

'பகல் ஒளி சிக்கன நேரம்' என்பது கோடைக்காலத்தில் கடிகாரங்களை முன்னோக்கி நகர்த்துவதும், குளிர்காலத்தில் பின்னோக்கி நகர்த்துவதும் ஆகும். நீண்ட பகல் ஒளி காலத்தைச் சிறப்பான முறையில் பயன்படுத்துவதே அவற்றிற்கான காரணம். கோடையில் ஒரு மணி நேரம் முன்னோக்கியும், குளிரில் ஒரு மணி நேரம் பின்னோக்கியும் நேரத்தைக் காட்டும் விதத்தில் கடிகாரங்கள் சரிசெய்யப்படுகின்றன. மாலை நேரங்களில் மின்விளக்குகளைப் பயன்படுத்துவதை நிறுத்தி ஆற்றலைச் சிக்கனப்படுத்துவதே முதன்மையான நோக்கம் ஆகும்.
கோடையில் இப்படிக் கடிகாரங்களைச் சரிசெய்து ஆ|ற்றலை மிச்சப்படுத்தும் கோட்பாட்டை முன்மொழிந்தவர் என்று பெஞ்சமின் ஃப்ராங்க்லின் அடையாளப்படுத்தப்படுகிறார். அவர் பாரிசுக்குத் தூதுவராக இருந்த காலகட்டத்தில், 1784-இல் 'சூரியன் எழுந்த உடன் ஒளி கிடைக்கிறது' என்று பாரிஸ் இதழுக்கு நகைச்சுவையாக ஒரு கடிதம் எழுதினார். என்றாலும் ஒரு நூற்றாண்டுக் காலம் வரையிலும் அக்கோட்பாடு கண்டுகொள்ளப்படவில்லை. முதல் உலகப்போரின்போது, 1916 மே மாதத்தில் முதன்முதலாக ஜெர்மன் நாடு ஆற்றலை மிச்சப்படுத்தும் நோக்கில் அதனைக் கடைப்பிடிக்கத் தொடங்கியது. ஐரோப்பாவின் மற்ற அனைத்து நாடுகளும் ஜெர்மன் நாட்டைப் பின்தொடர்ந்து 'பகல் ஒளி சிக்கன நேரம்' கோட்பாட்டை நடைமுறைப்படுத்தின. அமெரிக்கா, 1918-இல் பின்பற்றத் தொடங்கியது.
முதலாம் உலகப்போர் முடிவடைந்த உடன் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் மாலை நேர ஆற்றல் சிக்கனத்திற்காக 'பகல் ஒளி சிக்கன நேரம்' கோட்பாட்டை நடைமுறைப்படுத்த விரும்பினார். ஆனால் அன்றைய அமெரிக்காவில் பெரும்பகுதி கிராமங்களாகவே இருந்தன. அத்திட்டத்திற்கு வேளாண் குடிமக்களிடமிருந்து எதிர்ப்பு உருவானது. காரணம், அத்திட்டம் தங்களுக்குக் கிடைக்கும் காலை சூரிய ஒளியில் ஒரு மணி நேரத்தை இல்லாமல் ஆக்கிவிடும் என்று அவர்கள் அச்சம் கொண்டார்கள். அதன் காரணமாக அத்திட்டம் இரண்டாம் உலகப்போர் வரையிலும் ஒத்திப்போடப்பட்டது. இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலகட்டத்தில் 1942 பிப்ரவரி 9-இல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்லின் ரூஸ்வெல்ட் 'பகல் ஒளி சிக்கன நேரம்' திட்டத்தை ஆண்டு முழுவதற்கும் அமல்படுத்தினார். அதனை 'போர்க் காலம்' என்று அழைத்தார்.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு , அமெரிக்காவில் மாநிலங்களும், நகரங்களும் அவரவர் விருப்பம்போல் நடந்துகொள்ளலாம் என்று சொன்னதனால் 'பகல் ஒளி சிக்கன நேரம்' கடைப்பிடிப்பதில் பெரும் குழப்பம் உருவானது. அந்தச் சிக்கலைத் தீர்க்கும் வகையில் 1996-இல் அனைவருக்கும் பொதுவான காலம் பற்றிய சட்டம் (Uniform Time Act) நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின்படி, ஒவ்வொரு ஏப்ரல் மாதத்து முதல் ஞாயிற்றுக்கிழமையில் 'பகல் ஒளி சிக்கன நேரம்' நடைமுறைக்கு வரும் என்றும், ஒவ்வொரு அக்டோபர் மாதத்து இறுதி ஞாயிற்றுக்கிழமையில் முடிவுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்குப் பின்பு 2007-இல் 'ஆற்றல் கொள்கை சட்டம் 2005' (Energy Policy Act 2005) நடைமுறைக்கு வந்தது. அது இது வரையிலும் தொடர்கிறது.
