
நம் நாட்டில் உயர் கல்வித் துறையில் - கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் - கல்வித் தரநிலைகளை மதிப்பீடு செய்து அந்த நிறுவனங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட, தன்னாட்சியுள்ள அமைப்பாக, தேசிய தரமதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (National Assessment And Accreditation Council, - NAAC) 1994 முதல் நன்கு செயல்பட்டு வருகிறது.
உயர் கல்வியிலும், தொழில்முறைப் படிப்புகள், அந்தப் படிப்புகளை வழங்கும் கல்வி நிலையங்களை மதிப்பீடு செய்து அங்கீகாரமளிக்கத் தனித்தனியாக, முறையே மருத்துவக் கல்விக்கு இந்தியன் மெடிகல் கவுன்சில்; சட்டக்கல்வியை, அது வழங்கப்படும் கல்லூரிகளை அங்கீகரிக்க பார் கவுன்சில் ஆஃப் இந்தியா; கட்டடக் கலைக் கல்விக்கு இந்தியன் கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர்; வேளாண் கல்விக்கு இந்தியன் கவுன்சில் ஆஃப் அக்ரிகல்சர் அன்ட் ரிசர்ச்; மருந்து, மருந்தாளுமைக் கல்லூரிகளுக்கு பார்மசி கவுன்சில் ஆஃப் இந்தியா; பல் மருத்துவக் கல்விக்கு டென்டல் கவுன்சில் ஆஃப் இந்தியா; ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு என்.சி டி.இ. எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் என வரிசைகட்டி நிற்கின்றன, உயர் கல்விக் களத்தில் தரமதிப்பீடு செய்யவும், அங்கீகாரம் வழங்கவும்.
இவைபோக, 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மற்றொரு தரமதிப்பீடு நிறுவனமான தேசிய அங்கீகார வாரியம் (National Board of Accreditation-NBA) 2010 ஆம் ஆண்டில், தன்னாட்சி பெற்று, 2013 முதல் நிர்வாக ரீதியாகவும் முற்றிலும் சுயாதீனமாக உள்ளது. இந்த அமைப்பு (NBA), அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) சட்டத்தின் கீழ் செயல்படும் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள், நிர்வாகவியல், மருந்தாளுமை, கட்டடக் கலை கல்லூரிகள் போன்றவற்றில் வழங்கப்படும், பட்டயப் படிப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரையிலான படிப்புத் திட்டங்களின் திறன்களை மதிப்பீடு செய்து அங்கீகாரம் அளித்து வருகிறது (கவனிக்கவும், NAAC போலக் கல்வி நிறுவனங்களை NBA மதிப்பீடு செய்து அங்கீகரிப்பது இல்லை).
மேலே குறிப்பிட்டிருப்பதுபோல, உயர்கல்வியின் விரிந்த பரப்பில் பல்வேறு வகைப் படிப்புத் துறைகளின் தரமதிப்பீட்டிற்கும் அந்தந்த வகை படிப்புத் துறைகளை வழங்கும் கல்வி நிலையங்களின் தரநிலைகளை மதிப்பிட்டு அங்கீகாரம் வழங்கவும் பல அமைப்புகள், கவுன்சில்கள் இருப்பதுபோல, விரிந்து நிற்கும், பல்வேறு வகைப் படிப்புத் துறைகளை வழங்கும் உயர் கல்விக்கே ஆதாரமாக, அடித்தளமாக உள்ள பள்ளிக்கல்வியின் தரமதிப்பீட்டிற்கு, இதுவரை சரியான, நன்கு செயல்படக்கூடிய மதிப்பீட்டு அங்கீகார முறைகளோ அமைப்புகளோ இல்லாமலிருப்பது மிகப் பெருங்குறை.
அடித்தளத்தை (பள்ளிக்கல்வியை) சரியாக்காமல், அதன் மேல் எழுப்பப்படும் கட்டடத்தை (உயர் கல்வியை) மட்டும் செப்பனிட்டுக் கொண்டிருப்பது, கல்வியளிப்பதன் மூலம் எதிர்பார்க்கப்படும் நிலைத்த, தொடரும் பலன்களைக் கற்போருக்கும் நாட்டுக்கும் வழங்க முடியாமல் போய்விடும் அல்லவா?
