அறியாத பாரதி - 3: பாரதி - காந்தி சந்திப்பு; நிலவும் குழப்பங்கள்!

பாரதி - காந்தி சந்திப்பு; நிலவும் குழப்பங்கள் பற்றி...
பாரதியார், காந்தி
பாரதியார், காந்தி
Updated on
7 min read

வரலாற்றைப் பற்றித் தமிழகம் அதிகம் கவலைப்படுவதில்லையோ என்று எண்ணத் தோன்றும் பல நிகழ்வுகளில், பாரதியார் வாழ்க்கை வரலாறு தொடர்பான விசயங்களும் ஒன்றாகும். ஒரு 145 ஆண்டுக் காலவரையறைக்குள் அடங்கும் அவனது குறுகிய வாழ்க்கை மற்றும் படைப்புக்கால, வரலாற்றை - மகாகவி என்று நாம் போற்றிக் கொண்டாடிவரும் ஒருவனுடைய முழுமையான வரலாற்றை - ஆதாரப்பூர்வமாக நாம் அறிந்து கொள்ள இயலாத நிலையே இன்று வரை தொடர்ந்து வருகிறது. இதனையே, ‘அறியாத பாரதி’யே - நாம் நன்கறியாத பாரதியே - நம்மோடுலவுகிறான் என்பதை வற்றாத வருத்தங்களோடு வாய்ப்புகள் யாவற்றிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகவுள்ளது.

தனது முன் இளமைக் காலத்திலேயே ‘’பாரதி’’ பட்டம் பெற்றவன் என்று அவனைப் பொதுத்திரளாகப் புகழ்ப்பல்லக்கிலேற்றிய ‘தமிழ்கூறு நல்லுலகம்’, அவனது பின் இருபத்தெட்டாண்டுகளில் எழுத்தறிவு குறைவாக இருந்த அவனது வாழ்காலத்தில், அவனது எழுத்துக்கள் மூலம் ஓரளவு அறிந்திருந்தாலும், அவனைப் பெரிதாகக் கண்டுகொண்டு உரிய ஆதரவளிக்கவில்லை என்பது உண்மை.

இத்தகைய ஆதங்கம் பாரதியின் முதல் மகள், தங்கம்மா, தன் தாயார் சொல்லத் தான் எழுதிய ‘பாரதியார் சரித்திரம்’ நூலுக்கான முகவுரையில் (11-12-1944) வருத்தத்தோடு எதிரொலித்துள்ளது, இதோ:

“அவர் உயிரோடிருக்கும்போது, ஜனங்கள் அவரைப் பயன்படுத்திக் கொள்ளாததுபோலவே, அவர் மறைந்த பிறகும் அவரது உண்மையான வரலாறுகளை மக்கள் அறிந்துகொள்ள முடியாமலேயே இருக்கிறார்கள். அவரைப்பற்றி தவறான விஷயங்களும் கற்பனைக் குறிப்புகளும் அடிக்கடி பத்திரிகைகளிலும், புத்தகங்களிலும் வெளிவருகின்றன. பொதுஜனங்கள் அவைகளை நம்பிவிடுகிறர்கள். ஒருவர் மேலும் நான் குறைகூறவில்லை. சரியான சரித்திரம் இதுவரை வெளிவராதபடியாலேயே இந்தத் தவறுகள் ஏற்பட்டன.’’ என்கிறாள்.

மேலும் “பாரதியாரைப் பற்றிய தவறான குறிப்புகளை என் தாயார் படிக்கும்போதெல்லாம், மனம்புண்ணாகி “ஐயோ, உண்மையான செய்திகளைத் தமிழரின் காதுக்கு எட்டச் செய்வது எப்படி?" என்று ஏங்குவார்” எனத் தன் தாயாரின் கவலையையும் அம்முகவுரையில் விவரித்துள்ளார்.

“அவர் இறந்த பிறகு திடீரெனக் கிளம்பியது “பாரதி மோஹம்” எனத்  திருமதி செல்லம்மா பாரதி கலங்கிச் சொல்ல நேர்ந்த உண்மையைத்தான், பாரதியின் நண்பர் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு, “பாரதியாருக்குக் கிடைத்த பிரசித்தியெல்லாம் அவர் காலஞ் சென்றபிறகுதான்” என்று, வருத்தம்தோயப் பதிவு செய்துள்ளார்.. ‘(சென்று போன நாட்கள்’ 1928 - 29.). இவரே பாரதி இறந்த (11 செப் 1921) ஆறு நாட்களுக்குள், முதன் முதலாக (17 செப் 1921) ஶ்ரீமான் சுப்பிரமணிய பாரதி - சில குறிப்புகள்என சுதேசமித்திரனில் எழுதி, பாரதி மறைந்தபின் விளைந்த பாரதி குறித்த எண்ணிறந்த எழுத்தணிவகுப்புகளைத் தொடக்கிவைத்தவர்.

