
சட்டமும் இலக்கியமும் மானுடங் கைக்கொண்ட மிகப் பழமையான துறைகள். சாதாரணப் பார்வையில் இவையிரண்டும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு வெவ்வேறு துறைகளாகத் தோன்றலாம்; ஆனால், உண்மையில் அவை ஓர் அடிப்படையான, உறுதியான உறவு இழையால் பிணைந்தும் இணைந்துமுள்ளன.
ஆம், சட்டம், இலக்கியம் இரண்டுமே ஒளிரும் ‘மொழி’ இழைகளைக் கொண்டு லாவகமாக நெய்து ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பொதுவாக வழங்கப்படுபவை அல்லவா? சட்டம், இலக்கியம் எனும் இரு வள வயல்களிலும் விளைச்சல் காண உழைப்போர்க்கு மொழியும் சொற்களுமே அவர்கள் விளைவிக்கக் கருதும் நல்விளைச்சலுக்கு விதைகளாக, வளர் நாற்றுகளாக உதவுவன.
சட்டம், இலக்கியம் ஆகிய இரண்டுக்குமே பொது இலக்கு மக்கள்; சமுதாய ஒழுங்கு; மக்களின் சீரான, மேம்பட்ட வாழ்வு. மேலும் கூறுவதாயின், இலக்கியத்திற்கும் சட்டத்திற்கும் இடையிலான தொடர்புகள், வெளிப்பாடுகள் - நேற்றோ, இன்றோ என்றில்லை - இரு துறைகளுமே தோன்றிய காலத்திலிருந்து தொடர்ந்து வளர்ந்து வந்திருக்கின்றன.
சட்டம் என்பது சமூகத்தை நிர்வகிக்க ‘வகுக்கப்பட்ட, விதிக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் அமைப்பு, தொகுப்பு’. இன்னொரு பார்வையில், “தடைகள் அல்லது சட்ட விளைவுகளுக்கு உட்பட்டு ஏதொன்று குடிமக்களால் எக்காலும் கட்டாயமாகக் கீழ்ப்படிந்து பின்பற்றப்பட வேண்டியதோ அது சட்டம்’’ (Black’s Law Dictionary). என்பது ஒரு வரையறை. சட்டத்தைப்போல ‘கட்டாயம்’, ‘அதிகாரம்’ காட்டாமல், இலக்கியம் சமூகத்தைப் பிரதிபலிக்கும், கருத்து தெரிவிக்கும் கலை வெளிப்பாட்டின் அழகியல் நிறை வடிவமாகும். இலக்கியம் மனித வாழ்வை மேம்படுத்தக் கருத்துகளை, நெறிகளை, மாந்தர் இனிது வாழ்வதற்கான வழிமுறைகளை வற்றாது வழங்கி நிற்பவை. இலக்கியமும் சட்டமும் தனது செயலாக்கப் பயன்கள் பெருக வளமான, தேர்ந்த மொழி / சொற்களால் கட்டமைக்கப்படுபவையாகும். எவ்வளவு சிறந்த சட்டமானாலும் அதன் ஆளுமைக்குக் காலம், புவிசார் எல்லைகள் வரம்பு கட்டும்; ஆனால், சிறந்த இலக்கியமோ சிறகுகள் கொண்டவை, எங்கும் பரவும், காலம் வென்றும்.
சட்டமும் இலக்கியமும் இயக்கம் (Law and Literature Movement)
பழங்காலத்திலிருந்தே இலக்கியத்திற்கும் சட்டத்திற்கும் இடையிலான தொடர்பு நிலவிவருவது உண்மை என்றாலும், 1960-1970களில் தோன்றிய சட்டம் - இலக்கிய இயக்கம் இரண்டு துறைகளுக்கும் இடையில் ஓர் ‘இடை-உறவு’ உள்ளது என்ற கருத்து வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்தது.
