

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற இரு முக்கிய பேரவைத் தேர்தல்களில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று இந்த ஆண்டை தனக்கே உரியதாக்கியுள்ளது எனலாம். ஆம், நாட்டில் 20+ மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பாஜக கைவசம் இருந்தாலும், 27 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் தலைநகரைக் கைப்பற்றியதே பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி.
அதேபோல இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் பாஜக முக்கிய வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. மற்ற கட்சிகளுக்கும் இந்த ஆண்டு தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தன? பார்க்கலாம்.
தில்லி தேர்தல்
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே தலைநகர் தேர்தல்.
ஊழலுக்கு எதிராக 2012ல் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி 2013 ஆம் ஆண்டு தேர்தலிலேயே தில்லியைக் கைப்பற்றியது. பின்னர் சில காரணங்களால் கேஜரிவால் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து தில்லியில் ஓராண்டுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. அதன்பின்னர் 2015, 2020 பேரவைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று தில்லியை தன் கைவசம் வைத்திருந்தது. ஆம் ஆத்மி கட்சியும் கேஜரிவாலும் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்டனர்.
2025 தேர்தலிலும் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வாய்ப்பிருப்பதாக பலரும் எதிர்பார்த்திருந்த சூழலில்தான் பாஜக பெரும்பான்மை பலத்துடன் தலைநகரைக் கைப்பற்றி அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக, தில்லியைக் கைப்பற்றியது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது, கொண்டாடப்பட்டது. முதல்வராக பெண் ஒருவர்(ரேகா குப்தா) நியமிக்கப்பட்டது வெற்றிக்கு கூடுதல் வலு சேர்த்தது எனலாம்.
70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5 தோ்தல் நடந்தது. பிப். 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை. கணிப்புகளின்படி பாஜக 48 தொகுதிகளில் வென்றது. இதில் சிறுபான்மையினர் அதிகமுள்ள வடகிழக்கு தில்லி பகுதியில் உள்ள 10 தொகுதிகளை பாஜக கைப்பற்றியதே அவர்களின் முக்கிய வெற்றி.
ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 3 ஆவது முறையாக ஆட்சியில் அமருவோம் என்று கூறிய முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், புதுதில்லி தொகுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மணீஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் தோல்வி அடைந்தனர். அதேநேரத்தில் கல்காஜி தொகுதியில் தில்லி முன்னாள் முதல்வர் அதிஷியின் வெற்றி மட்டுமே அந்தக் கட்சிக்கு ஆறுதல்.
1998-2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் தில்லியில் ஆட்சி செய்த காங்கிரஸ், தொடர்ந்து 3 ஆவது முறையாக இந்த தேர்தலிலும் ஓரிடம்கூட பெறவில்லை. ஹாட்ரிக் தோல்வி என பாஜகவால் அதிகம் விமர்சிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் அதிர்ச்சி மற்றும் பின்னடைவு. எனினும் கடந்த தேர்தலைவிட காங்கிரஸுக்கு 2% வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது ஆறுதலான விஷயம். பாஜகவுக்கு 7% வாக்கு வீதம் அதிகரித்த நிலையில் ஆம் ஆத்மிக்கு 10% வாக்குகள் குறைந்தன.
முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால் மற்றும் அமைச்சர்களாக இருந்த சத்யேந்தர் ஜெயின், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீதான பல ஊழல் முறைகேடு புகார்கள் மற்றும் நிர்வாகக் காரணங்களால் ஆம் ஆத்மி இந்த கடும் தோல்வியைச் சந்தித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இடம்பெற்றிருந்த நிலையில் கருத்து வேறுபாடுகளால் தில்லி தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்தனியே போட்டியிட்டதும் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம். ஏனெனில் இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டிருந்தால் வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் அரசியல் விமர்சர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுடன் தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் 2024, டிச. 14 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டது இடைத்தேர்தல். அதிமுக, பாஜக தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் தேர்தலில் போட்டியிடவில்லை என்று போட்டி வாய்ப்பை திமுகவுக்கே வழங்கியது.
திமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட வி.சி. சந்திரகுமார் 1,15,709 வாக்குகளைப் பெற்று (91,558 வாக்குகள் வித்தியாசம்) அமோக வெற்றி பெற்றாா். கடந்த 2011 சட்டப்பேரவைத் தோ்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றியடைந்த வி.சி. சந்திரகுமாா், 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது கூடுதல் தகவல்.
இந்த இடைத் தேர்தலில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீதாலட்சுமி 24,151 வாக்குகளைப் பெற்றும் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளைக்கூட பெற முடியாததால் வைப்புத்தொகையை இழந்தார். மேலும் சுயேட்சை உள்பட 45 பேர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. 3-ம் இடத்தைப் பிடித்த நோட்டாவுக்கு 6,109 வாக்குகள்.