வட அமெரிக்காவில் 'பகல் ஒளி சிக்கன நேரம்' 2025 நவம்பர் 2 , ஞாயிற்றுக்கிழமையில் , கடிகார முள் ஒருமணி நேரம் பின்னோக்கித் திருப்பப்பட்டு முடிவுக்கு வந்தது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் 2025 அக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமையில் முடிவுக்கு வந்தது. அங்கு அது 'பிரிட்டன் கோடை' என்று அழைக்கப்படுகிறது.
'பகல் ஒளி சிக்கன நேரம்' வட அமெரிக்காவில் 2026 மார்ச் 8 அன்றும், ஐரோப்பாவில் 2026 மார்ச் 29 அன்றும் மீண்டும் நடைமுறைக்கு வரும். நாள்காட்டி போல 'பகல் ஒளி சிக்கன நேரம்' கோடையில் என்று நடைமுறைக்கு வரும், குளிரில் எப்போது திரும்பும் என்னும் செய்திகளை மக்களின் வசதிக்காக வெளியிடப்பட்டு வருகிறது.
உலக நாடுகளில் 40 விழுக்காட்டிற்கும் குறைவான நாடுகளிலேயே 'பகல் ஒளி சிக்கன நேரம்' கடைப்பிடிக்கப்படுகிறது. என்றாலும் கோடையில் நீண்ட பகற்பொழுது இருப்பதை அந்த நாடுகள் பயன்படுத்திக்கொள்கின்றன. நிலநடுக்கோட்டிலிருந்து, வடக்கிலும் தெற்கிலும் நீண்ட தொலைவு விலகியிருக்கும் துருவ நாடுகளுக்கு 'பகல் ஒளி சிக்கன நேரம்' மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இது பற்றிய ஆய்வுகள் வேறுசில செய்திகளையும் நமக்குத் தருகின்றன. மாலைப்பொழுதில் கூடுதல் சூரிய ஒளி இருப்பதால் போக்குவரத்தில் ஏற்படும் விபத்துக்கள் பெரிதும் குறைந்துள்ளன. வீட்டிற்கு வெளியே பணிசெய்யும் வேலையாட்களுக்குக் கூடுதல் பகல் நேரமும் கிடைக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்காவிற்கு எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தியதோடு அமெரிக்காவில் 'பகல் ஒளி சிக்கன நேரம்' பெரிதும் கைகொடுத்தது எனலாம். என்றாலும், குறிப்பிடும் அளவிற்கு ஆற்றல் மிச்சப்படுவதில்லை என்று பணி நிறைவு செய்த மூத்த ஆய்வாளர் ஸ்டாண்டன் ஹேட்லி (Stanton Hadley, Oak Ridge National Laboratory) கருத்துத் தெரிவித்திருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் மின்விளக்குகளின் பயன்பாடு கூடியிருக்கிறது. அதனால் 'பகல் ஒளி சிக்கன நேரம்' ஓரளவிற்குப் பலன் தருகிறது என்ற உண்மையே என்றும் கூறுகிறார். 1998 இல் இண்டியானாவிலும், 2007-இல் ஆஸ்திரேலியாவிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், 'பகல் ஒளி சிக்கன நேரம்' திட்டம் எவ்வித நற்பயனையும் அளிக்கவில்லை என்பதையும் ஸ்டாண்டன் சுட்டிக் காட்டுகிறார். அமெரிக்கா அத்திட்டத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கு, ஆற்றலை மிச்சப்படுத்துவதற்கு என்பதற்கும் மேலாக மக்கள் மாலை நேரத்தில் கூடுதல் நேரம் கிடைக்கும் ஒளியைப் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்பதாகும் என்றும் ஸ்டாண்டன் கூறுகிறார்.
