
இயற்கையின் படைப்பில் நீர்வாழ் உயிரினங்கள் மட்டுமல்லாது நிலத்தில் வாழும் ஆடு, மாடு, யானை போன்ற விலங்குகளும், சில பறவைகளும் நீரில் நீந்துவதற்குக் கற்றுக் கொண்டிருக்கின்றன. உயிரினங்களின் உச்சநிலையில் பரிணாம வளர்ச்சிபெற்ற மனிதனும் நீரில் நீந்துவதற்குக் கற்றுக்கொண்டான்.
நீரில் மூழ்கி இறந்துவிடாமலிருக்க ஆரம்பகால மனிதன் எப்படி ஆற்றைக் கடந்திருப்பான்? நீரில் மிதக்கும் மரக்கட்டையின் துணைகொண்டு, கைகளைத் துடுப்புகளாக்கிக் கடந்திருப்பான். பல கட்டைகளைச் சேர்த்துக்கட்டித் தெப்பமாக்கி அதில் அமர்ந்துப் பயணித்திருப்பான். அதுதான் தெப்பமாக, கட்டுமரமாக, ஓடம் என்னும் தோணியாக, நாவாயாக பின்னாளில் வளர்ச்சியடைந்திருக்கும். ஆனாலும் இவை எதுவுமின்றி ஆற்றில் மிதந்து செல்லவேண்டிய சூழலும் மனிதனுக்கு ஏற்பட்டிருக்கும். அதன் விளைவாக மனிதன் கற்றுக்கொண்டதுதான் நீச்சல்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அசிரியன் போர் வீரர்கள் ஆட்டுத்தோலைப் பயன்படுத்தி நீந்தி ஆற்றைக் கடந்ததற்கான சான்றுகள் நிம்ருட்டில் ஜிப்சம் பாறையில் காணப்படும் கலை வடிவத்திலிருந்து தெரிய வருகிறது. நிம்ருட் இன்றைய இராக் நிலப்பகுதியில் உள்ளது. நிம்ருட் பழங்கால அசிரியன் பேரரசின் பெருநகரம் ஆகும். இங்குதான் ஜிப்சம் உப்புப்பாறையில் செதுக்கப்பட்ட அந்தக் கலைவடிவம் காணப்படுகிறது.
வடமேற்கு மாளிகையில்1840-இல் மேற்கொள்ளப்பட்டப் பல அகழாய்வுகளில் இதுவும் ஒன்று. அந்த மாளிகை, டைக்ரிஸ் ஆற்றங்கரையில் பொது ஆண்டுக்கு 850 ஆண்டுகளுக்கு முன்பு (850 BCE) எழுப்பப்பட்டது. மாளிகையின் உட்புறம் அரசவைக்கு அருகமைந்த சுவரில் செதுக்கப்பட்ட கலைவடிவம் காணப்படுகிறது. மன்னன் ஒரு படையை வழி நடத்திச் செல்வதையும், அசிரியன் படைவீரர்கள் அந்தக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மிதவைகளைக் கொண்டு ஓர் ஆற்றை நீந்திக் கடந்துகொண்டிருப்பதையும் அக்கலை வடிவம் வெளிப்படுத்துகிறது.
செதுக்கப்பட்ட அந்தக் கலைவடிவத்தில் பல வீரர்களும், குதிரைகளும் ஆற்றை நீந்திக் கடந்துசெல்வதைப் பார்க்க முடிகிறது. நீந்தும் குதிரைகளை வீரர்கள் கயிறுகளால் இழுத்துக்கொண்டே நீந்துகின்றனர். ஒரு வீரன் தனியாக நீந்திக்கொண்டிருக்கிறான். ஒருவன் ஒரு சிறிய ஓடத்தில் அமர்ந்துத் துடுப்புப் போட்டுக்கொண்டிருக்கிறான். இருவர் ஊதிப்பெருக்கிய ஆட்டுத்தோல் மிதவைகளைப் பயன்படுத்தி நீந்துகின்றனர். மேற்பகுதியில் மன்னனின் முன்னோர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. முப்பரிமாணக் காட்சி இருபரிமாணத்தில் மிகவும் தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது.