நாட்டில் நிலவும் பலவகைப்பட்ட பண்பாட்டுச் சூழல்கள், சமுதாயப் பின்தங்கிய நிலைகள், புவியியல் வேறுபாடுகள் காலநிலைகள், வாழ்க்கை முறைகள், கல்வியில் நிலவுகிற ஏற்றத்தாழ்வுகளை மோசமாக்குகின்றன. இளைய தலைமுறையினரிடம் கற்றல் ஆர்வத்தை வளர்க்க இயலாமையும் ஒரு காரணமாக உள்ளது. பெரும்பாலான குழந்தைகளுக்குக் கல்வியின் நோக்கம் என்ன என்பதில் ஒருமித்த கருத்தோ, செயல்பாடோ காணோம். பலருக்குத் தமது குடும்பப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வது; பாதுகாப்பான வேலையைப் பெறுவது; ஓய்வுபெறும் வரை தங்கள் குடும்பங்களை ஆதரிப்பது, ஓய்வுக்காலம் முழுமையும் ஓய்வூதியம் வரும் வேலையில் அமர்வது என்பது போன்ற சாதாரண நோக்கங்களே கூடுதலாக உள்ளன. நாட்டைக் கட்டமைக்க, மேம்படுத்த, உரிய நோக்கங்கள் வெளிப்படுவது அரிது.
கல்வி முயற்சிகள் அனைத்துக்கும் அடித்தளமாக உள்ள பள்ளிக்கல்வி (பாலர் பள்ளி முதல் மேல்நிலைக்கல்வி வரை அல்லது பட்டப் படிப்புகளுக்கு முந்தைய நிலைவரை), நம் நாட்டில் நிலவி வருகின்ற ஏற்றத் தாழ்வுகளுக்கு எல்லையே இல்லை. குறிப்பாக, நாட்டின் ஆரம்பக் கல்விப் பரப்பு மிகவும் சீரற்றதாக நிற்கிறது. விடுதலையடைந்தபோது இருந்த நிலைகளோடு ஒப்பிட்டால் கடந்த 75 ஆண்டுகளில் மக்களது எழுத்தறிவு விகிதம், மாணவர் சேர்க்கை, பள்ளிகள் எண்ணிக்கை, பள்ளிகளிலுள்ள வசதிகள், கற்றலை வலுப்படுத்தும் திட்டங்கள், அவற்றுக்கான செலவுகள் ஆகியனவற்றில் முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது உண்மைதான்.
ஒன்றிய அரசின் பல அமைச்சகங்களாலும், துறைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுச் செயல்படுத்த உதவும் வகையில், பிரதான் என்ற 2008 இல் அமைக்கப்பட்ட அமைப்பு, ஆண்டுதோறும் முயன்று தரவுகளைச் சேகரித்து ASER அறிக்கைகளாக (Annual Status of Education Report (Rural) வழங்கி வருகிறது. இந்த ASER அறிக்கை 2024, நாட்டில் கல்விப் பரப்பில், குறிப்பாகத் தொடக்க நிலைக் கல்வியில் (பள்ளிக் கல்வியில்) அதிலும் குறிப்பாகக் கிராமப்புற இந்தியாவில் தொடரும் நிலைகளைத் தரவுகளுடன் ஜனவரி 2025இல் வெளியிட்டுள்ளது,
அந்த (ASER 2024) அறிக்கையில், பள்ளிக் கல்விச் சூழலில் நிலவும் வாய்ப்பு வேறுபாடுகளைக் குறிப்பிட ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக “நாட்டில் குழந்தைகள் ஆங்கிலத்தில் பள்ளிப்படிப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இப்போது வரை கணிசமாகக் குறைவாகத்தான் இருக்கிறது” என்கிறது. மேலும், மேகாலயா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் 3 வயதுக் குழந்தைகள் கற்பதற்கு எங்கும் சேரவில்லை (அவ்வாறு மழலையர் பள்ளி எதிலும் சேராத குழந்தைகள் விகிதம் 50%க்கும் அதிகம்). குஜராத்தில் 1 ஆம் வகுப்பில் சேரும் குழந்தைகள் விகிதம் 36.4%.