உலகில் 'பகல் ஒளி மிச்சப்படுத்தும் நேரம்' திட்டத்தைக் கடைப்பிடிக்கும் நாடுகள்
அமெரிக்காவும். கனடாவும் கடைப்பிடிக்கின்றன. அமெரிக்காவில் ஹவாய், அரிசோனா மாநிலங்கள் இத்திட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை. பிரிட்டன் கடைப்பிடிக்கிறது. ரஷியா, ஐஸ்லாந்து, பெலாரஸ் நீங்கலாக ஐரோப்பிய நாடுகள் பகல் ஒளி மிச்சப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
பகல் ஒளி சிக்கன காலம் பற்றிய தவறான புரிதல்கள்
⦁ பகல் ஒளி சிக்கன காலம் தொடங்கும் நாளன்று 'நெஞ்சு வலி' வந்தவர்களின் எண்ணிக்கை கூடுகிறது.
⦁ வேறுவேறு கடிகார நேரங்களைக் கொண்டிருக்கும் பகுதிகளில் பயணம் செய்யும்போது குழப்பம் ஏற்படுகிறது.
⦁ 2009இல் ஓர் உளவியல் இதழில் (Journal of Applied Psychology, 2009) வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை, பகல் ஒளி சிக்கன காலம் தொடங்கும் நாளன்று சுரங்கத் தொழிலாளிகள் 40 நிமிடம் உறக்கக் காலத்தை இழந்ததால், பணியிடங்களில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் காயங்கள் கூடியுள்ளன.
⦁ பகல் ஒளி சிக்கன காலம் காரணமாக வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் பாதிப்புக்குள்ளாகின. மனிதன் தனது நேரத்தை மாற்றிக்கொண்டதால், விலங்குகளுக்கு அளிக்கப்பட்ட உணவு நேரமும் மாற்றமடைந்தது. ஒருமணி நேரம் தாமதமாக உணவு அளிப்பதும், ஒருமணி நேரம் பிந்திப் பால் கறப்பதும் வீட்டு விலங்குகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தின.
⦁ அமெரிக்காவில் காலையில் 2 மணிக்கு நேரம் மாற்றம் செய்யப்படுகிறது. வெளியில் சென்றுவிட்டு நேரம் கழித்து வீடு திரும்பும் மக்கள் கடிகார நேரத்தை ஒரு மணி நேரம் பின்னோக்கித் திருப்புகிறார்கள். என்றாலும் நாள்காட்டியில் ‘நேற்று’ என்று மாற்றம் செய்வதில்லை.
கூடுதல் தகவல்
Teacher Planet என்னும் வலைத்தளம் ‘பகல் ஒளி சிக்கன நேரம்’ என்பதைக் குழந்தைகள் புரிந்துகொள்ளும் வகையில் பல பாடங்களைத் தயாரித்து அளிக்கின்றன. History Channel 'பகல் ஒளி சிக்கன நேரத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் ஒருமணி நேரக் காணொளி ஒன்றை உருவாக்கி வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவில் 'பகல் ஒளி சிக்கன நேரம்' கடைப்பிடிக்கப்படுவதில்லை.
[கட்டுரையாளர் - இயற்பியல் பேராசிரியர் (ஓய்வு)]
இதையும் படிக்க: ஆற்றைக் கடக்க ஆட்டுத்தோலைப் பயன்படுத்திய அசிரியன் போர் வீரர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.