

2025-ல் மக்களுக்கு புதிதாக அறிமுகமானது தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் எனும் நடைமுறை. இது 2000 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டாலும் இந்த தலைமுறையினருக்கு (முந்தைய தலைமுறையினருக்கும்!) புதிதாகவும் தங்கள் வாக்குரிமையைத் தக்கவைக்க சவாலானதாகவும் இருந்து வருகிறது.
2024 மக்களவைத் தேர்தலின்போது 96.88 கோடியாக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 2025 ஜனவரியில் சிறப்பு சுருக்கத் திருத்தத்திற்குப் பின் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 99.1 கோடியாக உயர்ந்தது.
"விரைவில் 1 பில்லியன் அதாவது 100 கோடி வாக்காளர்களை எட்டுவோம், அப்போது வாக்குரிமையில் இந்தியா புதிய வரலாறு படைக்கும்" - இவ்வாறு கூறியது அப்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார்.
18 வயது பூர்த்தியாகி வாக்காளர் பட்டியலில் புதிதாக சேருபவர்களால், ஒவ்வோர் ஆண்டும் வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்துதான் கொண்டிருக்கிறது.
ஆனால், 2026 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் எண்ணிக்கை முன்பைவிட குறையத்தான் வாய்ப்பிருக்கிறது.
காரணம்... வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) எனும் தேர்தல் ஆணையத்தின் புதிய நடைமுறை...
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களை நீக்குவது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள இரட்டை வாக்காளர்கள் மற்றும் போலி வாக்காளர்களை நீக்குவது, புதிய வாக்காளர்கள் மற்றும் பட்டியலில் இல்லாதவர்களைச் சேர்ப்பது, இடம்பெயர்ந்தவர்களின் விவரங்களைச் சரி செய்வது என சரியான தகவல்கள் உள்ள ஒரு வாக்காளர் பட்டியலை உருவாக்குவதுதான் இதன் நோக்கம்.
இதற்கு முன்னதாக இந்த எஸ்ஐ ஆர் பணிகள் நடைபெற்றுள்ளதா என்றால்... சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் (2002- 2005) இத்தகைய சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்றுள்ளது.
அதையடுத்து ஆண்டுதோறும் சிறப்பு சுருக்கத் தீர்த்தம் (Special summary Revision) மட்டுமே நடைபெற்றுள்ளது. அதாவது வாக்காளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப பெயர்களைச் சேர்ப்பது, நீக்குவது, விவரங்களைத் திருத்துவது போன்றவை மட்டுமே நடைபெறும். ஆனால் எஸ்ஐஆரில் அனைத்து வாக்காளர்களும் முழுவதுமாக சரிபார்க்கப்படுகிறார்கள்.
ஒரு நியாயமான வாக்காளர் பட்டியலை உருவாக்க குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் ஆணையம் இந்த எஸ்ஐஆர் நடைமுறையைக் கொண்டுவரலாம் என்பது விதிமுறை.
அதன்படியே தில்லி தேர்தல் முடிந்த பிறகு, பிகார் தேர்தலுக்கு முன்னதாக இந்திய மக்களுக்கு (இந்த தலைமுறைக்கு) இந்த எஸ்ஐஆர் எனும் நடைமுறை அறிமுகமானது. இதன்படி, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் (க்யூஆர் கோட் உடன் கூடிய) கணக்கீட்டுப் படிவத்தை ஒவ்வொரு வாக்காளரும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். 2025 ஜனவரி வாக்காளர் பட்டியலின்படி அதில் உங்களுடைய பெயர், தொகுதி, வாக்குச்சாவடி விவரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்க, உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை அதில் நிரப்பிக் கொடுக்க வேண்டும்.