இந்தியாவில் அரசுப் பள்ளி சேர்க்கை: 2018 ஆம் ஆண்டில் (6-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில்) 65.6%. கரோனா தொற்று நோய்க் காலத்தில் அரசுப் பள்ளி சேர்க்கை பெரிய அதிகரிப்பைக் கண்டது குறிப்பிடத்தக்கது (72.9% 2022 இல்). ஆனால், 2024ல் அகில இந்திய எண்ணிக்கை 66.8% ஆகக் குறைந்துள்ளது. உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்கள் தவிர, ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தப் போக்கு காணப்படுகிறது.
அகில இந்தியப் புள்ளிவிவரங்களின்படி 2022 முதல் அனைத்துத் தொடக்க வகுப்புகளிலும் (1-8 ஆம் வகுப்பு) அரசுப் பள்ளிகளில் உள்ள குழந்தைகளின் வாசிப்பு அளவு பொதுவாக ஓரளவு மேம்பட்டுள்ளது. ஓர் எடுத்துக்காட்டாக 2018 ஆம் ஆண்டில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 16.3% பேர் குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்புப் பாடத்தை வாசிக்க முடிந்தது. இந்த எண்ணிக்கை 2024 இல் 23.4% ஆக அதிகரித்துள்ளது. ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடையேயும் வாசிப்பு அளவு கணிசமாக மேம்பட்டுள்ளது, அரசுப் பள்ளிகளில் இரண்டாம் வகுப்புப் பாடத்தை வாசிக்கக் கூடிய ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளின் விகிதம் 2018 இல் 44.2% ஆக இருந்து, 2022 இல் 38.5% ஆகக் குறைந்து, பின்னர் 2024 இல் 44.8% ஆக மீண்டுள்ளது. தனியார் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வாசிப்பு நிலைகளிலும் சிறிய முன்னேற்றங்கள் காணப்படுகின்றன (2018 இல் 65.1%, 2022 இல் 56.8% 2024 இல் 59.3%) ஆகவும் அதிகரித்துள்ளது.
அடிப்படையான கற்போரது வாசிப்பு அளவில் பொதுவான முன்னேற்றங்கள் காணப்படுவது மகிழ்விப்பதாக உள்ளது. இருந்தாலும், நாட்டில் மாநிலங்களிடையே தொடக்கநிலைக் கல்வியில் நிலவும் வாசிப்பு அளவு வேறுபாடுகள் வழங்கப்படும் கல்வி, கற்றல் முதலியன சமச்சீரற்ற அடித்தளத்தோடு தொடர்வதைக் குறிப்பிடுவதாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். 2024 ஆம் ஆண்டில், வாசிப்பு அளவு அதிகமாக ஹிமாச்சலப் பிரதேசத்திலும் (70.1%), மற்ற மாநிலங்கள் குறைவான நிலையிலும் உள்ளன.
அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பில் சேர்ந்த குழந்தைகளிடையேயும் வாசிப்பு அளவு அதிகரித்துள்ளது. 2018 இல் 69% ஆக இருந்து, 2022 இல் 66.2% ஆகக் குறைந்து பின்னர் 2024 இல் 67.5% ஆக உயர்ந்திருக்கிறது. ஆயினும் மாநில அளவிலான செயல்திறன்கள் பரவலாக வேறுபடுகின்றன.
குஜராத், உத்தரப் பிரதேசம் மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காட்டுகின்றன. இருப்பினும், பஞ்சாப், ஆந்திரம் மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களில் சரிவு காணப்படுகிறது. பள்ளி உள்கட்டமைப்பில் முன்னேற்றம் அனைத்து மாநிலங்களிலும் காணப்பட்டாலும், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மிசோரம் மற்றும் நாகாலாந்தில் உள்ள பள்ளிகள் இந்த வசதிகளில் தொடர்ந்து பின்தங்கியுள்ளன.
