
கனவு காணுங்கள், கனவு காணுங்கள் என்ற தூண்டுதலில் குடிமைப் பணித் தேர்வுகளை எழுதச் சென்று வெற்றிகொள்ள முடியாதபோது, தன்னையே முடித்துக் கொள்வதும் எதிர்காலத்தைத் தொலைக்க நேர்வதும் புதிதாகச் சிந்திக்க வேண்டிய நெருக்குதலை இளைய தலைமுறைக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
‘சும்மா யாரும் ஐஏஎஸ் ஆகிவிட முடியாது; உறக்கத்திலிருந்து விழித்தெழு, இப்போது நீ படிக்க வேண்டும்’ – ஐஏஎஸ் தேர்வுக்காகத் தயாராகிக்கொண்டிருந்த நிலையில் மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூரில் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஆஷா உய்க்கி எழுதிவைத்துள்ள கடிதத்தின் கடைசி வரி இது.
இந்தூரில் அறையில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த இந்த மாணவி, மீண்டும் மீண்டும் தேர்வில் தோல்வியுற்ற நிலையில் (மே 27-ல்) தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் (மே 25 ஆம் தேதி நடைபெற்ற இந்தாண்டுக்கான ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வைச் சரியாக எழுதவில்லை என ஒருவேளை இவர் நினைத்திருக்கலாம்).
தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணுக்கு வயது 25. கொஞ்ச காலமாகவே மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவரைப் பார்க்க சில நாள்களில் தாய் வரவிருந்த நிலையில் உயிரைத் துறந்திருக்கிறார்.
அறை முழுவதும் தன்னம்பிக்கை வரிகளால் நிரம்பியிருக்கின்றன. தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதியுள்ள இருபது பக்கக் கடிதத்திலும் நிறைய தன்னம்பிக்கை – ஊக்குவிப்பு முழக்கங்கள். ஆனால், எழுதிய மாணவிதான் நம்பிக்கை இழந்துவிட்டிருக்கிறார்.
ஆஷாவைப் போல ஐஏஎஸ் தேர்வுகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிற அல்லது தயாராகிக் கொண்டிருக்கிற மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர் கதை.
கடந்த ஆண்டு ஜூலையில் முதல்நிலைத் தேர்வு முடிவு வந்தபோது, மகாராஷ்டிரத்திலிருந்து வந்து தில்லியில் பழைய ராஜேந்திர நகர் பகுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த அஞ்சலி (24) என்பவர் தற்கொலை செய்துகொண்டார். இவரும், ‘ஸாரி, அம்மா, அப்பா. எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது’ என்றுதான் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் (பயிற்சி மையங்கள் நிறைய செயல்படும் இந்தப் பகுதிகளில்தான் (ஓஆர்என் -பழைய ராஜேந்திர நகர், படேல் நகர்...) நாடு முழுவதிலிருந்து வரும் ஐஏஎஸ் தேர்வர்கள் தங்கிப் பயில்கின்றனர்).
‘எல்லாருடைய நம்பிக்கையை நிறைவேற்ற முடியவில்லை; இந்த உலகில் வாழ்வது கடினம்’ என்று குறிப்பிட்டுவிட்டு, கடந்த செப்டம்பரில் தாணே நகரில் எட்டாவது மாடியிலிருந்து குதித்து 28 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
உத்தரப் பிரதேசம் ஜான்சியில் ஜனவரியில் மயூர் ரஜாக் (26) என்ற இளைஞர், தீவைத்துக்கொண்டு மூன்றாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார் – இவர்கள் தெரிய வந்த மிகச் சிலர். தெரிந்தும் தெரியாமலும் இன்னும் பலர்.
இந்தியாவில் மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தால் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அப்படியே ஐஆர்எஸ் போன்ற உயர் சிவில் சர்வீஸ் பணிகளுக்காக ஒவ்வோராண்டும் நடத்தப்படும் தேர்வை உலகின் கடினமான தேர்வுகளில் ஒன்றெனக் கூறுகின்றனர். எழுத வரும் கூட்டத்தைப் பார்த்தோ, என்னவோ இந்தத் தேர்வை மேலும் மேலும் கடினமான ஒன்றாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆண்டுதோறும் மூன்று நிலைகளில் நடைபெறும் இந்தத் தேர்வுக்காக நாடு முழுவதுமிருந்து சராசரியாக 10 லட்சம் இளைய தலைமுறையினர் விண்ணப்பிக்கிறார்கள். இவர்களில் 50 சதவிகிதம் பேர், 5 லட்சத்திலிருந்து 6 லட்சத்துக்குள், முதல்நிலைத் தேர்வை எழுத வருகின்றனர்.