பாரதி மறைந்தபின் ‘பலரும்பாரதி மீது‘ ஆச்சர்யப் பூச்சொரிந்து ஆராதனைகள் செய்தனர்; ஆனந்தமாயினர்’. ஆனால், ஆழ்ந்த ஆய்வுகளோ, ஆவண ஆதாரங்களோ அவசியமாகப்படவில்லை பலருக்கும். பாரதி குறித்த கற்பனைச் சவாரிகளே விற்பனையாயின. ஆளாளுக்குப் பாரதி சரிதச் சுருக்கங்களும், வாழ்க்கைக் குறிப்புகளும், வரலாற்று நூல்கள் என்றும் வண்ண வண்ணமாய் விரித்தனர். ஆனால், உருப்படியாகப்பாரதியின் ‘வாழ்வில்நிகழ்ந்த அதிமுக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் - அவனது செயல்கள் விளக்கம் பெறும்படி, அவற்றின் சிறப்புத் தெளிவாகப் புலப்படும்படி, பாரதியின் பண்புமிளிரும்படி - உண்மைக்கும் காலக் குறிப்புகளுக்கும் உதிரா முதன்மையளித்து - கோவைப்படுத்தி, பாரதியின் முழுமையான வரலாற்றை நயம்படயாரும் படைத்தளிக்க முன்வரவில்லை. அவனது புகழ்வாழ்வை, நம்பத்தகுந்த ஆதார, ஆவணங்களோடு வெளிக்கொண்டுவந்து நிலைப்படுத்தத் தக்கவற்றைச் செய்யவில்லை தமிழுலகு இன்று வரை.

இந்த அவல நிலையைப் பாரதி ஆய்வாளர் சீனிவிசுவநாதன், “பாரதிக்கு வரலாறு கண்ட யாவரும் சான்றுகளின் துணை கொண்டோ, பாரதி ஆசிரியராய் இருந்த - தொடர்பு கொண்டிருந்த - நடத்திய பத்திரிகைகளின் துணை கொண்டோ, பாரதியே அவ்வப்போது பலருக்கு எழுதிய கடிதங்களின் உதவி கொண்டோ, ஆவணச் செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டோ நூல்கள் எழுத முற்படவில்லை என்பது வெளிப்படை.” என்று (வரலாற்று நூலுக்கு ஒரு வரலாறு, 2019, பக்.18) தெளிவுறப் பதிவு செய்துள்ளார்.

பாரதியோடு பழகி அவனது வரலாற்றை 1944 இல் ‘கதைபோல்’ எழுதிய வ. ராமசாமி (வ.ரா) “பாரதியாரைப் பற்றி ஆங்காங்கே கிடைக்கும் 'துக்கடாக்களை நண்பர்கள் பலர்சேர்ந்து திரட்டினாலொழிய, அவரது வாழ்க்கை வரலாற்றைப் பூர்த்தி செய்ய முடியாது.'' எனத் தனது இயலாமையை இறக்கிவைத்தார். ஆனால், பாரதியைத் தெரிந்தவர்களிடம் சேர்ந்து விவரங்கள் சேகரிப்பதில் ஆரம்பக்காலங்களிலேயே மண்டிக்கிடந்த இடர்ப்பாடுகளை எடுத்துக் காட்டுவது போல தி.ஜ. ரங்கநாதன் (தி.ஜ.ர.) கூறியுள்ளது அறிய உரியதாகிறது.

“பாரதியாரை நேராக அறிந்தவர்களில் பெரும்பாலோர் ஒருவர் சொல்வதை ஒருவர் உண்மையல்ல என்கிறார்கள்.... ஒவ்வொருவரும் பாரதிக்குப் பூஜாரி தாம்தான் என்பது போல் பேசுகிறார்கள்” (புதுமைக் கவிஞர் பாரதியார், அல்லயன்ஸ், மூன்றாம் பதிப்பு, 1948)

என தி.ஜ.ர. அன்றே. (1948) பாரதியை நன்கறிந்தோர் ‘கூடித்தொழில் செய்ய’ வாய்ப்புகள் வறண்டிருந்த நிலையை வெளிப்படுத்தினார். “அவருடைய வாழ்க்கை வரலாற்றை விஸ்தாரமாக, ஆதார பூர்வமாக எழுதவேண்டும்‌.... இந்தச்‌ சிறிய புஸ்தகம்‌ ஏதும்‌ சாதித்துவிட்டதாக நான்‌ பாத்தியம்‌ கொண்டாடவில்லை. இது ஒரு சிறிய ஜீவிய சரித்திரம்‌; அவ்வளவே.” எனவும் தனது சிறு நூல் குறித்து அடக்கம் காட்டியிருந்தார், அவர்.

