
நம் நாட்டின் நீதியமைப்பில் உச்ச நீதிமன்றமே தலை. இந்திய அரசமைப்புச் சட்டம் அதனை உறுதி செய்யும் வகையில், ”உச்ச நீதிமன்றத்தால் விளம்பப்பட்ட சட்டம் இந்திய ஆட்சிப் பரப்பிலுள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுறுத்துதல் வேண்டும்” [அரசமைப்புச் சட்டப் பிரிவு141] எனப் பரந்த அதிகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளது. சட்டத்தின் குறிக்கோள்களான நிலைத்தன்மை, உறுதிப்பாடு மற்றும் தொடர்ச்சி ஆகியவற்றை அடைவதற்கான, முன்னுதாரணக் கோட்பாடு (Law of Precedents) நுட்பமாகச் செயலுறும் வகையில் இந்த அ.ச. பிரிவு நமது அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது என அரசமைப்புச் சட்ட வல்லுநர்கள் மதிப்பிடுகிறார்கள். நாட்டில் சட்டம் நிலையானதாகவும், கணிக்கக் கூடியதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதே முன்னுதாரணக் கோட்பாட்டின் அடிப்படை. எதிர்காலத்தில் வழக்குகளில் தீர்ப்பளிக்கும்போது நீதிமன்றங்கள் பின்பற்ற உரிய 'முன்னுதாரண விதி'யோடு இணைந்ததுதான் உற்றுநோக்கித் தீர்மானித்தல் (Stare decisis) எனப்படும் கோட்பாடு. [‘முறைத்துப் பார்த்தல் தீர்மானம்’ என்பது கூகுள் மொழிபெயர்ப்பு!]
"உற்று நோக்கித் தீர்மானித்தல் அல்லது தீர்ப்புக் கூறுதல்" என்ற கோட்பாடு, பல நாடுகளின் பொதுவான சட்ட அமைப்புகளில் ஒரு மூலக்கல்லாக நிற்கிறது. "முடிவுகளுக்கு ஆதரவாக நிற்பது மற்றும் தீர்க்கப்பட்டதைத் தொந்தரவு செய்யாமல் இருப்பது" என்ற பொருள் தரும் லத்தீன் மொழிச் சட்டச் சொற்றொடரில் [‘stare decisis et non quieta movere’] வேரூன்றிய இந்தக் கோட்பாடு, நிறுவப்பட்ட முன்னுதாரணங்களைப் பின்பற்றுவதை நீதிமன்றங்களுக்குக் கடப்பாடாக்குகிறது. அதுவே நமது அரசமைப்புச் சட்டப்பிரிவு 141இன் ஏற்பாடாகவும் உள்ளது. அப்பிரிவின் (141) உள்ளடக்கப் பொதிவுகள் உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளால் பெரிதும் விரிவடைந்துள்ளன.
உயர்ந்த, இறுதிநிலை நீதிமன்றமாக விளங்கும் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புகள் சட்டத்தின் இயல்பைப் பெற்று (Having the force of the law) சட்டமாகவே கருதப்படும். ஆகவே உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட, வழங்கப்படும் தீர்ப்புகள் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும். ‘அனைத்து நீதிமன்றங்களையும்’ என்பது உச்ச நீதிமன்றத்தையும் உள்ளடக்கியதா என்பது வெளிப்படையாக அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்படவில்லை. ஆனால், நடைமுறையில், உச்ச நீதிமன்றம் - தனது தீர்ப்புகளில் - உற்றுநோக்கித் தீர்மானித்தல் கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டியதில்லை எனும் கருத்தே நிலைகொண்டுள்ளது.