கூடுதலாக 2002, 2005 ஆம் ஆண்டு எஸ்ஐஆரின்போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இருக்கும் உங்களுடைய அப்பா, அம்மா, உறவினரின் விவரங்களைக் குறிப்பிட வேண்டும். தற்போது எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வரும் மாநிலங்களில் பலருக்கும் இதுதான் பெரும் சவாலாக இருந்தது, இருக்கிறது. அவ்வாறு இல்லாதவர்கள் வெறுமனே கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிக் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த படிவத்தை நிரப்பிக் கொடுத்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறும். இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் வீடுவீடாகச் சென்று படிவத்தைக் கொடுத்து நிரப்பிப் பெறுகிறார்கள்.
பிகாரில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் இதன் மூலமாக நீக்கப்பட்ட நிலையில் பலரும் தங்கள் பெயர் இடம்பெறவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'வாக்குத் திருட்டு' என தேர்தல் ஆணையத்திற்கு எதிரான முழக்கத்தை எழுப்பி வருகிறார் (ஆனால் தேர்தல் ஆணையம் இதற்கு மறுப்பு தெரிவித்ததே அன்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).
பிகாரைத் தொடர்ந்து எஸ்ஐஆர் பணிகளின் 2 ஆம் கட்டமாக தமிழகம், கேரளம், மேற்குவங்கம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களுக்கும் சத்தீஸ்கர், கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிகோபார் தீவுகள் என 5 யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவிக்கப்பட்டு இறுதிப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் இந்த 12 மாநிலங்களின் வாக்காளர்கள்தான் நாட்டின் 50% வாக்காளர்கள். இந்தியாவில் சுமார் 100 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் 12 மாநிலங்களில் உள்ள சுமார் 51 கோடி வாக்காளர்களுக்குத்தான் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதிக வாக்காளர்களைக் கொண்ட பிகா ர்(நிறைவு), தமிழ்நாடு, மேற்குவங்கம், உத்தரப் பிரதேசம் இதில் அடங்கும். அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 15.3 கோடி வாக்காளர்கள்.
எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு இதுவரை எஸ்ஐஆர் மேற்கொள்ளப்பட்ட மாநிலங்களில் அதிகபட்சமாக தமிழகத்தில்தான் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஏற்கெனவே இருந்த வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட, நீக்கப்பட்ட வாக்காளர்களின் சதவீதம் 15.19%.
இதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 73.73 லட்சம் (14.5%), தொடர்ந்து மேற்குவங்கத்தில் 58.21 லட்சம் (7.59%), மத்திய பிரதேசத்தில் 42.74 லட்சம் (7.45%), ராஜஸ்தானில் 41.85 லட்சம் (7.65%), சத்தீஸ்கரில் 27.34 லட்சம் (12.88%), கேரளத்தில் 24.08 லட்சம் (8.65%) வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 2 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்படவுள்ளதாகத் தகவல் (இன்னும் அங்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை).
யூனியன் பிரதேசங்களில் கோவா - ஒரு லட்சம் (8.44%), புதுச்சேரி - 1.03 லட்சம் (10.12%), அந்தமான் நிகோபார் - 64,000 (20.62%) வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சரி, கணக்கீட்டுப் படிவம் நிரப்பிக் கொடுத்து வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றால் முடிந்துவிடும் என்று நினைத்தால்...
தற்போது வாக்காளர் வரைவு பட்டியலில் இடம்பெற்றவர்களிலும் சில லட்சம் பேருக்கு உரிய ஆவணங்கள் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம். உதாரணமாக தமிழகத்தில் 10 லட்சம் பேருக்கு விளக்கம், ஆவணங்கள் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இருந்தால் அவர்களது பெயர் பட்டியலில் இருக்கும், இல்லையெனில் நீக்கிவிடுவார்கள்.
இதனிடையேதான் புதிய வாக்காளர்கள் சேர்ப்புக்கான படிவம் 6 விநியோகம், பெயர்கள் நீக்கம், முகவரி உள்ளிட்ட விவரங்களை மாற்றவும் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கோரிக்கைகளின்படி வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டாலும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களின் பெயர்கள் விடுபட வாய்ப்பிருக்கிறது.