இவர்களில் 5 சதவிகிதம் மட்டுமே இரண்டாம் நிலை முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்று எழுதுகிறார்கள். இவர்களில் 20 சதவிகிதம்தான் இறுதிச் சுற்றுக்கு – ஆளுமைத் திறன் – நேர்காணல் தேர்வுக்குச் செல்கின்றனர். இந்த 20-ல் 40 சதவிகிதம்தான் கடைசியாக வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஆக, குத்துமதிப்பாகக் கூட்டிக்கழித்துப் பார்த்தால் வெற்றிக்கான வாய்ப்பு 1 சதவிகிதத்துக்கும் குறைவு!
ஆனாலும் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் விண்ணப்பித்து, 5 லட்சத்துக்கும் அதிகமானோர் முதல்நிலைத் தேர்வை எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தச் சுழலிலிருந்து ஒவ்வோராண்டும் சில ஆயிரம் பேர் வெளியேறினால், பல ஆயிரம் பேர் உள்ளே வருகிறார்கள். இறுதித் தேர்வு முடிவுகள் வெளியானதும் அனைத்திந்திய அளவில் முதலிடம், மாநிலத்தில் முதலிடம் எனப் பெரும் ஊடக வெளிச்சத்துக்கிடையே வெற்றி பெற்றவர்கள் பேட்டியளிக்கிறார்கள். ஆனால், இந்த வெற்றிக்குப் பின்னால் இருப்பது எத்தனை ஆண்டுகால கடின உழைப்பு? சிலர் வெற்றி பெற்றுக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால்... பல பத்தாயிரம் பேர் தோற்று நொந்துபோயிருக்கிறார்கள் என்று பொருள்!
இவர்கள் எல்லாரும் ஆண்டுக்கணக்கில் தூங்காமல் படித்துப் படித்து, இயல்பு வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டுத் தேர்வை எழுதுகின்றனர். முதல்நிலையில் இரு தேர்வுகள் – ஆப்ஜெக்டிவ் மற்றும் சிசாட் - சிவில் சர்வீஸ் ஆப்டிடியூட் டெஸ்ட், ஏதோ தொழில்நுட்பங்கள் தெரிந்த, கணிதம் நிறைந்த கேள்விகள்.
தேர்ச்சி பெற்றால் முதன்மைத் தேர்வு – மொத்தம் 9 தாள்கள். எல்லாம் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதுகிறவை. குறிப்பிட்ட இரு பாடங்களையும் பிரதானமாகத் தெரிவு செய்துகொள்ள வேண்டும்.
முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள்தான் மூன்றாவது மற்றும் நிறைவு நிலையான ஆளுமைத் திறன் – நேர்காணல் தேர்வைச் சந்திக்கிறார்கள்.
தற்போது பொதுப் பிரிவில் வருவோர் 32 வயது வரை 6 முறை எழுதலாம். தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு 37 வயது வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 35 வயது வரை 9 முறை, மாற்றுத் திறனாளிகள் 42 வயது வரை 9 முறை எழுதலாம் (2014-க்கு முன் பொதுப் பிரிவுக்கு 4 முறை என்ற ரீதியில் மாறுபட்டிருந்தன).
ஆண்டுதோறும் விண்ணப்பிக்கும் இந்தப் பத்து லட்சம் பேரில் பெரும்பாலானோர் கல்லூரியில் பட்டப் படிப்பு முடிந்ததுமே பயிற்சி மையங்களில் இணைந்து விடுகின்றனர் அல்லது ஏதோவொரு வகையில் தேர்வுக்குப் படிக்கத் தொடங்கிவிடுகின்றனர். இப்போதெல்லாம் புற்றீசல்களைப் போல சிறு நகரங்களில்கூட பயிற்சி மையங்கள் பெருகிவிட்டன.
கடந்த காலத்தில் ஒரு குழந்தையிடம் எதிர்காலத்தில் நீ என்னவாகப் போகிறாய்? என்று கேட்டால் பதிலென்னவோ பெரும்பாலும் டாக்டர், என்ஜினீயர் என்பதாகத்தான் இருந்தது. ஆனால், இதுவே கடந்த 10, 20 ஆண்டுகளில் மாறி (என்ஜினீயர் மலிந்துபோய்விட்டதோ, என்னவோ) டாக்டர், கலெக்டர் என்றாகிவிட்டது. எப்படி நேர்ந்ததெனத் துல்லியமாகக் கூற முடியாவிட்டாலும் தற்போது ஐஏஎஸ் தேர்வுகள் மீதான ஆர்வம் மிகுந்து வெறியாகவே மாறிப் போய்விட்டது.