அண்மைக் காலத்தில் "சட்டமும் இலக்கியமும் இயக்கம்" என்பது புகழ்பெற்ற அமெரிக்கச் சட்ட அறிஞர் ஜான் ஹென்றி விக்மோர் மற்றும் நீதிபதி பெஞ்சமின் என். விக்மோர் ஆகியோரது ஆர்வ வளர்ப்பில் அவ்வியக்கம் விரைந்து பரவியது. இல்லினாய் லா ரிவ்யூ (எண் 574இல்), ஹென்றி விக்மோர் 1908ஆம் ஆண்டில் ஆராய்ந்து எழுதிய ‘சட்ட நாவல்கள் (“A List of Legal Novels”) என்ற நீண்ட கட்டுரை, உலகின் புகழ்பெற்ற பல நாவல்களில் விசாரணைகள், சட்ட கருப்பொருள்களின் பரவலைப் பற்றி விரிவாகத் தொகுத்துக் குறிப்பிட்டுள்ளது. இவற்றைத் தொடர்ந்து புகழ் பெற்றுள்ள "சட்டமும் இலக்கியமும்" என்ற தனது நூலில் (1925) நீதிபதி கார்டோசோ, நீதித்துறைக் களங்களில் வெளிப்பட்டு மிளிரும் இலக்கிய பாணிகளை நுணுகி ஆராய்ந்து வெளியிட்டார்.
இன்று, சட்டமும் இலக்கியமும் (Law and Literature) என்பது அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் பல பல்கலைக்கழகங்களில், மேலும் சில ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களிலும் ஒப்பீட்டு ஆய்வுப் பாடமாகக் கற்பிக்கப்படும் ஒரு பலதுறை ஆய்வாக வளர்ந்துள்ளது. சட்டக் கருப்பொருள்களை மையமாகக் கொண்ட வளமான இலக்கியத் தொகுதிகள் இந்தக் கல்விசார் ஆய்வு முனைப்புகள் மூலம் அடையாளம் காணப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிட உரியது.
இலக்கியத்தில் சட்டம்
முன் குறிப்பிட்ட படிப்புத் துறைகளில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு நீதிபதிகளால் அடிக்கடி தமது தீர்ப்புகளில் மேற்கோள்களாகக் குறிப்பிடப்படும், பெயர் விளங்கி நிற்கும் படைப்புகளில் சிலவற்றை இங்கே பட்டியலிடலாம்:
தாஸ்தாவஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்', காஃப்காவின் ‘விசாரணை’ (ட்ரயல்); சார்லஸ் டிக்கன்ஸின் நாவல்கள் ‘ப்ளீக் ஹவுஸ்’; ‘கிரேட் எக்ஸ்பெக்டேஷன்’; ஹார்ப்பர் லீயின் ‘டு கில் எ மாக்கிங் பேர்ட்’; ஜார்ஜ் ஆர்வெலின் அனிமல் ஃபார்ம்; 1984; ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், ‘ஹேம்லெட்’, ‘மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ்’, ‘மெஷர் ஃபார் மெஷர்’, ரிச்சர்ட் II; விளாடிமிரின் ‘லோலிட்டா’; கார்சியா மார்க்வெஸின் ‘முன்னறிவித்த ஒரு மரணத்தின் வரலாறு’, ‘ஆடம் பெட்’ போன்ற ஜார்ஜ் எலியட்டின் நாவல்கள், ‘தி மில் ஆன் தி ஃப்ளாஸ்’. இவற்றுடன் கலீல் ஜிப்ரான் மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் கவிதைகளும் இப்பட்டியலில் உள்ளன என்பது குறிப்பிட உரியது.
தமது படைப்புகளில் சட்ட அமைப்பை, அதன் செயல்பாடுகளைச் சித்திரிப்பதன் மூலம், படைப்பாளிகள் தாங்கள் எழுதும் காலத்துச் சமூகத்தின் சித்திரிப்பை மிக நுணுக்கமாக, துல்லியமாக வழங்க முடிந்ததென்பதற்கு இங்கே குறிப்பிடப்படும் எடுத்துக்காட்டுகள் சான்றாகின்றன. சட்டத்தில், சட்ட அமைப்புகளில் ஒன்றான நீதிமன்றத் தீர்ப்புகளில் இலக்கியச் சாரலும், இலக்கியங்களில் சட்டம், விசாரணை, நீதியறை நிகழ்வுகள், சட்ட நடைமுறைகள் ஆகியவற்றின் பிரதிபலிப்புகள் விரவிக்கிடப்பதும் ஆச்சரியமளிக்கும் விஷயமே இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டுகளாக: வில்லியம் ஷேக்ஸ்பியரின் "தி மெர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ்", "மெஷர் ஃபார் மெஷர்" போன்ற நாடகங்கள் எலிசபெத் கால இங்கிலாந்தின் சட்ட அமைப்பைப் பிரதிபலிக்கின்றன. இதேபோல், ஜேன் ஆஸ்டனின் படைப்பான, "பிரைட் அன்ட் ப்ரஜுடீஸ்’, 19 ஆம் நூற்றாண்டில் பெண்கள் எதிர்கொள்ளும் சட்ட, சமூகக் கட்டுப்பாடுகளை ஆராய்கிறதென ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது.