தேசிய அளவில், குழந்தைகளின் அடிப்படை எண்கணித ஆற்றல் அளவுகளும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைப் பொருத்தவரை கணிசமான முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. குறைந்தபட்சம் ஒரு எண் கழித்தல் கணக்கைச் செய்யக் கூடிய மூன்றாம் வகுப்பில் உள்ள குழந்தைகளின் அகில இந்திய விகிதம் 2018 இல் 28.2%; 2022 இல் 25.9% ஆக இருந்து. 2024இல் 33.7% ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, அகில இந்திய அளவில், ஐந்தாம் வகுப்பில் உள்ள குழந்தைகளின் அடிப்படைக் கணித ஆற்றலும் 2018 இல் 27.9%, 2022 இல் 25.6%, பின்னர் 2024 இல் 30.7% ஆக உயர்ந்துள்ளது. அடிப்படை எண்கணிதத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் செயல்திறன்கள் பெரிய வளர்ச்சியைக் காட்டாமல், 2018 இல் 44.1% ஆக இருந்து 2022 இல் 44.7% ஆகி 2024 இல் 45.8% ஆக உள்ளது.
மேலே காட்டியுள்ள வளர்ச்சிகள் காணப்பட்டாலும், ஆரம்ப நிலையில் (3ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு) கற்போரிடையே அடிப்படைக் கணித ஆற்றல்கள் – முறையே 3ஆம் வகுப்பு 33.7% 5ஆம் வகுப்பு 30.7%, எட்டாம் வகுப்பு 45.8% மாணவர்களைத் தவிர - மிகப் பெரும்பாலான மாணவர்களுக்கு அடிப்படைக் கணித ஆற்றல்கள் – இல்லாத நிலை பெருங்கவலையல்லவா?
பள்ளியில் சேராத மூத்த குழந்தைகள் (15-16 வயதுக்குட்பட்டவர்கள்) விகிதங்கள் அகில இந்திய அளவில் 2024 இல் 7.9% ஆக இருந்தது. பள்ளியில் சேராத பெண்களின் விகிதம் 2022 இல் 7.9% ஆக இருந்து 2024 இல் 8.1% ஆகச் சற்று அதிகரித்துள்ளது. இதிலும் பல மாநிலங்களில், குறிப்பாக மத்தியப் பிரதேசம் (16.1%), உத்தரப் பிரதேசம் (15%), ராஜஸ்தான் (12.7%), மிசோரம் (12.2%), குஜராத் (10.5%) மற்றும் சத்தீஸ்கர் (10%) என வேறுபட்ட விகிதங்களில் பள்ளியில் சேராத மாணவர்களைக் கொண்டுள்ளது. இது நாட்டில் ஒருமித்த கல்வி வளர்ச்சி காண்பதைத் தாமதப்படுத்தும் நிலைதானே?
60-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சிறிய பள்ளிகள் விகிதம் அதிகரிப்பைக் காட்டுகிறது, இது 2022 இல் 44% ஆக இருந்து 2024 இல் 52.1% ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், நாகாலாந்து, கர்நாடகம், இமாச்சலப் பிரதேசத்தில் சிறிய நடுநிலைப் பள்ளிகள் 75% உள்ளன. தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு வகுப்பறைகளில் மூன்றில் இரண்டு பங்கு பல தரங்களாக இருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பல பள்ளிகளில் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலைகள் காணப்படுகின்றன. மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மிசோரம் மற்றும் நாகாலாந்தில் உள்ள பள்ளிகள் பள்ளி வசதிகளில் (வகுப்பறைக் கட்டடங்கள், இருக்கைகள், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளில்) தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே உள்ளன.
இதுவரை எடுத்துச் சொல்லப்பட்டிருப்பவை ஒட்டுமொத்தமாக நாட்டின் பள்ளிக்கல்வியைக் குறை சொல்வதற்காக அல்ல. நாட்டில் பல மாநிலங்களிடையே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அமைத்தல் என்பனவற்றிலுள்ள வேறுபாடுகளோடு, மிக முக்கியமாக, அடிப்படைத் திறன்களான வாசிப்பு அளவு, எண் கணித ஆற்றல், ஆங்கில மொழியறிவு என்பவற்றில் நிறைந்து காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் நாடு முழுவதும் வழங்கப்படும் பள்ளிக் கல்வியின் தரத்தில் குறைபாடுகளை ஏற்படுத்தக் கூடியனவாக இருப்பதை எடுத்துக்காட்டத்தான். பள்ளிக் கல்வியின் தரத்தை ஒரே சீராக வலுப்படுத்த, தர நிர்ணயங்களை உருவாக்க, பள்ளிக் கல்வி வழங்கும் கல்வி நிலையங்கள் நிர்ணயிக்கப்படும் தரநிலைகளில் உள்ளனவா என்பதை மதிப்பீடு செய்து அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நிறுவுவதற்குத்தான்.
