முழக்க டி-சட்டையின் வரலாறு!

முழக்க டி-சட்டைகள் எப்போது உருவானது, அது உருவாக்கப்பட்டதன் காரணம் பற்றி இக்கட்டுரையில்...
 T-shirt
டி-சட்டை
Published on
Updated on
3 min read

முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்பட்ட டி-சட்டைகள் ( டி ஷர்ட்ஸ் T-shirts) குறுகிய காலத்தில் ஆண் பெண் இருபாலரும் அணியும் வகையிலும், குழந்தை முதல் முதியவர் வரையிலும் அனைவரும் அணிவதாக மாறியிருக்கின்றன.

ஏழைகள் அணியும் வகையில் மலிவான விலையில் கண்ணைக் கவரும் விதத்தில் டி-சட்டைகள் கிடைக்கின்றன என்பதும் பிற சட்டைகள் போல் சுருக்கங்களை அகற்றத் ‘தேய்க்க’ (iron) வேண்டியதில்லை என்பதும் டி-சட்டையின் மற்றொரு வசதி. பணம் படைத்தவர்களுக்காக சில ஆயிரங்கள் விலையுள்ள டி-சட்டைகளும் விற்பனைக்கு வருகின்றன.

முன்பெல்லாம் மாலை நேரங்களில் வசதிக்காக அணியப்பட்ட டி-சட்டைகள் இப்போது பள்ளி, கல்லூரிகளுக்கும், அலுவலகங்களுக்கும் அணிந்துசெல்லும் வகையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடை என்று ஆகிவிட்டது. முதன்முதலாகப் பெண் பிள்ளைகள் டி-சட்டை அணிந்ததை முகம் சுழித்துப் பார்த்தவர்கள் இன்று அவர்களது பேத்திகள் அணிவதை ஏற்கும் மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். சில மாற்றங்கள் விரைந்து நிகழும். வேறுசில மாற்றங்கள் காலத்தில் மெதுவாக நிகழும். டி-சட்டை அணிவதும் அப்படித்தான். குறுகிய காலத்தில் பரவிவிட்டது போன்று தோற்றம் காட்டினாலும் அது பயன்பாட்டிற்கு வருவதற்கும் சில பத்தாண்டுகள் ஆகியிருக்கின்றன.

டி-சட்டைகளின் தோற்றம் என்று பார்த்தால் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செல்கிறது. ஆரம்ப காலங்களில் மேல்சட்டைக்கு உள்ளே அணியும் உள்ளாடையாக இருந்து, இரண்டாம் உலகப் போருக்குப் பின்பான காலகட்டத்தில்தான் உள்ளாடையிலிருந்து, வெளியாடை என்னும் இடத்தை டி-சட்டை பிடித்திருக்கிறது. நல்ல உடல்கட்டுக்கொண்ட இளைஞர்களின் இளமை, ஆண்மை, மேன்மையை வெளிப்படுத்தும் ஆடையாக டி-சட்டை மாறியது.

அமெரிக்காவில் பைக், கார் போன்றவற்றை அளவுக்கு மீறிய வேகத்துடன் பைத்தியம்போல் ஓட்டும் இளைஞர்கள் ஆரம்ப நிலையில் டி-சட்டை அணிந்திருக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து மார்லோன் பிராண்டோ, ஜேம்ஸ் டீன் ஆகிய ஹாலிவுட் நாயகர்களால் டி-சட்டை பிரபலம் அடைந்தது. 1950-களில் அது புரட்சிக் குறியீடாக மாறியது.

பழைய தமிழ்த் திரைப்படங்களில் பார்த்தால் சிவாஜி, ஜெமினி, எம்.ஜி.ஆர்., முத்துராமன், ஏ.வி.எம். ராஜன் போன்ற நடிகர்கள் டி-சட்டை அணிந்திருப்பதைப் பார்க்கலாம். எனது பார்வையில், டி-சட்டை முத்துராமனுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஆனாலும் அந்தக் காலகட்டத்தில் மக்களிடம் டி-சட்டை அணியும் வழக்கம் இல்லை.