பாரதி இறந்து (1921) பல ஆண்டுகள் பின்,1935, செப்டம்பர் மாதம்11 ஆம் தேதி,சென்னை ஜெனரல் பாட்டர்ஸ் ரோடிலே உள்ள காங்கிரஸ் மாளிகையிலே 'பாரதி தினம்' கொண்டாடப்பட்டது குறித்ததொரு செய்தியை"சுதந்திரச் சங்கு" பத்திரிகையின் உதவியாசிரியராக இருந்த சக்தி சுப்பிரமணியன் விவரமாகக் குறிப்பிடுவதிலிருந்து, தமிழகத்தில் பாரதியின் நிலை பெரிதாக எதுவும் மாற்றம் பெறவில்லையோ என்றே நினைக்கவைக்கிறது.

“அந்தப் பாரதி தின நிகழ்வில் (1935 செப் 11) வைக்க பாரதியார் படம் கிடைக்கவில்லை. அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - பாரதியை நன்கு அறிந்தவரான,நேரில் அவருடன் பழகிய - "சுதேசமித்திரன்" ஆசிரியர். சி. ஆர். சீனிவாசன், பாரதியாரைப் பற்றி, பாரதியின் தோற்றம் எப்படியிருந்தது என்று எல்லாருக்கும் எடுத்துக்கூறினார். இன்னொருவர். ஹரிஹரசர்மா என்பவர். ''பாரதி பிரசுராலயத்தின் சார்பிலே பாரதி நூல்களை வெளியிட்டு வந்தவர். அவரும் கூட்டத்தில் பேசினார் அன்றைய கூட்டத்தில் எல்லாரும் வலியுறுத்திய விஷயம் ஒன்றே. அதாவது, பாரதியாரைப் பற்றிய உண்மையான தகவல் கொண்ட நூல் ஒன்று வெளிவரவேண்டும் என்பதே. [மகாகவி பாரதியார்(புதுமைக் கண்ணோட்டம்), சக்திதாசன் சுப்பிரமணியன், பாரி நிலையம், சென்னை-1, முதற்பதிப்பு: டிசம்பர் 1980]

இதுதான், கவிஞன் மறைந்து 14 ஆண்டுகள் கடந்தபின்னரும், ‘பாரதி மோஹம்’ கொண்டிருந்த மக்களிடையே இருந்த நிலைக்கு ஒரு அவல எடுத்துக்காட்டு.

பாரதி விடுதலைப் போராட்ட காலக் கவிஞன். தனது 25 வயதிலேயே சென்னையிலிருந்து அணி திரட்டிக்கொண்டு சூரத் காங்கிரஸ் (1907) மாநாட்டிற்குச் சென்றவன். “தாம் சென்னையிலிருந்து பிரயாணப்பட்டது முதல் மறுபடியும் சென்னைவந்து சேர்ந்த வரையில் நடந்த விஷயங்களைக் கோர்வையாகத் தொகுத்து ‘இந்தியா’ பத்திரிகையில் வெளியிட்டு.எங்கள் காங்கிரஸ் யாத்திரை” என்று ஒரு புஸ்தகமாகவும் இரண்டனா விலையில் பிரசுரம் செய்து” மக்களிடையே விடுதலையுணர்வைத் தூண்ட முயன்றவன்.(‘சென்று போன நாட்கள்’ 1928-29)

காந்தியை நேரில் சந்திக்காமலே - காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்த காலத்திலேயே - அவரது முயற்சிகள், உத்திகளின் உண்மையான ஆதரவாளராக இருந்தவன் பாரதி. காந்தியைக் காணாமலே

வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்

தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டுப்

பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை

வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!

என வாஞ்சையோடு வாழ்த்துப்பாடிக் களித்துவந்த, (மகாத்மா காந்தி பஞ்சகம்’) விடுதலையுணர்வுத் தீ நிறைந்து ததும்பும் கவிஞனாக வலம் வந்தவன் பாரதி.