‘உற்று நோக்கித் தீர்மானித்தல்’ கோட்பாட்டின் மூலம், நீதித்துறையில் நிலைத்தன்மை, கணிக்கக்கூடிய தன்மை உறுதி செய்யப்படுகிறது. மேலும், நாட்டின் சட்டம் / நீதி அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை இது வலுப்படுத்துகிறது. தவிர்க்கவே இயலாத காரணம் இருந்தால் தவிர, நீதிமன்றங்கள் முன்னர் தீர்க்கப்பட்ட முடிவுகளை மாற்றித் தீர்ப்பளிக்காமல் அத்தீர்ப்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும்; ஒரே மாதிரியான வழக்குகள் ஒரே மாதிரியாகத் தீர்க்கப்படவேண்டும் என்பது (Stare decisis) கொள்கை, ஆனாலும், நம் நாட்டில் பல வழக்குகளில் தீர்ப்புக்குரிய முக்கிய விஷயம் ஒரே நிலை, ஒரே தன்மை கொண்டிருந்தாலும், வழிகாட்டும் நிலையிலிருக்கும் நீதிமன்றமே தனது முந்தைய தீர்ப்புகளுக்கு மாறுபட்ட, வேறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தீர்ப்புகளை வழங்குவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதனால், குடிமக்களுக்கு வழங்கப்படும் நீதி நிலைத்தன்மையற்றது போன்ற தோற்றம் வளர்கிறது.
ஒரு நீதிமன்றத்தின் இரண்டு அமர்வுகளுக்கு இடையே தீர்ப்பு வழங்க ஏதேனும் கருத்து முரண் ஏற்படும்போது, பெரிய அமர்வு வழங்கும் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட உரியது எனும் பொதுவான வழிகாட்டுதல் உள்ளது. இருப்பினும், தற்காலங்களில், சம பலம் கொண்ட அமர்வுகளால் வழங்கப்படுகின்ற இரண்டு முரண்பாடான தீர்ப்புகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற சிக்கல்களை நீதிமன்றத் தீர்ப்புகள் ஏற்படுத்துகின்றன. கீழ் நீதிமன்றங்கள் மட்டுமல்ல, உச்ச நீதிமன்றமே இதைச் செய்வதில் குற்றவாளியாகக் கருதப்படும் நிலைத் தீர்ப்புகள் வந்துள்ளன; வருகின்றன.
* மட்டு லால் எதிர் ராதே லால் (1974) வழக்கில், ஒரே நீதிமன்றத்தின் இரண்டு முரண்பட்ட தீர்ப்புகள் இருந்தால், முந்தைய தீர்ப்பு ஒரு பெரிய அமர்வின் தீர்ப்பாக இல்லாவிட்டால், பிந்தைய தீர்ப்பு நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
* பின்னர் அந்த நிலைப்பாட்டை மாற்றும் விதமாக, உத்தரப் பிரதேச மாநிலம் எதிர் சிந்தெடிக்ஸ் & கெமிகல்ஸ் லிமிடெட் (1991) வழக்கில் “இந்தக் கொள்கை முழுமையானது அல்ல என்றும் சில சூழ்நிலைகளில் பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது, மேலும், விளக்கமாக 'பிந்தைய தீர்ப்புப் பிணைப்பு' எனும் அணுகுமுறையானது, ‘’பிந்தைய தீர்ப்பு ஒரு சந்தேகத்திற்குரியதாகவோ அல்லது தொடர்புடைய உண்மைகள் அல்லது நடைமுறையில் உள்ள சட்டத்தைக் முழுவதுமாக கருத்தில் கொள்ளாமலோ வழங்கப்பட்ட தீர்ப்பாகவோ இருக்கும்போது, அது பொருந்தாது’’ என்று தீர்ப்பளித்தது.
* ஆர்.கே. அரோராவுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கில், டிசம்பர் 2023-இல் உச்ச நீதிமன்றத்தின் ஒரு டிவிஷன் பெஞ்ச் வழங்கிய தீர்ப்பு, அதற்குச் சிறிது காலம் முன்னர் அக்டோபர் 2023இல், பங்கஜ் பன்சால் எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில் மற்றோர் ஒருங்கிணைப்பு பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்தது. பங்கஜ் பன்சால் வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டம், (PMLA) 2002 இன் கீழ், கைது செய்யப்பட்ட எவருக்கும் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களைக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு, அமலாக்கத் துறை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மாறாக, ஆர்.கே. அரோரா வழக்கின் தீர்ப்பில், “கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை அமலாக்கத் துறை எழுத்துப்பூர்வமாகக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்க வேண்டிய அவசியமில்லை” என்று அறிவித்தது. மேலும், பங்கஜ் பன்சால் வழக்கில் இதுபோன்ற கைது சட்ட விரோதமானது என்று அறிவிக்கப்பட்டாலும், ஆர்.கே. அரோரா வழக்கில் இதுபோன்ற கைது நடவடிக்கையில் எந்த சட்டவிரோத அம்சமும் காணப்படவில்லை எனவும் முற்றிலும் மாறுபட்ட தீர்ப்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளதைக் குறிப்பிட்டுக் காட்ட வேண்டியதாகிறது.