1960-ஆம் ஆண்டு முதற்கொண்டு பல்வேறு முழக்கங்களையும், விளம்பரங்களையும் கொண்ட டி-சட்டைகள் (Slogan T-shirts) அணியும் வழக்கம் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் முடுக்கம் பெற்றது. அப்படிப்பட்ட டி-சட்டைகள் அணிவதைப் பெண்கள் நாகரிகமாகக் கருதினர்.

பின்நவீனத்துவக் காலத்தில் மொழியானது செயல்பாடு என்பது குறைந்து தனிநபர்களின் வெளிப்பாடுகளாகவும், புதுமைகளாகவும் மாறிப்போயின. இப்படியான சொற்களைக் கையாளும் விளையாட்டுத்தனங்களும், தனிப்பட்ட வடிவமைப்பும் டி-சட்டைகள் தனிநபரின் எண்ணங்களை வெளிப்படுத்தும் திரைச்சீலைபோல் ஆகிவிட்டது.

வியத்நாம் போருக்கு எதிராகவும், அணுக்கருப் போருக்கு எதிராகவும் கருத்துச்சொல்லும் வாசகங்களைக் கொண்ட டி-சட்டைகள் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டன. பெரும்பாலானவர்கள் இப்படி டி-சட்டைகளை அணியும்போது போருக்கு எதிரான மக்களின் மனநிலையை அரசுக்கு வெளிப்படுத்துவதாக அது அமைந்துவிடுகிறது.

1969-இல் ஜான் லெனான், யோகோ ஓனோ ஆகியோர் வடிவமைத்த “போர் முடிந்துவிட்டது" என்னும் வாசகம் கொண்ட டி-சட்டை உலகளவில் பலராலும் அறிந்து, புரிந்துகொள்ளப்பட்ட ஒன்றாகும். அதன்பிறகான காலகட்டத்தில் அமைதியை, சமாதானத்தை வெளிப்படுத்தும் வாசகங்களைக் கொண்ட டி-சட்டைகள் அன்றாட வழக்கத்தில் வந்துவிட்டன. முழக்கங்களுக்குப் பதிலாகக் குறியீடுகளும் டி-சட்டையில் இடம்பெறுவது உண்டு.

1970-களில் நியு யார்க் டைம்ஸ் இதழ், டி-சட்டையை ‘செய்தி ஊடகம்’ (medium of message) என்று அழைத்தது. என்ன நோக்கத்திற்காக அணியப்படுகிறதோ அல்லது என்ன விழிப்புணர்வுக்காக அணியப்படுகிறதோ அந்த இலக்கை அடையும் விதத்தில் டி- சட்டையில் இடம்பெறும் முழக்கம் அல்லது குறியீடு நகைச்சுவையாகவும் இருக்கலாம், நேரடித் தாக்குதலாகவும் அமையலாம். இப்படிப்பட்ட டி-சட்டைகளை வடிவமைப்பதற்கென்று திறமையான நிறுவனங்களும் உருவாகி நிலைபெற்றன.

உரிமை முழக்கங்களைக் கொண்ட டி-சட்டைகள்

1980, எய்ட்ஸ் பெருந்தொற்றுக் காலத்தில் என்றென்றும் நினைவிலிருக்கும் வகையிலான முழக்க-டி-சட்டைகள் உருவாக்கப்பட்டன. ‘அமைதி = மரணம்’ என்பது மிகவும் பிரபலமான டி-சட்டை முழக்கம்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தால் மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினராலேயே புறக்கணிக்கப்பட்டனர். அதனால் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவு திரட்டும் நோக்கிலும் அரசுக்கும், மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அந்த டி-சட்டை முழக்கம் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய சமூக வலைத்தளங்கள் வருவதற்கு முன்பான காலகட்டத்தில், அரசுகளை வலியுறுத்தவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவுமான கட்டமைப்பாக விளம்பர/ முழக்கங்களைக் கொண்ட டி-சட்டைகள் பயன்படுத்தப்பட்டன.