குடிமைப் பணித் தேர்வுகள் மீது இந்த அளவு ஆர்வமும் வேகமும், நாடு தழுவிய அளவில் இளைஞர்களிடையே ஒரு முனைப்பும் எவ்வாறு உருவானது?
டாக்டர், பொறியாளர் போல செலவிடத் தேவையில்லாமல், பொருளாதார ரீதியில் பின்தங்கியிருந்தாலும்கூட, ஒரு பட்டப்படிப்புத் தகுதியுடன், திறமையிருந்தால் குடிமைப் பணித் தேர்வுகளை எழுத முடியும் என்பதேகூட பிரதானமான காரணமாக இருக்கலாம்.
சமுதாயத்தில் எந்த நிலையில் இருந்தாலும் எளிதில் தேர்வை எழுத முடியும்; ஒருவேளை எல்லாம் சரியாக வந்தால் ஒரு ஐஏஎஸ் அலுவலராகிவிடலாம். ஏழை எளிய மக்களுக்கு நன்றாகத் தெரிந்த அதிகார வர்க்கத்தின் பிரதிநிதி!
ஐஏஎஸ் என்ற சொல்லுக்கும் அது பற்றிய விவாதங்களுக்கும் கிடைக்கிற முக்கியத்துவம் மட்டும் அல்லாமல் ஐஏஎஸ் என்ற உச்சரிப்புக்கே கிடைக்கிற ஒரு மதிப்பு மரியாதை. ஐஏஎஸ் பற்றிப் பேசுகிற, கேட்கிற, விசாரிக்கிற ஒருவர்கூட எவ்வளவு ஊதியம் என்று கேட்பதே இல்லை; காரணம் சம்பளத்தை எல்லாம் தாண்டிக் கிடைக்கிற பெருமிதம்.
மற்றபடி இந்தக் காலத்தில் மிகப் பெரிய விஷயமாகக் கருதப்படுகிற வேலை உத்தரவாதம், சம்பளப் பயன்களுடன் படிகள், பதவி உயர்வு. அரசப் பிரதிநிதி என்பதால் கிடைக்கக் கூடிய வசதிகள். சிக்கல்கள் எதுவுமின்றி எளிதில் கிடைக்கக் கூடிய பதவி உயர்வுகள் எல்லாம் பிளஸ்.
தவிர, அக்கறை கொண்ட கொஞ்சம் பேருக்கு சமுதாயத்துக்கு ஏதேனும் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை. இவற்றையெல்லாம் தாண்டிக் கிடைக்கக் கூடிய மாவட்ட ஆட்சியர் என்ற பதவிக்காலத்தின் உன்னதம். எல்லாமுமாகச் சேர்ந்துதான் இளைஞர்களை, யுவதிகளை விட்டில்களாக இங்கே ஈர்க்கின்ற வெளிச்சமான பக்கங்கள்.
ஆனால், இதற்கு இருண்டதொரு மறுபக்கமும் இருக்கிறது என்பதுதான் முயற்சி செய்கிற, முயற்சி செய்யச் சொல்கிற பலருக்கும் தெரியாத அல்லது தெரிந்தும் தெரியாததைப் போல காட்டிக் கொள்கிற பக்கம்!
வெற்றி பெற ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான வாய்ப்பு மட்டுமே இருக்கிற இந்தத் தேர்வுக்குத் தேவை மிகமிகக் கடுமையான உழைப்பு. ஒரு நாளில் இத்தனை மணி நேரம் எனத் தொடர்ச்சியான படிப்பு, தனி வகுப்புகள் அல்லது ஆன்லைன் வகுப்புகள், நேரில் அல்லது ஆன்லைனில் மாதிரித் தேர்வுகள். தேர்வில் தோற்றால் மீண்டும் அதே படிப்பு, அதே சுழல்.
அபூர்வமாக முதல் முறையிலேயே தேர்ச்சி பெறுகிறவர்கள் வெற்றி பெறுகிறவர்களில் 5 முதல் 10 சதவிகிதம் மட்டுமே. மற்றபடி தேர்ச்சி பெறுகிறவர்கள் அனைவருமே மூன்று அல்லது நாலாவது முறையில்தான் வெற்றி பெறுகின்றனர். கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வில் அனைத்திந்திய அளவில் முதலிடம் பெற்றவர் ஏழாவது முறையாகத் தேர்வு எழுதிய பெண்தான்!