“இந்தியத்‌ தலைவர்‌களில்‌ மகாத்மா காந்தியின்‌ பெருமையை முதன்‌ முதலில்‌ உணர்ந்த வெகு சிலருள்‌ பாரதி ஒருவன். பாரிஸ்டர்‌ மோகனதாஸ்‌ கரம்சந்திர காந்தி 1908-ல்‌ தென்‌ ஆப்பிரிக்காவில்‌ இந்தியர்‌ நலனுக்காகப்‌ போராட்டம்‌ நடத்திய போதே காந்தியின்‌ மேன்மையை உணர்ந்து அவரை “இந்தியா'' நாளிதழ் ஆசிரியராய்‌ இருந்த பாரதி வெகுவாகப்‌ பாராட்டியிருக்கிறான். மேலும், தென்‌ ஆப்பிரிக்க இந்தியர்‌ போராட்டத்திற்காக நிதி வசூல்‌ செய்து, ஐந்து ரூபாய்‌ தன்பங்காகச் சேர்த்து பணத்தைத்‌ தென்‌ ஆப்பிரிக்காவுக்கு அனுப்பியவன்‌ பாரதி. 1908-ல்‌ பாரிஸ்டர்‌ காந்தி தென்னாப்பிரிக்க இந்தியர்‌ சார்பில்‌ லண்டனுக்குத்‌ தூது சென்று இரும்பிய சமயம்‌ தென்‌ஆப்பிரிக்க அரசாங்கம்‌ அவரைக்‌ கைது செய்தது‌ பற்றி ஒரு கார்ட்டூன் போட்டு‌. அதன்கீழ் சித்திர விளக்கம்‌ எழுதினான் பாரதி. படத்தின்‌ கீழ்க்‌ குறிப்பாக “ஸ்ரீ காந்தியென்ற பசுவானதுதனது கன்றுக்குட்டியாகிய இதர இந்தியர்களின்‌ நன்மையின்பொருட்டு இங்கிலாந்துக்குப்‌ போய்ப்‌ பேசிவிட்டு, சிறையிலடைபடுவதற்காக மறுபடியும்‌ திராஷண்ஸ்வாலுக்கு வந்திருக்கிறது.. தென்‌ஆப்பிரிக்கா. உத்தியோகஸ்தர்களாகிய புலிகள்‌ அவருடைய மேன்மையை யறியாமல்‌ சிறையிலடைத்‌தார்கள்‌.’’ என்றெழுதினான். (பார்க்க : சித்திரபாரதி, ரா.அ. பத்மநாபன்)

இவற்றுடன் கூடுதலாக, “காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவின் நேட்டால் நகரிலிருந்து நடத்திய தனது "இந்தியன் ஒப்பீனியன்' என்னும் வார இதழில் 1910-இல் புதுவையிலிருந்து வெளிவந்த "பால பாரதா'வைத் தொடர்ந்து அறிமுகம் செய்துவந்திருக்கின்றார்.” என பேராசிரியர் ய. மணிகண்டன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப் பதையும் காணும்போது, பாரதியும் காந்தியும் ஒருவரையொருவர் சந்திக்குமுன்னரே ‘பார்க்காப் பரிச்சயம்’ கொண்டிருந்திருக்கின்றனர் என்பது உறுதிப்படுகிறதல்லவா?

முற்சொன்ன இச்செய்திகள் பாரதியும் காந்தியும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்திருக்கவில்லையாயினும், காந்தி தென்ஆப்பிரிக்காவில் இருந்த காலத்திலேயே அவர்கள் ஒருவரை மற்றொருவர் அறித்திருந்தனர் என்பதை எடுத்துக்காட்டவே.

காந்தி இந்தியா திரும்பி தேசவிடுதலைக்குத் திசைகாட்டி, முன்நின்ற காலத்தில், தமிழ்நாட்டிற்கு அவர் ஒருமுறை வருகை தந்தபோது – நிகழ்ந்ததெனக் குறிக்கப்பட்டிருக்கும் பாரதி – காந்தி சந்திப்பு - எவ்வாறோ ஒரு கோமாளித்தனமான, நிகழ்வுபோலச் சித்தரிக்கப்பட்டு, ஆதாரமற்ற கதை ஒன்றல்லவா இன்றும் நடமாட்டத்திலுள்ளது.  வரலாற்றுச் சிறப்புக்குரிய அவ்விருவர் சந்திப்பை - காந்தியுடன் பாரதி அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொண்டதுபோல – ஆதாரமின்றி, அறியாமை கவ்வப் பலரும் செம்மறியாட்டுத்தனமாக, உலவ விட்டிருக்கும் ‘சந்திப்புக் கதை’ தரும் வேதனையை என்னென்பது?