இத்தகைய படைப்புகளின் வழி, இலக்கியம் சட்டத்தின் விமர்சனமாகவும் செயல்பட முடியும் என்பதும் நமக்கு அறியக் கிடைக்கிறது, சட்டத்தின் குறைபாடுகளை, வரம்புகளை, இயலாமையை இலக்கியங்கள் மக்கள் முன் எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் இலக்கியப் படைப்புகள், நீதி, சமத்துவமின்மை, இன, நிறப் பாகுபாடுகள், அதிகார வரம்பு மீறல் போன்ற சட்டக் கருப்பொருள்களை தமது உள்ளடக்கங்களில் ஆராய்ந்துள்ளன; சட்ட அமைப்புகளை, நீதியை வழங்கும் அவற்றின் திறன்களையும் விமர்சித்துள்ளன.
எடுத்துக்காட்டாக: சார்லஸ் டிக்கன்ஸின் "ப்ளீக் ஹவுஸ்" இல், டிக்கன்ஸ், சட்டத்தின் திறமையின்மை, ஊழலுக்குப் பெயர் பெற்ற, காலந்தாழ்த்துகிற, சாதாரணர்களுக்குச் செலவுப்பளு ஏற்படுத்துகிற நீதிமன்றங்களின் சட்டச் செயல்முறைகளைச் சமரசமின்றி நையாண்டி செய்வதைக் காண்கிறோம். டிக்கன்ஸ் தனது "ஆலிவர் ட்விஸ்ட்"டில், விக்டோரியன் இங்கிலாந்தின் பணிமனைகள், சிறார் நீதி அமைப்பில் குழந்தைகள் மீதான மனிதாபிமானமற்ற கடுமையான நடவடிக்கைகள், அக்காலத்தில் நிலவியிருந்த பல கசப்பான சூழல்களை நம் கண்முன் எழுத்துப்படங்களாக வரைந்து நிறுத்திக் கசிய வைத்துள்ளார். இதேபோல், டோனி மோரிசனின் "பிலவ்டு", வேர் பிடித்து நின்ற அடிமைத்தனத்தின் மரபுகளை, ஆப்பிரிக்க- அமெரிக்கர்களுக்கு முறையான நீதி வழங்குவதில் அப்போதைய சட்ட அமைப்பின் குறை வரம்புகளை விரிவாக வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறான இலக்கியங்களின் படைப்பாளிகள், ஓரங்கட்டப்பட்ட குழுக்களின் உரிமைகளைச் சட்ட அமைப்புகள் எவ்வாறு பாதுகாக்கத் தவறியுள்ளதென்பதை, சட்டங்களும் அதன் அமைப்புகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சமன்செய்ய இயலாமல் தடுமாறுகின்றன என்பதைச் சார்புகளற்ற நேர்மையோடு விமர்சிக்கிறார்கள், விடிவுகள் தோன்ற வேண்டுமே விரைந்து எனும் உள்ளார்ந்த விழைவுகளோடு. மக்களிடையே இப்படைப்புகள், விழிப்புணர்வை ஏற்படுத்த, சட்ட, சமூக மாற்றங்களுக்கு வாதிட முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது மிகையல்ல.
சட்டக் கோட்பாடுகளின் வளர்ச்சிக்கும் இலக்கியம் பங்களித்துள்ளது என்பது உண்மை. பல இலக்கியப் படைப்புகள், குறிப்பாக அறிவொளி / மறுமலர்ச்சி (Renaissance) கால, காதல் காலகட்டங்களின் (Romantic period) இலக்கியப் படைப்புகள், சட்டம், நீதி, உரிமைகள் முதலியவற்றின் தன்மைகளை அலசி ஆராய்ந்துள்ளன. அத்தகைய படைப்புகள் சட்ட தத்துவஞானிகள், கோட்பாட்டாளர்களிடையே தாக்கங்களை ஏற்படுத்திச் செல்வாக்கும் பெற்று சட்டக் கருத்துகளை, கொள்கைகளை அவர்கள் உருவாக்கப் பயன்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக, சமூகம் தனி நபருக்கும் அரசுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறும் ஜீன் - ஜாக் ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாடு (Social Contract Theory) நவீன சட்டக் கோட்பாட்டின் வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தியுள்ளதை மறுக்க இயலாது.