இவர்கள் எதைப் பற்றியும் - சுற்றம், நட்பு, சுகம், துக்கம் - கவலைப்படாமல் ஆண்டுகளைப் படிப்பில் கழிக்கிறார்கள். 24 மணி நேரத்துக்கும் திட்டம், நல்லது கெட்டதுக்குக்கூட செல்வதில்லை – குதிரைக்குப் பட்டை கட்டியதைப் போல.
பத்து லட்சம் பேர் விண்ணப்பித்து, ஐந்து லட்சம் பேர் எழுதி, ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பைப் பெறும் நிலையில், மீண்டும் மீண்டும் அவரவர் பிரிவில் அனுமதிக்கப்படும் காலம் வரையில் – பாதிக்கும் மேற்பட்டோர் தேர்வைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள் – முயன்று கொண்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து, பத்தாண்டுகள்கூட, இந்த மாய வலையில் சிக்கிக் கொண்டுவிட கடைசியில் இவர்கள் எதற்குமே பொருந்தாமல் போய்விடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. ஒரு கட்டத்தில் திரும்பிப் பார்க்கும்போது... முப்பது வயதாகிவிட்டிருக்கும் அல்லது முப்பதை நெருங்கிவிட்டிருக்கும். வேறு வேலைகளுக்கும் முயற்சி செய்ய முடியாத நிலையேற்பட்டிருக்கும். பள்ளி, கல்லூரிகளில் உடன் படித்தவர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் செட்டிலாகிவிட புதிதாகத் தொடங்குவதைப் போல திணற வேண்டியிருக்கும். முடிவில், ஏதோவொரு முட்டுச் சந்தில் போய் சிக்கிக் கொண்டு நிற்பதைப் போல (ஒப்பீட்டளவில் வேறு ஏதேனும் வேலை பார்த்துக்கொண்டே படித்துத் தேர்வு எழுதுவோருக்குப் பிரச்சினைகள் குறைவு).
இவற்றிலெல்லாம் பெருங் கொடுமை என்னவென்றால், இந்த மாணவர்கள், மாணவியர்கள் எல்லாருமே அல்லது ஆகப் பெரும்பாலானோர் பள்ளியிலும் கல்லூரியிலும் மிகச் சிறந்த படிப்பாளிகளாக, புத்திசாலிகளாக இருந்தவர்கள்; குடிமைப் பணி என்ற மாயமானைத் துரத்திக்கொண்டே சென்றதில் தங்களையே மறந்துவிட்டவர்கள்.
இவற்றுக்கு இடையே எப்போது என்றாலும் பார்க்கிறவர்கள் எல்லாருமே கேட்கிற கேள்வி, ‘என்ன, இன்னும் கிடைக்கவில்லையா?’ முயற்சியைக் கைவிட்டிருந்தாலும்கூட கேள்விகள் தொடர்ந்துகொண்டிருக்கும். குடிமைப் பணித் தேர்வில் தோல்வியுறுவதால் மட்டுமே யாருடைய வாழ்க்கைப் பயணமும் முடிவுற்றுவிடப் போவதில்லை.
ஆனால், பெரும்பாலானோர் மன அழுத்தத்தில், பதற்றத்தில், இன்னமும் விவரிக்க முடியாத விதவிதமான மனநலச் சிக்கல்களில் மாட்டிக்கொண்டுவிடுகின்றனர். உடல் நலனும் போனது, மன நலனும் போனது, ஐஏஎஸ்ஸும் ஆகவில்லை!
கண்டிப்பாக, இவர்களுக்கு பிளான் பி என்று ஏதேனுமொன்று இருந்திருக்க வேண்டும்! கொஞ்சம் மாற்றி யோசித்து மறுபக்கத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மிக அரிதாகவே கிடைக்கக் கூடிய வாய்ப்புக்காக எதற்காக இந்த அளவு உழைப்பைக் கொடுக்க வேண்டும்? இவ்வளவு காலத்தை விரயமாக்க வேண்டும்?