இதோ இது அக்கதை. நிகழ்வில் இருந்ததாகச் சொல்லிக்கொள்ளும் வ.ரா. எழுதியது. (மகாகவி பாரதியார், வ.ரா, பக் 137 - 140)

“அட்சரலட்சம் கொடுக்கும்படியான ஐந்து பாட்டுகளைப் பாரதியார் மகாத்மா காந்தியின் பேரில் பாடியிருக்கிறாரே, அவ்விருவரும் சந்தித்து உறவாடியதாக இதுவரையிலும் தெரியவில்லையே என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். பாரதியாரும் மகாத்மாவும் சந்தித்தார்கள்; பேசினார்கள்; ஒரே தடவையில், ஒருவரையொருவர் நன்றாகத் தெரிந்துகொண்டார்கள்.

1919 ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் காந்தி சென்னைக்கு வந்தார். ரௌலட் சட்டம் என்ற அநியாயச் சட்டத்தை ரத்து செய்வதற்காகக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்றும், அதற்குத் தலைமைவகித்து அதைக் காந்தி நடத்த வேண்டும் என்றும் இந்தியாவில் இருந்த பிரமுகர்களில்பலர்காந்தியை வேண்டிக்கொண்டார்கள். காந்தி இசைந்தார்.

அதற்காகத்தான், காந்தி முதன்முதலில் சென்னைக்கு விஜயம் செய்தார். சத்தியாக்கிரக இயக்கத்தைஆரம்பிக்குமுன் அணைகோலுவதைப் போலிருந்தது இந்த விஜயம்.

அப்பொழுது ராஜாஜி, கத்தீட்ரல் ரோடு, இரண்டாம் நெம்பர்பங்களாவில் குடியிருந்தார்; அந்தப் பங்களாவில்தான் காந்தி வந்து தங்கினது. நாலைந்து நாள்கள் தங்கியிருந்தார்.

ஒரு நாள் மத்தியானம் சுமார் இரண்டு மணி இருக்கும். காந்தி வழக்கம்போலத் திண்டு மெத்தையில் சாய்ந்துகொண்டு வீற்றிருந்தார். அவர் சொல்லிக் கொண்டிருப்பதைப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தமகாதேவ தேசாய் எழுதிக்கொண்டிருந்தார்.

காலஞ்சென்ற சேலம் பாரிஸ்டர் ஆதிநாராயண செட்டியார் குடகுக்கிச்சிலிப் பழங்களை உரித்துப் பிழிந்து மகாத்மாவுக்காக ரசம் தயார் பண்ணிக்கொண்டிருந்தார். ஒரு பக்கத்துச் சுவரில் ஏ. ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் சாய்ந்துநின்று கொண்டிருந்தார்கள். அந்தச் சுவருக்கு எதிர்ச் சுவரில் ராஜாஜியும் மற்றும் சிலரும் சாய்ந்துகொண்டு நின்றிருந்தார்கள்.

நான் வாயில் காப்போன். ‘யாரையும் உள்ளேவிடக்கூடாது’ என்று எனக்குக் கண்டிப்பான உத்தரவு. நான் காவல் புரிந்த லட்சணத்தைப் பார்த்துச் சிரிக்காதீர்கள்.

அறைக்குள்ளே பேச்சு நடந்துகொண்டிருக்கிற சமயத்தில் பாரதியார் மடமடவென்று வந்தார்; "என்ன ஓய்!' என்று சொல்லிக்கொண்டே, அறைக்குள்ளே நுழைந்துவிட்டார்.

என் காவல் கட்டுக்குலைந்து போய்விட்டது. உள்ளே சென்ற பாரதியாரோடு நானும் போனேன்.

பாரதியார் காந்தியை வணங்கிவிட்டு, அவர் பக்கத்தில் மெத்தையில் உட்கார்ந்து கொண்டார். அப்புறம் பேச்சு வார்த்தை ஆரம்பித்தது:

பாரதியார்: “மிஸ்டர் காந்தி! இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா? ‘’

காந்தி: ‘’மகாதேவபாய்! இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன? ‘’

மகாதேவ் : ‘’இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு, நாம்வேறோர் இடத்தில் இருக்கவேண்டும்.’’

காந்தி: ’அப்படியானால், இன்றைக்குத் தோதுப்படாது. தங்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப்போட முடியுமா?’’