சட்டத்தில் இலக்கியச் சாரல்கள்
பொதுவாக, நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளில் அகராதிகள், சட்ட உரைநூல்கள், வரலாற்றுப் பதிவுகள், பிரபலமான இலக்கியப் படைப்புகள் போன்ற பல்வேறு வகையான வள ஆவணங்களை மேற்கோள் காட்டுகின்றனர். ஒப்பீட்டளவில் தீர்ப்புகளில் இலக்கியப் பயன்பாடு என்பது மிக அதிகமாக இருப்பதாக உறுதிபடச் சொல்ல இயலாததாயினும், சில நீதிபதிகள் ஒரு குறிப்பிட்ட சொல் அல்லது ஒரு கருத்தின் விளக்கத்திற்காக, தீர்ப்பை வாசிக்கும் ஒவ்வொருவரது மனதிலும் தீர்ப்பு எவ்வாறு எட்டப்பட்டுள்ளது என்ற உணர்ச்சிகரமான விவரத்தைப் பகிரும் நோக்கில் இலக்கியங்களைப் பயன்படுத்துவதை நாம் காண முடிகிறது.
ஒரு நூலாசிரியரின் பெயர், நூல் தலைப்புகள், ஒரு மேற்கோள் அல்லது ஓர் இலக்கியப் படைப்பின் கருத்து ஆகியவை வழக்கில் எடுத்துவைக்கப்படும் வாதங்களை, தீர்ப்புகளின் வாக்கியங்களை வண்ணமயமாக்க உதவுகின்றன. அவை, நம் கண்முன் ஒரு படத்தைக், காட்சியைக் காட்ட முயல்கின்றன. இத்தகைய மேற்கோள்கள் தீர்ப்பு எழுதுவதில் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. தீர்ப்புகளில் இலக்கிய மேற்கோள்கள் எவ்வாறு பயன்பட்டுள்ளன என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உள்ளன. சுருக்கம் கருதி, ஒன்றிரண்டு இங்கே:
டி.கே. பாசு எதிர் மேற்கு வங்க மாநிலம் வழக்கு - 1996
கைது, தடுப்புக்காவல் தொடர்பான வழிகாட்டுதல்களைத் தீர்மானித்தல்; 'காவல் வன்முறை, சித்திரவதை' பற்றிய விரிவான ஆய்வை மேற்கொள்ளுதல் என்ற விஷயங்களில் ஒரு ‘மைல்கல் முடிவு’ என இவ்வழக்கின் தீர்ப்பு போற்றப்படுகிறது.
சட்டத்தால் இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஒரு சூழ்நிலையில், நீதியை அடைவதற்கான வழிகளைத் தீர்மானிப்பதில் இலக்கியம் உதவிகரமான பங்களிக்கக் கூடும் என்பதை இவ்வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு காட்டுகிறது.
இவ்வழக்கினை ஆராயும்போது, 'சித்திரவதை' (Torture) என்பது குறித்த விளக்கமோ, வரையறையோ இந்திய அரசமைப்புச் சட்டத்திலோ நம் நாட்டின் பிற குற்றவியல் சட்டங்களிலோ காணப்படவில்லை என்பதைக் குறிப்பிட்ட நீதிபதிகள் (குல்தீப் சிங், ஏ.எஸ். ஆனந்த் அமர்வு, தீர்ப்பெழுதியது நீதிபதி ஏ.எஸ். ஆனந்த்), மனித உரிமைப் போராளியாகப் புகழ்பெற்றிருக்கும், அமெரிக்காவில் வாழும், குவாதமாலா (Guatemala) நாட்டைச் சேர்ந்த திருமதி அட்ரியானா பி. பார்டோவின் (Adriana Portillo-Bartow) கவித்துவச் சொற்களின் மூலமாகச் சித்திரவதையை வரையறுப்பது பொருத்தமாக இருக்கும் எனக் கண்டனர்.
"சித்திரவதை என்பது ஆன்மாவில் விளைவிக்கப்படும் காயம்; உடலில் அதன் வெளிப்பாட்டைச் சில நேரங்களில் நீங்கள் தொட்டுணரலாம், ஆனால் அக்காயம் உண்மையில் மிகவும் அருவமானது, அதைக் குணப்படுத்தவோ, முற்றிலும் போக்கவோ எந்த வழியுமே இல்லை; சித்திரவதை என்பது உங்கள் நெஞ்சைக் கசக்கிச் சாறாகப் பிழியும் நரகவேதனை; பனிக்கட்டியைப் போல கடுங்குளிர்ச்சியாகவும், பாறாங்கல்லைப் போல அதிகனமாகவும், தூக்கத்தைப் போல அடியோடு முடக்குவதாகவும், அதலபாதாளத்தைப் போல அடர் இருட்டாகவுமிருப்பது;
சித்திரவதை என்பது விரக்தியும் அச்சமும் ஆத்திரமும் வெறுப்பும் பரவிக்கிடப்பதாகும்; உ(த)ன்னையும் சேர்த்துக் கொன்று அழித்துக்கொண்டால் கூடத் தீராத ஆசை, வலி அது."