வேலையில் சேர்ந்த பிறகு அதிகார வர்க்கமாக மாற்றப்பட்டு அந்தக் குண(ள)த்தில் சிக்கி, சிவப்பு நாடா நடைமுறைகளில் சின்னாபின்னமாகத்தான் வேண்டியிருக்கும். பெரிதாக எதையும் சுயமாகச் செய்துவிட இயலாது. ஊதியமேகூட வெறும் 50 ஆயிரத்துச் சொச்ச ரூபாயில்தான் தொடங்குகிறது. பணிக்கால முடிவில் இதைப் போல மூன்று அல்லது நான்கு மடங்காகத்தான் ஊதியம் உயர்ந்திருக்கும்.
தனியார் துறைகளில் எவ்வளவோ அதிக ஊதியம். விரைவான வளர்ச்சியும் முன்னேற்றமும்கூட சாத்தியமே. வேலை உறுதி இல்லாவிட்டாலும்கூட திறமையைப் பொருத்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்வதும்கூட எளிதாக இருக்கும். இதுவே ஒரு வணிகம் என்றால் வேறு மாதிரி.
ஏன், கண்களுக்குப் படம் கட்டியதைப் போல இந்த மாயமானைத் துரத்த வேண்டும்? கனவு காணலாம், எவ்வளவோ இருக்கிறது. போயும் போயும் அதிகபட்சமாக வெளியுலகுக்குத் தெரியும்படியாக என்ன பதவிப் பொறுப்பில் இருந்துவிட முடியும்? எத்தனை ஆண்டுகள் கலெக்டர்? அதுவும் எந்த மாநிலமோ? எந்த மாவட்டமோ? அங்கே எத்தனை அரசியல் கட்சிகளோ? தலைவர்களோ? யார் யாருக்கெல்லாம் எப்படியெப்படியெல்லாம் வளைந்து நெளிந்துகொடுக்க வேண்டியிருக்குமோ?
அடையாளமும் அங்கீகாரமும் இல்லாமல் எத்தனை ஐஏஎஸ்கள், ஐபிஎஸ்கள்? தனிநபராக நேர்மையாக இருந்தாலும் எத்தனை லஞ்ச ஊழல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்? ஒருவேளை மிகவும் கண்டிப்பாகவும் நேர்மையாகவும் இருக்க நேரிட்டுவிட்டால் எத்தனை இடமாற்றங்கள்? எத்தனை சொல்ல முடியாத தண்டனைகள்? ஒரு கட்சியின் ஆட்சிக்காலத்தில் தலைசிறந்த நபராகக் கருதப்பட்ட திறமையாளர், மற்றொரு கட்சியின் ஆட்சிக் காலத்தில் ஆளில்லா, வேலைகளில்லா கட்டடங்களில் அமர்த்தப்படும் காட்சிகளை எல்லாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்? எத்தனை அரசியல் தலையீடுகள்? பக்கச்சார்பின்றி இருந்தால் நேரிடும் பாதிப்புகள்... வாழ்நாளில் பெரும் பகுதி கையெழுத்துப் போடுவதில்தான் எதையும் சாதிக்கப் போவதில்லை; ஒரு கட்டத்தில் வெறுப்பாகிவிடும் வாய்ப்பும் இருக்கிறது.
ஏதோ தேர்வில் வெற்றி பெற்றுக் கொஞ்சம் பேர் பேட்டியளிப்பார்கள், அதுவே நிஜம் என நினைத்துவிடக் கூடாது. இங்கே வென்றவரை மட்டுமே முன்மாதிரியாகக் கொண்டு ஓட வேண்டியதில்லை. ஏனெனில், கிட்டத்தட்ட தோற்றுப் போனவர்கள்தான் 99 சதவிகிதம்! இதற்காக இளைய தலைமுறையினர் இத்தனை லட்சம் பேர் எதற்காக வீணாக வேண்டும்?
இந்த இடத்தில் இந்தத் தேர்வுகள் பற்றிப் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரும் பொருளியல் வல்லுநருமான சஞ்சீவ் சன்யால் தெரிவித்துள்ள கருத்து ரொம்பவுமே ஷார்ப் – ‘யுபிஎஸ்சி இஸ் ஏ வேஸ்ட் ஆப் டைம்.’
இவ்வளவு மெனக்கெடுவதற்கு ஒன்றுமில்லை என்று குறிப்பிடும் அவர், கனவு கண்டேதான் தீர வேண்டும் என்றால், எலான் மஸ்க் ஆக, முகேஷ் அம்பானி ஆக கனவு காணுங்கள். அரசாங்கத்தில் ஒரு இணைச் செயலர் ஆவதற்காகவா? உங்கள் ஆற்றலை வீணாக்க வேண்டியதில்லை. குறைந்த பணியிடங்களுக்கு லட்சக்கணக்கில் போட்டி. இதே உழைப்பை வேறெதிலும் போட்டால் எவ்வளவோ பயனிருக்கும் என்றும் எச்சரிக்கிறார்.