பாரதியார்: ‘’முடியாது. நான்போய் வருகிறேன், மிஸ்டர் காந்தி!தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்.’’

பாரதியார் போய்விட்டார். நானும் வாயில்படிக்குப் போய்விட்டேன்.

பாரதியார் வெளியே போனதும், 'இவர்யார்? என்று காந்தி கேட்டார்.

தாம் ஆதரித்துவரும் பாரதியாரைப் புகழ்ந்துசொல்வது நாகரிகம் அல்ல என்று நினைத்தோ என்னவோ, ரங்கசாமி அய்யங்கார் பதில் சொல்லவில்லை.

காந்தியின் மெத்தையில் மரியாதை தெரியாமல் பாரதியார் உட்கார்ந்து கொண்டார் என்று கோபங்கொண்டோ என்ன வோசத்திய மூர்த்தி வாய்திறக்கவில்லை.

ராஜாஜிதான், "அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி” என்று சொன்னார்.

அதைக் கேட்டதும், "இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?" என்றார் காந்தி.

எல்லோரும் மெளனமாக இருந்துவிட்டார்கள்.

இந்தச் சம்பவத்தைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள். மகாத்மா காந்தியிடம் பாரதியார் இம்மாதிரி நடந்து கொண்டிருக்கப்படாது என்று சிலர் எண்ணலாம்.

நாற்காலி இல்லாத இடத்தில் பாரதியார் நின்றுகொண்டு விண்ணப்பம் செய்துகொள்கிறதா?

ராஜாஜி போன்றவர்கள் பாரதியார் வந்ததும், அவரை அழகாக, காந்திக்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டுமல்லவா? அவர்களுடைய மெளனத்திலிருந்தும், அனாயாசமாகப் பாரதியார் உள்ளே நுழைந்ததிலிருந்தும் காந்தி கூடுமானவரையில் சரியாகப் பாரதியாரை மதிப்பிட்டு விட்டார்.…‘’

இது சம்பவம் / சந்திப்பு நிகழ்ந்த இடத்தில் தானும் இருந்ததாக, வாயிற்காத்து நின்றதாக - ஏற்கனவே புதுச்சேரியிலேயே பாரதிக்கு நன்கு அறிமுகமாகியிருந்த –வ.ரா. வழங்கியுள்ள நேரடி வர்ணனை!

சீனி விசுவநாதனும், வ.ரா வர்ணித்த அதே மாதிரியான ஒரு மின்னல் சந்திப்பைத் தான் குறிப்பிடுகிறார். (மகாகவி பாரதி வரலாறு, பக் 500-501) ஆனால் வ,ரா. கதைத்துள்ளதுபோல, பாரதி தடாலடியாக அறைக்குள் நுழைந்து, காந்தி அமர்ந்திருந்த படுக்கையில் அமர்ந்து காந்தியை ‘’மிஸ்டர் காந்தி’’ என்று அழைத்ததாகச் சொல்லவில்லை ஆனால், அவரும் பாரதி விடைபெற்றுச் சென்ற பின்னர் தான் வந்தவர் பாரதி என்பதைக் காந்தியடிகள் தெரிந்து கொண்டார் என்கிறார். யார் மூலம்? எப்படி? தெரிந்து கொண்டார் என்றெல்லாம் விவரம் தரவில்லை.‘’ நீண்ட கால இடைவெளிக்கு பிறகு 1919 மார்ச் மாத வாக்கில் காந்தி சென்னைக்கு வருகை புரிந்தார் என்று சொல்கிறார்.(பக்கம் 500) அவரும் பாரதி - காந்தி சந்திப்பு தேதிகளைக் குறிப்பிடவில்லை.

முதலில், மேற்கண்ட வ.ரா வின் வர்ணனையிலுள்ள ஓட்டை உடைசல்களைப் பார்ப்போம்.

1. வ.ரா, காந்தியடிகள் 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வந்ததாகச் சொல்கிறார்.  பிப்ரவரி மாதம் எந்த நாள் காந்தி வருகை  என்பதை அவர் குறிப்பிடவில்லை.

2. ‘’வாழ்க நீ எம்மான்’’ என்று காந்தியடிகளைக் காணாமலே வாழ்த்தி போற்றிப் பாடிய பாரதி. காந்தியடிகளைத் துடுக்காக,‘’மிஸ்டர் காந்தி’’ என்று அழைத்திருப்பாரா என்பதை யூகம் கூடச் செய்ய முடியவில்லை.