மருராம் எதிர் இந்திய ஒன்றியம்
’மனித உரிமை நீதிபதி’ என அனைத்துத் தரப்பினராலும் மதித்துப் போற்றப்பட்ட, நீதிபதி வி.ஆர். கிருஷ்ணையர் (வி.ஆர்.கே.) பல்லாண்டுகளாகச் சிறைப்பட்டு வதங்கிக் கிடக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளின் அவலத்தை, விரக்தியை விளக்கத் தனக்கே உரித்தான, தனது அசாதாரண இலக்கிய ஆளுமையை, நயத்தோடு பயன்படுத்தி, ஆஸ்கார் வைல்ட் (Oscar Wilde) கவிதை வரிகளில் சொன்னதை,
"சட்டங்கள் சரியானவையா, சட்டங்கள் தவறானவையா என்று எனக்கொன்றும் தெரியாது, நமக்குத் தெரிந்ததெல்லாம், சிறையில் பொய் சொல்பவர்களுக்கும் சுவர் வலுவானது என்பதுதான்; ஒவ்வொரு நாளும் ஒரு வருடம் போலாகும்; ஆண்டின் நாள்கள் மிக நீண்டதாக இருக்கும்" - ஆஸ்கார் வைல்ட்டை மேற்கோளாக வைத்து வரலாற்றுச் சிறப்புப் பெற்ற தன் தீர்ப்பினை வரைந்தளித்தார்.
அறநெறி குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும், தார்மிக ரீதியாக சரியானவற்றுக்கொப்பச் சட்டத்தை விளக்குவதற்கும் இலக்கியத்தைப் பயன்படுத்த முடியும் என்பதற்கு நீதிபதி வி.ஆர்.கே. தீர்ப்பு நெகிழ வைக்கும் எடுத்துக்காட்டாகும். தனது தீர்ப்புகளில் சொல்லாட்சியின் சூட்சுமங்களையெல்லாம் லாவகமாகப் போகிற போக்கிலேயே வெளிப்படுத்துவதில் வல்லாரான வி.ஆர்.கே. இவ்வழக்கின் தீர்ப்பில் மேலும் குறிப்பிட்டிருப்பதும் இலக்கிய ஒளிர்வே. இதோ:
"உடைந்த இதயங்களால் சிறைச் சுவர்களை ஒருக்காலும் உடைக்க முடியாது. சிறைச் சாலைகள் சட்டத்தின் கற்களால் கட்டப்படுவதால், விடுதலைக்கான திறவுகோல்கள் சட்டத்தின் காவலில் உள்ளது. அதனைப் பெற்றுவிடும் ஆவலில் வழக்குரைஞர்கள் நீண்ட, கற்றறிந்த வாதங்களைக் குவித்துள்ளனர், இடையிடையே உணர்ச்சிகரமான சொல்லாட்சிகளை அவ்வாதங்கள் உடுத்திவந்து அழகு காட்டுகின்றன. ஆனால் நீதிபதிகளும் சட்டத்தின் கைதிகள்தான்! ‘சட்டப்படி நீதி’ என்ற மூலத்திறவுகோலின்றி எந்த ஒரு கைதியையும் “திறந்திடு சிசேம்” என்று விடுவித்துவிட அவர்களுக்கு உரிமை இல்லையே.
இவ்வாறிருந்தும் அண்ணல் காந்தியடிகளின் ‘குருவாக’ மதிக்கப்படும் ஹென்றி டேவிட் தோரோவின் ‘கலக வார்த்தைகளில்’ நீதிபதிகளுக்கும் ஒரு விசித்திரமான செய்தி உள்ளது: 'சட்டம் ஒருபோதும் மனிதர்களைச் சுதந்திரமாக்காது; மனிதர்கள்தான் முயன்று சட்டத்தைச் சுதந்திரமாக்க வேண்டும்’’ என்று மேற்கோள் காட்டி, நீதிபதிகள் சட்டம் ஒழுங்கை நேசிப்பவர்கள்; அரசாங்கம் சட்டத்தை மீறும்போது அதைக் காப்பாற்றி வைப்பவர்கள்." அவ்வளவுதான் என்றார் வி.ஆர்.கே.