ஈரோடு கிழக்கு தவிர இந்தாண்டு குஜராத், ஜம்மு -காஷ்மீர், கேரளம், பஞ்சாப், ஒடிசா, மிசோரம், தெலங்கானா, ஜார்கண்ட், ராஜஸ்தான், மேற்குவங்கம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஓரிரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக - 4, காங்கிரஸ் -3, மற்ற இடங்களில் மாநிலக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்
நாட்டில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பொருட்டு இந்தியா கூட்டணி உருவாகக் காரணமாக இருந்த பிகார் முதல்வர் நிதீஷ் குமார், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாஜகவுடன் இணைந்து பிகாரில் ஆட்சியைத் தொடர்ந்தார். 2024 மக்களவைத் தேர்தலையொட்டி மாறிய இந்த கூட்டணி 2025 பிகார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர்ந்தது.
பிகாரில் 243 தொகுதிகளுக்கு கடந்த நவ. 6, 11-ல் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 தொகுதிகளிலும் மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 28 இடங்களிலும் இதர தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் போட்டியிட்டன. இந்தியா கூட்டணியில் பெரிய கட்சிகளான ஆா்ஜேடி 143, காங்கிரஸ் 61 இடங்களில் போட்டியிட்டன.
நவ. 14 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்ட தொகுதிகளைவிட அதிகமாகவே, பாஜக, ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி 202 தொகுதிகளில் (பாஜக - 89, ஜேடியு - 85, லோக் ஜனசக்தி - 19, இதர - 9) வெற்றி பெற்று, மாபெரும் பலத்துடன் ஆட்சியைத் தக்க வைத்தது. 10-ஆவது முறையாக நிதீஷ் குமார் பிகார் முதல்வராகப் பொறுப்பேற்று சாதனை படைத்தார்.
அதேநேரம், கடந்த முறை 75 தொகுதிகளை வைத்திருந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) இந்த முறை 25 இடங்களை மட்டுமே பெற்றது. காங்கிரஸ் -6, இந்திய கம்யூ. - 2, மார்க்சிஸ்ட் கம்யூ. - 1 என இந்தியா கூட்டணி வெறும் 34 இடங்களுடன் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரையும் பிகாருக்கு வரவழைத்து பிரசாரம் செய்தது எல்லாம் இந்தியா கூட்டணிக்கு ஏனோ பலனளிக்காமல் போனது.
ஹைதராபாத் எம்.பி.யும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அஸாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 32 இடங்களில் போட்டியிட்டு 5-ல் வெற்றி பெற்றது.
பிகாா் தோ்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட தோ்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை என்பது ஒட்டுமொத்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நிதீஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகியதும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளே சில மாநிலங்களில் ஒத்துப்போகாததும் பிகார் தேர்தலில் அந்த கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பிகாரில் 2025 ஆம் ஆண்டு தேர்தலில்தான் வரலாறு காணாத அளவில் 67% சதவீதம் வாக்குகள் பதிவானது. அதேபோல 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்ஐஆர்) எனும் தேர்தல் சீர்திருத்த முறையை தேர்தல் ஆணையம் முதன்முதலில் பிகாரில் செயல்படுத்திய பிறகு நடந்த முதல் தேர்தல் இதுவாகும்.
கேரள உள்ளாட்சித் தேர்தல்
நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றிருந்தாலும் தென் மாநிலங்களில் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஏனெனில் கேரளம் பல பத்தாண்டுகளாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வசம் உள்ள நிலையில் 2025 டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. பதிலாக காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.
கேரளத்தில் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச. 9, 11 ஆகிய இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் டிச. 13 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.
மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி கொச்சி, கொல்லம், திருச்சூா், கண்ணூா் ஆகிய 4 மாநகராட்சிகளைக் கைப்பற்றி அதிர்ச்சி வெற்றியைப் பதிவு செய்தது. வடக்கே தில்லி, பிகார் தேர்தல்களில் படுதோல்வியுற்ற காங்கிரஸ் கட்சியின் 'கை' தென் மாநிலங்களில் வலுப்பெற ஆரம்பித்திருக்கிறது என்று சொல்லலாம். (கர்நாடகம், தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி)
கோழிக்கோடு மாநகராட்சியை மட்டும் தக்கவைத்துள்ள இடதுசாரி கூட்டணிக்கு இது பெரும் பின்னடைவு. ஏனெனில் கேரளத்தில் அடுத்தாண்டு 2026ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. இதே முடிவுகள் பேரவைத் தேர்தலிலும் எதிரொலித்தால் கேரளத்தில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும்.
அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி, கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தைக் கைப்பற்றியது மட்டுமின்றி மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் பல இடங்களை இடதுசாரியிடம் இருந்து கைப்பற்றி தனது முதல் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு காங்கிரஸைவிட பாஜக மிகப்பெரிய கொண்டாட்டத்தை நடத்தியது.
கேரளத்தில் 1980 முதலே தற்போது ஆளும் இடதுசாரி கூட்டணியும் காங்கிரஸ் கட்சியும் மாறிமாறி ஆட்சியில் இருந்து வருகின்றன. கடந்த 2016 முதல் இடதுசாரி கூட்டணி(பினராயி விஜயன்) ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் வரும் பேரவைத் தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாநிலங்களவைத் தேர்தல்
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் தமிழகத்தில் இருந்து திமுக சார்பில் வழக்கறிஞர் பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், சல்மா (எ) ராசாத்தி, அதிமுக சார்பில் இன்பதுரை, முன்னாள் எம்எல்ஏ தனபால் ஆகியோர் பதவியேற்றனர்.