விலங்குகளின் தோல் அல்லது சிறுநீர்ப்பை மிதவைகளாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது நிர்முட் சுவர்களின் வரைகலைகளில் பல இடங்களில் காணப்படுகிறது. அவை ஆடுகள் அல்லது பன்றிகளின் தோல்களாக, சிறுநீர்ப்பைகளாக இருத்தல் வேண்டும். ஒரு படைவீரனின் ஆயுதங்களை ஆற்றுநீரில் நனையாமல் அக்கரைக்கு எடுத்துச்செல்வதற்கும் உதவியிருக்கிறது. இந்தவிதமாக அரவம் இன்றி எதிரிகள் மீதுத் திடீரெனத் தாக்குதல் நடத்த முடிந்திருக்கிறது.
இரண்டாம் அஷுணசிற்பல் மன்னன், போர்த்திறனுக்கும், புதுமையானப் போர்த்தந்திரங்களுக்கும், கொடுஞ்செயல்களுக்கும் பெயரெடுத்தவன். அவன் கண்டுபிடித்த புதுமைகளில் ஆட்டுத்தோல் மிதவையும் ஒன்று. பொது ஆண்டுக்கு முன்பு ஒன்பதாம் நூற்றாண்டில் (9 BCE) அவன் தனது நாட்டின் நிலப்பரப்பை பெரிய அளவில் விரிவுபடுத்தியிருக்கிறான். பொது ஆண்டுக்கு முன்பு ஆறாம் நூற்றாண்டு வரையிலும் (6 BCE) அசிரியன் பேரரசு நிலைத்திருந்ததற்கு ஆட்டுத்தோல் மிதவைக் கண்டுபிடிப்பும் காரணமாக இருந்திருக்கிறது.
சங்கத்தமிழரின் நீச்சல்கலை
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்களும் ஆற்றில், ஏரியில், கடலில் நீந்திக்குளித்ததற்கான சான்றுகள் பல சங்கப்பாடல்களில் கிடைக்கின்றன. ஆண்களும், பெண்களும், சிறுவர் சிறுமியரும் அப்படி நீந்தியிருக்கின்றனர்.
“விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே
பசும்பொன் அவிரிழை பைய நிழற்றக்
கரைசேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே”
(ஐங்குறுநூறு, பாடல் 74)
பசுந்தழை ஆடையணிந்து, மருதமரக் கிளையிலிருந்து நீருக்குள் பாய்ந்த பெண், வானத்திலிருந்து மயிலொன்று கீழிறங்கி வந்ததுபோல் காட்சியளித்தாகத் தலைவன் கண்டு பிரமித்து நிற்கிறான். அப்படி நீருக்குள் பாய்வது ‘பண்ணை பாயுதல்’ என்று அழைக்கப்பட்டது.
சங்ககாலத்து மகளிர், மருதமரம் ஏறி, அதன் கிளையிலிருந்து நீருக்குள் தலைகீழாகக் குதித்து விளையாடினார்கள் என்பது, அம்மகளிரின் உடல்வாகு, மனத்திண்மை, இயற்கையோடு இயைந்த வாழ்வுமுறை, அதற்கானக் கட்டுப்பாடு இல்லாமை ஆகியவற்றை நமக்கு உணர்த்துகிறது.
இளம் பெண்கள் தமது தோழியருடன் சென்று நீராடியிருக்கின்றனர். தலைமகன்கள், பெரிதும் பரத்தையரோடு அப்படி சென்று விளையாடியிருக்கின்றனர். தனக்குப் பரத்தையரைத் தெரியாது என்று பொய்யுரைக்கும்போது, இதனைத் தலைமகள் சுட்டிக்காட்டுவதாகப் பல பாடல்கள் உள்ளன.
ஆறுகளில் மட்டுமல்ல, கடல் நீரிலும் பாய்ந்து இறங்கி, நெய்தல் நிலத்து மகளிர் நீந்தி விளையாடிக் களித்திருக்கின்றனர் என்பதற்குப் பல சங்க இலக்கியப் பாடல்கள் சான்றாக உள்ளன.