சமபலமுள்ள உச்ச நீதிமன்ற அமர்வுகள் வழங்கும் தீர்ப்புகள் விளைவிக்கும் குழப்ப நிலைக்குக் குறிப்பிடத்தக்க இன்னொரு எடுத்துக்காட்டு இதோ:
* சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் இரண்டு தனித்தனி ஒருங்கிணைப்பு அமர்வுகள் (Co-ordinate benches) 2024, இல் முரண்பாடான தீர்ப்புகளைப் பிறப்பித்துள்ளன. குர்விந்தர் சிங் எதிர் பஞ்சாப் மாநிலம் வழக்கில், 2024 பிப்ரவரி 7 இல், உச்ச நீதிமன்றத்தின் ஒரு டிவிஷன் பெஞ்ச், UAPA சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் மறுத்து, பின்வருமாறு கூறியது:
"சாதாரணத் தண்டனைக் குற்றங்களில்.. நீதிமன்றங்களின் விருப்புரிமை பெரும்பாலும் 'ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு'. UAPA இன் கீழ் ஜாமீன் விண்ணப்பங்களைக் கையாளும்போது அதற்கு எந்த இடத்தையும் காணவில்லை."
சில மாதங்கள் கழிந்து, ஜலாலுதீன்கான் எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் மற்றோர் ஒருங்கிணைப்பு அமர்வு, 'ஒரு விதியாகவே, ஜாமீன்' என்பது UAPA போன்ற சிறப்புச் சட்டங்களுக்கும் பொருந்தும் என்றும், சட்டத்தின் கீழ் ஜாமீனுக்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் யாருடைய சுதந்திரத்தையும் கட்டுப்படுத்த முடியாது என்றும் தீர்ப்பளித்தது.
இதுபோலத்தான், அடிப்படை விஷயம் ஒன்றாக உள்ளதொரு மற்றொரு முக்கியமான பொருட்பாட்டில் - மாநிலங்கள் இயற்றும் முதன்மைச் சட்டங்களா? அல்லது நாடாளுமன்றச் சட்டம் ஒன்றின் மூலமாக அமையப் பெற்றுள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு உருவாக்கும் இரண்டாம் நிலை / துணை(சட்ட) நிலை ஒழுங்காற்று முறைகளா? எது மேலோங்க உரியது என்ற விஷயத்தில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
இன்னும் வெளிப்படையாக விவாதிப்பதென்றால், மாநிலங்கள் இயற்றியுள்ள பல்கலைக்கழகச் சட்டங்களை, நாடாளுமன்றம் இயற்றிய 1956 ஆம் ஆண்டு பல்கலைக்கழக நிதியுதவிக் குழு (யுஜிசி) சட்டத்தால் உருப்பெற்ற ஓர் அமைப்பான யுஜிசியின் வரைவு விதிகள், ஒழுங்காற்று முறைகள் (Rules and Regulations), இடறி, மேலோங்கல் செய்யும் தகுதி கொண்டவையா என்பதே உச்ச நீதிமன்றத்தின் முன்வைக்கப்பட்ட பல வழக்குகளின் முதன்மை வினா.
இறையாண்மை பெற்றுள்ள மாநிலச் சட்டப் பேரவைகளால் அல்லது இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்படுவன முதன்மைச் சட்டங்கள் (Primary Acts enacted by Legislatures) எனப்படும். இரண்டாவது வகை, ஒரு சட்டத்தின் கீழ் உருவாகிய அமைப்பொன்றின் தலைவர் / குழு உறுப்பினர்கள் அல்லது அலுவலர்களால் வரையப்படுவன. அவை, 'ஒப்படைக்கப்பட்ட சட்டம்/ துணைச்சட்ட விதிகள்/ ஒழுங்காற்று முறைகள் (Delegated Legislation/ Secondary/subsidiary regulation) எனப் பல பெயர்களில் வழங்கப்படுகின்றன. இரண்டாவது வகையில் வருவன அனைத்தும், சட்டங்களை இயற்றும் இறையாண்மை கொண்ட நாடாளுமன்றம் அல்லது மாநிலச் சட்டமன்றங்கள் அல்லாத - நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தைவிடக் குறைந்த தகுநிலையிலுள்ள அல்லது நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்திற்குக் கீழ்ப்படிந்த - வேறு பிறரால் - தனிநபர் அல்லது குழு அல்லது அலுவலர்களால் – செய்யப்படுவன.