அருணா ராமச்சந்திர ஷான்பாக் எதிர் இந்திய ஒன்றியம்
நீதிபதிகளுக்கு நெருக்கடியான மனநிலை தரக்கூடிய - இன்னொரு வழக்கில், நீதிபதிகள், நிலவுகிற சட்டம் வழிதராமையால் ஏற்படும் தமது ஆற்றாமையை மனநெருக்கடியை இலக்கியத் துணைகொண்டே விளக்க நேர்ந்தது. இந்த உச்ச நீதிமன்ற வழக்கு விவரம் நெகிழ்வு தரும் விஷயமாகும். இவ்வழக்கில் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தனது மிக விரிவான 141 பக்க தீர்ப்பை மிர்சா காலிப்பின் புகழ்பெற்ற படைப்பை மேற்கோள் காட்டி உருக்கமாகத் தொடங்கினார்.
("மார்தே ஹைன் ஆர்ஸூ மே மார்னே கி, மௌத் ஆதி ஹை பர் நஹி ஆதி")
‘’ ஓர் உயிர் மரணத்தை எதிர்பார்த்து ஏங்கி ஏங்கியே வடிந்துகொண்டிருக்கிறது;
ஆனாலும் அருகிலேயே இருக்கும் மரணம், மிக அருகில் வந்தும், நழுவிக்கொண்டே இருக்கிறதே’’
என்பது அக்கவி வரிகள். நீதிபதி கட்ஜு, தனது தீர்ப்புகளால் நீதித்துறை கோட்பாடுகளை உருவாக்குபவர்களில் ஒருவராக விளங்கியவர். தீராத வாசகர், தனது தீர்ப்புகளில் உபநிடதங்கள், பகவத் கீதை, குர்ஆன் மற்றும் பல இலக்கியங்களை அடிக்கடி மேற்கோள் காட்டியுள்ளார்.
இந்த வழக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் 21வது பிரிவு வழங்கும் கண்ணியமாக வாழ்வதற்கான உரிமை (Right to Life and to live with dignity) என்பது ஒரு நபர் கண்ணியமாக இறப்பதற்கான உரிமையையும் உள்ளடக்கியதா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் (கருணைக் கொலை) விஷயமாகும். நீதிபதி கட்ஜு, காலிப்பின் இலக்கிய வரியை - அனுதாபத்தைத் தூண்டுவதற்கும், தன்முன் நிற்கும் சிக்கலை உணர்த்துவதற்கும் மட்டுமல்லாமல் தனது பரிசீலனைக்கு வந்த இந்த வழக்கின் முதன்மையான பெருங்கவலையை (கருணைக் கொலையை நீதிமன்றம் அனுமதிக்கலாமா? என்பதை) ஒரே வரியில் வெளிப்படுத்தவும் பயன்படுத்தியது நயமிக்கது.
மானுட வாழ்க்கையின் தனித்துவமான மொழியியல் வடிவங்களாக, சட்டமும் இலக்கியமும் வெவ்வேறு வகையான வாக்கியங்களைப் பேசுகின்றன. ஒன்று தண்டனையின் அச்சுறுத்தலின் கீழ் கீழ்ப்படிதலைக் கட்டளையிடுகிறது, மற்றொன்று மக்களின் மகிழ்ச்சியான அங்கீகாரத்தை, அவர்களது தன்னார்வமான நுகர்வு இசைவை விழைகிறது. இரண்டுமே, மக்களுக்காகத்தான்!
பொதுவாக ஒரு வறண்ட துறையெனக் கருதப்படுகிறது சட்டத் துறை. வரையப்படும் தீர்ப்புகளால் – ‘சுவையற்ற சட்டத்தின் துணை விளைபொருள்கள்’ - நீதிபதிகள் தங்கள் அறிவு மேன்மை கொண்டு உழவுசெய்து வறண்ட சட்டத் தீர்ப்புகளையும் அற்புதமான பசுமை நிறை (இலக்கிய) படைப்புகளாக மாற்றிய தருணங்கள் எத்தனையோ உள்ளன. அளவு கருதி இங்கே நிறைவு செய்வோம்.
[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]
இதையும் படிக்க: தாமதமாகும் நீதியும் பெருகும் நீதிக்கான கூக்குரல்களும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.