“முண்டகக்கோதை ஒண்டொடி மகளிர்
இரும் பனையின் குறும்பை நீரும்
பூங் கரும்பின் தீஞ் சாறும்
ஓங்கு மணற் குவவுத் தாழைத்
தீ நீரொடு உடன் விராஅய்
முந்நீர் உண்டு முந்நீர் பாயுந்து…”
(புறநானூறு, பாடல் 24 ,மாங்குடி மருதனார்)
நெய்தல் மகளிர், இளம்நுங்குநீரும், கரும்புச்சாறும், இளநீரும் (தாழை என்பது தென்னையைக் குறிக்கும்) குடித்து, கடல் நீரில் பாய்ந்து விளையாடினர். சங்க இலக்கியமான புறநானூற்றுப்பாடல் ஒன்றில், இளம் வயதில் பெண்களுடன் நீரில் நீந்தி விளையாடியதை முதுமையில் நினைவுகூர்ந்து வருந்துகிறார் ஒரு முதியவர்.
“இனி நினைந்து இரக்கம் ஆகின்று, திண்மணல்
செய்யுறு பாவைக்குக் கொய் பூத்தை
தண்கயம் ஆடும் மகளிரொடுகை பிணைந்து
தழுவு வழித்தழீஇ, தூங்குவழித் தூங்கி
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு
உயர்சினை மருதத்துறை உளந்தாழ்ந்து
நீர் நணிபடி கோடுஏறி, சீர்மிக
கரையவர் மருள, திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்த மணற் கொண்ட கல்லா இளமை
அனிதோ தானே! யாண்டு உண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று
இரும் இடை மிடைந்த சிலசொற்
பெருமூதான ரேம் ஆகிய எமக்கே. “
(புறநானூறு, பாடல் 243)
இப்பாடலைப் பாடிய புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. அதனால் தொடித்தலை விழுத்தண்டினார் என்று பாடல் வரியையே புலவரின் பெயராகவும் வைத்துவிட்டனர்.
“வண்டல் மண்ணில் செய்த பாவைக்குப் பூவைச் சூட்டும் இளம் மகளிர், குளிர்ந்த பொய்கையில் நீந்தி விளையாடுவர். அவர்களோடு கைகோர்த்து, அவர்களுடன் தழுவிய வழி தழுவியும், அசைந்த வழி அசைந்தும் விளையாடினோம். கரையில் வளர்ந்திருக்கும் உயரமான மருத மரத்தின், தாழ்வான கிளையிலிருந்து, கரையில் நிற்பவர்கள் திடுக்கிடும் வகையில், ‘துடும்‘ என ஆழம் மிகுந்த நீரில் தலைகீழாகப் பாய்ந்து, அடிமண் எடுத்து வந்து காட்டி எங்கள் வீரத்தை வெளிப்படுத்தினோம். எதையும் ஆராய்ந்து பார்க்காமல் செய்த அந்த இளமைப் பருவம் எங்குச் சென்றதோ? இன்று, நடப்பதற்கு, பூண் கட்டிய கைத்தடித் தேவைப்படுகிறது, உடல். நடுக்கமுறுகிறது இருமல்களுக்கிடையே ஒன்றிரெண்டு சொற்களைத் தான் பேச முடிகிறது. இப்படிப்பட்ட முதுமையில் அந்த இளமையின் வலிமை இருக்கக்கூடுமோ? முடியாது அல்லவா? அதன் பொருட்டு, எங்கள் நிலை இரங்கத் தக்கதுதானே?“ என்பதாக அந்தப் பாடல் அமைகிறது.
சங்க காலத்தில் ஆண்களும், பெண்களும் ஆறுகளிலும், குளங்களிலும், கடல்களிலும் நீந்தினர் என்பதோடு தெப்பம் (புணை), தோணி (அம்பி), நாவாய் போன்றவற்றைப் பயன்படுத்தியும் ஆற்றைக் கடந்தனர், கடலில் மீன்பிடித்து வந்தனர் என்பதற்குப் பல சங்க இலக்கியப்பாடல்கள் சான்றாக உள்ளன.