1980-களில் முழக்க டி-சட்டைகள் பண்பாட்டுத்தளத்திலும் அரசியல் களத்திலும் இடம்பெறலாயின. 1984-இல் ஹேம்னெட் அப்போதைய இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சரைச் சந்தித்தபோது டி-சட்டை அணிந்திருந்தார். அதில் “58% அழிய விரும்பவில்லை" என்னும் வாசகம் இடம்பெற்றிருந்தது. அணு ஆயுதங்களுக்கு எதிரான தனது எதிர்ப்பை ஹேம்னெட் அப்படிச் சுட்டிக்காட்டியிருந்தார். அதே ஆண்டில் ஹேம்னெட் உருவாக்கிய ‘வாழ்வைத் தெரிவுசெய்’ முழக்கத்தோடு கூடிய டி-சட்டையை ஒரு இசை விடியோவில் வாம் என்னும் பாடகர் அணிந்ததால் பிரபலம் ஆனது. இந்த முழக்கமானது புத்தரின் கோட்பாடுகளில் ஒன்றாகும். அது எய்ட்ஸ் காலத்தில் பயனுள்ளதாக இருந்திருக்கிறது. அணு ஆயுதங்களுக்கு எதிராகவும் அது பொருந்திப்போவதாக இருந்தது. காலம் கடந்தும் ‘வாழ்வைத் தெரிவுசெய்’ என்னும் முழக்கம் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. டி-சட்டை அணிபவரைச் சார்ந்தும், காண்பவரைச் சார்ந்தும் முழக்கத்தின் பொருள் மாறும் தன்மை கொண்டது.

முழக்க டி-சட்டையை அணியும்போது, நாம் நமது அக உணர்வுகளைப் புறத்தில் வெளிப்படுத்துகிறோம். அது மற்றவர்களையும் அதே வழியில் செல்வதற்குத் தூண்டுகோலாக அமைகிறது. இப்படித்தான் எது ஒன்றுமே முடுக்கப் பெறும். சக மனிதர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முழக்கங்கள் ஆளும் வர்க்கத்தின் அச்சுறுத்தலுக்கும் காரணம் ஆகலாம். அதனால் தனிப்பட்ட இழப்புகளும் ஏற்படுவதுண்டு என்றாலும் கருத்துரிமைக்காகக் குரல் கொடுப்பவர்கள் அது பற்றியெல்லாம் அச்சம் கொள்வதில்லை.

#நானும்தான்

2019 ஏப்ரல் 6 லண்டன் நகரில் மேரி குவாண்ட் பொருட்காட்சி துவங்கியது. அது பெண்ணியம், மகளிர் நாகரிகம் சார்ந்து அமைந்திருந்தது. மேரி குவாண்ட் மிகச் சிறந்த பெண் உடை வடிவமைப்பாளர்களில் ஒருவர். அவரது உடை வடிவமைப்பில் பெண்களுக்கான பாலியல் விடுதலையும் இருக்கும், நம்பிக்கையும் இருக்கும். அவற்றுக்கென பலவகையான உடைகளை அவர் வடிவமைத்திருந்தார். பொது வெளியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய #metoo என்னும் வலிமையான முழக்கத்தை உடைகளில் வடிவமைத்தவர் மேரி குவாண்ட்தான். நம் தமிழ்நாட்டிலும் அந்த #metoo முழக்கம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவியதையும் நாம் கண்டோம் அல்லவா?