ஒரு துடிப்பான ஜனநாயக சமுதாயத்தின் அடித்தளமாக - எதிர்காலத்தை ஆளப்போகும் வளரும் தலைமுறையினருக்கு வழங்கப்படும் தொடக்க / பொதுக் கல்வி முறை இருப்பதாகக் கல்வியாளர்கள் கருதுகிறார்கள். பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி ஆகிய இரண்டு நிலைக் கல்வியும் சேர்ந்துதான் கற்போரது அறிவுப்பரப்பை வளர்த்து, திறன்களின் திரட்சியை நிதர்சனமாக்கி எதிர்காலத்திற்கு அவர்களைத் தயார்ப்படுத்துவதில், சமுதாயத்தின் பயன்தரு உறுப்பினராகக் கற்போரை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது உண்மை. அதேவேளையில், பள்ளிக் கல்விதான் உயர்கல்வியில் மாணவர்கள் கூடுதலாக வளர்த்து உருவாக்கிக்கொள்ள உதவும் அறிவு மற்றும் திறன்களுக்கான உறுதியான அடித்தளத்தை வழங்குகிறது என்பதை மறுக்க இயலாது.
பள்ளிக் கல்வியில், மாணவர்கள் (கணிதம், அறிவியல், புவியியல், சமூகவியல், வரலாறு (ஆங்கிலம் போன்ற) மொழிப்பாடங்கள் எனப் பலதுறைப் பாடங்களின் தொகுப்பைக் கற்கிறார்கள். அதனால், அந்தப் பல துறைப் பாடங்கள் மூலமும், அவற்றின் தொடர்பாகவும் பொதுவாகப் பல்வேறு தலைப்புகள் பற்றிய பரந்த புரிதல் கிடைக்கும் வண்ணம் ஓர் அடிப்படை பள்ளிக் கல்வி மூலம் உருவாக்கப்படுகிறது. கல்லூரியிலும் அதற்கு அப்பாலும் வெற்றி பெறுவதற்கு அவசியமான சமூக மற்றும் உணர்ச்சித் திறன்களை மாணவர்கள் வளர்க்கவும் பள்ளிக்கல்விக் காலப் படிப்பும் பயிற்சியும் பெரிதும் உதவுகிறது.
மொத்தத்தில், உயர்கல்விக்கு முந்தைய பள்ளிக்கல்விக் காலத்தில்தான் உயர் கல்விக்கும், தொடரும் பணி வாழ்க்கை மற்றும் சமுதாய வாழ்க்கைக்கும் கற்போர் அனைவரையும் ஆயத்தப்படுத்துவதற்கான அறிவு, திறன்கள், ஆர்வம், ஈடுபாடு போன்றவை கொண்ட வலுவான அடித்தளம் அமைக்கப்பட வேண்டியதாகிறது. ஆதலால் பள்ளிக் கல்வியை, மிகு உயர்தரமாக, சீராக்கித் தொடர்ந்து வழங்கிவர வேண்டிய அதிமுதன்மைத் தேவை உள்ளது நம்முன். உயர்கல்விக்கு அடித்தளமாக விளங்கும் பள்ளிக்கல்விக்குத் தேசிய அளவில் - முன்னர் குறிப்பிட்டுள்ளதுபோல - பள்ளிகளின் கல்வித் தரத்தை முறையாக மதிப்பீடு செய்து, அங்கீகாரம் வழங்கி, நாட்டில் பள்ளிக்கல்வித் தரமேம்பாட்டிற்கு உதவும் வகையான ஒரு தனித்த, அர்ப்பணிக்கப்பட்ட, அமைப்பு இதுவரை ஏதுமில்லை என்ற கவலை தாமதமின்றி நீக்கப்பட வேண்டியதாகிறது. “அனைத்துக் குழந்தைகளையும் பள்ளிக்கு அழைத்து வரவும், அவர்கள் கற்கிறார்கள் என்பதை உறுதி செய்யவும் தேசம் உறுதி பூண்டுள்ளது” எனத் தேசியக் கல்விக்கொள்கை முழங்குகிறது. “அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு அழைத்து வருவது” மட்டும் நிறைவேற்றப்பட்டால் நாட்டிற்கு என்ன பயன்? தொடர்ந்து, இடைநில்லாது “அவர்கள் கற்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட வேண்டும்” எல்லாவற்றிற்கும் மேலாக, நாட்டின் குழந்தைகள் பெறும் பள்ளிக்கல்வி மிகு உயர்தர நிலையில் இருக்கும்படி அனைத்தும் செய்ய நாடு உறுதி பூண்டுள்ளது என்பதுதான் அந்த முழக்கத்தின் உட்கிடையாகக் கொள்ள வேண்டும்.