அரசமைப்புச்சட்ட வழங்கலின்படி (as provided by the Constitution) இந்திய மாநிலங்கள் இயற்றியுள்ள பல பல்கலைக்கழகச் சட்டங்கள், மாநிலப் பட்டியலில் ‘கல்வி’ இருந்தபோதே உருவாக்கப்பட்டவை. [எ.கா:- சென்னைப் பல்கலைக் கழகச் சட்டம் 1857; மும்பை பல்கலைக்கழகச் சட்டம் 1857, அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் 1929; குஜராத் பல்கலைக்கழகச் சட்டம்,1950 மதுரை- காமராஜ் பல்கலைக்கழகச் சட்டம் 1965, போன்றவை]. அந்தந்த முதன்மைச் சட்டங்களின் வழங்கல்களின்படி, அப்பல்கலைக்கழகங்கள் தமது செயல்பாடுகளுக்காக உருவாக்கிக் கொள்ளும் விதிகள் (Statutes, Ordinances and Regulations) இரண்டாம் நிலை/ துணைநிலைச் சட்டங்கள் (Secondary/Subsidiary,Delegated types) ஆகும்.
அதேபோலத்தான் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட 1956-ஆம் ஆண்டு பல்கலைக்கழக நிதியுதவிக் குழு (யுஜிசி) சட்டம் என்பது முதன்மைச் சட்டம். அந்த முதன்மைச் சட்டத்தின்படி, யுஜிசி தனது குழு, தலைவர் அல்லது உறுப்பினர்களால், அவ்வப்போது வரைவு செய்துகொண்டு செயல்படுத்த முனையும் விதிகள், ஒழுங்காற்று முறைகள் இரண்டாம் நிலை/ துணை நிலைச் சட்டங்களாகும்.
பொதுவாகத் துணைச்சட்ட விதிகள், ஒழுங்காற்று விதிகள் என்ற இரண்டாம் நிலையிலுள்ளவை முதன்மைச்சட்டத்தை/ சட்டங்களை மீறவோ, மேலோங்கவோ முடியாது என்பது சட்டப்பரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் அடிப்படை நிலைப்பாடாகும். ஆனால், யுஜிசியின் ஒழுங்காற்று விதிகள் (2010, 2018, 2024/2025) மாநிலச் சட்டங்களை மேலாதிக்கம் செய்யும் போக்கிலுள்ளதாகக் கண்டனங்களும் வழக்குகளும் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் உள்பட பல மாநிலங்களில் வளர்ந்து வருகின்றன.
இவ்விஷயத்தில், உச்ச நீதிமன்றம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி சட்டங்கள் செய்யும் அதிகாரம் பெற்றிருக்கும் மாநிலங்களின் சட்டங்களை மேலாங்கும் வகையில், யுஜிசி போன்ற ஒரு துணை அமைப்பு, ஒழுங்காற்று விதிகளை (Regulations, made under Delegated Legislation) வெளியிட்டு அமல்படுத்த முடியாது; அரசமைப்புச் சட்டத்தில் அவ்வாறான அதிகார வரம்பு மீறல்களுக்கு இடமில்லை எனத் திடமாக, தெளிவாகத் தீர்ப்புகளைத் தொடர்ந்து வழங்குவதில்லை. மாறாக, இவ்விசயம் தொடர்பான வெவ்வேறு வழக்குகளில் – சம எண்ணிக்கை கொண்ட அமர்வுகளால்கூட- அவ்வப்போது வழங்கப்படும் தீர்ப்புகள் நிலையான தெளிவுகளை, தீர்வுகளை அளிப்பதற்குப் பதில் தொடர் குழப்பங்களையே படரச்செய்கின்றன.