பல தொகுதிகளில் இறந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இறந்து 4 ஆண்டுகள் ஆகிய கவிஞர், பாடலாசிரியர் புலமைப்பித்தனின் பெயர் மயிலாப்பூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது ஓர் உதாரணம். இதுபோல முறையாக கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிக் கொடுத்தவர்களின் பெயர்கள் பல வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
அதிலும் தமிழகத்தில் பல தொகுதிகளில், நீக்கப்பட்ட இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது.
2014 மக்களவைத் தேர்தலின்போது தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 5,37,52,682 (5.37 கோடி). கிட்டத்தட்ட இதே எண்ணிக்கைதான் தற்போதும் இருக்கிறது. அதாவது 11 ஆண்டுகளுக்கு முந்தைய வாக்காளர் எண்ணிக்கைதான் இன்றும் இருக்கிறது.
எஸ்ஐஆருக்கு முன்பாக தமிழ்நாட்டில் மொத்த வாக்காளா்கள் 6,41,14,587. இதில் 97,37,831 பேர் நீக்கப்பட்டுள்ளனர் (இடம் பெயா்ந்தவா்கள் - 66,44,881; உயிரிழந்தவா்கள் - 26,94,672; இரட்டைப் பதிவு - 3,98,278).
தற்போதுள்ள வாக்காளா்கள் 5,43,76,756.
இதில் இடம்பெயர்ந்தவர்கள் சுமார் 66 லட்சம் பேர். இதில் பெரும்பாலானோர் புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைய வாய்ப்பிருந்தாலும், 18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டாலும் தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர்கள் எண்ணிக்கை கண்டிப்பாக 6 கோடியைத் தாண்டாது என்றே கூறப்படுகிறது.
வாக்காளர் எண்ணிக்கை குறைந்தாலும் போலி வாக்குகள் கணிசமாகக் குறையவும் வாக்கு சதவீதம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
மறுபுறம், தகுதியுள்ள வாக்காளர்கள் பலரும் நீக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் புதியதாக சேர்க்க முயற்சித்திருக்கமாட்டார்கள். உதாரணமாக தற்போது வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சுமார் 10 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் எத்தனை பேர் நேரில் சென்று விளக்கம் தந்து ஆவணங்களைத் தருவார்கள் என்று தெரியவில்லை.
தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நோக்கமே, "ஒரு தகுதியுள்ள வாக்காளர் நீக்கப்படக் கூடாது, தகுதியற்ற போலி வாக்குகள் பதிவாகக் கூடாது என்பதுதான்" இதில் 2ஆவது கூற்று சரி செய்யப்பட்டாலும், முதல் கூற்று நிறைவேற்றப்படாமல் போகிறது என்பதுதான் உண்மை.
அதாவது நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் முன்வந்து 'நான் இந்த நாட்டின் குடிமகன்தான்' என்று வாக்குச்சாவடி அலுவலரையோ அல்லது சிறப்பு முகாம்களுக்குச் சென்றோ படிவத்தை நிரப்பிக் கொடுத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
கிராமப்புற பகுதிகளில் இன்னும் பலரும் இதுகுறித்து அறிந்திருக்கவில்லை, பலரும் ஆர்வம் காட்டவும் இல்லை. அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரியவில்லை.
தமிழ்நாட்டில் இருக்கும் புலம் பெயர்ந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் யார் என்ற விவரங்களும் இனிதான் தெரிய வரும்.
தற்போது நோட்டீஸுக்கு விளக்கம் கொடுத்தவர்கள், புதிதாக சேர விண்ணப்பம் கொடுத்தவர்கள் பெயர் இனி வரும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்றால் என்ன செய்வது என்றும் தெரியவில்லை.