3. வ.ரா வால் விவரிக்கப்பட்டுள்ள இந்த பாரதி - காந்தி சந்திப்பு, தேதி விவரமில்லாதது மட்டுமல்ல; தான் மிக மதித்துப் போற்றிவரும் காந்தியடிகளிடம் பாரதி, காரணம் ஏதுமில்லாமல் துடுக்குத்தனமும் அலட்சியமும் காட்டி, பொன்னான சந்திப்பை அரை நிமிடத்திலேயே கத்தரித்துக்கொண்டு, சரேலென்று காற்றாய் வெளியேறியதுபோல உருவாகியுள்ளது.

4. தான் உதவி ஆசிரியராகப்பணியாற்றும் பத்திரிகையின் உரிமையாளர்,ரங்கசாமி அய்யங்கார், கடலூர் சிறையிலிருந்து தான் விரைந்து விடுதலையாக உதவியதாக அறியப்படும் சத்தியமூர்த்தி, மற்றும் ராஜாஜி போன்றவர்கள் முன்னிலையில் வ.ரா குறிப்பிட்டிருப்பதுபோலப் பாரதி இங்கிதமில்லாமல் நடந்திருப்பாரா?

இதில் சிக்கல் யாதெனில், பாரதி – காந்தி சந்திப்பு குறித்துப் பலரும் வ.ரா.வின் வர்ணனையைத்தான் கூட்டியோ குறைத்தோ, தாமே அங்கிருந்த பாவனையில்,கிளிப்பிள்ளைகள்போலத் தற்போதுவரை எழுதிவைத்துள்ளார்கள்; எழுதி வருகிறார்கள்

இதை விடுத்து,  காந்தியின் தமிழக வருகைகள் குறித்த உண்மை விவரங்கள் அறிவோம், வாங்க. ‘’தமிழ்நாட்டில் காந்தி’’ (1969) என்ற நூல் ஒன்றை அ. ராமசாமி வெளியிட்டுள்ளார். அந்த நூலில், காந்தி முதன்‌ முதலாகத்‌ தமிழகத்திற்கு வந்தது (1896) முதல், கடைசி முறையாகத் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தது (1946) வரை, எந்தெந்த ஆண்டுகளில்‌ அவர்‌ இங்கு வந்தார்; அவர்‌ சென்ற ஊர்கள்‌, நகரங்கள்‌ யாவை; அங்கு நிகழ்த்திய சொற்பொழிவுகளில்‌ கூறியதென்ன என்பனவற்றை யெல்லாம்‌ மிகத் தெளிவாக, தேதிக்‌ குறிப்புகளுடன்‌ விவரமாகக்‌ கொடுத்துள்ளார். மிகப் பெரும்பாலும் ஒவ்வொரு தேதியிலும்‌ எந்த நேரத்தில்‌ எந்த நிகழ்ச்சியில்‌ அவர்‌ பங்குகொண்டார்‌ என்ற குறிப்புக்களையும்‌ அளித்துள்ளார்.

அவரது நூலில் உள்ள துல்லியக் குறிப்புகளின்படி, வ.ரா. சொல்வது போலப் பிப்ரவரியில் காந்தி சென்னை வரவில்லை. காந்தி 18-3-1919 தான் சென்னை வந்து 23-3-1919 மாலைவரை தங்கியுள்ளார். 23-3-1919 இரவு தஞ்சாவூருக்குக் கூட்டம் பேச ரயிலேறிச் சென்றுவிடுகிறார்.

ஐயகோ, தமிகத்தில் காந்தியின் பெரும்பாலான நிகழ்வுகளைத் துல்லியமாக தேதி, நேர விவரங்களோடு அளித்திருக்கும் அவரும் பாரதி-காந்தி சந்திப்பு நிகழ்ந்த தேதியைக் குறிப்பிடவில்லையே. ‘’காந்திஜியின்‌ இந்த விஜயத்தின்போது பாரதியும்‌அவரும்‌ சந்தித்தார்களென வ. ராமசாமி (வ.ரா.) கூறுகிறார். ராஜாஜியும்‌ இதை ஊர்ஜிதம்‌ செய்கிறார்.” என்று அச் சந்திப்பு பற்றித் தான் எதுவும் குறிப்பிடாமல், வ.ரா கூறியுள்ளதாக மட்டுமே அ.ராமசாமி குறிப்பிட்டுள்ளார். (‘’தமிழ்நாட்டில் காந்தி’’ பக். 248)