எடுத்துக்காட்டாக, கீழ்க்காணும் வழக்குகளைக் குறிப்பிடலாம்.
கல்யாணி மதிவாணன் எதிர் கே.வி. ஜெயராஜ் மற்றும் சிலர் என்ற வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் 11 மார்ச், 2015 இல் தீர்ப்பு வழங்கியது. ‘பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்விப் பணியாளர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரநிலைகளைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் 2010’ என்ற யுஜிசி ஒழுங்காற்று முறைகள், 2010' இல் வெளியிடப்பட்டது. அதில் துணைவேந்தர் நியமனத்திற்கான தகுதிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டிருந்தன.
மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட டாக்டர் கல்யாணி மதிவாணன், யுஜிசி 2010 விதிமுறைகள் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்யவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அவரது நியமனத்தைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது, இதனை எதிர்த்து டாக்டர் கல்யாணி மதிவாணன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
துணைவேந்தர் நியமனத்திற்கான தகுதி - யுஜிசி விதிமுறைகள், 2010 பாரா 7.3.0 இல் உள்ளபடி - கட்டாயமா? மாநில சட்டமன்றத்தால் 1965ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டமான மதுரை - காமராஜ் பல்கலைக்கழகச் சட்டத்தை யுஜிசி ஒழுங்காற்று விதிகள் (2010) மேலாதிக்கம் செய்யும் தகுதியுள்ளவையா? என்பதே அவ்வழக்கின் கேள்வி.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் ‘’மதுரைப் பல்கலைக்கழகச் சட்டம், 1965 இன் கீழ், துணைவேந்தர் பதவி என்பது பல்கலைக்கழக அலுவலர் / அதிகாரி பதவி (Officer of the University) என்பதைக் காண்கிறோம். மேலும், துணைவேந்தர் பதவி குறித்து யுஜிசி (1956) சட்டத்தில் எதுவும் வெளிப்படையாகக் குறிப்பிடப்படாமல் மௌனமாக உள்ளது. துணைவேந்தர் பதவி குறித்து யுஜிசியின் முந்தைய விதிமுறைகளும் (2000 முதலியன) அதேபோல மௌனமாகவே இருந்து வந்துள்ளன. துணைவேந்தர் தொடர்பான விதிகள், 2010ஆம் ஆண்டில்தான் முதல் முறையாக யுஜிசியால் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசு இந்தத் திட்டத்தை, அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏற்றுக்கொண்டு செயல்படுத்த விரும்பினால் தவிர, மாநில சட்டமன்றத்தால் தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி விதிமுறைகள், 2010 பொருந்தாது என்பதை நாங்கள் கவனித்து, தீர்மானித்துள்ளோம்.’’ என்று தெளிவாகக் குறிப்பிட்டு மாண்பமை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன்சு ஜோதி முகோபாத்யாயா, என்.வி. ரமணா ஆகிய இருவர் அமர்வு தீர்ப்பளித்தது.
கல்யாணி மதிவாணன் வழக்கில் யுஜிசி விதிமுறைகள் குறித்து உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்திய அதே நிலைப்பாடு, அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு வழக்கின் தீர்ப்பிலும் [கிருஷ்ணசந்திர கௌட எதிர் அசாம் மாநிலம் (2022)] வலியுறுத்தப்பட்டுள்ளது. ‘அஸ்ஸாம் மாநிலத்தைப் பொறுத்தவரை, யுஜிசி விதிமுறைகள் அம்மாநிலத்தால் ஏற்றுக்கொள்ளப்படாததால் அங்கு அவை கட்டாயமாகக் கருதப்படுவதற்கு இடமில்லை. மாறாக, யுஜிசி விதிகள் பரிந்துரைகளாகக் கருதப்படலாம்’ என்பது அத்தீர்ப்பின் சாரம். இதற்கிடையில் 1994இல், தில்லி பல்கலைக்கழகம் எதிர் ராஜ் சிங் (1994) வழக்கிலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு “யுஜிசி விதிமுறைகள் பரிந்துரைக்கும் தன்மை கொண்டவை” என்றே தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால், மேற்குறிப்பிட்டுள்ள தீர்ப்புகளுக்கு நேர் மாறாக, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எதிர் அரசுச் செயலாளர் 2009 என்ற வழக்கில் தொலைதூரக் கல்விக் கவுன்சில் (DEC) அங்கீகரித்த பின்னும் யுஜிசி விதிமுறைகள் மேலோங்குமா எனும் விஷயத்திலும்; கம்பீர்தன் கே. காத்வி எதிர் குஜராத் மாநிலம் 2022 (யுஜிசியின் துணைவேந்தர் தகுதி / நியமன விதி) தொடர்பான வழக்கிலும் உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வுகள் வழங்கியுள்ள தீர்ப்புகள் “யுஜிசி விதிமுறைகள் மாநிலப் பல்கலைக்கழகங்களால் கட்டாயமாக ஏற்றுக் கொள்ளப்பட உரியன” என்று கூறுகின்றன.