100 கோடி மக்கள் உள்ள நாட்டில் தேர்தல் ஆணையம் சீர்திருத்தம் செய்வது சரியானதுதான். ஆனால் அதை தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில் குறுகிய காலத்தில் அமல்படுத்துவது ஏன்? என்ற கேள்விதான் எழுகிறது. குறுகிய காலத்தில் எஸ்ஐஆர் பணிகளின் அழுத்தத்தால் ஒரு சில மாநிலங்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தற்கொலை செய்துகொண்டதும் நடந்திருக்கிறது. இதுதொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கின்றன.
வாக்கு என்பது மக்களின் உரிமை, அனைவரும் முன்வந்து வாக்காளர் பட்டியலில் இணைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றன. ஆனால் எத்தனை பேர் முன்வந்து செய்வார்கள் என்று தெரியவில்லை. இப்படியாக பல குழப்பங்கள் நீடிக்கின்றன.
சரி, இதற்கு முன்னதாக 2002, 2005ல் நடத்தப்பட்ட எஸ்ஐஆர் நடவடிக்கையில் இதுபோல படிவம் நிரப்பிக் கேட்டர்களா? என்றால் இல்லை என்றே கூறுகிறார்கள். அரசு ஊழியர்கள் ஒவ்வொரு வீடு, வீடாகச் சென்று நேரில் சென்று கணக்கெடுப்பு நடத்தியதாகவும் இதுவரை தேர்தல் ஆணையம் இதுபோன்று படிவம் வழங்கியதில்லை என்றே தெரிவிக்கிறார்கள்.
சீர்திருத்தம் பழையது என்றாலும் இந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட எஸ்ஐஆர் படிவம் வழங்கும் நடைமுறை புதிதாகவே தெரிகிறது.
முன்பைப் போலவே, வீடு, வீடாகச் செல்லும் அலுவலர்கள் வீட்டில் உள்ளவர்களை சரிபார்த்து சந்தேகமிருந்தால் உரிய ஆவணங்களைப் பெற்று திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இது மக்களுக்கும் எளிதாக இருக்கும். வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கவே பலரும் வர முன்வராத நிலையில், தற்போது புதிய வாக்காளர்களைச் சேர்க்க சிறப்பு முகாம்கள் அருகில் நடத்தப்பட்டாலும் எவ்வளவு முன்வந்து தங்கள் வாக்குரிமையை தக்கவைத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.
மேலும் தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்த காலகட்டத்தில் இதுபோன்ற படிவங்கள் தேவையற்றதாகவே பலரும் கருதுகின்றனர்.
மக்கள் வாக்களிக்க வேண்டுமெனில் முன்வந்து படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும் என்பது மக்கள் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்துகிறது. வாக்களிக்க அழைத்துச் செல்வதுபோல, கட்சி முகவர்கள்தான் இந்த எஸ்ஐஆர் பணிகளிலும் ஓரளவு அக்கறை காட்டுகின்றனர்.
நம் நாட்டில் வாக்குரிமை சாதாரணமாக கிடைத்தது அல்ல, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு முதலில் வாக்குரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரத்திற்குப் பின்னர் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த 1950 ஆண்டு முதல் பிரிவு 326-ன்படி வயது வந்த ஒவ்வொருவருக்கும் வாக்குரிமை வழங்கப்படுகிறது. முதலில் 21 வயதாக இருந்த நிலையில் 1989 சட்டத்திருத்தத்தின்படி வாக்குரிமை வயது 18 ஆகக் குறைக்கப்பட்டது.
பல போராட்டங்களுக்குப் பின் கிடைத்த வாக்குரிமை இப்போது தேர்தல் ஆணையத்தின் இந்த நடைமுறையால் கேள்விக்குரியதாகியிருக்கிறது. மக்கள் கண்டிப்பாக வாக்குரிமையைத் தக்கவைத்துக்கொள்ள படிவங்களை நிரப்பிக்கொடுக்க வேண்டியது அவசியமாகி இருக்கிறது. பரபரப்பு இல்லாமல் அதிகக் கால அவகாசம் வழங்கி இன்னும் எளிதாக அணுகக் கூடிய வகையில் இந்த எஸ்ஐஆர் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கலாம் என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.