சமுதாய வளர்ச்சியின் அடித்தளமாக விளங்கும் தொடக்கக் கல்வியின் உட்பொதிவுத் தரம், வழங்கப்படும் முறை, நிர்வகிக்கப்படும் விதம் ஆகியன வளர் தலைமுறையினர் மிக உயர்ந்த கல்வி விளைவுகளை (Educational Outcomes) தொடர்ந்து அடைந்துவர உதவுவதாக வேண்டும். அதன் மூலம் நாடு தொடர்ந்த, உறுதியான வளர்ச்சியைப் பெற ஏதுவாகும், இந்த இலக்குகளை அடைய நாடு முழுமைக்கும் பொருந்தக்கூடிய கல்வி அளவுகோல், தரத்தகு நிலைகளைக் கண்டறிந்து பயன்படுத்தி, பல்வேறு வகைப் பள்ளிகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தித் தரமதிப்பீடு செய்து, அங்கீகாரம் வழங்குவதற்குத் தக்கதோர் அமைப்பு தேவைப்படுகிறது; கல்விக் களத்தில் ஆராய்ந்து நிர்ணயிக்கப்படும் தரநிலைகள் உலகு சூழ் தேவைகளுக்கேற்ப அவ்வப்போது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதும் கல்வியாளுமைகளின் கருத்து. அதனடிப்படையில் தான், தேசியக் கல்விக்கொள்கை (NPE) 2020, ‘பாலர் கல்வி உள்பட கல்வி நிலையங்களின் அனைத்து வகைகள் (பொது/ அரசுக் கல்வி நிலையங்கள்; அரசின் உதவி பெறும் தனியார்/ அறக்கட்டளைகள் நிர்வகிக்கும் அரசின் உதவி பெறாத தனியார் கல்வி நிலையங்கள்), அனைத்து நிலைகளிலும், அத்தியாவசியத் தராதரங்களுக்கு இணங்கிச் செயலாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதற்காக, “ஒரு பயனுள்ள, தரமான, சுய ஒழுங்குமுறை அல்லது அங்கீகார முறையை’ உருவாக்குவதைக் கருத்தில் கொண்டிருக்கிறது.
அக்கருத்தின் வெளிப்பாடாக, ஒவ்வொரு மாநிலமும் / யூனியன் பிரதேசமும் தமது பகுதிகளிலுள்ள அனைத்துப் பள்ளிகளும் சில குறைந்தபட்ச தொழில் முறையை, தரங்களைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற பரிந்துரையுடன், சீரான கல்வித் தரத்தை உறுதி செய்வதற்காக, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள்(SCERT) மூலம் தனியே ஒவ்வொரு மாநிலமும் ஒரு பள்ளித் தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை 2020 பரிந்துரைக்கிறது. மேலும், அவ்வாறான அமைப்பு, மாநில அளவிலான ஒரு சுயாதீனமான, அமைப்பாக இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளதையும் குறிப்பிட்டுரைக்க வேண்டும்.
தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்தாலும், உரிய காரணங்களால் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், அனைத்துக் கல்வி முயற்சிகளுக்கும் அடித்தளமாகவுள்ள பள்ளிக் கல்வியின் தர மேம்பாடு குறித்த தேசியக் கல்விக் கொள்கை வழங்கும் இப்பரிந்துரையின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்து தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களும் இந்தக் கல்வி ஆண்டிலேயே தங்கள் பிரதேசங்களில், மாநிலப் பள்ளிகள் கல்வித் தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் அமைக்க முன்வர வேண்டும். மகாராஷ்டிரம் போன்ற ஒருசில மாநிலங்கள் இந்த விஷயத்தில் வரவேற்கப்பட உரிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன என்பது வரவேற்புக்குரிய செயலாகும்.