வ.ரா.வின் கூற்றுப்படி, மற்றவர்களெல்லாம்‌ பயபக்தியுடன்‌ நின்று கொண்டிருக்கையில்‌ பாரதி திடீரென நுழைந்து அண்ணலுக்குச் சரிசமமாய்ப் படுக்கையில் அமர்ந்தது அங்கிருந்த பலருக்குத்‌ திகைப்பை அளித்திருக்கக்கூடும்‌. மேலும்‌, காந்திஜியை ‘‘மிஸ்டர் காந்தி’’ என விளித்து அவருடைய ஒத்துழையாமை இயக்கத்துக்கு பாரதி ஆசீர்வாதம்‌ செய்ததும்‌ அங்குள்ளோருக்கு விசித்திரமாகப்‌பட்டிருக்கலாம்‌. காந்தி அதனைப் பொருட்படுத்தவில்லை, ஆனால் ‘யாரிந்த மின்னல்?’ என்பதுபோல அங்கிருந்தவர்களைக் கேட்டது காந்தியும் அவ்வருகையால் திகைப்படைந்தார் என்பதை நாம் யூகிக்க முடிகிறது.

இந்நிகழ்வு, ‘’காந்தி - பாரதி சந்திப்பின்போது "பாலபாரதா' ஆசிரியர் என்பது நினைவுகூரப்பட்டு, அறிந்துதான் காந்தி மதித்து உரையாடினார் எனவும் கருதலாம்.’’ என ய.மணிகண்டன் குறிப்பிடுவதை (தினமணி,11 டிசம்பர் 2024) கேள்விக்கு உட்படுத்துகிறதல்லவா?.

இவைபோக, இன்னொரு பக்கம், பாரதியார் காந்தியடிகளை அவரது1919 வருகையின் போது சந்தித்திருக்க வாய்ப்பே இல்லை என்று வாலாசா வல்லவன் மறுத்து நிற்கிறார். (திராவிட இயக்கப் பார்வையில் பாரதி) காந்தி சென்னைக்குப் பிப்ரவரியில் அல்லது மார்ச்சில் வந்திருந்தால் கூட பாரதி அவரைச் சந்தித்திருக்கவே முடியாது எனும்அவரது வாதத்திற்கு, பேராசிரியர் கோ கேசவன் அவர்களது முனைவர் பட்ட ஆய்வு நூலில் (பாரதியும் அரசியலும், பக்கம் 214)கண்டுள்ள ஆதாரமுள்ள முடிவைச்சான்றாகக் காட்டுகிறார்.

‘’கடலூர் சிறையில் இருந்து, அரசு விதித்த கடுமையான நிபந்தனைகளை 1918 டிசம்பர் 14 இல் விடுதலை பெறும் போது பாரதியார் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுக்கொடுத்த ஒப்பந்தப்படி பாரதி அரசியல் ஈடுபாடுகளை அறவே கைவிட்டுக் கடையத்தில் வாழ்ந்து வந்தார். 1919 மே மாதத்தில் தான் பாரதிக்கு அரசிடமிருந்து நிபந்தனை தளர்வு கிடைத்தது அதற்குப் பின் தான் பாரதி சென்னை சென்றிருக்க முடியும்’’ என்பது கோ கேசவனின் ஆய்வுத் தரவு. ஆக, வாலாசா வல்லவனின் தரப்பு, பாரதி தொலைவில் கடையத்தில் வாழ்ந்து வந்ததால் - அந்த சமயத்தில் – 1919 பிப்ரவரி அல்லது மார்ச்சில் - காந்தியைச் சந்திக்க வாய்ப்பு இருந்திருக்காது என்பது.

பாரதி - காந்தி சந்திப்பு நிகழ்ந்ததா? எந்த ஆண்டு, மாதம், நாள்? ஆதாரமென்ன? பாரதி - காந்தி சந்திப்பு, நேரிலிருந்ததாகச் சொல்லும் வ.ரா வர்ணித்துள்ளவாறுதான் நடந்ததா?

காந்தியோ, பாரதியோ தமது எழுத்தில் எங்கும் அவர்களது சந்திப்பு பற்றிக் குறிப்பிடவில்லை என்பதும் நெருடலாக உள்ளது.

நமக்கு இதில் உண்மை தெரிந்தாகனும், பாரதியை நாம் நன்கறிய.

**

[டிச. 11 - பாரதியார் பிறந்த நாள்]

 [கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

Summary

Ariyaadha Bharathi - 3: The Bharathi-Gandhi Meeting; the prevailing confusions!

பாரதியார், காந்தி
அறியாத பாரதி - 2: செல்லம்மா, கண்ணம்மாவானது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com