என்னதான் ஆஹா, ஓஹோ என்றாலும், உலகத்திலேயே கடினமான தேர்வுகளில் ஒன்றென்றெல்லாம் மார்தட்டிக் கொண்டாலும் இந்தத் தேர்வு முறையும்கூட கேள்விக்குரியதுதான். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுப் பதவிக்கு வருகிறவர்கள் எல்லாரும் திறமையான நிர்வாகிகளாகப் பரிணமிக்கிறார்களா? என்றால் இந்த அரசால் மட்டுமல்ல, யுபிஎஸ்சியால்கூட ஆம் என்று சொல்ல முடியாது!
(எவ்வித உலக ஞானமே, அனுபவமே இல்லாமல் 22, 23 வயதில் ஐஏஎஸ் அலுவலர் என்பதேகூட ஒருவகையில் ஆபத்துதான்!).
பிறகு?
குடிமைப் பணி என்பது அரசுப் பணி அல்ல; மக்கள் பணி என்ற மன நிலை உருவாக்கப்பட வேண்டும். அறம், கடப்பாடு, மக்கள் மீதான அக்கறை, உண்மை போன்ற விஷயங்களுக்கும் சேர்த்து ஏதாவது தேர்வு வைக்கலாம். உள்ளபடியே, இதுபற்றியெல்லாம்தான் தனியே நிறைய விவாதிக்க வேண்டும்.
லட்சங்களில் எழுதி ஏமாற வேண்டிய அவசியமின்றி, எத்தனை வயது வரை எழுதலாம், எத்தனை முறை எழுதலாம், என்னென்ன தகுதிநிலை என்பனவற்றில் உருப்படியான மாற்றங்களைக் கொண்டுவருவது பற்றிச் சிந்திக்கலாம்.
இப்போதெல்லாம் தேர்வு விஷயத்தில்கூட நிறைய அச்சங்களைத் தேர்வர்கள் தெரிவிக்கின்றனர். முன்பு தேர்வர் யார், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர், என்ன மொழி பேசுகிறவராக இருக்கலாம் என்பதைக் கண்டறிய முடியாது. கடந்த சில ஆண்டுகளாக எளிதில் அறிந்துகொள்ளும்படியாகத் தேர்வு எண்கள் மூலம் – தேவைப்பட்டால் புறக்கணிக்கப்படவும் நேரிடலாமே – மாற்றிவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட பயிற்சி மையங்கள், குறிப்பிட்ட கருத்துநிலை கொண்டவர்கள், பின்புலம் இருப்பவர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் / நிராகரிக்கப்படுவதாகவும் சந்தேகங்களை – சந்தேகங்கள்தான் - எழுப்புகின்றனர். இவையெல்லாம் எந்தளவுக்கு உண்மையெனத் தெரியவில்லை.
நாட்டையே ஆட்சி செய்யும் அதிகார வர்க்கத்தில் ஒருவராகத் தேர்வில் வெற்றி பெறப் போராடும் ஒருவர், இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா? போயும் போயும் இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்பதற்காகவா தன்னுயிரை, இன்னுயிரை மாய்த்துக் கொள்வார்கள்? பெற்று வளர்த்தவர்களை விட்டுச் செல்வார்கள்?
கனவு காணலாம்; கைக் கொள்ளலாம். முடியாவிட்டால் அடுத்து வேறொரு வேலையைப் பார்த்துக்கொண்டு போகலாம்; அந்த ஒன்றையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இலக்குகளில் ஒன்று; அதுவொன்றே இலக்கு அல்ல, அதுவே அல்ல வாழ்க்கையும்.
தன்னம்பிக்கையும் புத்திசாலித்தனமும் கொண்டவர்களாகக் குடிமைப் பணிப் போட்டித் தேர்வை எழுதத் தொடங்கும் இளைய தலைமுறை, ஆண்டுகள் கழிந்துசெல்ல, மன நோயாளிகளாக மாறுவதும் தன்னையும் தன் குடும்பத்தையும் மறந்து தற்கொலை செய்துகொள்ள நேர்வதும் எத்தனை பெரிய துயரம்?
தப்பு ஆஷா, பெரிய தப்பு செஞ்சுட்டேம்மா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.