முழக்க டி-சட்டையின் இன்றைய நிலை

கருத்துள்ள முழக்கங்களைக் கொண்ட டி-சட்டைகள் மட்டும் அல்லாமல், தேசப்பற்றை, மொழிப்பற்றை வெளிப்படுத்தும் டி-சட்டைகள், வேடிக்கை விளம்பர டி-சட்டைகள், காதலை வெளிப்படுத்தும் டி-சட்டைகள், நட்பை வெளிப்படுத்தும் டி-சட்டைகள் என்று முழக்க டி-சட்டைகள் பலபலவாக உருமாறி இன்றைய இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்து வருகின்றன. இதுபோன்ற முழக்கங்களை வெளிப்படுத்துவதற்குக் கழுத்துப்பட்டி (collar) இல்லாத வட்டக் கழுத்து டி-சட்டைகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.

மஞ்சுவிரட்டு என்னும் மாடுபிடி நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் இளைஞர்களும் குறிப்பிட்ட வண்ணங்களில் விளம்பரங்களோடு அல்லது முழக்கங்களோடு டி-சட்டைகளை அணிவதை நாம் பார்த்து வருகிறோம். உலக கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் விளம்பரங்களைக் கொண்ட டி-சட்டைகள் அணிவதையும் நாம் பார்க்கிறோம். இப்படியானவற்றை அரசியல்வாதிகள் விட்டுவைப்பார்களா என்ன? அரசியல் தலைவர்களைப் புகழ்ந்துரைக்கும் டி-சட்டைகளை அவர்களே பணம்கொடுத்து வாங்கி கட்சிக்காரர்களிடம் இலவசமாகக் கொடுத்து அணியச் சொல்வதும் நடக்கிறது. திரை நாயகர்களின் ரசிகர் பட்டாளமும் அவர்கள் பங்கிற்கு அவரவருக்குப் பிடித்த நாயகரின் படம்போட்ட டி-சட்டையை அணிகின்றனர்.

தங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர்கள், திரை நாயகர்கள், விளையாட்டு வீரர்கள், புரட்சியாளர்களின் படங்களைத் தாங்கிய டி-சட்டைகளை இளைஞர்கள் விரும்பி அணிய ஆரம்பித்தார்கள். புரட்சியாளர் சே குவேரா படம்போட்ட டி-சட்டைகள் உலகளவில் பல இளைஞர்களால் விரும்பி அணியப்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில், போரில் தோற்றிருந்தாலும், முப்பது ஆண்டுகள் ஈழப்போரைத் தலைமை தாங்கி நடத்திய விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம்போட்ட டி-சட்டைகள் வெகுவாக உலகம் முழுவதும் தமிழ் இளைஞர்களால் விரும்பி அணியப்படுவதையும் பார்க்க முடிகிறது.

இவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது சாதி மத முழக்கங்களைக் கொண்ட டி-சட்டைகள். ஊர்ப்புறங்களில் கோயில் கொடை விழாக்களில் விவரம் அறியாத சிறுவர்களுக்கும் சாதி உணர்வைத் தூண்டும் முழக்கங்களைக் கொண்ட டி-சட்டைகளை அணியச் செய்வது கொடுமையிலும் கொடுமை. ஆன்மிகம் என்னும் போர்வையில் மதவெறியை வளர்க்கும் முழக்கங்களுடனான டி-சட்டைகளும் அணியப்படுவதைப் பார்க்க முடிகிறது. ஆரம்பக் காலங்களில் சமூக விழிப்புணர்வுக்காகவும், நியாயமான கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துரைக்கவும், வேடிக்கையாகவும், விநோதமாகவும் பயன்படுத்தப்பட்ட முழக்க டி-சட்டைகள் இப்போது சாதி மத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் பயன்படுத்தப்படுவது பிற்போக்குத்தனமானது, தவிர்க்கப்பட வேண்டியதும்கூட

[கட்டுரையாளர் - இயற்பியல் பேராசிரியர் (ஓய்வு)]

Summary

This article discusses when slogan T-shirts originated and the reason for their creation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com