தோணி
“கடல்பாடு அவிந்து தோணி நீங்கி”
(அகநானூறு, பாடல் 50, வரி 1)
அம்பி
சங்க இலக்கியங்களில், தோணி ‘அம்பி’ என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.
“ வடிக்கதிர் திரித்த வன்ஞாண் பெருவலை
இடிக்குரல் புணரிப் பௌவத்து இடுமார்
நிறையப் பெய்த அம்பி காழோர்
சிறையருங் களிற்றின் பரதவர் ஒய்யுஞ்
சிறுவீ ஞாழல் பெருங்கட|ற் சேர்ப்பனை.. “
(நற்றிணை, பாடல் 74)
பரதவர், மீன்பிடிக்கும் பொருட்டு திருத்தமாகச் செய்யப்பட்ட பெரிய வலையை, இடிபோல் முழங்கும் கடலில் வீசுவதற்காக, தரையில் யானையைச் செலுத்துவதுபோல் தோணியைக் கடலில் செலுத்தினர் என்று பொருளாகிறது. இப்பாடலில் ‘அம்பி’ என்பதற்கு தோணி என்பது பொருளாகும்.
புணை:
ஆறுகளில் மிதந்துசெல்வதற்குப் பயன்படும் தட்டையான ‘தெப்பம்’, புணை ஆகும்.
“அறவினை அன்றே விழுத்துணை; அத்துணைப்
புணைகை விட்டோர்க்கு அரிதே, துணையழத்
தொக்குயர் வௌவும் காலை
இக்கரை நின்றுஇவர்ந்து உக்கரை கொளலே”
(புறநானூறு, பாடல் 357, பிரமனார்)
நாவாய்:
“ ஏமுறு நாவாய் வரவுஎதிர் கொள்வார்போல்
யாம்வேண்டும் வையைப் புனல்எதிர்கொள் கூட்டம்”
(பரிபாடல், 10. வையை, வரிகள் 39, 40)
இரும்பினால் செய்யப்பட்ட கப்பல் எப்படி நீரில் மிதக்கிறது?
இரும்பினால் செய்யப்பட்ட சிறிய குண்டூசி கூட நீரில் அமிழ்ந்துவிடுகிறது. இதற்கு மாறாக இரும்பினால் கட்டப்படும் மிகப்பெரிய கப்பல் எப்படி நீரில் மிதக்கிறது என்னும் கேள்வி எழும்தானே? அதற்கு நாம் முதலில் மிதத்தல் விதியைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
“ஒரு திரவத்தில் மிதக்கும் எந்த ஒரு பொருளின் எடையும், அதனால் இடம் பெயர்க்கப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமம் ஆகும்” என்பது ஆர்கிமிடிஸ் விதி. குண்டூசியின் அடர்த்தி, தண்ணீரின் அடர்த்தியை விடப் பல மடங்கு அதிகம். அதனால், அது தண்ணீரில் மூழ்கிவிடுகிறது. அதே வேளையில், இரும்பினால் கட்டப்பட்ட கப்பலின் வடிவமைப்பு எப்படி இருக்கிறது என்றால், ஒரு மிகப்பெரிய கிண்ணம் போல் இருக்கிறது. வெற்றிடமாக இருக்கும் அந்த இரும்பு கிண்ணத்தில் காற்று நிரம்பியிருக்கிறது.
கப்பலின் நிறையை, கப்பலின் பருமனால் வகுத்தால் கிடைக்கும் கப்பலின் அடர்த்தி (density = mass/volume), தண்ணீரின் அடர்த்தியை விடப் பல மடங்கு குறைவாக உள்ளது, எனவே, கப்பல் இரும்பினால் செய்யப்பட்டிருந்தாலும், தண்ணீரில் மிதக்கிறது. தண்ணீரை விட, அடர்த்தி அதிகமான அலுமினியம், செம்பு, பித்தளை போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட பெரிய பாத்திரங்கள் தண்ணீரில் மிதப்பதும், இதே அடிப்படையில்தான். திரைப்படங்களில், பித்தளையால் செய்யப்பட்ட வெற்றுக்குடம் ஆற்றுநீரில் மிதந்து செல்லும் காட்சியைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா?
Ref: Kristina Killgrove (Assyrian soldiers swimming)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.