தேசியக் கல்விக்கொள்கை 2020 மாநிலங்களுக்குப் பரிந்துரைத்துள்ள தன்னாட்சியுள்ள பள்ளித் தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கட்டமைப்பைத் தேசிய அளவிலும் - தேசிய பள்ளிகள் கல்வித் தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் என அமைக்கப்பட வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இந்தியாவில் பல்வேறு வகையான பள்ளிக் கல்வி வாரியங்கள் உள்ளன. பள்ளிக் கல்வி வாரியங்களின் கவுன்சில் மூலம் 71 கல்வி வாரியங்கள் மற்றும் 9 அசோசியேட்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்; கேம்பிரிட்ஜ் சர்வதேச கல்வி மதிப்பீடு; மாநில வாரியங்கள்; இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ்; தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனம்; சர்வதேச இளங்கலை பட்டம்; இந்தியப் பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில்; இந்தியப் பள்ளி கல்வி வாரியம் என்பன குறிப்பிட உரிய சில வாரியங்கள். (தமிழ்நாட்டில், சிபிஎஸ்இ பள்ளிகள், ஐசிஎஸ்இ பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், விளையாட்டு பள்ளிகள், ஆங்கிலோ-இந்தியப் பள்ளிகள், சிறப்புப் பள்ளிகள், சர்வதேச பள்ளிகள், மாநில வாரிய பள்ளிகள் எனப் பலவகைப்பட்ட பள்ளிகள், பல கல்வி வாரியங்களின் பாடத்திட்டங்களின்படி செயல்பட்டுவருகின்றன.
இப்படி மிகப் பலவான பள்ளிக்கல்வி வாரியங்கள் - தத்தமது பாடத்திட்டங்கள், கற்பித்தல் அணுகுமுறைகள், தேர்வுத் திட்டங்கள் கொண்டு - செயல்படுவதால் பள்ளிக் கல்வியில் நாடு முழுமைக்கும் ஒரே சீரான தரநிலைகள் இல்லாமல், ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த நிலையே உள்ளது. இத்தகைய நிலை உயர்கல்வியிலும் தொடர்ந்து ஒட்டுமொத்தக் கல்வி வெளிப்பாட்டு வெற்றியின் அளவைப் பாதிப்பதாகிவிடும்.
இந்தியத் தர கவுன்சிலின் 2வது, தேசிய மாநாட்டில் (2007) குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், தனது உரையில், “நாட்டில் தரத்தைக் கொண்டு வர வேண்டுமானால், நாம் ஆரம்பத்திலேயே, அதாவது பள்ளிகளில் இருந்து அந்த முயற்சியைத் தொடங்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
இந்தியத் தர கவுன்சிலின் மூலம் பள்ளிகளின் தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்திற்கான ஓர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், ஏனோ அது வெற்றிகரமான ஏற்பாடாக வளரவில்லை. இதுவரை NABET தரமதிப்பீடு, அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆகவே, தக்க வரவேற்புப் பெறக்கூடிய தரமான, தனித்த, நாடு தழுவிய கல்வித் தரநிலை மதிப்பீடு மற்றும் அங்கீகார அமைப்பு உடனடி அவசியமாகிறது.
இதுவரையான உரையாடலில் விளக்கியுள்ளபடி, தாமதங்களின்றித் தமிழ்நாடு உள்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மாநில பள்ளிகள் கல்வித் தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் அமைக்கப்படவும் தேசிய அளவில், தேசிய பள்ளிகள் கல்வித் தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் அமைக்கப்படவும் வலியுறுத்தப்படுகிறது.
(திருச்சியில் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு பள்ளிகள் மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் எனும் அமைப்பு தாமதமின்றி உருவாக்க வேண்டுகோள் விடுத்து கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானம் இக்கட்டுரைக்கான உந்துதல்.)
***
[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]
இதையும் படிக்க: ‘மன்னிப்பு’ மனம் வருந்திக் கேட்பதா? வற்புறுத்திப் பெறுவதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.