நீதிமன்றங்களின் தீர்ப்புகள், குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், அது சம்பந்தப்பட்ட தரப்பினரின் உரிமைகளைத் தீர்த்து வைப்பது மட்டுமல்ல; அத்தகைய தீர்ப்பு எதிர்கால வழக்குகளுக்கு ஒரு கட்டுப்படுத்தும் கோட்பாடாக - சட்டத்தின் அறிவிப்பையும் (Declaration of Law) – உள்ளடக்கியதாகிறது.
வெகு முன்னரே, ஜெய்ஶ்ரீசாகு எதிர் ராஜ்திவான் டூபே வழக்கில், 28 ஏப்ரல் 1961இல் வழங்கப்பட்ட தீர்ப்பில் “முன்னுதாரணங்களைப் பின்பற்றும் சட்ட நடைமுறை புறக்கணிக்கப்பட்டால், சட்டம் அதன் அனைத்துப் பயன்பாட்டையும் இழந்து நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்படும்" என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்ததை மறவாது நினைவிற்கொண்டு நீதிமன்றத் தீர்ப்புகள் வர வேண்டும்.
மாறுபட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளால், உயர்கல்வி கல்வித் தரநிலைகளைப் பராமரிப்பது (co-ordination, determination and maintenance of standards of teaching, examination and research in Universities என்ற] யுஜிசி சட்டப்பிரிவு 12இன் ஒற்றை வாக்கியத்தின் பலத்தை விருப்பம்போல விரிவாக்கிக் கொண்டு – ஊசி ஓட்டைக்குள் தன் கழுத்தை நுழைத்து வெளிவர முற்படும் ஒரு ஒட்டகத்தைப்போல – ஒரு தன்னாட்சி அமைப்பான யுஜிசி, நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை ‘சிறு சிரட்டை’ அளவிற்குச் சுருக்கி வருகிறது.
இரண்டாம் நிலைச்சட்ட வகை யுஜிசி விதிகள், இந்திய மாநிலங்களின் முதன்மைச் சட்டங்களான பல்கலைக்கழகச் சட்டங்களை மேலாதிக்கம் செய்யும் அருகதை கொண்டவையா என்ற முக்கியமான பொருட்பாட்டில் - தன் தீர்ப்புகளை உற்றுநோக்கி முடிவுகளை வழங்கும் சட்டக் கட்டாயம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை என்றாலும்கூட- இவ்விஷயம், அரசியல் சட்ட விளக்கம் தொடர்புடையதாக உள்ளதால், பொது நன்மை கருதி உச்ச நீதிமன்றம் உற்றுநோக்கித் தீர்ப்புகளை வழங்கினால் என்ன? என்ற வினா உயர்ந்து எழுகிறது.
அவ்வினாவிற்கு, இவ்விஷயத்தை இதுவரை பரிசீலித்துத் தீர்ப்புகள் வழங்கிய அமர்வுகளைவிட, உச்ச நீதிமன்றத்தின் பெரிய அல்லது அரசியல் சாசன அமர்வொன்றின் (Constitutional Bench) தெளிவான, உறுதியான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் விரைவில் வழங்குவதன் மூலம் விடையளிக்கலாம்; விடையளிப்பதற்கான அவசியங்கள் சூழ்ந்து நிற்கின்றன.
***
[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.