத்தின் அக்கறையின்மையும் மனித அலட்சியமும் மட்டுமே இந்த மூன்று குழந்தைகள் பலியாகக் காரணம். நிச்சயம் இது தவிர்த்திருக்கக் கூடிய ஒன்றுதான்.
இங்கே இல்லாமல்போன முக்கியமான விஷயம் – இன்டர்லாக்கிங்! கதவை மூடாமல் ரயில் கடப்பதற்கு சிக்னல் வழங்க முடியாது என்ற ஏற்பாடு. இன்னமும் எத்தனை காலத்துக்குத்தான் இதையே காரணமாக ரயில்வே சொல்லிக் கொண்டிருக்கும்?
இப்படித் தங்களுடைய குழந்தைகளின் முடிவு ஏற்படும் என்று அந்தப் பெற்றோர்கள் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள். இந்தக் குழந்தைகளும்தான் எத்தனை கனவுகளுடன் இருந்திருப்பார்கள்? இன்று வெறும் புகைப்படங்களாக!
தன் கடமையைச் சரிவர நிறைவேற்றாத காவலாளியை வேலைக்கு வைத்திருந்த ரயில்வே நிர்வாகத்துக்கு இந்த உயிரிழப்பில் எல்லாவிதமான பொறுப்பும் கடமையும் இருக்கின்றன அல்லவா? ஒருவேளை இதே கடவுப் பாதையில் 50, 60 பேருடன் ஒரு பேருந்து கடந்து சென்றிருந்தால்?
இந்திய ரயில் தடங்களில் ஏறத்தாழ 18,477 கடவுப் பாதைகள் இருக்கின்றன. இவற்றில் 17,918 காவலர்கள் இருக்கின்றனர். 559 இடங்கள் ஆளில்லாதவை. இவற்றில் ஏறத்தாழ 11,096 கடவுப் பாதைகள் இன்டர் லாக்கிங் ஏற்பாடு இருப்பவை. மற்றவை எல்லாம் ஆள்கள் இருந்தாலும்கூட நம்முடைய செம்மங்குப்பம் கடவுப் பாதையைப் போலத்தான்!
செம்மங்குப்பம் கடவுப் பாதையில் நேரிட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்குப் பதிலாக என்ன கொடுத்தாலும் ஈடாக முடியாது. முற்றிலும் ரயில்வே மட்டுமே காரணமான இந்த உயிரிழப்புகளுக்கு ஈடாகத் தங்கள் குற்றத்தையும் பொறுப்புணர்வையும் பகிர்ந்துகொள்ளும் வகையில் தார்மிகப் பொறுப்பேற்றுக் குறைந்தபட்சம் ரூ. 1 கோடியை இழப்பீடாக ரயில்வே நிர்வாகம் அறிவிக்க வேண்டும்! இதுவே மக்களுடைய உயிர்களின் மீது ரயில்வே கொண்டுள்ள அக்கறை மீதான சுயபரிசோதனையாகவும் அதற்காகத் தானே விதித்துக்கொண்ட அபராதமுமாக விளங்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.