கட்சி தொடங்கிய முதலில் தனித்துப் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, பின்னர் திமுகவுடன் இணைந்த நிலையில் ஏற்கெனவே முடிவு செய்ததன்படி திமுக ஆதரவுடன் மநீம தலைவர் கமல்ஹாசன், முதல்முறையாக மாநிலங்களவை எம்.பி. ஆனார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
2025 ஆம் ஆண்டுதான் (செப்டம்பரில்) இந்தியாவின் மிக முக்கியமான குடியரசு துணைத் தலைவர் தேர்தலும் நடைபெற்றது. காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டியை தோற்கடித்து ஆளும் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் சுவாரசியமாக ஒரு நிகழ்வு நடந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் மூலம் பதிவாகும் வாக்குகள் அடிப்படையில் சி.பி. ராதாகிருஷ்ணன் குறைந்தபட்சம் 427 வாக்குகளைப் பெற வேண்டும். ஆனால் அவர் அதிகமாக, 452 வாக்குகளைப் பெற்றார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்களைச் சேர்த்தாலும் 449 தான் வரும். எதிர்க்கட்சிகளின் ஒரு சில வாக்குகளும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்திருப்பதாகவே கூறப்படுகிறது. ஏனெனில் காங்கிரஸ் கூட்டணி சுதர்சன் ரெட்டி 315 வாக்குகளைப் பெறுவார் என்ற நிலையில் 300 வாக்குகளை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.
2026 தேர்தல்கள்
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் அசாமில் பாஜகவும் புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணியும் ஆட்சியில் உள்ளன. கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி, மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், தமிழகத்தில் திமுகவும் ஆட்சியில் உள்ளது.
மாநில கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கால்பதிக்க பாஜக கடுமையாக முயற்சித்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அசாம், புதுச்சேரியில் பாஜக தனது ஆட்சியைத் தக்கவைத்தாலும் மற்ற மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்பது பாஜகவுக்கு மிகப்பெரிய சவால்தான்.
கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளதால் அதன் முடிவுகள் கேரள பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கலாம். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளால் கம்யூனிஸ்ட் கட்சி, பேரவைத் தேர்தலில் சற்று சுதாரித்தே செயல்படும் என்கிறது அரசியல் வட்டாரங்கள். இதனால் அங்கு மும்முனைப் போட்டி கடுமையாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. (தென் மாநிலங்களில் கர்நாடகம், தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது)
அதேபோலவே மேற்குவங்கத்திலும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் தற்போது அங்கு 2-ம் இடத்தில் இருக்கும் பாஜகவுக்கும் கடும் போட்டி இருக்கும். காங்கிரஸ் நிலைமை தேர்தல் முடிவுகளில்தான் தெரிய வரும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026
தமிழகத்தில் கடந்த 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தொடர்ந்து 2 ஆவது முறையாக திமுக ஆட்சியமைக்க, தொண்டர்கள் முதல் அமைச்சர்கள் வரை தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த எஸ்ஐஆர் பணிகளில் திமுகவினர் அதிகம் ஈடுபட்டுள்ளதும் அவர்களின் தேர்தல் உத்தியாகவே பார்க்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் 4 ஆண்டுகள் முதல்வராக இருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜகவை மீண்டும் கூட்டணிக்கு சேர்த்துள்ளார். இந்த கூட்டணியில் யாருக்கு அதிகாரம் என்ற கருத்து வேறுபாடுகளே சில மாதங்கள் நீடித்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்குதான் அதிகாரம் என தற்போதைய நிலை இருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் சேர பல்வேறு கட்சிகளிடம் அதிமுகவைவிட பாஜக அதிகம் முனைப்பு காட்டி வருகிறது.
பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல். ஆனால், இபிஎஸ் முதல்வர் என்றால் அந்த கூட்டணியில் இணையமாட்டோம் என்று டிடிவி தினகரன் கூறி வருகிறார்.
தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் 2026 ஜனவரியில்தான் கூட்டணி குறித்த அறிவிப்ப்பை வெளியிடுகின்றன.
நாம் தமிழர் கட்சியின் சீமான் வழக்கம்போல தனித்துப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி தவிர்த்து 4 ஆவதாக விஜய்யின் புதிய கட்சியான தவெக வரும் தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் கணிக்கிறார்கள். விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு வரும் தேர்தலில் வாக்குகளைப் பிரிக்கும் என்றே கூறப்படுகிறது. தவெக கூட்டணியில் இணையும் கட்சிகளைப் பொருத்தும் வெற்றி வாய்ப்பு இருக்கலாம்.
ஜனவரி - பிப்ரவரியில் தமிழகத்தில் கூட்டணிகள் இறுதி ஆகும் நிலையில் வெற்றி வாய்ப்புகள் கணிக்கப்படலாம். தவெக வரவினாலும் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணியாலும் தமிழக தேர்தல் களம் முழுமையாக கணிக்க முடியாததாகவே இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.